Monthly Archives: ஏப்ரல் 2004

பின்குறிப்பு – மனுஷ்ய புத்திரன்

திட்டவட்டமாய் எழுதி

இறுமாப்புடன் கையெழுத்திட்டாலும்

எதற்கும் வைத்திருங்கள்

சின்னதாய் ஓரிடத்தை

தேவைப்படலாம்

ஒரு பின்குறிப்பு

பாசாங்குகளில் கசியும் விஷம்

தாழ்வுணர்ச்சியின் கண்ணீர்த் திவலைகள்

நீ கைவிட்ட உன் சொந்த இதயம்

அனைத்திற்கும் அடியில்

துடிக்கும் ஒரு பின்குறிப்பு

ஞாபகத்தின்

பழக்கத்தின்

அதல பாதாளத்திலிருந்து

இசையின் குரலால் பீறிட்டெழும்

சிலிர்ப்பின் குறிப்பு

பிறகு நீ இழந்துவிடுவாய்

உன் உள்ளடக்கத்தை

எதிர்பாராமல் வந்த

காதல் அல்லது மரணத்திற்கு நிகராய்த்

திகைப்பூட்டும் குறிப்பால்

நன்றி: என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்; உயிர்மை பதிப்பகம்

mailto:uyirmmai@yahoo.co.in

திங்கள்கிழமை வேலை அதிகம்

1. Tamil Writers Association நடாத்திய சிறுகதைப் போட்டியில் ஜெயந்தியின் பொம்மை கதை இரண்டாவது பரிசைப் பெற்றுள்ளது.: வாழ்த்துக்கள்… (அந்தக் கதை எங்கு கிடைக்கும்???) தனி மடலிலாவது அனுப்ப வேண்டுகிறேன். அட்வான்ஸ் நன்றிகள்.



2. சிலப்பதிகாரத்தில் இலக்கியம்: மருதத்தில் இந்திர விழா , பாலையில் கொற்றவை வழிபாடு, குறிஞ்சியில் முருகன் வழிபாடு, முல்லையில் திருமால் வழிபாடு, நெய்தலுக்குரிய வருணன் வழிபாடு என்று வகைப்படுத்தினார்.

ஐந்திணைகள் ஒரு அடையாளத்துக்கும், அழகுக்கும் தான் என்று சொல்லி அருண் தொகுத்த வலைப்பதிவுகள்:

நெய்தல் – சிரித்து வாழ வேண்டும்!

கொசப்பேட்டைக் குப்சாமி, டுபுக்கு, இட்லி வடை, புண்ணாக்கு, பரி, முத்து, சந்திரவதனா

பாலை – போவோமா ஊர்கோலம்

ஐகாரஸ், வெங்கட், நாட்டாமை, மாலன், ரஜினி, சுந்தரவடிவேல், சாமான்யன், ராஜா, குமரேசன், சுவடு, தங்கமணி

மருதம் – தினம் தினம்

‘என் மூக்கு’, காசி, பத்ரி, பாஸ்டன் பாலாஜி

முல்லை – வலை வலம்

ஜான்போஸ்கோ, குறும்பூ, முத்துராமன்

குறிஞ்சி – வலைப்பதிவுகள் குறித்த முதல் கட்டுரை

பவித்ரா, ராதாகிருஷ்ணன், ஈழநாதன், ‘எளிய தமிழில் இனிய மார்க்கெட்டிங்’, துடிமன்னன்

என்னுடைய கருத்து எதற்கு; தொல்காப்பியர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் 🙂

தொல்காப்பியம் – பொருளதிகாரம்:

மாயோன் மேய காடு உறை உலகமும்

சேயோன் மேய மை வரை உலகமும்

வேந்தன் மேய தீம் புனல் உலகமும்

வருணன் மேய பெரு மணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.

காரும் மாலையும் முல்லை. 6

குறிஞ்சி,

கூதிர் யாமம் என்மனார் புலவர். 7

பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப. 8

வைகறை விடியல் மருதம். 9

எற்பாடு,

நெய்தல் ஆதல் மெய் பெறத் தோன்றும். 10



3. சாரு நிவேதிதா – கோணல் பக்கங்கள்:

“You Kiss by the book…” – ரோமியோ ஜூலியட்டின் மூலம், ஒரு இத்தாலியக் கதை. Arthur Brooke எழுதிய The Tragical History of Romeus and Julietஐத் தான் ஷேக்ஸ்பியர் தனது ஆதாரமாகக் கொண்டார். சொல்லப்போனால் ஷேக்ஸ்பியரின் எந்தப் படைப்புமே அவரால் சுயமாக புனையப்பட்டவை அல்ல. 1476ம் ஆண்டு Masuccio Salernitano எழுதிய Cinquante Novelle என்ற கவிதை தான் ரோமியோ ஜூலியட்டின் மூலம் என அறியப்படுகிறது. 1562ம் ஆண்டு ஆர்தர் ப்ருக் எழுதிய நெடுங்க விதை. இதுவே ஷேக்ஸ்பியரின் நாடகத்துக்கு அடிப்படை. ஷேக்ஸ்பியர் செய்த ஒரே மாற்றம் ஜூலியட்டின் வயது. ப்ருக் ஜூலியட்டின் வயது 18. ஷேக்ஸ்பியர் ஜூலியட்டுக்கு வயது 13. ஷேக்ஸ்பியர் இந்த நாடகத்தை 1595ம் ஆண்டு எழுதினார்.

