Daily Archives: பிப்ரவரி 16, 2004

எவ்வாறு புரிந்து கொள்வது!?

Birchtown Snakeday (c) 2001 - Morgan Bulkeley

மார்கன் பல்கெலியின் ஆயிலோவியம். மார்ச் 9 வரை பாஸ்டனின் ஹோவார்ட் யேஜெஸ்கி காலரியில் பார்க்கலாம்.

ஹார்வர்ட் பல்கலை. வழங்கும் ‘மஞ்சப் பத்திரிகை’

Harvard University to have porn magazine – Sify.com: கல்லூரி மாணவர்களின் கலை தாகத்தைத் தீர்த்துக் கொள்ள ஹார்வார்ட் பேராசிரியர்களின் ஒப்புதலோடு ‘சரோஜாதேவி’ மேட்டர்கள் இல்லாத ‘மஞ்சப் பத்திரிகை’ வெளிவரப் போகிறது. இணையத்தில் கிடைக்குமா என்று இன்னும் தெரியாத இந்த சஞ்சிகையில் முழு வண்ண, ‘ப்ளேபாய்’ ரக, இளங்கலைப் பெண்மணிகளின் படங்களும் இருக்கும். ஆனால், அவற்றை தூண்டில்களாக வெளியிட்டு – புத்தகப்புழுக்களின் பால்வினை பிரச்சினைகளை அலசவும், செக்ஸ் கேள்விகளுக்கு விடையளிக்கவும், காமத்தை கலைக் கண்ணோட்டத்தோடு அணுக வைப்பதற்குமே இந்த ‘H – அணுகுண்டு’ என்னும் முயற்சி.

விளம்பரங்களின் மூலமும், பல்கலை.யின் பண உதவியின் மூலமே வெளியிடப்படுவதால், வருடத்திற்கு இரண்டு முறைதான் என்பது பல ஹார்வார்ட் மக்களுக்கு வருத்தத்தைக் கொடுத்திருக்கிறதாம்.

ஒப்புதல் அளித்த குழுவில் ஒரு பேரா. என்னுடைய சந்தேகத்துக்கு விடையளிக்கும் விதத்தில் சொல்கிறார்: “இந்தப் பத்திரிகையில் வரும் விஷயங்கள் சிலருக்கு அதிர்ச்சியைத் தரலாம். ஆனால், அங்கீகரிக்க மறுப்பது – பேச்சு சுதந்திரத்தை அடக்குவதற்கு ஈடாகும், என்பதையும் நாங்கள் நன்றாகவே அறிந்ததாலே அனுமதி கொடுக்கிறோம்”.

ஃபிடல் காஸ்ட்ரோ

Photo of Fidel Castro addresses the crowd after his inauguaration பிபிசி: இந்த நாள்…: முப்பத்திரண்டு வயதில் ஃபிடல் காஸ்ட்ரோ, க்யூபாவின் பிரதம மந்திரியானார். ஒரு நல்ல அரசாங்கத்தை நிறுவும் வரை தாடியை மழிக்க மாட்டேன் என 1959-இல் சபதம் எடுத்தவர், இன்னும் அதே தாடியை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

விளம்பரங்களும் விளம்பரதாரர்களும்

அமெரிக்கர்களுக்குக் கால்பந்தாட்டம் ரொம்பப் பிடித்த ஆட்டம். ரவுண்ட் ராபின் ஆட்டத்திலேயே இந்தியா-ஆஸ்திரேலியா பத்து முறை மோதி, காலிறுதி, அரையிறுதி, அது தவிர மூன்று இறுதி ஆட்டங்கள் என்பது மாதிரி ரொம்ப அலைக்கழிக்காமல் சடசடவென்று சீஸனை முடித்துவிடுவார்கள். கூடைப்பந்து மாதிரி ஸ்கோர் நொடிக்கொருதரம் ஏறாது. கிரிக்கெட் மாதிரி நாள் முழுவதும் சிக் லீவ் எடுத்து பார்க்க வேண்டாம். ·புட்பால் மாதிரி ஓரிரண்டு கோல்கள் போட்டால் கூட ஆறு, ஏழு என்று எண்ணிக் கொள்ளலாம்.

