Daily Archives: ஏப்ரல் 21, 2004

சென்னையில் ஒரு வெயில் காலம் – 3

ருசியுற உண்ட அனுபங்களை சொல்லி நாலு மணிக்கே பசியைக் கிளப்பிய ‘வலைப்பூ’ ஆசிரியருக்கு இன்றைய சென்னை அனுபவங்கள் சமர்ப்பணம்.

சென்னையில் எல்லாரும் குளிக்கிறார்கள்; நிறைய தண்ணீர் குடிக்கிறார்கள்; இன்ன பிற சமாசாரத்துக்கும் தண்ணீர் உபயோகிக்கிறார்கள். ஒரு வாளி தண்ணீருக்கு காலணா முதல் ஒண்ணரை ரூபாய் வரையும், ஒரு லாரி தண்ணீருக்கு முன்னூறு ரூபாயும் அதன் சார்ந்த அதிகப்படி விலைகளிலும் விதவிதமான அளவுகளில், வகைகளில், ஏரி தண்ணீர், கலர் தண்ணீர், கடல் தண்ணீர், பிஸ்லேரி, கேன் தண்ணீர் என்று வகையாகக் கிடக்கிறது. ஆழதுளைத்து bore-pump போடுவதை அரசு தடுத்து விட்டது. சில இடங்களில் தொண்ணூறு அடி, நூறடிக்கு மோட்டார் போட்டு உப்பு தண்ணீர்

கிடைக்கிறது. கடல் நீரில் தினசரி விட்டிலேயே குளித்தேன். லிரில் முதல் மைசூர் சாண்டல் வரை என்ன உபயோகித்தாலும் நுரை வராது. சென்னை மக்கள் அதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. பிரும்மாண்டமான சிண்டெக்ஸ் டாங்குகள் அருகே குடம் அடுக்குகிறார்கள். சிலர் அபார்ட்மெண்டுகளுக்கேத் லாரியை வரவழைத்து விடுகிறார்கள். வேலைக்கும் சென்று கொண்டு வீட்டையும் கவனித்துக் கொண்டு குடத்தையும் ரொப்புவது பெண்மணிகள்தான்.

தொலைக்காட்சியில் நான் பார்த்ததிலேயே மிகவும் ரசித்தது ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பான ‘மதன் பார்வை’. ஞாயிறு இரவு எட்டு மணிக்கு வருகிறது. நூறு எபிசோடுகள் முடிந்து விட்டதை ஒரு திருவிழாவாகக் கொண்டாடினார்கள். நூறு வாரத்திலும் அவர் விமர்சித்தப் பார்வைகளில் இருந்து முக்கியமான கருத்துகள்; அயல்நாடுகளில் சினிமா எப்படி அலசப்படுகிறது என்ற சிதறல்கள்; தற்கால சினிமாவின் வளர்ச்சியை எப்படி ‘பிதாமகனும்’ ‘காக்க காக்க’களும் முன்னெடுத்து செல்கின்றன் என்ற ஒரு நிமிடத் துகள்கள்; நல்ல திரைப்படத்தை எப்படி பட்டறிவது என்ற பகிர்வுகள் என்று நான் பார்த்த முதல் வாரம், நான் பார்க்காத நூறு வாரத்தை சுருக்காக காட்டியது.

அடுத்த வாரம் தமிழ்ப் பட உலகின் who is who-க்களுடன் ஒரு கலந்துரையாடல். எந்த நடிகை எந்த சோம பானத்தை அருந்துகிறார்கள் என்று வேடிக்கை பார்ப்பதிலேயே மதன் கேட்ட தர்மசங்கடமான ஆனால் நாகரிகமான கேள்விகளும், அவற்றுக்கு சத்யராஜ், கமல், தரணி, மணி ரத்னம், சேரன், குஷ்பூ போன்றோர் சொன்ன வித்தியாசமான பதில் வாதங்களும் மறந்தே போச்சு. டிடி மலையாளத்தில் பார்த்த படம் ஒன்றின் பெயரை இன்னும் தேடுகிறேன். துறவறத்திற்குக் கொடுக்கப்படும் சிறுவன் ஒருவனின் வாழ்க்கையை பம்மல் கே சம்பந்தத்தில் நடித்த தாத்தா போன்ற சில தெரிந்த முகங்களுடன் காட்டிய நல்ல படம். மடத்தை விட்டு பையன் ஓடிப்போவது, அப்பா ‘சிறிய பெரியவரின்’ காலில் விழுந்து வணங்குவது, துறவறம் பூண்டபின் சிறுவர்கள் விளையாடுவதை ஏக்கத்துடன் பார்த்துவிட்டு தனது கடமைகளை உணர்ந்து தொடர்வது என்று சினிமாத்தனம் இல்லாமல் சொன்ன படம்.