இளவேனில் துவங்கி விட்டது… – சமீபத்தில் நண்பர் ப்ரதாப் போத்தனின் வேண்டுகோளுக்கு இணங்க ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகத்தைப் படித்தேன். படிக்கும் போதே பல இடங்களில் கண்ணீர் விட்டேன். இதை தமிழில் சினிமாவாக எடுக்க இருக்கிறார் ப்ரதாப். “ஜூலியட் பாத்திரத்தில் நடிக்க பதினேழு வயதில் ஒரு பெண் தேவை’ என்றார். எனக்குத் தெரிந்து பதினேழு வயதான நகரத்துப் பெண்களுக்கு தமிழ் தெரியுமா என்றே சந்தேகமாக உள்ளது.

ஓர் ஆன்மீக அனுபவம்: ரோமியோ ஜூலியட் நாடகத்தை முறையாகப் படித்தவர்கள் அதன் நுணுக்கமான அழகுகளைப் பற்றி அறிந்திருந்தாலும் எனக்கு எழுதலாம். அமெரிக்காவில் வாழும் தமிழர் பலர் பொழுது போகாமல் எங்கள் அண்ணா, லேடி கில்லர் என்று சினிமாவுக்குச் சென்று தங்களின் கலைத்தாகத்தைத் தீர்த்துக் கொள்கின்றனர். தமிழ் சினிமாவில் வரும் இரட்டை அர்த்த வசனங்களைப் போல் ஷேக்ஸ்பியர் வரிக்கு வரி பயன்படுத்தியிருக்கிறார். கத்தி என்பதற்கு ஷேக்ஸ்பியர் தரும் இரண்டாம் அர்த்தம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஸீரோ டிகிரி மின் நாவல் விற்பனை நின்று விட்டது. விற்ற எண்ணிக்கை 60. விலை: ஐந்து டாலர். ஆனால், 2000 பேரிடம் இந்த நாவலின் மின்நாவல் பிரதி இப்போது கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்தக் கட்டுரைகள் ‘உயிர்மை’யிலும் வெளிவருகிறது.


4. ஜிம்பாப்வேயின் கிரிக்கெட் அரசியல்: இப்பொழுது இலங்கை அணிக்கும் ஜிம்பாப்வே அணிக்கும் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. இதுவரை நடந்துள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஜிம்பாப்வேக்கு தோல்வி. இப்பொழுதுள்ள ஜிம்பாப்வே அணியை பங்களாதேஷ் கூட எளிதாகத் தோற்கடித்து விடும்!

நேற்று ஜிம்பாப்வே முப்பத்தைந்து ஓட்டங்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து விட்டது. இது உலகக் கோப்பையில் கனடாவின் மிகக் குறைந்த ரன் எடுக்கும் சாதனையான 36-ஐ முறியடிக்கிறது. ‘4, 4, 7, 0, 0, 2, 4, 0, 4, 0, 3’ என்னும் தலைப்போடு இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியை வெளியிட்டதாக நண்பர் சொல்கிறார்.


5. ப்ரியமுடன் பிகேபி நாளை கிசுகிசு சொல்வார்!


வசந்த கால வருகை

ஆண்:

மொட்டுகளே மொட்டுகளே

மூச்சு விடா மொட்டுகளே

கண்மணியாள் தூங்குகிறாள்

காலையில் மலருங்கள்

பொன்னரும்புகள் மலர்கையிலே

மென்மெல்லிய சத்தம் வரும்

என் காதலி துயில் கலைந்தால்

என் இதயம் தாங்காது

பெண்:

நீ ஒரு பூ கொடுத்தால்

அதை மார்புக்குள் சூடுகிறேன்

வாடிய பூக்களையும்

பேங்க் லாக்கரில் சேமிக்கிறேன்

ஆண்:

உன் வீட்டு தோட்டம் கண்டு இரவில் வந்து சேர்வேன்

ரோஜாக்களை விட்டுவிட்டு முட்கள் திருடிப் போவேன்

பெண்:

நீ ஆகட்டும் என்றே சொல்லிவிடு

இன் சட்டையில் பூவாய் பூப்பேன்

ஆண்:

காதலி மூச்சு விடும்

காற்றையும் சேகரிப்பேன்

காதலி மிச்சம் வைக்கும்

தேநீர் தீர்த்தம் என்பேன்

பெண்:

கடற்கரை மணலில் நமது

பெயர்கள் எழுதிப் பார்ப்பேன்

அலைவந்து அள்ளிச் செல்ல

கடலைக் கொல்ல பார்ப்பேன்

ஆண்:

உன் நெற்றியில் வேர்வை கண்டவுடன்

நான் வெயிலை வெட்ட பார்ப்பேன்

RAAGA – Roja Koottam – Tamil Movie Songs

பாஸ்டனில் ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’

‘குடும்பம் ஒரு கதம்பத்தின்’ தழுவல் என்று தெரிந்தாலும் மீண்டும் ஒருமுறை நாடகத்தைப் பார்க்க சென்றேன். லிபர்டியில் அந்தப் படத்தை நான் பார்த்தபோது பத்து வயதுதான் இருந்திருக்கும். டைட்டில் பாடல் மட்டும் நிறைய கேட்டு நினைவில் இருந்தது. படத்தின் காட்சிகளோ வசனங்களோப் பெரிதாக நினைவில் இல்லை. ஆனால், நாடகம் வளர வளர deja vuதான் மிஞ்சியது.

மூன்று குடும்பங்கள். வேலைக்கு செல்லும் கண்ணன், உமா தம்பதியினருக்கு போர்டிங் ஸ்கூலில் படிக்கும் மகன். ப்ரோக்கர் பரமசிவத்துக்கு குடும்பத் தலைவியாக பார்வதி. கமலா காமேஷ் (லட்சுமி)க்கு கையாலாகாத விசு கணவன். மது, மைதிலி என்று இரு குழந்தைகள்.