முதலில் இதை பார்க்க ஆரம்பித்தபொழுது தெருவோர கிரிக்கெட்டில் ஆட்ட எண்ணிக்கையை ஏற்றிக் கொண்டே போவதுதான் நினைவுக்கு வந்தது. ஸ்கோரை குறித்துக் கொள்ளும் எங்க டீம் ஆள், அவ்வப்போது ஒன்றிரண்டு ‘கவனித்துக்’ கொள்வார். “என்னடா… இப்பத்தானே வந்தே… அதுக்குள்ள எப்படிடா முப்பது எடுத்தே?” என்று எதிரணி வியந்தாலும், அவர்களும் போலி ஓட்டுக்கள் நிறையவே போட்டு ரன்களை குவிப்பார்கள். இங்கு ஆடும் ·புட்பால் அதிகாரபூர்வமாகவே ஒரு கோலுக்கு நிறைய ஸ்கோர் வைத்துக் கொள்ளும் பழக்கம் இன்னும் எனக்கு விளங்கவில்லை.

இந்த வருட அமெரிக்க ·புட்பால் ‘உலகக் கோப்பையை’ எங்க ஊர் பாஸ்டன் அணி வென்றுள்ளது. அரையிறுதியில் பதினாலுக்கு பத்து என்று நாங்கள் முண்ணனியில் இருந்ததும், கடைசியில் மூன்று ரன் வித்தியாசத்தில் கோப்பையைத் தட்டி சென்றதும், 31,36 அடியிலிருந்தே கோலடிக்கத் தெரியாத வீரர், முப்பது நொடிகளே இருந்தபோது நாற்பத்தியோரடியில் இருந்து பந்தை புல்லட்டாக்கியது என்று மேலும் விளக்கி ஊசிப்போன வர்ண்ணை கொடுக்க விரும்பவில்லை.

அனேகமாக சூப்பர் பௌல் பார்ப்பது அதனூடே வரும் விளம்பரங்களுக்காகத்தான். நிகழ்ச்சியில் வரும் விளம்பரங்கள் இதற்கு முன் ஒளிபரப்பப் பட்டிருக்கக் கூடாது. விளம்பரங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு என்று ஒரு வல்லுநர் குழு கூட உண்டு. அனைத்து விளம்பரங்களும் நகைச்சுவையுடன் விளங்க வேண்டும். இவ்வளவு கிராக்கி செய்தாலும் ஒரு நிமிடத்துக்கு மூன்று மில்லியன் டாலர் கட்டணம். சூப்பர் பௌல் ஆட்டம் ஏமாற்றினாலும் நடுவில் வரும் இவை நம்மை ஏமாற்றாது. ஜான்ட் ஜாக்ஸன் புண்ணியத்தினால் இனி அந்த லிஸ்டில், அரையிறுதியில் வரும் கேளிக்கை ஆட்டங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

சில விளம்பரங்களையும், அதற்கு மனதில் தோன்றிய திரைப்பாடல்களையும் முதலில் பார்ப்போம்.

—————————————————

‘இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்’: இரு நண்பர்கள் தங்களின் நாய்களை நடைபயில கூட்டிச் செல்கையில் சந்திக்கிறார்கள்.

முதலாமவர்: ‘என்னுடைய நாய் நான் சொன்னபடியெல்லாம் கேட்கும் தெரியுமா?’

இரண்டாமவர்: ‘ஓ… அப்படியா’

மு: (ஆஜானுபாகுவான தன் நாயை பார்த்து) ‘கொண்டு வா’

நாய் சமர்த்தாக ஓடிப்போய் ஒரு பியரை கொண்டு வந்து எஜமானரிடம் கொடுக்கிறது.

இ: (நோஞ்சானாய் இருக்கும் தன் நாயை பார்த்து) ‘கொண்டு வா’

நாய் முதலாமவரின் மர்மஸ்தானத்தைக் கவ்வ, ‘பட்-லைட்’ பியரை காட்ச் பிடித்துக் கொள்கிறார்.

‘கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே’: இந்தியா பாகிஸ்தான் ஒரு நாள் போல் விறுவிறுப்பான ஆட்டம். ஆஸ்திரேலியர்கள் நடுவரை திட்டுவதை விட (அமெரிக்க பாணியில்) படு மோசமாக அர்ச்சனை செய்வதை கண்டுக்காமல் நிற்கிறார். பின்னாடியில் ஒலிக்கும் குரல், ‘இவர் இந்த பொறுமையை எங்கு கற்றுக் கொண்டார்… தெரியுமா?’ என காட்சியை அவர் வீட்டுக்கு மாற்றுகிறது.