ஊர்வசி நடத்தும் stand-up-ஆன ‘டேக் இட் ஈஸி’ வெகு ஜோர். வாரிசு அரசியலைத் தாக்குவது, சன் டிவி டாப் டென்னை சதாய்ப்பது, ‘வண்க்க்கக்கமை’ வாறுவது, அன்றாட செய்திகளை உல்டா செய்வது, எதிர்கட்சி, ஆளுங்கட்சி, சினிமா ஹீரோ, சீரியல் தொடர் என எல்லாத்தையும் பகிடி செய்வது என நான் ஜே லேனோவும், ஜான் ஸ்டூவர்ட்டும் பார்க்காத குறையை தீர்த்தவர். ஆனால், நேர்முகத்தில் டென்னிஸ் மில்லர் தொடுக்கும் கிண்டல் கேள்விகள் வேண்டாம்; டேவிட் லெட்டர்மேன் செய்யும் குறும்பு சேஷ்டைகள் வேண்டாம்; கேடி கௌரிக் கேட்பது போல் சகஜமாகப் பேசிக் கொண்டிராமால், கையை அழுந்தக் கட்டிக் கொண்டு சோபாவில் இறுக்கமாக சாய்ந்து கொண்டு முகத்தை படு சீரியஸாக வைத்துக் கொண்டு தொடர்ச்சி இல்லாமல் வினாக்களை சொல்கிறார். முதல் பாதியில் இருக்கும் நட்புத்தனம், பின்பகுதியில் நாடகமாகி விடுகிறது.

சென்னையில் ஃபுட் கோர்ட்கள் பார்த்தது பொறாமையாக இருந்தது. எங்க ஊர் mall-களில் கிடைக்காத சரவண பவன் மெனுக்களுடனும், செட்டிநாடு ஐயிட்டங்களும் பீட்ஸா ஹட்டுடனும் பர்கருடனும் சமபந்தி போஜனத்துக்கு அழைத்தன. அபிடைசராக குழிப்பணியாரமும், சிக்கன் மன்சூரியனும், குடிக்க மாதுளம்பழ ஜூஸ், மெயின் கோர்ஸ¤க்கு காஷ்மீரி புலவ், தொட்டுக்கக் காளான் கறியும் கோழிக் குழம்பும், கடைசியாக எம்.டி.ஆர் பகாளா பாத், க்விக்கீஸ் தரும் குளிர்ந்த மெட்ராஸ் ·பில்டர் காபி என்று ஒரே இடத்தில் வெட்டலாம்.

கோமளாஸ் தரும் பஃபே ரகங்கள், பார்க் ஷெராடனில் ஆந்திரா ஸ்டைல் வேஷ்டி கட்டிக் கொண்டு, தமிழ் பேசிக் கொண்டு கட்டை கட்டையான தடி மெனுக்களைத் தரும் சிப்பந்திகள், அறுபத்தி ஆறு விதமான பழ ரச (சைவ) காக்டெயில்களையும் மில்க் ஷேக்குகளையும் தரும் தெருவோர பெட்ரோல் பங்க் கடைகள், ‘குறையன்றுமில்லை’யை வட்டில் ஓட்டாமல், நேரடியாக நான் கேட்டுக் கொண்டதன் பேரில் இசைக்கும் வீணைகளின் பிண்ணனி, நெய் விட்டுத் தரலாமா என்று என்னைப் போன்ற போலி diet-conscious அன்பர்களிடம் கேட்கும் பரிவு, புரியாத பெயர்களின் தெரியாத பதார்த்தங்களைப் பாங்குறப் பரிமாறும் லாவகம், என்று என்னுடைய உணவின் சுகமான மயக்கங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆட்கள் வந்து டேபிளில் உட்கார்ந்தால் மட்டுமே ஃபேனை ஸ்கேலால் தட்டி ஓட்டுவது, நட்சத்திர ஓட்டல்கள் பேக்கேஜ்ட் குட்ஸ் செய்து அவற்றைத் தள்ள பார்ப்பது, நாம் முன்பே வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் சரவணாஸில் சாப்பிட்ட பிறகே பழரசம் கொண்டு வந்து கொடுப்பது, சின்ன ஓட்டல்களில் மெனு சொல்லாமல் வாய்ப்பாடாக ஒப்பிப்பது, டிப்ஸ் கொடுக்க வேண்டாம் என்று எழுதியிருப்பது என்று பல விஷயங்கள் இன்னும் தொடர்கிறது.