பைத்தியாகாரனுக்கு வைத்தியம், காலில் பேண்டேஜ் போட்டதும் கால் கட்டு என நிறைய விசு வரிகள். ஏற்கனவே பலரால் அறியப்பட்ட வசனங்களையும், ஓரள்வு வெற்றிகரமாக ஓடிய படத்தின் நடிகர்களின் தாக்கத்தில் இருந்து வித்தியாசப்படுத்துவது கடினமே. ஆனால், ஸ்டேஜ் ·ப்ரெண்ட்ஸ் யுஎஸ்ஏ குழுவினர் விசுவின் குழப்பியடிக்கும் tongue-twisterகளையும் பன்ச்களையும் சூப்பராக அரங்கேற்றினார்கள்.

பிராமாணாள் வீட்டு காரியங்களுக்கு சமைக்கப் போகும் ஏழை லட்சுமியின் மடிசாரின் மடியில் செல்·போன் ஒட்டிக் கொண்டிருந்தது காலத்தின் கட்டாயம். ஆனால், அமெரிக்காவில் நாடகம் போடும்போதும் அதே அழதப் பரசான வேலைக்குப் போகும் மனைவியா, போகாத ஆணாதிக்க சமூகமா, பொறுப்பற்ற இளைய தலைமுறை, பத்து நாட்கள் வீட்டில் அடுப்பெரியாதது போன்ற விஷயங்களை எடுத்துக் கொள்வது காலத்தின் கட்டாயமல்ல.

அமெரிக்கத் தமிழர்களை மிகவும் பாதிக்கும் பிரச்சினைகளாக பல இருக்கும் – இந்தியா திரும்ப செல்வது, சொந்தமாகத் தொழில் தொடங்குவது, நட்புகளை வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே சந்திப்பது, பெற்றோர்களை இரு வருடத்துக்கு ஒரு முறையெடுத்து மாமியார்-மாமனார் என்று சுழற்சி முறையில் இன்பச் சுற்றுலா கொண்டு வருவது என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். இன்னும் போன தலைமுறை சமாசாரங்களை ரீ-மிக்ஸ் கூட செய்யாமல் பழைய குடுவையில் பழைய கள்ளைத் தந்திருகிறார்கள்.

தற்கால இருப்பிலும் நகைச்சுவை சம்பந்தங்களுக்குப் பஞ்சமேயில்லை. சந்தேகமாயிருந்தால் காசியின் வலைப்பதிவுகள் போல் மேய்ந்தால் அமெரிக்காவில் கார் வாங்கும் போதும், ஓட்டும் போதும் நடப்பவை, பிரிட்டிஷ் ஆங்கிலமும் சரியாகத் தெரியாமல், அமெரிக்க ஆங்கிலமும் புரியாமல் செய்யும் திண்டாட்டங்கள், அலுவலகத்தில் அடிக்கும் கூத்துகள், சமையல் செய்து கையை சுடும் அனுபவங்கள் வைத்து காமெடித் தோரணமே கட்டலாம். அனேகமாகப் பலரும் அவற்றை நேரடியாக ஒன்றிப் போய் ரசிக்கவும் முடியும்.

பரமசிவமாக நடித்தவரும் விசுவாக நடித்தவரும் மிகச் சிறப்பாக செய்தார்கள். அனேகமாக அனைவரின் இயல்பான நடிப்பினால் மட்டுமே இரண்டு மணி நேரமும் உட்கார முடிந்தது. உமாவாக நடித்தவர் கொஞ்சம் (அந்தக்கால)

சிவாஜி நிறைய பார்ப்பார் போல. கொஞ்சம் ஓவர்-ஆக்டிங். இளைய பெண்ணாக முக்கியமான ரோல் கொண்ட மைதிலி cat-walk செய்ய ஏதுவானவர். அவரை தாவணியில் உலாவ விட்டும், அமெரிக்கன் accentஓடு உணர்ச்சிவசப்பட்டதும் கொஞ்சம் சீரியஸான சீனில் நகைச்சுவையைத் தேவையில்லாமல் கொண்டு வந்தது. உமா கண்ணனின் ஜோடிப் பொருத்தம் இன்னொரு சைட் காமெடியாகப் பட்டது.

மூன்று வீடுகளைத் தனித்தனியாய் காட்டினாலும், மைதிலி சில முறை தவறாக பரமசிவம் வீட்டிற்குள் சென்றதையும், பரமசிவத்தின் பாத்திரங்களை லட்சுமி அவர்கள் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு சென்றதும் எளிதாக தவிர்த்திருக்கலாம். அமெரிக்காவில் தமிழ் நடிகர்களுக்காப் பஞ்சம்? சின்ன சின்ன ரோல்களே ஆனாலும், ஒரிருவரே நான்கு ஐந்து வேடங்களில் வந்தார். காரெக்டரைஸேஷன் என்பதை குறித்துப் பெரிதாகக் கவலைப்படாவிட்டாலும் புதியவர்களை அறிமுகப்படுத்தவும், ஸ்டேஜ் அமைப்பிற்கும் ஒரு வேடத்திற்கு ஒருவரே என்னும் கொள்கை நல்லது.

நாடகத்தில் மிகவும் ரசித்தது இசை. இரண்டாவதாக அரங்க அமைப்பு. இடைவெளிகளில் பொறுக்கியெடுத்த context-sensitive பாடல்கள்; நாடகம் நடக்கும்போது அடக்கி வாசித்த பிண்ணனி என்று கலக்கினார். ‘கண்மணியே காதல் என்பது’, ‘கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப் போலாமா’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, என்று சிறப்பான தேர்ந்தெடுப்பு + திறமை. அரங்க அமைப்பும் அதற்கு வைத்திருந்த சின்ன சின்ன விஷயங்களும் மிகவும் பாராட்டத்தக்கது. தினமணி, பத்து ரூபாய் நோட்டு, காந்தி படம் என்று பார்த்து பார்த்து செய்திருந்தார்கள்.