அவரின் மனைவி முன்பு காட்டிய ஆட்டக்காரர்களை விட படு மோசமாக ‘வீட்டை சுத்தம் செஞ்சு எத்தனை நாளாச்சு தெரியுமா? பாத்ரூம் குழாய் ஒழுகுதே… என்னிக்கு ரிப்பேர் பண்ணப் போறே? எனக்கு ஒரு புது டோஸ்டர் ஓவன் கேட்டேனே… அடுத்த எலெக்சனுக்குள்ளவாவது வாங்கித் தருவாயா? என்னை பார்த்து ஒரு தடவையாவது ‘ஐ லவ் யூ’ சொல்றியா?’ என்று காச்மூச்.

இது பியருக்கான விளம்பரம் என்று சொல்லவும் வேண்டுமோ?

‘அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்’: காலியான கோடை வீட்டிற்குள்ளே கரடிகள் பிரவேசிக்கின்றன. ·ப்ரிட்ஜை திறந்து மீந்து போன பீட்ஸாவையும், மற்ற உணவையும் பார்க்கிறது. கூலர் பெட்டியில் காலியான தண்ணீர் பாட்டில்கள். குளிர் கண்ணாடியையும், ம·ப்ளரையும், ஜாக்கெட்டையும் அணிந்து கொள்கிறது. நேராகக் கிளம்பி பக்கத்து கடைக்குள் புகுந்து சாமான் வாங்க முயலுகிறது. கடைகாரர் எங்கே உன்னுடைய லைசன்ஸை காட்டு என கேட்க, கரடியும் சிரித்துக் கொண்டே ஒன்றை நீட்ட, அவரும் காசு வாங்கிக் கொண்டு அனுப்பி விடுகிறார்.

இதுவும் மதுபான விளம்பரம் என்று நினைத்தால் தவறு. ‘பழஞ்சோற்றின் சுவையே பெப்ஸி உடனிருந்தால்தான்’ என முடிகிறது.

”திருடாதே… பாப்பா திருடாதே’: ‘நான் மாட்டிக் கொண்டேன்’; ‘நான் குற்றஞ்சாட்டபட்டேன்’; ‘நான் தவறு செய்தேன்’; ‘நான் அபராதம் கட்டினேன்’; என்று பலர் சோகமாக இறுக்கமான முகத்துடன் வருத்தம் தெரிவித்தார்கள். ஒரு இளம்பெண் ‘இணையத்தில் இருந்து இசையை வலையிறக்கியதற்காக நான் தண்டிக்கப் பட்டேன்… ஆனால், இன்னும் தொடர்ந்து இசையை இலவசமாக இறக்கத்தான் போகிறேன்’ என்று சிரித்துக் கொண்டே சொல்கிறாள்.

பெப்ஸி அருந்தினால், இலவசமாக பாடல்களை அதிகாரபூர்வமாக வலையிறக்கலாம் என்று முடிகிறது.

‘ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டவந்தான் மண்ணுக்குள்ள’: முழுக்க முழுக்க வெள்ளைப் பின்புலத்தில் தனியாக சிறுவன். பின்புற குரலாக ‘உலகத்தைப் புரட்டி போடு’ என்னும் மெல்லிய குரல். மீண்டும் மீண்டும் ‘உலகத்தைப் புரட்டி போடு’ குரல், கொஞ்சம் வலுவாக, ஆனித்தரமாக, நம்பிக்கையூட்டும் விதமாக. பார்த்துக் கொண்டிருக்கும் டிவியின் வழியாக தொடர்கிறது. டிவியில் குத்துச்சண்டை வீரர் மொகமதலி இப்பொழுது சொல்கிறார். டிவியில் இருந்து சிறுவனின் எதிரே அமர்ந்து அலி சொல்வதுடன் முடிகிறது.

‘லீனக்ஸ்’ என்னும் எழுத்துக்கள் தோன்றியவுடன் பிண்ணனியில் ‘உலகத்தைப் புரட்டி போடுவோம்’ குரல். ‘ஐபிஎம்’ என்று கொட்டை எழுத்துக்களை தேக்கிவிட்டு முடிகிறது.