தேர்தல் குதிரைகள் – விகடன்

1. முலாயம் சிங்

2. லல்லு பிரசாத்

3. பி ஏ சங்மா

4. மாயாவதி

5. சரத் பவார்

6. சந்திரபாபு நாயுடு

7. ஜார்ஜ் பெர்ணாண்டஸ்

8. பால் தாக்கரே

9. மம்தா பானர்ஜி

10. பிரமோத் மகாஜன்

11. ஜெய்பால் ரெட்டி

12. ராம்விலாஸ் பாஸ்வான்

வலைசஞ்சிகைகள்

நம்ம பதிவுக்கு வலைப்பதிவுகளின் குமுதம் என்னும் பெயர் அடிக்கடி அடிபடுகிறது. அதே போல் வேறு சிலரின் பதிவுகளும் மனதில் தோன்றிய பத்திர்கைகளும்:

அருண் – ஜூனியர் போஸ்ட்

பத்ரி – இந்தியா டுடே

இட்லி வடை – துக்ளக்

நா. கண்ணன் – குமுதம் ஜங்ஷன்

கார்த்திக்ராமஸ் – புரட்சிப்பாதை

காசி – மஞ்சரி

முத்து – கல்கண்டு

பவித்ரா – ஆனந்த விகடன்

ராதாகிருஷ்ணன் – ரிப்போர்ட்டர்

பாரா – ஜூனியர் விகடன்

‘பெயரிலி’ ரமணீதரன் – நக்கீரன்

சபாநாயகம் – காலச்சுவடு

‘மூக்கு’ சுந்தர் – குங்குமம்

வாமதேவர் – சக்தி விகடன்

வலைப்பூ – உயிர்மை

தோழியர் – மங்கையர் மலர்

வெங்கட் – கணையாழி

விகடன் புக் கிளப்!

ஆனந்த விகடன்.காம்:

ஆதவன் தீட்சண்யாவின் ‘பூஜ்யத்திலிருந்து துவங்கும் ஆட்டம்’ கவிதைத் தொகுப்புக்கு, கோவை தேவமகன் நினைவுப் பரிசும், ‘கவித்தூவி’ விருதும் கிடைத்துள்ளன.

எழுத்தாளர் கோணங்கி ‘பாழி’ நாவலைத் தொடர்ந்து ‘பிதுரா’ என்ற நாவலை எழுதி முடித்திருக்கிறார். இரண்டு யாத்ரீகர்களைச் சுற்றி வருகிற கதையாம்!

எழுத்தாளர் இந்திராவின் ‘சித்திரக்கூடு’ நாவலைத் தொடர்ந்து, அவரது சிறுகதைத் தொகுப்பு ‘ஒற்றை வாசனை’ வெளியாகவுள்ளது.

பாடலாசிரியர் யுகபாரதி ‘படித்துறை’ என்ற பெயரில் தனியே ஒரு சிற்றிதழ் தொடங்கியுள்ளார்.

தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர் சங்கத்திலிருந்து ‘கூட்டாஞ்சோறு’ என்ற இலக்கிய இதழ் வரப்போகிறது.

பாடலாசிரியர் கபிலனின் ‘நகர்பறை’ என்ற கவிதைத் தொகுப்பு விரைவில் வெளியாகிறது.

பெண்களுக்கான சினிமா பற்றி பேசும் ‘கண்ணாடி’ என்ற சிற்றிதழ் கொண்டுவருகிறார் குட்டிரேவதி.