என்னதான் சிறப்பான நடிகர்களைக் கொண்டிருந்தாலும் அச்சில் வார்த்தெடுத்த வசனங்கள், 26 ரூபாய் வாடகை, தமிழோவியத்தில் சொன்னது போல் ‘தே..யாத்தனம் செய்யலைப்பா’ போன்ற யதார்த்தமற்ற காட்சிகள் வைத்ததனால் நாடகம் எடுபடவில்லை. ஏன் இன்னும் நியு ஜெர்ஸி (அல்லது அமெரிக்கத்) தமிழ் சங்கம் இப்படி விசு, சோ, க்ரேஸி நாடகங்களை உல்டா செய்கிறார்கள்? தமிழோவியம் இந்த நாடகத்திற்காக பரிசு போட்டி வைத்திருந்ததில் இன்னும் பலரை ஆர்வமாகக் கலந்து கொள்ள செய்திருக்கலாம். அல்லது அதற்கு வந்த படைப்புகளில் இருந்து ஒன்றிரண்டை கலந்து ஒரு சூழ்நிலைக்கு ஏற்ற, எங்கள் சுவைக்குத் தக்க, பார்க்காத படத்தையும் கேட்காத வசனங்களையும் வைத்து நாடகம் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

பாஸ்டனில் ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’

ecdf.jpgதமிழோவியம்: ஸ்டேஜ் ப்ரெண்ட்ஸ் குழுவினரின் 11 வது படைப்பான வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற நாடகம் நியு இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் மூலம் பாஸ்டனிலும் அரங்கேறுகிறது.



விசுவின் குடும்பம் ஒரு கதம்பம் எனும் திரைப்படத்தின் மூலக்கதையை அருமையாக நாடகமாக்கியிருந்தார் டைரக்டர் ரமணி. 3-D எபெக்டில் செட் அமைத்து அட்டகாசம் செய்திருந்தார்கள். நாடகத்திற்கு பெரிய துணை சிம்பொனி ரமணி மற்றும் கார்திக்கின் இசை. சரியான இடத்தில் சொல்லத்தான் நினைக்கிறேன் பாடலை இசைத்து ஒரு சின்ன சஸ்பென்ஸ் கொடுத்தார்.

ஜெயகாந்தனாருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஜெயமோகன்: ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் – 1

ஜெயகாந்தன் படைப்புகள் உரத்த குரல் கொண்டவை, வாதாடக் கூடியவை, பிரச்சார நெடி அடிப்பவை , நேரடியாக அப்பட்டமாக தன் உள்ளுறைகளை விரித்துப்போடும் தன்மை கொண்டவை ,ஆகவே கலைத்தன்மை குன்றியவை என்பது நம் சூழலில் பொதுவாக உள்ள கருத்து. இக்கருத்தை உருவாக்கியவர் க.நா.சுப்ரமணியம். மிக வலுவாக பரப்பியவர் சுந்தர ராமசாமி. இருவருமே ஜெயகாந்தனை விரிவான ஆய்வுக்கு உள்ளாக்கவில்லை என்று யோசிக்கும்போது துணுக்குறல் ஏற்படுகிறது.

[அக்கினிப்பிரவேசம்] அவள் அதன் பிறகும் ஒரு சூயிங் கம்மை மென்றபடி இருக்கிறாள். அவன் அவளுக்கு தந்தது அது. அந்த சூயீங் கம்மை அவள் அந்த உடலுறவுக்கு பிறகு தான் வாயில் போட்டிருக்கவேண்டும் ! களங்கமின்மை என்பது மேல்மனதின் ஒரு பாவனைதானா? ஆழ்மனதில் அவள் அவ்வனுபவத்தைத்தான் ‘ அசை ‘ போடுகிறாளா? அம்மாவின் பதற்றமும் அழுகையும் நிகழும்போது சூயிங் கம் மென்று கொண்டிருக்கும் அவளுக்குள் வேறு ஒரு பெண் புன்னகை செய்துகொண்டாளா? ‘அம்மன் சிலையாக’ தன்னை ஆக்கிய அனைத்துக்கும் எதிரான புன்னைகை?

ஜெயகாந்தனை அவர் கடைப்பிடித்த முற்போக்கு அழகியலை மதிப்பிட முற்போக்கு அழகியலில் சாதனை படைத்த யஷ்பால் [ இந்தி ] பிமல் மித்ரா [வங்கம்] நிரஞ்சனா[ கன்னடம்] தகழி சிவசங்கரப்பிள்ளை [மலையாளம்] ஆகியோரையே ஒப்பீடுகளாகக் கொள்ளவேண்டும். ஜெயகாந்தன் மார்க்ஸியத்தை கோட்பாட்டளவில் ஏற்றுக்கொண்ட முற்போக்குப் படைப்பாளி. நம் சூழலில் பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன், விந்தன் முதலியோரை மார்க்ஸியத்தை ஏற்காத முற்போக்கினர் எனலாம். இவர்களிடமிருந்து அழகியலைப்பெற்றுக் கொண்டு விலகி கோட்பாட்டளவில் மார்க்ஸியத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன்.

