Monthly Archives: மார்ச் 2004

கடந்த மாத செய்திகள்

ஃபிப்ரவரியில் நாட்டு நடப்பும், அவற்றை விரும்பியிருக்கக் கூடிய சில நபர்களும்!?

பாரா: Broom Hilda by Russell Myers

அருண்

உஷா

வாமதேவர்

‘லலிதா’ ராம்

பத்ரி

‘பிபி’ பாலாஜி

ரமணீதரன்

பெயரிலி

கார்த்திக்ராமஸ்

டைனோ

வெங்கட்

மாது

ஷக்தி பிரபா

எம்கே குமார்

நிர்மலா: B.C.

தி பியானிஸ்ட்

என்னுடைய குழந்தைக்காக ‘·பைண்டிங் நீமோ’ எடுக்கலாமா அல்லது

காதரின் ஜீடா ஜோன்சுக்காக ‘சிகாகோ’ எடுக்கலாமா என்று யோசித்த

போது கையில் சிக்கிய படம்தான் ‘தி பியானிஸ்ட்’. எங்கோ கேள்விப்பட்ட

பெயராக இருக்கிறதே என்று பின்பக்கம் திருப்பி கதை என்ன என்று

பார்த்தால் ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ போன்ற யூதர்களின் கொடுமை குறித்த படம்

என்று தெரிந்தது. அதை விட எடுக்கத் தூண்டியது 2002-ஆம் ஆண்டின் மூன்று

முக்கிய ஆஸ்கார் விருதுகளைப் பெற்றிருந்தது. சிறந்த இயக்குநர், சிறந்த

நடிகர், சிறந்த திரைக்கதை (ஏற்கனவே வெளியான புத்தகத்தை அடிப்படையாகக்

கொண்டது) என மிரட்டியது.

கதாநாயகன் ஏட்ரியன் ப்ரோடியை(Adrien Brody) இதற்கு முன் நான் வேறு படத்தில்

பார்த்தது இல்லை. அது படத்தோடு நகர்வதற்கு மிகவும் உதவியது. போலந்து ரேடியோவில்

ஸ்பில்மான் பியானோ வாசிக்கும் காட்சியுடன் படம் துவங்குகிறது. ஜெர்மனியின்

குண்டுகள் வானொலி நிலையத்தைத்தாக்கி, அவரை இருக்கையை விட்டுத் தூக்கியெறியப்

படும்வரை அலட்டிக் கொள்ளாமல் பியானோவை வாசிக்கிறார்.

நாஜியின் அடக்குமுறையால் ஊரிலிருந்து ஒதுக்கப்பட்ட இடத்துக்கு (ghetto) இவரின்

பணக்கார குடும்பமும் தள்ளப்படுகிறது. மற்ற யூதர்களுடன் நெருக்கியடிக்கும் ஒண்டுக்

குடித்தன வாழ்க்கை. குப்பத்து ராஜாவாக, யூதர் ஹோட்டலின் பியானோ வாசிப்பாளராகிறார்

ஹீரோ. நாஜிகளால் அடக்கப்பட்டும், எதுவுமே மாறாத மாதிரி அடக்குமுறைக்கு அடிபணியும்

யூதர் கூட்டத்தைக் காண்கிறார். கள்ளக்கடத்தல் செய்து பெரும்பணம் சேர்ப்பவர்களையும்,

நாஜிகளுடன் சேர்ந்து யூதர்களை மேய்க்கும் காவலர்களையும், மிதிக்கப்பட்டாலும் கனவான்

போல காட்சியளிக்க விரும்புவர்களையும் சலனமின்றி பியானோ வாசிப்பின் ஊடே பார்க்கலாம்.

போராளியாகி நாஜிகளை எதிர்க்க விரும்பும் ஸ்பில்மானின் தம்பி, யூதர்களின் போலீஸிடம்

மாட்டிக் கொள்கிறான். போலீஸில் இருக்கும் தன்னுடைய சக யூத நலம்விரும்பியிடம் போராடி

அவனை மீட்டெடுக்கிறார். அதே நலம்விரும்பியின் கடைசி நிமிட செயலால்,

உயிரும் பிழைக்கிறார். அவரைப் போல் கொடுத்து வைக்காத குடும்பத்தினர் அனைவரும்

நாஜியின் கொலை ரயிலில் ஏறி இறக்கின்றனர். கொஞ்ச நாள் செங்கல் தூக்கும் வேலை,

கொஞ்ச நாள் கணக்குப் பிள்ளை வேலை என்று நாஜி அடிமைத்தனம் செய்கிறார். அங்கிருந்து

தப்பித்துச் சென்று, கலையுலக நண்பர்களின் உதவியோடு வீடு வீடாக பதுங்கி ஹவுஸ் அரெஸ்ட்டான இருப்பு.

ஸ்பில்மான் தன் வீட்டு ஜன்னல் வழியாக யூதர்களின் எழுச்சி, போலந்து நாட்டு மக்களின்

கலவரமும் வீழ்ச்சியும், தன் சொந்த யூதர் இனம் ஒன்று விடாமல் அழிக்கப்படுவது, என

சரித்திரம் பதிவாவதை பசியுடன், மழிக்கப் படாத தாடியுடன், இசை உயிரும் இல்லாமல்,

அதிர்ந்து நடக்காமல், பாத்திர சப்தங்களும் இத்யாதி ஓசைகளும் செய்யாமல்

பார்வையாளராக மட்டும் நேரங்கடத்துகிறார்.

