Monthly Archives: மே 2004

If Only I could find a profitable self-employment …

If Only I could find a profitable self-employment technique!? Posted by Hello

They might be thinking now! 

They might be thinking now! Posted by Hello

தமிழோவியம் – விமர்சனம்

1. பேரழகன்: ‘படத்தை தாராளமாகப் பார்க்கலாம்’ என்று சொன்னதால் பார்க்காவிட்டாலும், மற்றுமொரு இரட்டை வேட மலையாள ரீமேக் படம். விவேக் காமெடி ஊனமுற்றவர்களைப் புண்படுத்தாத மாதிரிதான் இருந்தது. என்னுடைய கல்லூரி காலத்து நண்பர்கள் சேரும்போது ஜாலியாக கலாய்த்துக் கொண்டு, ஒருத்தர் காலை இன்னொருவர் வாரிவிட்டுக் கொண்டு அரட்டை அடிப்போம். அது போலத்தான், (விவேக்) குழந்தை-சின்னா (சூர்யா) நட்பும் காட்டப்பட்டிருந்தது. (தேவையில்லாத டிஸ்க்ளெய்மர்: இப்பொழுதுள்ள இணைய நட்பை குறித்து இதனால் எதுவும் குறிப்பிட்டு சொல்லப்படவில்லை 🙂

‘பேரழகன்’ நிஜத்தை பிரதிபலிப்பதாகவும் இல்லை. மலையாள மறுபதிப்பாக இருப்பதால், தேவையில்லாத செண்டிமெண்ட் சோகக் காட்சிகளும் அதிகம். மிகவும் ரசித்த வசனகவிதையையும் காட்சியாக்கத்தில் எவ்வளவு இயலுமோ, அவ்வளவு சொதப்பியிருந்தார்கள். ‘அம்புலி மாமா’ பாடல் ஆண்களுக்குப் பிடிக்கலாம்; அவர்களின் typical கற்பனைகளின் வடிகாலாக பாடல் படமாக்கப்பட்டுள்ளது. ஏவிஎம் மார்க்கெட்டிங்குக்காக மட்டுமே படம் ஓடுகிறது.

2. பருந்துப் பார்வை: சென்ற ஆண்டு ‘இணையக்குழுக்களின் ஆண்டு’ என்றால், இந்த ஆண்டை வலைப்பூக்களின் ஆண்டாக நிச்சயம் சொல்லலாம். ஏன் சார்… மதுரபாரதி சாருக்கு மட்டும் அவருடைய பெயரின் மேல் சுட்டினால் வலைப்பதிவுக்கு செல்லுமாறு வசதி செய்து தரவில்லை 🙂

3. பதில்கள்: PingBack குறித்து கேள்விப்பட்டவுடன், ஒரு கேள்வியாக்கி அனுப்பி வைத்திருந்தேன். பதிலளித்த வலைப்பையனுக்கு நன்றி. தமிழ் வலைப்பூக்களில் இது எவ்வளவு தூரம் முக்கியம், அதன் தேவை என்ன, எப்படி செயல்படுத்த முடியும் என்பதை நீங்கதான் சொல்ல வேண்டும்!

4. கதை: ‘சுய சாசனம்‘ என்று ஒரு கதை ஆரம்பித்து இருக்கிறேன். படிச்சுட்டு உங்கள் பொன்னான பின்னூட்டங்களைத் தர வேண்டுகிறேன். கடவுள் மட்டும்தான் பதில் எழுதுவதில்லை என்பது பொன்மொழி. வாசகர்களாகிய நீங்களாவது அவ்வப்போது கருத்துக்களை சொல்ல வேண்டும்! (அட்வான்ஸ் நன்றிகள் 🙂

5. சமையல்: தலைப்பை மாற்றலாம்; நான் ரொம்பவும் சுவைக்கும் பகுதி. இவற்றையெல்லாம் யூனிகோடில் போட்டால், பின்னொரு நாளில் தேடுவதற்கு வசதியாக இருக்குமே. இந்த வாரமும் பயனுள்ள வட இந்திய உணவு முறையை எளிமையாக அறிமுகம் செய்ததற்கு நன்றி.

