நாம் இருப்பது சுதந்திர நாடுதானா?


தேர்தல் விளம்பரம் அனைத்திற்கும் முன் அனுமதி தேவை என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தனியார் தொலைகாட்சிகள் பெறுகிவிட்ட இந்தக் காலத்தில் இது எவ்விதம் சாத்தியம் என்று தெரியவில்லை. தமிழன் டிவியில் விளம்பரங்களுக்கு நடுவே நிகழ்ச்சிகள் வருகிறது. ஜெயாவில் எது விளம்பரம், எது செய்திகள் என்றே தெரியவில்லை. இவற்றுக்கு முன்மாதிரியான சன் தொலைக்காட்சியும் சோனியா பிரசாரம் செய்வதையும், கருணாநிதியின் அறிக்கைகளையும் படிக்கிறது. ராஜ் டிவியின் நிறுவனரில் ஒருவர் பிஜேபியில் சேர்ந்துவிட்டார். அங்கு செய்தி வாசிக்க சன் டிவியில் இருந்து மாற்றலாகி வந்துள்ள நிர்மலா பெரியசாமிக்கும் திமுக சீட் கொடுக்காத வருத்தம் உண்டு. ‘ஸ்டார்’ விஜய் நடுநிலைமை என்றால் வழவழா கொழகொழா என்பது போல் ஒரு நிகழ்ச்சியை, ‘சலனம்’ தொடரின் க்யூட்டான மந்த்ரா பேடி போன்ற ஹீரோயினைக் கொண்டு நடத்துகிறது.

விளம்பரம் வெளிவருவதற்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு முன்பே ‘தேர்தல் கமிஷனி’டம் விளம்பரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் ஒரு நாளிலோ அல்லது அதிகபட்சம் இரண்டு நாட்களிலோ தங்களின் முத்திரையை பச்சை விளக்காகவோ சிவப்பாகவோ சொல்வார்கள். அதன்பின் டிவியில் அந்த விளம்பரங்கள் வெளிவரலாம். இப்போதைக்குத் தொலைக்காட்சிக்கு மட்டும்தான் இந்தத் தடைக்கற்கள்.

தனிமனிதத் தாக்குதல் விளம்பரங்கள் எங்கும் பரவலாகப் பின்பற்றப்படுவதுதான். ஜான் கெர்ரி புஷ்ஷையும், புஷ் கெர்ரியையும் பரஸ்பரம் ‘கையாலகாதவர்கள்’, ‘ஈராக்கை சமாளிக்கத் தெரியாதவர்’, ‘பெரு நிறுவனங்களின் ப்ராக்ஸி’, ‘பண முதலையாக இருந்து கொண்டு பணக்காரர்களைத் தாக்குபவர்’ என்று லாரி-யடி தண்ணீர் சண்டை போடுபவர்கள். கருக்கலைப்பு அமைப்புகளும், வேட்டைக்காரர்கள் சங்கங்களும், துப்பாக்கி தூக்குவோர் கழகங்களும் ஜனாதிபதிக்காக விளம்பரங்களை ஒளிபரப்புவார்கள். ஆனால், விளம்பரத்தில் எங்காவது ஒரு மூலையிலாவது வேட்பாளர் தோன்றி ‘நான் ஜான் கெர்ரி (அல்லது ஜார்ஜ் டபிள்யூ. புஷ்). நான் இந்த விளம்பரத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறேன்’ என்று முழங்க வேண்டும்.

ஆனால், இவ்வாறு சேற்றை வாரித் தூற்றினால் முக்கிய வேட்பாளர்கள் இருவருமே பன்றிகள் என்று மக்கள் கருதிவிடுவார்கள். அதற்காக இவ்வகை விளம்பரங்களை அடக்கி வாசிக்குமாறு ஊடகங்கள் (டைம்ஸ் இன்ன பிற பத்திரிகைகள் மற்றும் ஏபிசி போன்ற தொலைக்காட்சி நிறுவனங்கள்) வலியுறுத்தும். எனினும், போருக்கு செல்லாமலே ‘உள்ளேன் ஐயா’ போட்டவர், கென்னடியின் ஊதுகுழலுக்கு ஏற்ப ஆடுபவர் என்றும் தொடர்ந்து எஸ்.எஸ். சந்திரன் போன்ற இரண்டாம் கட்ட பேச்சாளர்கள் மூலம் திட்டிக் கொண்டேதான் இருப்பார்கள்.

இதன்மூலம் ஷங்கர் படத்துக்கு ஓட்டா என்றும் ஹே ராம் வெறியருக்கு வேட்டா என்றும் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யலாம். செய்தித்தாள் படிப்பவர்கள்தான் ஓட்டளிக்க வரமாட்டார்களே?!

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.