போலந்து நண்பர்களும் இறந்துவிட, போலந்தே அழிந்துவிட்ட தோற்றம் தர, ஸ்பில்மான்

நாஜிகளின் தேடலில் இருந்து தப்பித்து இருக்கையில், ஒரு நாள் மாட்டிக் கொள்கிறார்.

அப்பொழுது தற்காத்துக்கொள்ள வாசித்த பியானோவின் இசையில் சொக்கிப் போகும் ஜெர்மானிய

ஜெனரல், ஸ்பில்மானுக்கு உணவோடு உடையும் கொடுக்கிறார். ரஷியா

அவரையும் போலந்தையும் மீட்டெடுக்கும் வரை பாதுகாக்கிறார்.

படத்தின் கதை போரடிப்பது போல் தோன்றினால், படத்தை பார்த்த பிறகு கருத்தை மாற்றிக்

கொள்வீர்கள். மூன்று மணி நேர படத்தில் பல காட்சிகளாக மௌனம் மட்டுமே. உறைய

வைக்கும் காட்சிகளைக் கூட ரொம்ப ‘பில்ட்-அப்’, அதிரடி இசை என்று மிரட்டாமல்

மிரள வைத்துக் கொண்டு நகர்த்தும் திரைக்கதை.

காட்டாக ghetto-வுக்கு வந்தபிறகு இரவு உணவு அருந்திக் கொண்டு ஸ்பில்மானின்

குடும்பத்தினர் அரட்டையடிக்கின்றனர். ஜீப் வரும் சத்தம் கேட்டு, சுற்று வட்டார வீடுகளின்

விளக்குகள் அவசரமாக அணைக்கப்படுகிறது. எதிர் வீட்டு ·ப்ளாட் தட்டப்பட்டு, உள்ளே

நாஜிகள் நுழைகிறார்கள். சாப்பாட்டு மேஜையில் இருக்கும் அனைவரையும் எழுந்திருக்குமாறு

உத்தரவு. ஒருவர் மட்டும் உட்கார்ந்து கொண்டேயிருக்க, அவரை குண்டுகட்டாக தூக்கி

மூன்றாம் மாடி பால்கனி வழியே விசிறுகிறார்கள். நாஜிகளின் கையில் அப்போதுதான்

அவருடைய சக்கர நாற்காலி, நமக்குக் காட்டப்படுகிறது. தொடர்ந்து அந்தக் குடும்பத்தினர்

அனைவரும் வெளியில் கொணரப்பட்டு மிஷின் கன் அபிஷேகிக்கப் படுகிறார்கள்.

சத்தமில்லாமல் அடுத்த காட்சிக்கு கதை நகர்ந்து விடுகிறது.

முதல் ஒரு மணி நேரத்தில், என்ன நடக்கப் போகிறது என்றறியா யூதர்களின் பேதமையும்,

நாஜிகளின் எல்லைதாண்டிய அடக்குமுறையும், வளரும் ஆதிக்க வெறியும், அவமானப்படுத்தும்

மனப்பான்மையும், போலந்து மக்களின் ‘நம் தலை தப்பித்தது தம்பிரான்

புண்ணியம்’ என்னும் விட்டேத்தி மனப்பான்மையும் காணலாம். யூதர்களே ஒருவருக்கொருவர்

எட்டப்பனாய் காலை வாறிவிட்டுக் கொள்வதும், செய்வதறியாமல் ஆட்டு மந்தை கூட்டமாக

வெட்டி வீழ்த்தப்படுவதும், மூன்றாம் மனிதராக வாளாவிருப்பதும் பார்க்கலாம். திரைக்கதை

அமைதியாக நகர்ந்தாலும், நம் மனம் பதைபதைக்கும்.

ஹீரோவாக என்னை நினைத்து பார்ப்பது வழக்கம். ஜேம்ஸ் பாண்ட்/ரஜினி ரசிகனான எனக்கு

ஸ்பில்மானின் செய்கைகள் ஆச்சரியத்தைத் தந்தது. அவர் களத்தில் இறங்கவும் இல்லை; தன்

இனம் அழியும் போது துப்பாக்கி எடுக்கவும் இல்லை; நாஜிகள் வழிமறித்தபோது

புத்திசாலித்தனமான சூழ்ச்சிகள் செய்து வீழ்த்தவும் இல்லை. மாறாக ஓடினார்; தப்பித்துப்

போனார்; ரகசியமாக ஒளிந்தார்; திருடினார்; பேசாமடந்தையாக இருந்தார். ஒரு சாதாரண நடுத்தர வர்க்க

தமிழ்க்குடிமகன் என்றாவது இந்தியா ஒளிரும்; நல்ல காலம் பிறக்கும்; நமக்கெதுக்கு வம்பு

என்று அடங்கி செல்வதைப் போல். ஒரு நாயகன் இப்படி வாழ்ந்து, தன்னை மட்டும்

காப்பாற்றிக் கொள்வார் என்பது எனக்கு ஆச்சரியமான விஷயம்.

அளவாக வாழ்ந்து, ஸ்பில்மானாகவே தோற்றம் செய்கிறார், ஏட்ரியன் ப்ரோடி என்னும் நடிகர்.