‘குண்டு..குண்டு.. குண்டு பொண்ணே’: உணவகத்தில் கருப்பின வாலிபன் சோகமாக இருக்கிறான். ஹோட்டல் சிப்பந்தி ‘என்னப்பா வருத்தம்’ என்று வினவ, காதலி கைவிட்டதை சொல்கிறான். ‘இதுக்குப் போய் அலட்டிக்கலாமா’ என்று அவனை பெப்ஸி அருந்தச் செய்கிறாள். அடுத்த காட்சியில் அந்த குண்டு சிப்பந்தியுடன் டூயட் பாட காதல் செய்கிறான்.

‘பெப்ஸி உடனிருந்தாலே சாண்ட்விட்ச்கள் சுவைக்கின்றன’ என்கிறது இந்த விளம்பரம்.

‘ஆசை அதிகம் வைச்சு’: பீச் மணலில் பிகினி ஆடையில் இளங்கன்னிகள் வாலிபால் ஆடுகின்றார்கள். கடுங்குளிர்காலம் என்பதை பனியாகிப் போன நதிக்கரை காட்டுகிறது. ஒருவருக்கு கீழே விழுந்து பந்தை அடித்ததில் ரத்தம் கட்டிக் கொள்கிறது. சரி… பியரை வைத்துக் கொண்டு, தொப்பையை ஆட்டிக் கொண்டு கோட்டு மாட்டிக் கொண்டு ஆடவர் உட்கார்ந்திருப்பார் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.

ஒலிம்பிக்குக்குத் தயார் செய்து வருகிறார்களாம். ‘விசா’ தவணை அட்டையை வைத்துதான் ஏதன்ஸில் நுழைவுச்சீட்டு வாங்க முடியுமாம்.

‘வெற்றி நிச்சயம்… இது வேத சத்தியம்’: முதிர் ஜோடிகள் உல்லாசமாக சூரியனில் காய்கின்றனர். நடுத்தர வயது ஆடவர், மகிழ்ச்சியுடன் பெண்ணை நெருங்குகிறார். வயாகராவுக்குப் போட்டி வந்தாச்சு. முப்பத்தாறு மணி நேரம் தாக்குப்பிடிக்க வைக்கும் ‘சியாலிஸ்’ என்னும் புதிய மருந்து அறிமுகமாகிறது.

‘உன்னை விட… இந்த உலகத்தில் உசந்தது’: ரம்மியமான வீட்டுக்கு சூப்பர் ·பிகரை அழைத்து வருகிறான் நாயகன். அவன் வளர்க்கும் செல்லப்பிராணியான சிம்பன்சியை பார்த்து பயப்படுகிறாள் நாயகி. ‘அது ரொம்ப சாது! ஒரு நிமிடம் இரு… குடிக்க எடுத்து வருகிறேன்’ என்று உள்ளே செல்கிறான். சிம்பன்ஸி உரிமையுடன் சோபாவில் பக்கத்தில் உட்கார்ந்து தோளில் கைபோட்டுக் கொள்கிறது. ‘அவனுக்கு விவரம் பத்தாது… பயந்தாங்கொள்ளி! என்னுடன் மாடி பெட்ரூமுக்கு வா… சொர்க்கத்தையே காட்டுவேன். ஜாலியாக இருக்கலாம்’ என்று அமர்க்களமான முக பாவனையுடன் சொல்லிவிட்டு, அவன் வருவதை பார்த்தவுடன் ‘நான் உன்கிட்டப் பேசினதா காட்டிக்காதே’ என்று மெல்ல கிசுகிசுக்கிறது.

ஓணான், தவக்களை என்று எல்லா மிருகங்களுக்கும் குரல் கொடுக்க வைக்கும் ‘பட்’ என்னும் பியரின் விளம்பரம்.