6. தராசு: ‘பின்குறிப்பு’ நல்லாத்தான் இருக்கு. ஆனால், சம்பந்தா சம்பந்தமில்லாமல் ‘பிகு’ போடறாங்க. தராசு எழுதிய பிரதமர் விஷயத்துக்கும், ஜெயலலிதா வாபஸ் வாங்கியதற்கும் எப்படி எங்கே லிங்க் இருக்கிறது என்பது அடியேனுக்கு எட்டவில்லை! தனியாக இன்னொரு சுட்டி கொடுத்தோ, அல்லது இரண்டு தராசு ஆகவோ எழுதியிருக்க வேண்டும்.

7. ரமா சங்கரன்: தமிழோவியத்தில் தவறவிடக்கூடாத பகுதி.

8. முத்தொள்ளாயிரம்: கொஞ்சம் அரைத்த மாவையே அரைப்பது போன்ற பாடல்களைக் கூட சுவைபட வழங்குவது ஒரு கலை. நன்றாக செய்து வருகிறார் சொக்கன். ஒவ்வொரு வாரமும் தலைப்பிலேயே, பாடலுக்கு ஒரு மினி அறிமுகம் செய்யலாம். காட்டாக இந்த வாரத்துக்கு: சேர அரசுக்கு மக்கள் அதிருப்தி! என்று தினமலர் போல் போட்டால், என் போன்ற டீ கடை பெஞ்ச் ஆசாமிகள் கூட முதலில் படிப்பார்கள் 😉

9. மேட்ச் ஃபிக்ஸிங்: அபிஜித் கலே லஞ்ச வழக்கின் முடிவு இந்த வாரம் வெளியாகுமாமே? போன வாரம் கிரிக்கெட் உலகில் நடந்தவற்றை பத்ரி எழுதுவது போல் எனக்கு மிகவும் பிடித்த அமெரிக்க என்.பி.ஏ செய்திகளை இதே போல் யாராவது (தமிழில்) தொகுத்துத் தர வேண்டும்.

10. முத்துராமன்: ஊக்குவித்தல் என்று நான் ஒரு வார்த்தையில் சொல்வதற்குப் பின் இவ்வளவு அர்த்தங்களா!? ஹ்ம்ம்… எதற்கு நீங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்பதை சுருக்கமாக அலசியுள்ளார்.

11. வானவில்: சிறிய வயதில் இந்தக் கதையை கேட்டிருந்தால் எடக்கு முடக்கான கேள்விகள் எதுவும் கேட்டிருக்க மாட்டேனாக இருந்திருக்கும். இப்பொழுது நிறையத் தோன்றுகிறது! ஏன் சன்னியாசம் பெற்றுக் கொள்ள வேண்டும்? (எனக்கு இன்னும் மனம் பக்குவம் அடையவில்லை போல!) எதற்காக வாழ்க்கையை அனுபவிக்கக் கூடாது? (அப்புறம் கொழுப்பு, கொலஸ்ட்ரால், ட்ரைக்ளிசரைட் என்று அவதிப்படக் கூடாது அல்லவா?) — சிறுவர்கள் படிப்பதற்கான சிறப்பான பகுதி.

12. காந்தீய விழுமியங்கள்: வாரம்தோறும் தமிழோவியத்தில் தவறவிடக்கூடாத இன்னொரு பகுதி. (இந்தியாவில் குற்றங்களுக்கு தரப்படும் தண்டணைகள் அதிகம் என்றே காந்திஜி நினைக்கிறார்.)

13. தன்னிலை விளக்கம்: தராசு Ext. அல்லது தராசு Express!

காணாமல் போனவை: சினிமாப் பாடல்களை சுவைபட வழங்கிய சந்திரவதனா, அமர்க்களமாக ஆரம்பித்த ஹரி கிருஷ்ணனின் ‘வேர்கள்’, அவ்வப்போது வரும் ‘வெங்கட்’, சில வாரம் முன்புதான் தொடங்கிய ‘கார்த்திக் ராமாஸ்’…

மத்திய அமைச்சரவை

பத்ரி அதிர்ச்சியான ஆச்சரியங்கள் என்று மந்திரி சபை பட்டியலையும் அதை குறித்தத் தன்னுடைய கருத்தையும் பதிந்துள்ளார். தொடர்ந்து எழுந்த சில எண்ணக் கேள்வி குழப்பங்கள்:

1. கமல்நாத்: கல்கத்தாவின் செயிண்ட். சேவியர்ஸ் கல்லூரியில் இருந்து வணிகவியலில் பட்டம் பெற்றவர். ஹவாலா டைரி குறிப்பில் இடம் பெற்றவர். 1991ல் சுற்று சூழல் துறை அமைச்சராக இருந்தவர். அப்பொழுது உலகளாவிய அளவில் மாசுக் கட்டுப்பாடு நிர்ணயங்களையும், அபராதங்களையும் வகுத்தவர். தொடர்ந்து நெசவுத்துறையை கவனித்தபோது முன்னெப்போதும் இல்லாத அளவு பஞ்சு உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் சாதனை படைத்தார்.

2. தமிழகம்: இதுவரை மத்திய அமைச்சரவையில் எப்போதுமே இல்லாத அளவில் 12 பேர் அமைச்சர் பதவி பெற்றுள்ளனர் என்பது மகிழ்ச்சிகரமானது. வருமாண்டுகளில் தமிழகம் செழிக்க இது உதவும். மத்திய – மாநில அரசுகளிடையே உறவுகள் பலப்பட்டால் பலன் அதிகமாக இருக்கும்.

3. வாரிசு ராஜ்ஜியம்: தயாநிதி மாறனும் அன்புமணியும் அமைச்சரவையில் இருக்கிறார்கள். முன் அனுபவம் அதிகம் இல்லையெனினும் இருவருமே நிறைய படித்தவர்கள். எம்.பி.பி.எஸ் டாக்டருக்கு சுகாதாரத்துறையும், ஹார்வார்ட் மேலாண்மை படித்தவருக்கு தகவல் தொடர்புத்துறையும் தந்திருக்கிறார்கள். தயாநிதி மந்திரியாவார் என்று தெரிந்துதான் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். அன்புமணி அமைச்சராவதும், சோனியா பிரதம மந்திரியாக வாய்ப்புள்ளது மாதிரி ஓரளவு அனுமானிக்கப்பட்டதுதான். விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் திறமைக்கு மதிப்பு கொடுப்பது போல், இவர்களுக்கும் வாய்ப்பளித்து, பொறுத்திருந்து மதிப்பிட வேண்டும்.

4. பாமகவின் மூர்த்தி: ரெயில்வேயில் அதிரடியாக நல்ல காரியங்களை செய்து வந்தவர்தான். ஆனால், இவர் மீண்டும் இடம்பெறாததற்கு (வாரிசு அரசியல் தவிர) சில காரணங்களைக் குறிப்பிடலாம். அதிகாரிகளிடம் இவர் அதிருப்தி சேகரித்ததாக வந்த ஜூ.வி. செய்திகள். இந்தத் தேதிக்குள் அதை முடிப்பேன் என்பது மக்களிடம் செல்வாக்கை உயர்த்தலாம். ஆனால், அதை செய்து முடிக்க அதிகாரிகளின் சனி/ஞாயிறு இழப்புகள், அரசுக்கு ஆகும் ஓவர்டைம் பட்ஜெட் மீறல்கள் போன்றவை வெளியில் தெரியாது.

5. Conflict of interest: அமெரிக்காவின் துணை ஜனாதிபதியுடன் வேட்டைக்குப் போகும் உற்ற ஜட்ஜ் நண்பர், அவருடைய வழக்கை விசாரிக்கிறார். இங்கு நட்பை விட நீதித்துறையின் மேல் உள்ள மதிப்பு முக்கியம். அவ்வாறே, (சன் டிவி) உறவை விட (தகவல் தொடர்புத்துறை) அமைச்சகம் மனசாட்சிப்படி முக்கியத்துவம் பெறும் என்று நம்பலாம். அவ்வாறே இல்லாவிட்டாலும், மந்திரிசபையில் பங்கு வகிக்கும் திமுக, அனைத்து முடிவுகளிலும் தன்னுடைய கருத்தை வலியுறுத்தி மாற்றியமைக்க முயலும்; இப்பொழுது, காங், திருடனின் கையிலேயே சாவியைக் கொடுத்து விட்டதால், தயாநிதி மாறனுக்குக் கூடுதல் பொறுப்பும், ஊடகங்களின் உன்னிப்பான ஆராய்தலும் கிடைக்கும்.