திருவாசகம் – மாணிக்க வாசகர்

சிவபுராணம் :



புல்ஆகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்மிருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்……….30

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்;எம்பெருமான்,

ஐந்து பூதங்களுக்கும் நிறங்கள் உண்டு. அவை மண்ணுக்குப் பொன்மையும், நீருக்கு வெண்மையும், நெருப்புக்குச் செம்மையும், காற்றுக்குக் கருமையும் வானுக்குப் புகைமையும் எனச் சாத்திரங்கள் கூறும். ”பொன்பார் புனல் வெண்மை பொங்கும் அனல் சிகப்பு வன்கால் கருமை, வளர்வான் தூமம்”என்பது உண்மை விளக்கம். மேலும் சிவபெருமானின் திருமுகங்கள் ஐந்தும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம் உடையதாய் இருப்பதையும் இதுகுறிக்கும் என்பர்.

ஈசானம்- படிகநிறம்; தத்புருஷம்- பொன்நிறம்; அகோரம்-கருநிறம்; வாமம்-குங்குமம் அல்லது செந்நிறம்;

சத்யோசாதம்- அதிவெள்ளை நிறம்.



சிவன் கோவில்களில் பள்ளியறை தீபாரதனையின் போதும், பிரதோஷ காலங்களிலும் சொல்ல கேட்டிருக்கிறேன். கலிவெண்பாவில் அமைந்தது, போன்ற தகவல்களுடன் வெ.சுப்பிரமணியன் என்பவர் அகத்தியரில் எழுதி வருகிறார். எளிமையான கருத்துள்ள பாடல். ‘பிறந்திளைத்தேன்’ போன்ற சொற்றொடர்கள் மனதைக் கவர்ந்தது. பிறந்து + இளைத்தேன் என்றால் வாழ்க்கையை நினைத்து வருத்தப்படுவதாகவும், பிறந்து + திளைத்தேன் என்றால் வாழ்க்கையை ரசிப்பதாகவும் பொருள் வருவதாகத் தோன்றும்.

சந்திப்புகள் என்பவை சுவருடைத்தல் – எஸ்.பாபு

பிகேஎஸ் எழுதிய சந்திப்புகள் படித்தவுடன் சமீபத்தில் படித்த இந்தக் கவிதை நினைவில் வந்தது.

சந்திப்புகள் என்பவை சுவருடைத்தல்

முதற் சந்திப்பின்போது

அவரவர்க்குள்ளிருக்கும்

சுவர்களுக்கப்பால்

பதுங்கி இருந்தோம்

எதிராளிக்கு ஏதுந் தெரியாதபடி

அடுத்தடுத்த சந்திப்புகளில்

உவகை தராத

உதட்டுச் சொற்களுக்கு நடுவே

இருவருக்கும் பொதுவான

உணர்வுப் பொறியொன்று

தெறித்து விழுந்த கணத்தில்

உடைக்கத் தொடங்கினோம்

நம் வெளிச்சுவர்களை

கூப்பிடவுடன் வந்துவிடுகிற

குழந்தையைப்போல

எதிர்பாராத இனிய அதிர்ச்சியாய்

அமைந்துவிட்ட சந்திப்புகளில்

மேலும் மேலுமென சுவருடைத்து

உறவின் இடைவெளி

சிறுக்கக் கண்டு களித்திருந்தோம்

அதன்பின்

பெருஞ்சுவரொன்று

பெயர்ந்து விழுந்தது

பலகீனங்களையும் பிழைகளையும்

நாம் பகிர்ந்து கொண்டபோது

மிச்சம் மீதி இருக்கும்

அந்தரங்கத் திரைகள் கிழித்து

உனக்குள் நானும் எனக்குள் நீயும்

உள்ளிறங்கி

விரல் நுனிவரை

வியாபித்து விட முடியாதெனவும்

தெரியும் நமக்கு.

நன்றி: காளான் பூக்கும் காலம் – எஸ்.பாபு

தமிழினி ரூ. 25/-

பிகு: இதற்கும் பின்தொடர்தல் போட பயமாக இருக்கிறது. எனக்கு ஹிட்ஸ் தேவை

என்று போட்டீர்கள் என்று கிண்டல் செய்து கண்ணடித்து விடுவார் சிவகுமார்.