கொள்கைப் பிடிப்புகளும் கூட்டணி தர்மங்களும்


நேற்றைய சன் டிவி செய்திகள் வழக்கம் போல் மினி பிரச்சார பீரங்கியாக செயல்பட்டது (and a effective one at that). மிகவும் கச்சிதமாக இரண்டு செய்தித் தொகுப்புகளை வழங்கினார்கள். மத்தியான செய்திகளில் போன முறை பிஜேபியோடு அதிமுக உறவு கொண்ட போது நடந்த அவலங்களை விஷுவலாக பட்டியலிட்டார்கள். ஆதரவுக் கடிதத்தைக் கொடுக்கத் தாமதித்தது, வாஜ்பேயை பட்டி தொட்டிகளிடம் அறிமுகப்படுத்தியதை, நியு தில்லியில், கான்வெண்ட் ஆங்கிலத்தில், நரைக்காத தலையோடு, பொளந்து கட்டியது, பின் ஒன்றரை வருடத்துக்குள்ளாகவே ஆட்சியை கவிழ்த்தது வரை சொன்னார்கள். Finishing touch-ஆக காவிரி நடுவர் மன்ற ஆனையத்தின் தீர்ப்பை அப்போதைய வாஜ்பேய் அரசு செயல்படுத்தாது குறித்து,

‘ஏமாத்திட்டீங்களே அய்யா…

ஏமாத்திட்டீங்களே வாஜ்பேய் அய்யா….

நடுவர் மன்ற தீர்ப்பு இருந்தும்…

ஏமாத்திட்டீங்களே’

என்று அரட்டை அரங்கத்தில் பாடுபவர்கள் போல் ராகம் போட்டு ஓட்டு கேட்டதையும் போட்டுக் காட்டினார்கள்.

இரவு செய்திகளில் மூன்று வருடத்தில் அதிமுக அரசு செய்தவற்றை கண்ணியமாக விமர்சித்தார்கள். அரசு ஊழியர்களின் மனைவிகள் கதறுவதையும், மாறனை நான்கு போலீஸார் குண்டு கட்டாக உருட்டி தூக்குவதையும், முரண்டு பிடிக்கும் கலைஞரை ‘சாமி’/’சத்ரியன்’ வில்லனை முறுக்குவது போல் சட்டையை மடக்கிக் காருக்குள் அடக்குவதையும் நெஞ்சம் பதைபதைக்குமாறு அஞ்சே நிமிஷத்தில் சொன்னார்கள். மதுரை மீனாட்சி, இராணி மேரி, சட்டக் கல்லூரி என்று இளைஞர்களிடம் செய்த அத்துமீறல்களையும் சொல்லத் தவறவிடவில்லை.

அனேகமாக ஜெயாவில் இதே போன்று மாற்றுகருத்துக்கள் இடம்பெற்றிருக்கலாம்.

என்னை யோசிக்க வைத்தது (பல விஷயங்கள் இருந்தாலும்) இதுதான்:

கூட்டணி அரசின் கொள்கைகள் பிடிக்காவிட்டால்

1. உடனடியாக (ஜெயலலிதா ஒன்றரை வருடத்தில் விலகியது போல்) ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வது உத்தமம்.

2. கூட இருந்து (கலைஞர் போல் நாலரை வருடம் முயற்சி செய்தபின்) இடித்துரைத்து பின்பு வாபஸ் பெற்றுக் கொள்வது உத்தமம்.

3. (சந்திரபாபு நாயுடு போல்) கடைசி வரை கூடவே இருக்க வேண்டும்.

One response to “கொள்கைப் பிடிப்புகளும் கூட்டணி தர்மங்களும்

  1. நேற்று ஜெயாவில் வைகோ கருணாநிதியைத் திட்டித் தீர்த்ததைக் காண்பித்தனர். கோபாலபுரத்தில் பெனாமி சொத்து, சென்னையில் ஜெயிப்பதெல்லாம் கள்ள ஓட்டால்தான் போன்ற பல விஷயங்கள்… பின்னர் ராமதாஸ் ஜெ.யைப் புகழ்வது, கருணாநிதியைத் திட்டுவது இப்படி.

    ஆக நேற்று முழுதும் சன் டிவியில் ஜெவையும், ஜெயா டிவியில் மாற்றுக்கட்சியினரையும் மட்டுமே காட்டிக்கொண்டிருந்தனர்.

    இதனால் வாக்களிப்பவர்ர் யாரும் தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.