தகவல் ஆதாரம்: ரீடிஃப், என்.டிடி.வி, The Hindu : The Union Council of Ministers

பிகு: ரிடிஃப் போன்ற தளங்களுக்கு அரசாங்க அறிக்கை போல் ஏதாவது கிடைத்து, அதை அப்படியே வெளியிட்டிருக்கலாம்; சாதனைப் பட்டியலில் எவ்வளவு தூரம் உண்மை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

சிறுவர் புத்தகங்கள் – ஆர். பொன்னம்மாள் (11)

திருக்குறள் கதைகள் – 1,2,3,4: முதல் பாகம் 1981-இல் வெளிவந்தது. அடுத்த மூன்று பாகங்களும் வானதியின் புதல்வர் திரு. ராமநாதன் ஊக்கப்படுத்த எழுதியதே 2000வது ஆண்டில்தான். ஒரே சமயத்தில் வெளிவந்த இவை தேனோடு தரப்பட்ட ஔடதம்.

மூதுரைக் கதைகள்: மூதுரைச் செய்யுள் ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் சொல்வதோடு கதைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளையும் பெரியோர்களையும் சுவாரசியப்படுத்த இடை இடையே கவிதைகளும், புதிர்களும் கூட உண்டு.

மகாபாரதக் கதைகள் – 1,2,3,4 பாகங்கள்: வானதி திருநாவுக்கரசு அவரளின் மூத்த புதல்வர் திரு. சோமு அவர்கள் மகாபாரத்தில் ஒரு நிகழ்ச்சியும் விடாமல், அதிகமாக நீட்டாமல், அதிகமாக வர்ணிக்காமல் சிறுவர்களுக்கான கதைகளாகக் கொடுக்க முடியுமா என்னும் வேண்டுகோளை ஏற்று வெளிவந்த நூல்கள் இவை. இன்னும் பல பதிப்புகளையும், இன்றும் பெரும் வரவேற்பைப் பெறும் நூல்கள் இவை. கம்பர், வால்மீகி, வில்லிபாரதம் என்று எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு, யுத்த காண்டத்தையும் ரத்த களறி இல்லாமல் வெகு நளினமாக எடுத்து செல்லும் புத்தகம்.

மரியாதை ராமன் கதைகள்: திருவரசு வெளியீடு – இருபது கதைகள் கொண்டது. 1998இல் வெளிவந்தது. எளிய தமிழில் தோண்டி எடுக்கப்பட்ட புதையல் இது. ‘குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.யை பற்றி அம்மா சொல்வார்கள். திறமை அதிகம். விளம்பரத்தைப் புறக்கணித்த மனிதர் என்று. என் தாயும் அப்படித்தான். ‘யானைக்குப் பானை சரி’ கதையைப் படித்தபோது இதை உணர்ந்தேன்.

(சிறு குறிப்பு வளரும்)

12-பி ரீமேக்

படம் பெயர்: Sliding Doors (சறுக்கும் கதவுகள்)

தமிழில்: 12-B

நடிகர்கள்: “ஷேக்ஸ்பியரின் காதல்” புகழ் க்விநெத் பால்ட்ரோ

“பேஸிக் இன்ஸ்டின்க்ட்” புகழ் ஜீயான்

மற்றும் பலர்

ஒற்றை வரிக்கதை: பஸ்ஸுக்கு பதிலா ட்ரெயின்;

ஷாமுக்கு பதிலா க்விநெத்.

விலாவரியாக: வழக்கம்போல் எழுந்து வேலைக்கு செல்லும் ஹீரோயினை, சீட்டைக் கிழித்து வீட்டுக்குத் துரத்துகிறார்கள். ஹெலன் பாதாளவண்டியின் மூடும் கதவுக்குள் நுழைந்து சென்றால்/செல்லாவிட்டால் என்ன என்ன நடக்கக் கூடும்? டக்குன்னு புடிச்சா காதலனுடைய கள்ளத்தொடர்பு பளிச். அத்தோட விட்டது சனின்னு, சுடச்சுட ஒரு புது “அலைபாயுதே” “மாதவன்” வேற டாவடிக்கறார். இன்னொரு பக்கம் ஜேப்படி, ஏமாற்றும் வீட்டுக்காரன், பெண்டு கழற்றும் வேலைன்னு ஒரே சோகம்.