‘காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்’: முன்னூறு மைல் தள்ளி செல்லும் காதலிக்குப் பிரியாவிடை தருகிறான். விமானத்தில் வழியனுப்பிய பிறகே, பக்கத்து சீட்டில் உதட்டுச்சாயத்தை மறந்துவிட்டதை பார்க்கிறான். போலீஸிடம் பிடிபடாமல், அதிவேகமாக காரை செலுத்தி, அவளை பறந்த இடத்துக்கே, விமானத்துக்கு முன் ஓட்டி அடைகிறான். காதல் மயக்கத்துடன் அவனின் ஆர்வமான வருகையை ரசிப்பவள், காண வந்த காரணத்தை கேட்கிறாள். ‘அந்த லிப்ஸ்டிக் என்னுடையது இல்லையே’ என்று கோபக் கேள்விப்பார்வையில் முடிகிறது.

இதற்கும் பியருக்கும் எப்படி சம்பந்தமென்றால், அவள் அனாதையாக்கி சென்றபிறகு அவன் குடிக்க வேண்டிய மதுவகையை சொல்கிறது என நினைத்துக் கொள்ளலாம்.

‘தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை’: இது பின் நவீனத்துவமோ, இலைமறை காயோ, குறிப்பால் பொருளுணர்த்தும் வகையையோ சார்ந்த ஒரு விளம்பரம். ஒழுங்காகப் புரியாததால் மனதில் இன்னும் நிற்கிறது. தண்ணீரை சுமந்து கொண்டு வரும் கருப்பு கார்கள். எப்படி ஒரு கார் தண்ணீர் தூக்கமுடியும் என்று தெரியவில்லை. ‘நில்’ என்னும் சாலைவிதிகளையும் மதிக்காமல் விரைகின்றன. முச்சந்தியில் கூட நின்று கவனிக்காமல் நொடி நேரத்தில் ஒன்றையொன்று மோதிக் கொள்ளாமல் தண்ணீரை மேலே வைத்துத் துரத்திக் கொண்டு செல்கின்றன. ‘காடிலாக்’ காரை வாங்கினால் விபத்து நேராது என்கிறார்களா? ‘கழுவுற மீனில் நழுவுற மீன்’ மாதிரி தப்பிக்கலாம் என்கிறார்களா?

‘செட்டப்ப கெட்டப்ப மாத்தி…’: டீனேஜ் பெண் வீட்டில் இசைக்கு ஆடுகிறாள். அவளைப் பார்க்க தோழி வருகிறாள். குசுகுசுவென்று பேசிவிட்டு வெளியேக் கிளம்புகிறார்கள். தலைமுடியை கோதிவிட்டு சிகையலங்காரத்தை மாற்றிக் கொள்கிறாள். வேலையில் இருக்கும் பெண்டிர் உடுத்தும் ஆடைகளுக்கு மாறுகின்றனர். உதட்டுக்கு லிப்ஸ்டிக், கண்ணுக்கு மை, காதுக்கு ஒரு வளையம் என் ‘இந்தியன் சுகன்யா பாட்டி’ போல் இல்லாவிட்டாலும் ”ஆனந்தம்’ சுகன்யா போல் வயதாக்கி கொள்கின்றனர். மதுவை வாங்க அலட்சியமாக கடன் அட்டையை நீட்ட அசராத கடைகாரர் லைசன்ஸை எடுக்குமாறு சிரிக்கிறார். பேந்தப் பேந்த விழிப்பவர்களின் பிண்ணனியில் ‘நாங்கள் வயது வந்தவர்களா என சரி பாக்கிறோம்’, குரல் மற்றும் எழுத்து.

இவை தவிர புரியாத மேஜிகல் ரியலிசமாக சில ‘செவ்ரோலேட்’ கார் இடுகைகளும், வைரமுத்து கவிதை போல் உள்ளங்கை நெல்லிக்கனியாக புரியவைத்த சவர ப்ளேட்களும், ‘சிகரெட் தவிர்’, ‘போதை மறுத்து விடு’ போன்ற சில உருப்படியான பிரசாரத் துளிகளும், ‘ட்ராய்’, ‘தி அலாமோ’ , ‘ஹிண்டால்கோ’ போன்ற எண்ணற்ற திரைப்பட விளம்பரங்களும், மறந்துவிட வேண்டிய வேறு சிலவும் கூட விளம்பரித்தார்கள்.

இடைவேளையில் ஜானட் ஜாக்ஸன் கட்டின ஆட்டம் காணக் கிடைக்காத காட்சி. அதைப் பற்றி வேறு என்றாவது பார்ப்போம்.