தண்ணீரில்லாமல் தவிக்கும்போது, பலநாள் பேசாமல் வாய் குளறி மொழி தடுமாறும்போது, அனுபவித்து

பியானோ இசைக்கும்போது, பியானோ இருந்தும் இசைக்க முடியாத தனிமை நாட்களைக் கடத்தும்போது,

எட்டாக்காதலான போலந்து காதலியுடன் பேசும்போது என்று மிகை

எளிதில் காட்ட வாய்ப்புகள் இருந்தும் அடங்கி இருக்கும் சாதாரணனை கண்முன்னே

நிறுத்திவிடுகிறார். படத்தின் பிற்பகுதிக்காக தன்னுடைய 73 கிலோ எடையை, பதினான்கு

கிலோ குறைத்துக் கொண்டார். படத்தில் காட்டப்படும் தனிமையை ஒழுங்காக சித்தரிக்க

வேண்டும் என்பதற்காக, தன்னுடைய கார், வீடு, செல்பேசி எல்லாவற்றையும் துறந்து

டிவி கூட பார்க்காமல் இருந்தாராம்!

படத்தில் எனக்கு சில குறைகளும் தோன்றின. ஏகப்பட்ட துணை நடிகர்கள் வந்து போகிறார்கள்.

முன்னாள் காதலியும், பிற்பகுதியில் அவருக்கு ஆதரவு தரும் போலந்து பாடகியும் ஒருவரோ எனக்

குழப்புகிறார்கள். சரித்திரம் ஜன்னல் வழியே வழிவதாலோ, என்னவோ,

செரிக்கும் வேகத்தில் செல்லவில்லை. மற்றபடி கொஞ்சம் ஸ்லோவான படத்தில், இந்தப் பதிவுகள்

பறக்கடிக்கப் படுகின்றன. இடிபாடுகள் நடுவே இருக்கும் ஊரில், சிதிலமடைந்த

வீட்டில், ஸ்பில்மான் வாசித்து ஜெர்மானிய ஜெனரல் ரசிக்க ஒரு பியானோ மட்டும்

மாசுபடாமல், தூசுபடாமல், அலுங்காமல், குலுங்காமல் தப்பித்தது எப்படி?!

கடைசியாக படத்தின் இயக்குநர் ரோமன் பொலன்ஸ்கி குறித்தும் ஒரு பதிவு. ஆஸ்கார்

கிடைத்தாலும் அவர் நேரில் வாங்க அமெரிக்காவுக்கு வர இயல்வில்லை. ஏன்?

அமெரிக்காவினுள் நுழைந்தால், அவருக்கு பிடி வாரண்ட் இருக்கிறது. பச்சிளம் பாலகியை

போதை மருந்துக்கு உள்ளாக்கி வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இருந்து நாடோடியவர்.

தப்பித்தோடிய ஒரு கொடூர குற்றவாளியிடம் இருந்து இப்படிபட்ட மென்மையான படைப்பு!

தன்னுடைய இளமைக்காலங்களில் பொலன்ஸ்கி நாஜிகளிடம் அடிபட்டவர். ஸ்பில்மான்

மாதிரியே கடைசி நிமிடத்தில் உயிர் பிழைத்தவர். போலந்தின் தெருக்களில் அலைந்து

திரிந்தவர். சொந்த அனுபவங்கள் நிஜத்தை நிலைநிறுத்த நிச்சயம் உதவியிருக்கிறது.

நிஜமாகவே இவற்றை வாழ்ந்த ஸ்பில்ஸ்மான் தன்னுடைய வரலாற்றை இரண்டாம்

உலக யுத்தம் முடிந்தவுடனேயே (45-46-இல்) புத்தகமாக எழுதி விட்டார். புத்தகத்தை

படித்த ருஷியர்களுக்குப் பிடிக்காத்தால், வெளிவரவில்லை. ஒரு நல்ல ஜெர்மானிய கார்னல் (நாஜி)

இருந்தான் என்று ஸ்பில்மான் சொன்னதுதான் தணிக்கைக்கு காரணம். சோவியத்தின்

வீழ்ச்சிக்குப் பிறகு, தொண்ணூறுகளின் இறுதியில் பேப்பரை சென்றடைந்து மக்களை தொட்டது,

புத்தகம். வலைப்பதிவுகள் போல், முன்னும் பின்னும் சென்ற குறிப்புகளை கோர்வையாக்கி,

விட்ட இடங்களை நிரப்பி, ஸ்பில்மானோடு உறவாடியவர்களைப்

பேசி, திரைக்கதை தயாராக்கியுள்ளார்கள்.

கலை, ஆடையமைப்பு, காலத்தால் அழிந்துபோன நகரங்களை நம் முன்னே கொண்டுவந்தது,

இடிபாடுகளை பிரும்மாண்டமாக்காமல் உருகவைத்தது என்று அடுக்கிக் கொண்டே

பாராட்டும் இந்தப் படத்தை பார்த்தவுடன் உதித்த ஒரு எண்ணம்…

இலங்கையில் நடந்த இனப்போரை மூன்றாம் மனிதப் பார்வையில், உணர்ச்சி வசப்படாமல்,

சத்தமாகப் பேசாமல், ரத்தம் கொதிப்படையும் வசனங்கள் இல்லாமல் சரித்திரப் பதிவாக

எப்போது யார் திரைப்படம் கொடுக்கப் போகிறார்கள்? செய்ய விடுவார்களா?

– பாஸ்டன் பாலாஜி

நன்றி: தமிழோவியம்

போலன்ஸ்கி ஏன் அமெரிக்காவை விட்டு ஓடிப்போய் ஒளிந்தார் என்று விலாவாரியாக அறிந்துகொள்ள இங்கே சொடுக்கவும். பல இணையத்தளங்கள் ஏட்ரியன் ப்ரோடி செய்துகொண்ட பழக்கவழக்க மற்றும் உருவ மாற்றங்களை விவரிக்கிறது. தி பியானிஸ்ட் படத்தின் அதிகாரபூர்வ வலைப்பக்கத்தில் நிஜ ஸ்பில்மானை சிறுகுறிப்பிட்டிருக்கிறார்கள். மெய்யாலுமே ஸ்பில்ஸ்மானின் பியானோ இசையை அனுபவிக்கவும் முடியும். வார்சா ghetto புரட்சியை சரித்திர பிண்ணனியில் ஆராய இந்த வலைத்தளம் உதவியது. அப்பொழுது எடுத்த நிழல் படங்களையும் பார்க்க முடிகிறது.