கௌரிப்பாட்டி [யுக சந்தி] போன்ற சுயசிந்தனையை முன்வைத்து சமூகத்தை ஒட்டுமொத்தமாக எதிர்த்து நிற்கும் ‘முதுகெலும்புள்ள ‘ கதாபாத்திரங்களைத்தான் அவர் அதிகம் படைத்துள்ளார். மனிதன் அவன் வாழும் சமூகத்தின் துளி, அவனது சிந்தனை அக்காலகட்ட சிந்தனைகளின் ஒரு விளைவு என அவரது கதைகள் சொல்வது இல்லை. தகழி சிவசங்கரப்பிள்ளை , பி.கேசவதேவ், பிமல் மித்ரா ஆகியோரின் ஆக்கங்களில் வருகிற ‘உறுதியான முதுகெலும்புள்ள பாட்டாளி ‘ இந்திய சமூகத்தை மிக மிகக் கவர்ந்த ஒரு கதாபாத்திரம் . அக்கதாபாத்திரங்களை திரையில் வலிமையக நடித்துக் காட்டிய சத்யன் [மூலதனம், நீங்கள் என்னை கம்யூனிஸ்டு ஆக்கினீர்கள், அனுபவங்கள் தவறுகள், அடிமை போன்ற திரைப்படங்கள் வழியாக] கேரள மனதில் ஓர் ஆழ்படிமமாகவே உறைந்துவிட்டார். தமிழில் பாட்டாளி என்பதற்கு பதிலாக ரட்சகன் என்ற படிமம் திரையில் உருவாக்கப்பட்டது.

நவீனத்துவ இலக்கியம் அதன் இருத்தலிய அடிப்படையில் மனிதனை காமமும் வன்முறையுமாக குறைத்துவிட்ட போது இலட்சியவாதம் ஒருவகை அதிகப்பிரசங்கமாக , வெற்றுக் கனவாக , அசட்டுத்தனமாக கருதப்பட்டது. ஜெயகாந்தன் மட்டுமல்ல இலட்சியவாத கதாபாத்திரங்களைப் படைத்த ப. சிங்காரம் [ புயலிலே ஒரு தோணி] எம் .எஸ். கல்யாணசுந்தரம் [ முப்பது வருடங்கள்] போன்ற படைப்பாளிகள் கூட இங்கு புறக்கணிப்புக்குத்தான் ஆளாகியிருக்கிறார்கள்.

முற்போக்கு அழகியலில் இருவகையான போக்குகள் உண்டு. அவற்றை யதார்த்தவாதம், இயல்புவாதம் என்று தோராயமாக வகைப்படுத்தலாம். யதார்த்தவாதம் என்பது எழுத்தாளந்தான் கண்ட யதார்த்தத்தின் சித்திரத்தை அளிக்கமுயல்வது . புறவுலகத்தின் தகவல்களுக்கு சமானமாகவே எழுத்தாளனின் சுயமும் அங்கே இடம் பெறுகிறது. ஜெயகாந்தன் யதார்த்தவாத எழுத்தாளர் என்றால் ஆர் ஷண்முக சுந்தரம், பூமணி பெருமாள் முருகன் கண்மணி குணசேகரன் போன்றவர்கள் இயல்புவாத எழுத்தாளர்கள். பூமணியின் படைப்புகளில் உள்ள அமைதியை நாம் ஜெயகாந்தனின் கதைகளில் எதிர்பார்க்கமுடியாது. ஜெயகாந்தன் படைப்புகளில் அவரது ஆளுமையே முதன்மையாக வெளிப்படுகிரது, அவரது பார்வையே மையமாக உள்ளது. அப்படி இருக்கக் கூடாது என்று அவரது எழுத்துக்கு நிபந்தனை போட விமரிசகனுக்கு உரிமை ஏதும் இல்லை. ஜெயகாந்தன் முற்போக்கு அழகியலில் செயல்பட்டவர். அவரை நவீனத்துவ அழகியல் கொள்கைகளினால் அளவிடும் அசட்டுத்தனத்தை முதலில் செய்தவர் நகுலன். சுந்தர ராமசாமி அவ்விமரிசனத்தை மிகவும் தீவிரப்படுத்தினாலும் எழுதவில்லை. நேர்ப்பேச்சில் தொடர்ந்து பல வருடங்கள் அதை வெளிப்படுத்தினார்.

ஜெயகாந்தனின் மரபுத்தொடர்பு இரு தளங்களில். ஒன்று நமது சித்தர் மரபுடனான அவரது ஈடுபாடு. இரண்டு நம் மரபின் லௌகீகமான அறம் குறித்த அவரது புரிதலில். என் பார்வையில் அவரது மிகச்சிறந்த இலக்கிய ஆக்கமான ‘விழுதுகள் ‘ இந்த ஈடுபாட்டின் விளைவே. முற்போக்கு என்பது ஒரு முடிவற்ற முன்னகர்வு என்றும் நேற்றைய முற்போக்குச்சக்திகளுடன் இன்றைய முற்போக்குசக்திகள் ஆன்மீகமான ஒரு தொடர்பைக் கொண்டுள்ளன என்பதற்கும் சிறந்த உதாரணமாக அமையும் படைப்பு அது. மௌனி, தி.ஜானகிராமன், லா.ச.ரா ஆகியோரின் ஆன்மீகம் பற்றிய மன உருவகங்கள் லௌகீகத்துக்குள் நின்று அடையப்பெற்றவை, முதிர்ந்த லௌகீக நிலையாக ஆன்மீகத்தைக் காண்பவை. நகுலன் நீல பத்மநாபன் ஆகியோரின் படைப்புகளில் ஆன்மீகம் வெற்று பக்தியாக வடிவம் கொள்கிறது . கி.ராஜநாராயணன், சுந்தராமசாமி, ஜி.நாகராஜன் ஆகியோரிடம் ஆன்மீகத் தேடல் என்ற அம்சமே இல்லை. அவர்கள் உலகின் தத்தளிப்புகள் மீது ஓங்கூர் சாமியின் உக்கிரச் சிரிப்பு அலையடிக்கிறது.