க்ளைமாக்ஸ்: 12-B முடிவுதான் இங்கும் 😦

தெரிந்து கொண்டது: ஒரு நாவல் எழுதினால் போதும். கோடீஸ்வரர் ஆகி விடலாம். (தமிழில் அல்ல; ஆங்கிலத்தில்)

தெரிந்து கொள்ள வேண்டியது: இந்தப் படமும் சுட்ட பழம்தான். குறுட்டுத் யோகம் (Kieslowski’s “Blind Chance”/”Przypadek”) என்னும் படத்தை/கதையை அடிப்படையாகக் கொண்டது. அவர் இன்னும் சூப்பர்; மூன்று கிளைகள்.

மனதில் நிற்கும் வசனங்கள்:

முதல் சந்திப்பில் “மாதவன்” ஹீரோயினிடம் – “அலையலையான முடியோட, பூனைக்கண்ணோட, சுமாரான அழகாத்தான் இருந்தாலும் உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு”

அமெரிக்கக் காதலி ரெண்டுக் காதலிக்காரனிடம் – “நான் ஒரு பொண்ணு! எனக்கு என்ன வேணும்னு சொல்ல மாட்டேன்; ஆனா வேண்டியது கிடைக்கலேன்னா கெட்ட கோபம் வரும்.”

பட(ங்களின்) அறிவுரை(கள்):

* எல்லாருக்கும் எல்லாவாட்டியும் நல்லதே நடக்காது.

* பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.

* வாழ்க்கையே சோகமா இருந்தாலும் எப்படியாவது வெளிச்சம் கிட்டும்.

* “கோடீஸ்வரி”யில் வேண்டுமானால் கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் சொல்லலாம்; நிஜ வாழ்க்கையில் எகிறிடும்.

(செப். 16 – 2002)

ஹாரி பாட்டர் பார்த்ததுண்டா?

i'm in gryffindor!

எந்த வீடு @ nimbo.net

வெகு விரைவில் புது ஹாரி பாட்டர் படம் வருகிறது. ஹாரி பாட்டர் படம் பார்க்காவிட்டாலும் இந்த கணிப்பை எடுத்து பார்க்கலாம். ஆனால், முடிவின் தாத்பரியம் தெரியாமல் போகும். நான் க்ரிஃபிண்டார் என்பதை நம்பமுடியவில்லை. ‘ஸ்லிதெரின்’ ஆக இருக்கத்தான் வாய்ப்பு என்று எண்ணியிருந்தேன்!

தினபூமி

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை எதிர்க்கிறேன் – மன்மோகன்சிங்:

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவதை பொதுவாக தாம் எதிர்ப்பதாக புதிய பிரதமராக பதவி ஏற்கப் போகும் டாக்டர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். இருந்தாலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் ஆந்திர அரசின் முடிவு நியாயமானதே என்றார். தமிழகத்தில் இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்கும் வகையில் விவசாயிகளுக்கு மணியார்டர் மூலம் நிதிஉதவி செய்யப்பட்டது. ஆனால் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இலவச மின்சாரம் தமிழகத்தில் நிறுத்தப்பட்டு விட்டதைப் போல போராட்டம் நடத்தின. கொள்கை அளவில் தாம் இதை ஏற்கவில்லை என்றும் கூறினார் மன்மோகன்சிங்.

இத்தாலியில் இளையராஜா இசை நிகழ்ச்சி – இளையராஜா:

நான் இதுவரை மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தேன் முதன் முறையாக இத்தாலியில் கடந்த மே மாதம் 14, 15_ம் ஆகிய நாட்களில் எனது இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சி இத்தாலியில் வாழும் இந்தியர்களுக்காக இல்லை. இத்தாலி ரசிகர்களுக்கு தான் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி வருட வருடம் “மாடர்ன் ஆப் ஒப்ரா” என்ற இடத்தில் இசை குழுவினர்களின் நிகழ்ச்சி நடைபெறும். இசை நிகழ்ச்சியின் முடிவில் எனது இசை நிகழ்ச்சி நடைபெற்றது. எனது இசை நிகழ்ச்சி முக்கிய நிகழ்ச்சியாக நடந்தது.