அம்மா பிறந்தநாள்



Adigalaar

1. அதிகாரபூர்வ இணையதளம்

2. சிறிய அறிமுகம்

3. பங்காரு அடிகளார் (அம்மா)

பெண்ணியத்துக்கு மதிப்பு கொடுப்பவர் என்ற ரீதியில் மதிக்கிறேன். மெல் கிப்ஸனின் The Passion of The Christ மாதிரி வசூல் செய்யாவிட்டாலும் ‘மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி’யின் மூலம்தான் எனக்குக் கோவில் அறிமுகம். போன தடவை கோவில் சென்றபோது ‘அம்மா வருவாங்க… ஒதுங்கிக்க…’ என்ற குரல் ஒலிக்க ஆச்சரியம் அடைந்தேன். முதலமைச்சர் வெகு எளிமையாக வந்திருக்கிறார் போல என்ற எண்ணம்தான். நான் பரீட்சைக்கு செல்லும் அவசரத்தில் ஷூ காலோடு சல்யூட் அடிப்பது போல் ஆதிபராசக்திக்கு ‘அரஹர’ போட்டுக் கொண்டுவிட்டு காரில் ஏறுவதற்கு முன் பக்தர்களின் குறைகளைக் கேட்டுக் கொண்டார். கோயிலின் சுற்றுப் பிரகாரங்களில் தமிழ்நாட்டின் முன்னாள், இன்னாள் முதலமைச்சர்கள், நிதியமைச்சர்கள், கல்வியமைச்சர்கள், கால்நடை அமைச்சர்கள், பிற மாநில முதல்வர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள், ராஷ்டிரபதிகள், பிரதம மந்திரிகள், கவர்னர்கள் என முக்கிய நபர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்கள் ஏனோ, கபாலி கோவில் பிரகாரங்களில் அனைத்து ஊர் அம்மன் விக்கிரகங்களையும், அவதாரங்களையும் ஃப்ரேம் போட்டு மாட்டியதை நினைவ்வுக்குக் கொண்டு வந்தது. அங்கு அம்மன்; இங்கு அம்மா!

வளர்ந்த நாடுகளில் மனக்கிலேசம் ஏற்பட்டால் உளவியாலாரை அணுகி மணிக்கு நூறு டாலர் என அழுது குறைபட்டுக் கொள்வார்கள். கஷ்டத்தில் வாடும் தமிழக நடுத்தர மக்கள் உண்டியலில் ஒரு ரூபாய் போட்டுவிட்டு அடிகளாரிடம் புலம்பி இன்னல்கள் தீர்ந்துவிடும் என அசையா நம்பிக்கை அடைந்தால் (அவரின் செயல்கள்) பாராட்டிக்குரியதே.

உங்களுக்கு ஏற்ற புத்தகம் எது? ஒரு க்விஸ்



You’re One Hundred Years of Solitude!

by Gabriel Garcia Marquez

Lonely and struggling, you’ve been around for a very long time.

Conflict has filled most of your life and torn apart nearly everyone you know. Yet there

is something majestic and even epic about your presence in the world. You love life all

the more for having seen its decimation. After all, it takes a village.



Take the Book Quiz

at the Blue Pyramid.

‘வலைப்பூ’ ஆசிரியர்கள்

வெள்ளி விழாவை எட்டிப் பார்க்கப் போகும் வலைப்பூவிற்கும் வழிநடத்தும் மதிக்கும் என் வாழ்த்துக்கள்.

1. 09/21 – 09/27: சந்திரவதனா

2. 09/28 – 10/04: மீனாக்ஸ்

3. 10/05 – 10/11: பரிமேலழகர்

4. 10/12 – 10/18: சுபா

5. 10/19 – 10/25: காசி ஆறுமுகம்

6. 10/26 – 11/01: வெங்கட்ரமணி

7. 11/02 – 11/08: கிருபாஷங்கர்

8. 11/09 – 11/15: வினோபா கார்த்திக்

9. 11/16 – 11/22: ராமச்சந்திரன் உஷா

10. 11/23 – 11/29: நவன்

11. 11/30 – 12/06: டாக்டர் நா.கண்ணன்

12. 12/07 – 12/13: பாஸ்டன் பாலாஜி

13. 12/14 – 12/20: எம்.கே.குமார்

14. 12/21 – 12/27: ரவியா

15. 12/28 – 01/03: பவித்ரா

16. 01/04 – 01/10: சித்தார்த் வெங்கடேஷ்

17. 01/11 – 01/17: ஹரன் பிரசன்னா

18. 01/18 – 01/24: சங்கர்

19. 01/25 – 01/31: கார்த்திக்ராமாஸ்

20. 02/01 – 02/07: பத்ரி சேஷாத்ரி

21. 02/08 – 02/14: பாலாஜி பாரி

22. 02/15 – 02/21: ‘ஐகாரஸ்’ பிரகாஷ்

23. 02/22 – 02/28: முத்து

ஒவ்வொரு வார அசிரியரை குறித்தும் விமர்சனம் வைக்க கை துறுதுறுக்கிறது. அவர்களுக்குக் கிடைத்த பின்னூட்டங்களையும் அலச வேண்டும்!