ஜெயகாந்தனை இக்கட்டுரையில் முதலில் வகுத்தது அவர் மீறும் இடங்களை அடையாளம் காண்பதற்காகவே.

நன்றி: முழு கட்டுரைக்காக – திண்ணை & நினைவூட்டியதற்காக – பிகேஎஸ்

படித்ததில் பதிந்தது

பிரபல எழுத்தாளர் ராஜ ஸ்ரீகாந்தன் காலமானார்: மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபாடு கொண்ட ஸ்ரீகாந்தன், எழுத்தாளர் அழகு சுப்பிரமணியம் ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதைகளைத் தமிழாக்கம் செய்து ‘நீதிபதியின் மகன்” என்ற தலைப்பில் புத்தகமாக்கினார். அதற்காக அவருக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. சிறுகதையாசிரியராக ஆற்றிய பணிகளுக்காக, அவருடைய சிறுகதைத் தொகுதியான ‘காலச்சாளரம்” என்ற நூலுக்கு சாகித்திய மண்டலப் பரிசும் கிடைத்தது. இதுவரை, நான்கு நூல்களை வெளியிட்டுள்ள ராஜ ஸ்ரீகாந்தன், ‘சூரன் கதை” (வதிரிப் பெரியர் சூரன் பற்றியது) என்ற நூலை வெளியிடவிருந்தார். மூன்று நாவல்களை அச்சுக்கும் கொடுத்திருந்தார்.

நன்றி: ஈழ இலக்கியம்



வல்லிக்கண்ணன் – வண்ணநிலவன்: உரையாடல்கள் என்பவை பலவகைப்பட்டன. சிலருடன் பேசிக் கொண்டிருக்கும்போது, பேச்சுக்குப் பேச்சு தங்களுடைய அபிப்பிராயத்தை சொல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். சிலர் எதிரே இருப்பவருடைய அபிப்பிராயம் எவ்வளவுதான் வித்தியாசப்பட்டாலும் அதை வெளியே சொல்லாமல் மௌனமாக இருப்பார்கள். சிலர் நாசூக்காகத் தாங்கள் நினைப்பதைச் சொல்லிவிட்டுச் சும்மா இருப்பார்கள். சிலருடன் பேசும்போதே, உரையாடல் என்பது முறுக்கேறி விவாதமாகி, இனி நேரில் பார்த்துப் பேச முடியாதபடி, பகையாகவே முற்றி விடும்.

வ.க. எதையும் ஆணித்தரமாக, முகத்திலடிக்கிற மாதிரி பேசவே மாட்டார்கள். அவர்களது கட்டுரைகள் கூட இப்படித்தான் இருக்கும். கட்சி கட்டி நிற்கிற உத்தேசமே வ.க.வுக்கு கிடையாது. எதையும் ஸ்தாபிக்க வேண்டும், தன் வாதத்தை நிலை நிறுத்த வேண்டும் என்ற எண்ணமே வ.க.வுக்குக் கிடையாது.

வ.க.வின் கட்டுரைகள் மேம்போக்கானவை, ஆழமில்லாதவை என்று கூறப்படுவதற்குக் காரணம், வ.க.விடம் வாதம் செய்கிற போக்கு அறவே இல்லாமல் போனதுதான். பெரும்பாலும் எல்லாவற்றையும் ரசிக்கிற மனோபாவம் வல்லிக்கண்ணனுடையது. தன்னைப் பற்றிய தகவல்களைக் கூட ஒரு மூன்றாவது மனிதன் சொல்வதைப் போலத்தான் வ.க. சொல்வார்கள். ஒரு விட்டேற்றியான மனம். அதேசமயம் பிறருடைய கஷ்டங்களைக் கண்டு உருகிவிடும் மனம் வ.க.வுடையது.

நன்றி: சமாச்சார் தமிழ்



ஒரு நல்ல விமர்சனம் என்பது எப்படி இருக்கவேண்டும் – மனுஷ்ய புத்திரன்: நல்ல விமர்சனம், மோசமான விமர்சனம் என்று எதுவுமில்லை. எல்லா விமர்சனங்களும் சார்பானவை. நோக்கங்களுள்ளவை. படைப்பைப்போலவே விமர்சனத்திற்கும் எல்லைகள் இல்லை. என்னைப் பொறுத்தவரை நல்ல விமர்சனம் என்னைப் பாராட்டி எழுதப்படுபவை.

நன்றி: மரத்தடி



பழம்பெரும் மரபினோரே!

வருக, வருக! எனக்கும் ஹரிக்கும் இதைவிடப் பேருவகை இருக்கமுடியாது. மரபின் வளத்தில் ஆழவேரூன்றிப் புதுமை விழுதுகளை விடவேண்டியவர் நாம்.

பழமை பழமை என்று

பாவனை பேசலல்லால்

பழமை இருந்த நிலை – கிளியே

பாமரர் ஏதறிவார்?

என்றான் பாரதி. உணர்ச்சி வசப்பட்டு (காரணமறியாமல்) என் பாரம்பரியம்தான் உயர்ந்தது என்று உரக்கக் கூவுவதோ, அல்லது முற்றிலும் வீண் என்று ஒதுக்கித் தள்ளிவிட்டுப் ‘புதுமை படைக்கிறேன்’ என்று கிளம்புவதோ இரண்டும் அறிவீனம். மரபை அறிவோம் – விருப்பு வெறுப்பின்றி. அதன்பின் அவரவர் விருப்பம். இது ஒரு திறந்த மன்றம். பரிமாறல் மிக அவசியம். அவரவர் புரிதலை அவரவர் சொல்லுங்கள். மொத்தத்தில் எல்லோரும் வளம்பெறுவோம். அவரவர் ஐயங்களைப் பொதுவில் இடுவோம். ஆளுக்கு ஒரு கைகொடுத்தால் எந்தத் தேரையும் நகர்த்தலாம்.