சொல்லாத காதல் – தமிழ்மதி:

“தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல்

எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லைப்

பிறநீர் மக்களின் அறிய ஆயினால்

பெய்ந்நீர் போலும் உணர்விற் றென்ப” என்பது தொல்காப்பியம்.

தோழியிடம் சொல்லிப் புலம்புகின்றாள். இது

“நோயலை கலங்கிய மதனழி பொழுதின்

காமம் செப்பல் ஆண்மகன் கமையும்

யானே பெண்மைதட்ப நுண்ணிதின் தாங்கி” (நற்.94)

என்ற பாடலடிகளில் புலம்கின்றது.

ஆண்டாள், தன் `நாச்சியார் திருமொழியில் (13:1) இந்த உணர்வுக்கு ஆட்பட்டுத்தான் “பெண்ணின் வருத்தமறியாத பெருமான்” என்று பாடித்தவிக்கின்றாள்.

சினிமா துணுக்குகள்:

  • வித்யாசாகரின் இசையில் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா ஒரு பாடலை பாடியுள்ளார். எந்தப் படத்துக்குப் பாடியிருக்கிறோம் என்பதே அவருக்குத் தெரியாதாம். கரு. பழனியப்பன் இயக்கும் `சதுரங்கம்’ படத்துக்காகத்தான் இவர் பாடியிருக்கிறார்.

  • ஒரு பாடல் எழுதுவதற்கு 10 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்கள் தமிழ்ககவிஞர்கள்.

குவிஸ்:

  • ‘JANE EYRE’ நூலின் ஆசிரியர் யார்?

  • `பாக்ஸிங்’ விளையாட்டில் ஒரு ரவுண்ட் என்பது எவ்வளவு?

விடுகதைகள் :

  • சின்னவன் ஓடுவான் அடுத்தவன் நடப்பான் பெரியவன் தவழுவான். அவர்கள் யார்?

  • சுனை ஒன்று சுவர் மூன்று அது என்ன?

தமிழ் நாள்காட்டி

நன்றி: sysindia.com – தமிழர் பக்கம்

ஆய்த எழுத்து

Dinamani.com – Kadhir: “”உயிர், மெய் இரண்டின் துணையின்றி ஆய்த எழுத்து தனித்து இயங்காது. மாதவன், சூர்யா, சித்தார்த்தின் பாதை தனித்தனியானது. ஆனால் ஒருவரையொருவர் சாராமல் வாழமுடியாது என்பதே படத்தின் கரு’ என்கிறார் இயக்குநர் மணிரத்னம்.”

ரீடிஃப்: பிரேம் பானிக்கர் ஆய்த எழுத்தின் இந்தி வெளியீடுக்கு விமர்சனம் கொடுத்துள்ளார். நான் இவருடைய கிரிக்கெட் வர்ணனைகளை வெகு காலமாக படித்து வந்தவன். சில வருடம் முன்பு வரை இந்தியா கலந்து கொள்ளும் ஆட்டங்களின் விமர்சனங்களை இவர் ரீடிஃபில் கிரிக்கெட் பகுதிகளில் எழுதி வந்தார். இந்தியா தோற்றால் ஏறி மிதிப்பதும், ஜெயித்தால் தலையில் தூக்கி வைத்து கூத்தாடுவதும் சாதாரணமாக நடக்கும். ஆனால், புள்ளி விவரங்களோடு, படு நுட்பமாக அலசுவார். ஹிந்துவின் மோகன் பார்வைகள் படித்து பழக்கப் பட்டவனுக்கு இவருடையது கொஞ்சம் தீவிர ஆராய்ச்சி போலத் தோன்றும்.

ஆய்த எழுத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக பிய்த்து எழுதியிருக்கிறார். அந்த அதி முக்கியமான காட்சி என்ன என்று அறிந்து கொள்ளும் ஆவல் ரொம்ப இருந்தால் ஏ. ஆர். ரெஹ்மான் விசிறி குழுமத்தில் போய் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.