அகக் குரலும் புறச்சூழலும்

திசைகள் – அரும்பு சொல்வெளி:

அனைத்துலகப் பெண்கள் தினத்தன்று முற்றிலும் பெண்களே முன் நின்று நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி:

 

அகக் குரலும் புறச்சூழலும் — மார்ச் 8ம் நாள் மாலை 6 மணி

தீபீகா அரங்கம் / அரும்பு வளாகம் / 49, டெய்லர்ஸ் சாலை / சென்னை 600 010

 

படைப்பும் பதிவும்

சுற்றுச் சூழல் கவிதைகளின் தொகுப்பான நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே என்ற கவிதை நூலை எழுத்தாளர் சிவசங்கரி வெளியிட முதல் பிரதியை கல்கி வார இதழ் ஆசிரியர் சீதா ரவி பெற்றுக் கொள்கிறார்.

நூல் அறிமுகம்: கவிஞர் சுமதி மணிமுடி

படைப்பும் பகிர்வும்

கவிஞர்கள் கனிமொழி, வைகைச் செல்வி, ஆண்டாள் பிரியதர்சினி, இளம்பிறை, க்ருஷாங்கிணி, திலகபாமா, தமிழச்சி, வத்சலா ஆகியோர் தங்கள் கவிதைகளை வழங்குகிறார்கள்.

கருத்தும் காட்சியும்

கவிதைக் காட்சி: சுற்றுச் சூழல் குறித்துப் பெண்கவிஞர்கள் எழுதிய கவிதைகளும், புத்தகக் கண்காட்சி: பெண் படைப்பாளிகளின் நூல்களும் பார்வைக்கு வைக்கப்படும்.

மொஹரம் ஸ்பெஷல் படம்



(c) Vikatan

The Passion of the Christ & மொஹரம் ஸ்பெஷல் – பா.ராகவன்

சமீபத்தில் இறப்புக்குப் பிறகு மனிதன் என்ன ஆகிறான் என்பது குறித்துப் பேசும் ஏழெட்டு நூல்களை எடுத்துவைத்துக்கொண்டு ஒரு நாலைந்து நாள் அலசினேன். மனைவி டைவர்ஸ் அளவுக்கு போகப்போவதாக பயமுறுத்தியதும் மூடிவிட்டு இக்கட்டுரை எழுதுகிறேன். ரொம்ப வியப்பாக இருக்கிறது. அறிவியல் பூர்வமாகவும், முற்றிலும் ஆன்மீகம் சார்ந்தும், உள்ளுணர்வின் அடிச்சுவட்டின் படியும் பலர் பலமாதிரி இதுகுறித்து எழுதியிருக்கிறார்கள்.

மெக்ஸ் ட்ரூவிங் என்றொரு ஜெர்மானியர் எல்லாருக்கும் இரண்டு படி மேலே போய் மரணத்துக்குப் பிறகு மூன்று நிலைகள் இருப்பதாகச் சொல்கிறார். படுபாவியாக வாழ்ந்து செத்துப் போனால் உடனே மறுபிறப்பு. புழுவாக, ஆடாகவெல்லாம் இல்லை. அதே மனுஷ ஜென்மம் தானாம். செய்த பாவத்தைத் தீர்த்துக்கொள்ளும் வரை இதே பிறப்பு தொடருமாம். கஷ்டமும் அதிகரித்துக்கொண்டே இருக்குமாம்.

சுமாரான நல்லவனாக, கொஞ்சம் மனச்சாட்சியுடன் வாழ்ந்து மரித்தால் மறுபிறப்பில் கொஞ்சம் உயர் மனித உடல் சாத்தியமாகுமென்கிறார் இவர். அதாவது ஒரு அப்துல்கலாம் ரேஞ்சில் எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது. உத்தமோத்தமனாக வாழ்ந்து மரித்தால் மறுபிறப்பில் சந்யாசி தானாம். சந்தேகமே இல்லை. ஒரு நல்ல சன்னியாசியாக வாழ்ந்து , இந்தப் பிறப்பில் இறைவனைக் குறித்து தவம் செய்து, யோகத்தின் உயர்நிலைகளையெல்லாம் தொட்டுவிட்டால் ?

நேரே சொர்க்கம் என்று தானே நினைக்கிறீர்கள்?

இல்லை. சூக்ஷ¤ம உலகம் என்றொரு கிரகம் இருக்கிறது என்று அநேகமாக் எல்லாருமே சொல்கிறார்கள். (உபநிஷத்திலும் இது குறித்த பேச்சு பல இடங்களில் உண்டு.) இந்த சூஷ¤ம உலகம் எப்படி இருக்கும்? சுவாமி யுக்தேஷ்வர் கிரி என்னும் வங்காளத்தைச் சேர்ந்த 18ம் நூற்றாண்டு யோகி அதை வருணிக்கிறார்:

1. சூஷ¤ம உலகம் பூமியை விடப் பெரியது.

2. அங்கே வசிக்க அருளப்பட்டவர்கள் தாம் விரும்பிய உருவத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக நீங்கள் 90 வயதில் இறந்தாலும் 20 வயது உருவத்தை நிரந்தரமாகப் பெறலாம்.

3.சூஷ¤ம உலகில் நதிகள் பல வண்ணத்தில் இருக்கும். நீலம், பச்சை, மஞ்சள், வயலட் இன்னபிற. ஆனால் இதன் வண்ணத்தையெல்லாம் மை யாஹ¤ போல் மாற்றிக்கொண்டிருக்க முடியாது.