மரபிலக்கியம் ஒரு தங்கச்சுரங்கம். ஆனால் அவ்வளவே உழைப்புத் தேவை. பயனோ அளவற்றது!

வாருங்கள், சேருங்கள், வளம் பெறுங்கள், வளப்படுத்துங்கள்.

அன்புடன்

மதுரபாரதி

ஹரிகிருஷ்ணன்

Yahoo! Groups : marabilakkiyam

ஒரு கடிதம் – சிபிச்செல்வன்

உயிர்மையில் டிசம்பர் இதழில் 53ஆம் பக்கத்தில் ‘கவிதைத் திருவிழா’ என்ற நிகழ்வைப் பற்றிய குறிப்பில் என்னுடைய “நீண்ட கட்டுரை பார்வையாளர்களின் பொறுமையைக் கடுமையாகச் சோதித்தது” என்று உள்ளது.

நான் படித்த கட்டுரையின் தலைப்பு ‘எண்பதுகளில் தமிழ்க் கவிதையின் போக்குகள்’. 80களிலிருந்து 90 வரை தமிழ்க் கவிதைகளின் போக்கைக் குறித்து சுமார் 100 கவிதை நூல்களை வாசித்து ஒன்பது பக்கங்கள் எழுதப்பட்ட கட்டுரை அது. பத்து ஆண்டுகள் என்பது ‘நீண்ட காலம்’. என் கட்டுரை ‘நீண்டது’ என்பதையும் இத்துடன் சேர்த்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். மிக விரிவாக 100 பக்கங்களுக்குக் குறையாமல் எழுதப்பட வேண்டிய கருத்துகளை 9 பக்கங்களுக்குள் எழுதியிருக்கிறேன்.

கவிஞர்கள் சந்திப்பில் வாசிக்கப்பெற்ற கட்டுரைகளில் அதிக எதிர்வினைகளை எழுப்பிய கட்டுரையும் என்னுடையதே. அந்த எதிர்வினைகளுக்கான பதிலையும் அந்த அரங்கத்திலேயே கூறினேன். இவை தவிர அரங்கிற்கு வெளியிலிருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அக்கட்டுரையின் ‘அதிர்வுகள்’ பரவியுள்ளன. சிலர் தங்கள் பெயர்கள் அக்கட்டுரையின் சேர்க்கப்படவில்லையென்று வருத்தப்பட்டார்கள். சிலர் தங்களை விமர்சித்திருந்தமைக்காக வருத்தப்படவும் செய்கிறார்கள். இவையெல்லாம் அக்கட்டுரையின் முக்கியத்துவத்தைக்

காட்டுகின்றன. ‘பொறுமையச் சோதித்த’ கட்டுரையையும் சிலர் கவனமாகக் கேட்டு எதிர்வினையாற்றிவிடுகிறார்கள்.

சிபிச்செல்வன்

சென்னை

நன்றி: உயிர்மை/சன. 2004

வேட்டு வைத்த பூண்டு – ஆனந்த் சங்கரன்

வலைப்பூவில் அமெரிக்க உணவு வகைகள், உணவகங்கள் பற்றி படித்த பொழுது எனக்கு என்னுடைய அலுவலகத்தில் நடந்த இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது.

சுமார் ஒன்னறை ஆண்டுகளுக்கு முன் நான் பிரபல அமெரிக்க கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தேன். ஐநூறுக்கும் மேற்பட்டோர் வேலை செய்த அலுவலகத்தில், நம்மவர்களின் (இந்தியர்கள்) எண்ணிக்கை நிறைய உண்டு. இந்தியர்கள் நிறைய இருந்தாலும் தென்னிந்தியர்கள் ஒரு சிலரே இருந்தோம். மற்றவர்கள் வடநாட்டினர். (எனக்கு பேஸின் ப்ரிட்ஜை தாண்டினாலே வட நாடுதான்).

எனக்கு இரண்டு இருக்கைகள் தள்ளி ஒரு தமிழ் பேசும் கன்னடரும் இருந்தார். வேலையில் கில்லாடி. கொடுத்த வேலையை திறம்பட செய்யக்கூடியவர். ஆனால் அவருடைய பிரச்சனையே அவருடைய பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ளாததுதான். வீட்டில் எப்படி பேசுவாரோ அதே போல் சத்தமாக தொலைபேசியில் உரையாடுவார் (அதுவும் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில்). அருகில் இருப்போருக்கு கேட்குமோ அவர்களுக்கு எரிச்சலாக இருக்குமே என்று துளியும் யோசிக்கமாட்டார். போதாத குறைக்கு அனைவரிடமும் நட்பாக பேசுகிறோம் என்று நினைத்துக் கொண்டு அனைவரின் பர்சனல் விஷயங்களிலும் மூக்கை நுழைப்பார். எனக்கே இது பல முறை எரிச்சல் மூட்டியுள்ளது. ஒரு முறை அவரிடம் இதைப் பற்றி பேசப்போக அதில் இருந்து என்னிடம் ‘காய்’ விட்டுவிட்டார்.

இதெல்லாம் கூட தேவலை, ஆனால் தினமும் காலையிலும் மதியத்திலும் அவர் செய்யும் அலும்பு இருக்கிறதே ! யப்பா.. தாங்காது.

