மன்னிப்பு மட்டும் கேட்டால் போதுமா?


ஈராக் போரில் மாட்டிக் கொண்ட கைதிகள் படும் பாடு அமெரிக்க ஊடகங்களில் பெரும்பாடுபடுகிறது. சதாமைத் தவிர மற்ற அனைத்து ஈராக்கிய வீரர்களுமே எவ்வாறாவது கொடுமைபடுத்தப் பட்டிருப்பார்கள் என்பதைப் புகைப்படங்கள் மூலம் காண்கிறோம்.

தமிழ் சினிமா அதிகம் பார்க்கும் தமிழன் என்னும் முறையில் இந்தப் படங்கள் எனக்கு பெரிய பாதிப்பையோ, அதிர்ச்சியையோ, வருத்தத்தையோ தரவில்லை. ‘காதலன்’ படத்தில் கவர்னர் மகளைக் காதலித்ததற்காக துன்புறுத்தல், ‘குருதிப்புனலில்’ கோட்பாடுக்காக எதையும் செய்யத் துணிந்த புரட்சிக்கார நாசரும், நாசரிடமிருந்து உண்மைகளை வெளிக் கொணருவதற்காக போலீஸ¤ம் மாற்றி மாற்றி அரங்கேற்றும் காட்சிகள், என ஒரு சிலதை சொல்லலாம். எனினும், நம்மில் அனேகர் தமிழக/இந்திய சிறைகளில் நடக்கும் அட்டூழியங்களையும், அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களால் செய்யப்படும் அக்கிரமங்களையும், செல்வாக்கு உள்ளவர்கள் பயன்படுத்தும் அடக்குமுறையையும் நிஜ வாழ்விலும் கண்டிருப்போம்.

சித்திரவதை செய்தால்தான் ஈராக்கின் அடுத்த கட்ட சதி நடவடிக்கைகள் தெரியும் என்னும் நிலை ஏற்பட்டிருக்கலாம். அமெரிக்காவின் படைவீரர்களுக்கு ஆபத்து என்னும்போது இவர்களை அடித்து துவைப்பது பெரிய விஷயமாகத் தோன்றியிருக்காது. மேலும், அவர்களில் சிலர், 9/11-இல் சொந்தபந்தங்களை இழந்தவர்களாக இருந்திருக்கலாம். நண்பர்களை இழந்த ஆற்றாமையினால், இவ்வாறு மனிதத்தனமையை மறக்கத் தள்ளப்பட்டிருக்கலாம். சக வீரர்களின் கால், கை உறுப்புகளை இழந்ததினாலும், ஒரு வருடத்துக்கு மேல் சுற்றங்களை மறந்து போரில் ஈடுபட்டிருப்பதாலும் அரக்ககுணம் குடி வந்திருக்கலாம். சதாமிடமும் ஒஸாமிடவும் செய்ய நினைத்ததை, அவர்களிடம் காட்ட முடியாத கோபத்தை, வடிகாலாக போர்க்கைதிகளிடம் கொட்டிருக்கலாம்.

ஆனாலும், அவர்களில் மிகச் சிலரே இது போன்ற காரியங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். கூட இருந்து கண்டித்தவர்கள், வெகுண்டு போய், இந்த நடவடிக்கையை அம்பலபடுத்தியுள்ளார்கள்.

இது போன்ற துன்புறுத்தல்களுக்காக புஷ் இப்போது மன்னிப்பு கோரி விட்டார். சண்டைக்குப் போவார்; அதில் ஆயிரக்கணக்கானோரை கொலை செய்வார்; எண்ணெய்க் கிணறுகளையும் காண்ட்ராக்ட்களையும் வைத்து சுயலாபம் அடைவார்; தொடர்ந்து ஆக்கிரமித்துக் கொண்டு செய்வதறியாது விழிப்பார்.

சிறையில் நடந்த சில சில்லறை விஷயங்களுக்காக ‘சாரி’ கேட்டு விட்டார். மற்ற சம்பவங்களுக்கு?

சித்திரவதைப் புகைப்படங்கள் / வாஷிங்டன் போஸ்ட் செய்தி

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.