4.சூஷ¤ம உலகவாசிகள் மூக்கால் சாப்பிடலாம், வாயால் கேட்கலாம், காதால் பேசலாம், கையால் நடக்கலாம், காலால் வீணை வாசிக்கலாம். உடல் உறுப்புகளைத் தம் விருப்பப்படி உபயோகிக்க முடியும்.

5. அவர்கள் வாய்திறந்து அதிகம் பேசுவதில்லை. தாம் பரிமாற நினைக்கும் கருத்தை மனத்திலிருந்து மனத்துக்கு அப்லோட் செய்துவிட முடியும் அவர்களால்.

6. இடைவிடாத இறைசிந்தனை அவர்கள் அனைவருக்கும் இருக்கும்.

7. சூட்சும உலகிலும் கெட்டவர்கள் உண்டு. அவர்களைக்கொண்டு தான் மாந்திரீகம் போன்றவை செய்யப்படுகின்றன.

8. சூட்சும உலக வாசிகளை நம்மால் காண முடியாது. ஆனால் சிறு குழந்தைகளுக்கு தேவதைகள் தென்படுவார்கள். இரவில் குழந்தை தூக்கத்தில் சிரித்தால் யாரோ சூட்சும உலகத்து தேவதை விளையாட்டுக் காட்டுகிறதென்று அர்த்தம்.

9. அவர்கள் நினைத்தால் பூமிக்கு வந்து விருப்பப்பட்டவர்களுடன் பேசிச்செல்ல முடியும். அப்போது சாதா மனித ரூபத்தை (பழைய உருவத்தையே) மீண்டும் எடுத்துக்கொள்ளலாம்.

10. பூமியிலிருந்து நேரே சொர்க்கத்துக்குப் போக முடியாது. சூட்சும உலகிலிருந்து தான் அது சாத்தியம்.

மேற்சொன்ன விஷயங்கள் தவிரவும் அந்த சூட்சும உலகம் குறித்து நிறைய சமாசாரங்கள் இருக்கின்றன. ரொம்ப மேஜிக்கலாகத் தோன்றக்கூடியவற்றைத் தவிர்த்திருக்கிறேன்.

நிற்க. நாம் பேச ஆரம்பித்தது மரணத்துக்குப் பின் மனிதன் என்பது குறித்து.

ஒன்று மறுபிறவி, அல்லது சூட்சும தேகம். அவ்வளவு தானா என்றால் இல்லையாம்!

இரண்டு சாத்தியங்களும் இல்லாமல் (நோ வேகன்ஸி) அந்தரத்தில் ஆவியாகவே அலைந்துகொண்டிருப்பதும் உண்டு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த ஆவிகளில் சிலவற்றைத் தான் சில்லறைச் சித்தர்கள் வாழைப்பழத்திலிருந்து பிள்ளையார் எடுக்கவும், வாயிலிருந்து லிங்கம் எடுக்கவும் பயன்படுத்துகிறார்கள். ஏவல் போன்ற விஷயங்களில் சேரும் இது. ஆனால் இந்த நிலையில் ஒருத்தர் எத்தனை காலம் இருக்க வேண்டியிருக்கும் என்று யாரும் உறுதியாக்ச் சொல்லவில்லை. பல ஆண்டுக்ளோ, சில நாட்களோ, சில வாரங்களோ, சில நிமிடங்களோ ஆகலாம்.

இறந்தவர் யாரும் இந்த ஆவி அலைச்சல் நிலையை அதிகம் விரும்புவதில்லை என்கிறார்கள். மனித வாசனை மிச்சங்களுடன் உடலை மட்டும் துறந்துவிட்டு அலைவதில் அவர்களுக்குப் பல எக்ஸிஸ்டென்ஷியல் பிரச்னைகள் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இத்தனை விவரம் கிடைக்கிறதே தவிர, அந்த சொர்க்கம் எது, அதன் வண்ணம் என்ன, வடிவம் என்ன என்பதுகுறித்து ஒரு தகவலும் இல்லை. உயர்ந்ததொரு மாளிகையில் ஒய்யாரமான சிம்மாசனத்தில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு எந்தக்கடவுளும் பித்தளை கிரீடங்கள் தாங்கி அமர்ந்திருக்கவில்லை என்று மட்டும் அனைவரும் அடித்துச் சொல்கிறார்கள்.

ரொம்ப குடைந்துபார்த்தால் ‘அட போய்யா, அகம் பிரும்மாஸ்மி’ என்றுவிடுகிறார்கள்.

அடக்கடவுளே, அகத்தை ஆராய்ந்து அறிய இந்த உலகிலிருந்து, ஆவி உலகுக்குப் போய், மீண்டும் பிறந்து, மீண்டும் இறந்து, மீண்டும் சூட்சும உலகுக்குப் போய் அங்கிருந்து நேரே டிக்கெட் வாங்கிக்கொண்டு சொர்க்கத்துக்குப் போனாலும் அங்கு சிம்மாசனம் ஏதுமில்லை என்று திரும்பி இங்கேயே வந்து ‘அகம்’ தேட வேண்டியது தானா?

சபரி மலைக்குப் போனவர்களுக்கு இது தெரிந்திருக்கும்.

மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி , கால்கள் நடுங்க மலை ஏறி, தாகம் வாட்டி, தள்ளாடி க்யூவில் நின்று, நகர்ந்து சந்நிதானத்துக்குள் நுழையும் போது மேலே பெரிதாக இந்த போர்டு தான் வைத்திருப்பார்கள். “அகம் ப்ரும்மாஸ்மி”

அரை அங்குல உயரத்தில் சுவாமி பாதிதான் கண்ணில் படுவார். அதற்குள் பிடித்துத் தள்ளிவிடுவார்கள். நிஜ ஸ்வாமி அந்த் போர்டு தான் என்று அவசியம் தோன்றும்; தோன்ற வேண்டும்.

கொஞ்சம் உற்றுப்பார்த்தால் எல்லா இந்திய தத்துவஞானிகளுக்குமே இந்தக் கேள்விதான் அல்டிமேட்டாக இருந்திருக்கிறது. இறப்புக்குப் பிறகு என்ன ஆகிறோம்?

பைபிளில்கூட இது குறித்து மிக விரிவான விசாரணைகள் இருக்கின்றன. குறிப்பாகப் பழைய ஏற்பாட்டில். ஆனால் அது கதை மாதிரி இருப்பதால் பலபேர் ‘அப்புறம் காக்கா வடையைத் தவற விட்டுடுச்சா?’ என்பதிலேயே நின்றுவிடுகிறார்கள். கதை முகமூடி தாண்டி உள்ளர்த்தம் தேடும்போது மிகப் பல சங்கதிகள் அகப்படுகின்ற்ன.

நானே வழியும் சத்தியமும் ஜீ£வனுமாயிருக்கிறேன் என்கிற ஒரு வரிக்குள் பகவத் கீதை முழுவதுமே அடங்கிவிடுவதைப் பார்க்கலாம். (அப்படியே தலைகீழாக மாற்றிப் படித்துப் பாருங்கள் – ஜீ£வன் சத்தியத்தின் அடியற்றி வாழ்ந்தால் வழி தானாகக் கிட்டும்.) நானே ஜீவனும் சத்தியமும் வழியும் என்பது பரம அத்வைதம். அத்வைதப்படியும் அனைத்துப் படியும் நோக்கினால் ஆன்மாவுக்கு மரணமே இல்லை. எனில் மேற்சொன்ன அந்த் உலகம், அடுத்த உலகம், கீழுலகம், மேலுலகப் பயணங்கள் , வாழ்வுகள் எல்லாம் இருப்பதை உறுதி செய்வதாகிறது.

ஆக, இறுதியில் குழப்பமென்னவோ நிச்சயம். அந்தப் பிறவா நிலை? சான்ஸே இல்லை போலிருக்கிறது.

பா.ராகவன்

07/02/2003

நன்றி: புத்தகப்புழு

மனவியல்… உளவியல்… உளறல்: தென்றல்

‘சொல்ல மறந்த கதை’யை விட ‘தென்றல்’ தெம்பான படம். தத்து

எடுக்கப்படும் சிறுவர்களின் மனவியல் மாற்றங்களை மெலிதாக

சொல்லியிருக்கும் பகுதி குறிப்பிடத்தக்கது. புது வீட்டுக்கு

வந்தவுடன் பார்த்திபனுடனேயே ஒட்டி உறவாட விரும்புவது,

அவர் இடும் வார்த்தைகளுக்கு மட்டும் மதிப்பு கொடுப்பது,

காலம் செல்ல செல்ல உரிமை எடுத்துக் கொள்வது, கொஞ்ச நாட்களுக்குப்

பின் முரண்டு பிடித்து தான் சொல்லும் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்க

ஆணையிடுவது, கழிவிறக்கத்தில் அன்பைத் தேடி ஒடுங்குவது

என்று பல பரிமாணங்களை அந்த பாதுகாவலன் டு நண்பன் டு

அப்பா வளர்ச்சியில் சொல்லியிருந்த விதத்திற்காகவே படத்தை

பார்க்க வேண்டும்.

தாமரை (உமா) தன் தந்தையை சிறிய வயதிலேயே இழந்ததினால்,

நலங்கிள்ளியை அப்பா ஸ்தானத்தில் வைப்பதா அல்லது இனக்கவர்ச்சியா

அல்லது ஹீரோ வழிபாடா என்று பன்முக ஆராதனை செய்வதை விதவிதமாக

காட்டுவதும் அழகு. ‘வானமதி’யில் பொம்மையாக வந்து போன ஸ்வாதி

பெயர் மாற்றி ‘ஸ்வாதிகா’வாக பின்னியிருப்பதை விகடன் கூட கண்டு

கொள்ளவில்லை. உண்மை சம்பவங்களை ஆங்காங்கே கதையோடு

கோர்த்தது, உப்புமா கவிஞரைக் கிண்டல் செய்யும் நகைச்சுவை,

படைப்பாளியின் மனக்குழப்பங்களும் எழுதுவதற்கான மனநிலை,

கலையை அனைத்து வடிவங்களிலும் தெரிந்து கொள்ளும் ஆர்வம்,

புத்தகத்தின் மேல் தமரை கொண்டுள்ள ஈடுபாட்டின் காரணங்கள்,

மூட் சமாசாரம் என்று பல விஷயங்களை தெளிவாக காட்டுகிறார்.