வந்ததும் வராததுமாய் ஊறுகாய் பாட்டிலை (பூண்டு ஊறுகாய் அவர் மேஜை மீது எப்பொழுதும் இருக்கும்) திறந்து வைத்துக் கொண்டு அந்த அறையையே நாறடிப்பார். எனக்கும் பூண்டு பிடிக்கும்தான் ஆனால் ஒரு அளவு இருக்கிறது. அந்த அறையில் வேலை செய்யும் மற்ற அமெரிக்க நண்பர்களுக்கு தாங்காது. அவர்கள் முகம் சுளிப்பார்கள் – வெளியே எழுந்து போவார்கள். ஆயினும் இவர் அதை ஒரு பொருட்டாகவே எண்ண மட்டார்.

அமெரிக்கர்களிடம் ஒரு நல்ல குணம் (அதுவே வேட்டு வைக்கும் குணம்) இருக்கும். தனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லையென்றால் அதை முகத்தில் அறைந்தார் போல் சொல்ல மாட்டார்கள். பேசாமல் இருந்துவிட்டு அதை வேறு விதமாக காட்டுவார்கள். எனது நண்பர் விஷயத்திலும் இதுதான் நடந்தது.

அலுவலகத்தில் ஆட்குறைப்பு செய்த பொழுது அந்த நண்பர் வேலை போயிற்று. இத்தனைக்கு மிக முக்கிய பணியை அவர் செய்து வந்தார். அவருடைய இழப்பு கம்பெனிக்கு பெரிய நஷ்டம். ஆனாலும் அவர் வெளியே அனுபப்படார். எனக்கும் கத்தி வருமோ என்று பயந்தேன். நல்ல வேளையாக தப்பித்தேன்.

ஆட்குறைப்பிற்கு ஒரு நாள் நானும் என் மேனேஜரும் உரையாடிக்கொண்டிருந்த பொழுது, என்னிடம் விளையாட்டாக ‘உன் அருக்கில் இருப்பானே அந்த பேமானிக்கு ஏன் வேலை போச்சு தெரியுமா ?’ என்று நக்கலாக கேட்டார். நான் வெறும் புன்முறுவல் செய்தேன். ‘அவனுடைய வேலை நன்றாக இருந்தாலும் அவனுடைய பூண்டும், பேச்சும் அவன் வேலைக்கு வேட்டு வைத்தது.’ என்று கூறி மற்றொரு பேமானியை உபயோகித்தார்.

மேலிடம் செய்தது சரியா தவறா என்ற ஆராய்ச்சியை விட நாம் கவனமாக இருப்பது நமக்குதானே நல்லது !!

காதல் சொல்லும் பாடல்

‘பேரரகன்’ சூர்யாவே பேசியிருக்கும் சுவாரசியமான வசன கவிதை ராகாவில் மனதைக் கவர்ந்தது.



அவன்:

ஒரு அழகான பொண்ணு இருந்தா

அதவிட ஒரு அழகான பையன் இருந்தான்

அவங்க ஒரு நாள் சந்திச்சாங்க

அவள்:

என்னது…?

அவன்:

அவளுக்குத் தமிழே வராதுடி

அவள்:

போடா…

அவன்:

ஹே… ஒகே.. ஓகே…

அவளுக்கு அவனப் பிடிச்சது

ஆனா சொல்லலை

ஏன்னு தெரியலை

அவள்:

என்ன…?

அவன்:

ஓண்ணுமில்லே…

அவள்:

சொல்லு!?

அவன்:

அந்தப் பொண்ணு பேசுவா.. பேசுவா…

பேசிட்டே இருப்பா

ஆனா

அது அவனுக்குப் பிடிச்ச ராகம்

அவனுக்கு தூரத்தில இருந்தா தெரியாது

பரவாயில்லை

தன்னுடைய உலகத்தை அவளோடப் பெரிய பெரிய கண்களில் பார்த்தான்

அவ கையெழுத்துக் கிறுக்கல்

ஆனா

அதை எடுத்து

பைத்தியமா இருந்தான்

அவ நடக்கிறப்பக் கொஞ்சம் கசமுசா என்றிருக்கும்

ஆனா அவ முடி அசையறதைப் பார்த்தால்

அந்தக் காற்றுக்கேப் பொறாமை வரும்

அவள்:

ஹே…

நிறுத்து… நிறுத்து

அவன்:

You know Priya

He just loved everything about Her

அவ முடி

அவ நெற்றி

அவ கண்

அவ மூக்கு

அவ கன்னம்

அவ உதடு

அவ கழுத்து

அவ ….

கோரஸ்:

த்தநந…த்தநந…

அவன்:

அவளப் பத்தின நிறைய விஷயம் அவனுக்குப் பிடிக்கலே

அவ பேசற விதம்

ஸ்மோகிங்

The way she behaves

இப்படி நிறைய

நிறையக் கிண்டல் பண்ணியிருக்கான்

அவளப் பிடிச்சிருக்கு

அவன யாருக்கும் பிடிக்கலே

He was really bad Priya

ஆனா தனியா

எப்பவும் தனியா இருந்தான்

அவளுக்கு அவனப் பிடிச்சது ப்ரியா

Don’t know Why

ப்ரியா…!

ஏன் ப்ரியா…?

ஏன் என்னை?

கல்யாணம் பண்ணிக்கோ

எப்பவும் உன்கூடயே இருக்கணும்

உன்னைக் காதலிக்கணும்

உன்னைத் தொல்லை பண்ணனும்

உனக்காக வீட்டுக்கு வரணும்

உன் மடியில் தூங்கணும்

இதே மாதிரி எனக்கொரு குட்டி ப்ரியா வேணும்

அவளை பார்த்துகிட்டே எனக்கு வயசாயிடும்

நான் உன்னோடுதான் சாகணும்

அப்படியில்லேன்னா

சாகணும்

இங்கே…

இப்போ