இளைய தலைமுறையை சென்றடையாதபடி சோகம் அப்பியிருப்பது மட்டுமே

வருத்தம் தரும் விஷயம். ‘சாமி’யில் கூட நாயகன்/நாயகி துன்புறும் காட்சிகள்

இருந்தன; நம்மை வருத்தப்பட வைத்தன; ஆனால், நிறைய மசாலா தூவி

தொடர்ந்த காட்சிகள் போல மசாலா ஆக்காவிட்டாலும், இந்தக் காலத்திற்கு ஏற்ற

மாதிரி ‘இனிப்பான’ நிகழ்வுகளை சரியான விகிதத்தில் தூவவில்லை. இந்த

மாதிரி வரவேறகத்தகுந்த படங்கள் ‘லாபம்’ ஈட்ட வேண்டும் என்ற கவலையில்,

மகிழ்ச்சி/காதல்/சுவையான காட்சிகள் ஆங்காங்கே இன்னும் கொஞ்சம்

இருந்திருக்க வேண்டும்!

தென்றல் குறித்து மரத்தடியில்….

தென்றல் – ஒரு பார்வை: கஜன் ஷண்முகரத்னம்

தென்றலும் தெருப்பொறுக்கியும்: ‘ஸ்வஸ்திக்’ சுரேஷ்

புத்தகம் வெளியிட, விற்க…

IHT: New do-it-yourself chapter for authors: அமெரிக்காவின் ஹிக்கின்பாதம்ஸ் (நீங்கள் பெங்களூர்வாசி என்றால் அமெரிக்காவின் ‘கங்காராம்ஸ்’) என்று பார்டர்ஸ் புத்தகக்கடையை சொல்லலாம். வாரா வாரம் சென்று புது புத்தகம் மேய்வதற்காகவும், சல்லிசான விலையில் என்ன புத்தகங்களை கூறு கட்டியிருக்கிறார்கள் என்பதற்கும், புத்தக அறிமுகக் கூட்டங்களில் என்ன அலசுகிறார்கள் என்றும் பார்க்க செல்லலாம். புத்தக விற்பனையில் மட்டுமே ஜொலித்துக் கொண்டிருந்தவர்கள், இப்பொழுது பதிப்பாளராக முயற்சியை ஆரம்பித்துள்ளார்கள்.

அஞ்சு டாலர் கொடுத்து ‘சுயமாக புத்தகம் வெளியிடுதுவது எப்படி’ என்று ஒரு செய்முறை விளக்கத்தை வாங்க வேண்டும். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் முறைகளைப் பின்பற்றி இருநூறு டாலருடன் உங்கள் காவியத்தையும் இணைத்து அனுப்ப வேண்டியதுதான் பாக்கி. முப்பதே நாட்களில் உங்கள் கைகளில் பத்து பிரதிகள் தவழும். இருநூறுக்கு பதிலாக ஐந்நூறு டாலர் கொடுத்தால் இன்னும் ராஜ மரியாதை. உள்ளூர் புத்தகக் கடைகளின் முகப்பில் உங்களின் புத்தகம் மிளிரும். ISBN எண் கொடுப்பார்கள். பார்டர்ஸ்.காம் வலைதளத்தின் மூலம் ட்ரிஸ்டாடன் -டி-கன்ஹாவில் கூட வாசகர்கள் புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம்.

.காம் மூலம் மில்லியனர்கள் உருவான காலத்தில் மின்புத்தகம், சுய புத்தக அச்சடிப்பு என்பது பரவலாக புகழ்பெற ஆரம்பித்தது. துக்கடா பதிப்பகங்கள் காணாமல் போன பிறகு மிச்சம் இருந்த சுய வெளியிட்டாளர்களை பார்டர்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் சாப்பிட்டது. இது வரை 45,000 புத்தகங்கள் இந்த முறையில் வெளிவந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வரை கடும் முயற்சிக்குப் பின்பே சுய வெளியீட்டை நாடிய எழுத்தாளர்கள், இப்பொழுது ஆரம்ப நிலையிலேயே பதிப்பகங்களின் படிகளை ஏறி இறங்காமல் தன்னம்பிக்கையோடு தானே வெளியிட்டு விடுகிறார்கள்.

வெளியிடுவது எளிதுதான்; தவறுகளை திருத்தி, எடிட் செய்து, வாசகர்களை படிக்க செய்வதுதான் கஷ்டமான காரியம்! வருடத்திற்கு ஒன்றரை லட்சம் புத்தகங்கள் வெளிவரும் அமெரிக்காவில் உங்களின் புத்தகத்தை பரவலாக்கவும் சில திட்டங்களை இவர்கள் கொடுக்கிறார்கள். முதல் வருடத்திற்குள் ஐந்நூறு பிரதிகள் விற்றுவிட்டாலே, நட்சத்திர அந்தஸ்து கொடுத்து, பதிப்பாளர்களே விளம்பரமும் தொலைகாட்சி நேரங்களும் இத்யாதி விளம்பர உத்திகளும் கொடுக்க விழைகிறார்கள். இதுவரை ஐ-யூனிவர்ஸ் வெளியிட்ட பதினேழாயிரம் புத்தகங்களில் வெறும் 84 மட்டுமே இந்த நட்சத்திர அந்தஸ்த்தை அடைந்திருக்கிறது. அவற்றில் இருந்தும் ஒரு அரை டஜன் மட்டுமே ஹிக்கின்பாதம்ஸ் போன்ற வெகுஜன புத்தகக் கடைகளை எட்டி பார்க்க முடிந்திருக்கிறது.

‘எழுத்தாள்ர்கள் (அல்லது அப்படி அழைக்கப்பட விரும்புபவர்கள்) சுய புத்தகபதிப்பின் மூலம் சீக்கிரமே ஆயிரக்கணக்கான புத்தகக்கடைகளையும் லட்சகணக்கான வாசகர்களையும் அடையலாம் என்பது மாயை’ என்கிறார் பார்டர்ஸ் நிறுவனத்தின் அதிபர்.