நன்றி: தமிழோவியம்

ஜனவரி மாசத்துச் சிதறல்

* நியு யார்க் டைம்ஸ்: அமெரிக்கப் பங்குசந்தையில் கிட்டதட்ட அனைத்து பங்குகளுக்கும் கொண்டாட்டம்தான். வரலாறு காணாத அளவு சிறுதொழில் பங்குகளும் சக்கைபோடு போடுகின்றன. பணம் புரள விடுவதில் நுகர்வோர்கள் மூன்றில் இரண்டு பங்கு செலவழித்துக் கொண்டு, தொழில் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டார்கள். உணவுக்கும் ஆடைக்கும் செலவழிப்பதை விட பன்மடங்கு படிப்புக்கும், மருத்துவர்களுக்கும், காப்பீடுகளுக்கும், மருந்து மாத்திரைகளுக்கும் செலவழிக்க நேரிடுகிறது. சூதாட அதிகம் செல்கிறார்கள். அமெரிக்காவில் வாரந்தரிகளும், தினசரிகளும் படிப்பது குறைவது கவலை தந்தாலும், டிவி பார்ப்பதும், இணையம் சுற்றுவதும் அதிகரித்தாலும், புத்தகம் படிக்கும் பழக்கத்தைக் கைவிடாமல் அதிகரித்து இருக்கிறார்கள். அமெரிக்கர்கள் தொடர்ந்து பணத்தைக் கரைப்பதிலும், டால்ர் மதிப்பு ஏறாமல் இருப்பதிலும்தான் அடுத்த சுற்று ஆட்குறைப்பு நடக்காமல் இருக்க வழிவகுக்கும்.

* பிபிசி: முன்பொருமுறை சென்னை திரையரங்கில் எஸ்.ஏ. சந்திரசேகர் ஹேண்டிகாம் வைத்து படம் எடுக்க முயற்சித்ததாக வதந்தி சாற்றபட்டார். இணையத்தின் உபயத்தில் ‘உலகக் கணினி பெட்டியில் முதன்முறையாக’ என்று ‘மேட்ரிக்ஸ்’ முதற்கொண்டு பல படங்கள் வெளியிடப்பட்டதால், இனி தியேட்டரில் சொந்த உபயோகத்திற்காகக் கூட வீடியோ எடுக்கக்கூடாது என்று பல மாநிலங்கள் சட்டம் கொண்டு வந்திருக்கின்றன. ‘திரைப்பட சங்க’ உறுப்பினர்களே சொல்வது போல் படத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் திருடாமல் இருந்தால்தான் விசிடி உலா வருவதைத் தடுக்க முடியும்.

* பிபிசி: இணையத்தினால் ஓழுங்காக வீட்டுக்கணக்குப் போடுபவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பெற்றோர்கள், அண்ணாக்கள், அக்காக்களின் உதவியையும் பள்ளி மாணவர்கள் விட்டு வைப்பதில்லை. வலைத்தளங்கள் இருப்பதால் மாணவர்களுக்கு வீட்டுவேலை அதிகமானதா அல்லது வீட்டுவேலை அதிகமானதால் இணையத்தை நாடுகிறார்களா என்று தெரியவில்லை.

* நியுயார்க் டைம்ஸ்: மத்திய பிரதேசத்தில் வசிக்கும் ரவி ஷாம் சவுத்ரி ஒவ்வொரு நாளும் சிகாகோ வர்த்தக மைய நிலவரங்களைப் பார்வையிடுகிறார். சோயாபீனின் விலைமாற்றங்களை கவனிக்கிறார். விலை ஏறிக்கொண்டிருந்தால் உள்ளூர் வியாபாரிகளை காலம் கனிய காத்திருக்கவோ, இறங்க ஆரம்பித்தால் உடனடியாக விற்கவோ அறிவுறுத்த முடிகிறது. ஒரு இ-சௌபல் 2500 விவசாயிகளை சென்றடைகிறது. உலக சந்தை பட்டியல், வானிலை விவரங்கள், மண் சோதனை டிப்ஸ், என அவசியமான அனைத்து விஷயங்களும் கீபோர்ட் நுனியில் கிடைக்கச் செய்கிறது. அறுபது நிறுவனங்கள் பங்கு கொண்டு மூவாயிரம் இ-சௌபல்கள் அமைத்து பதினெட்டாயிரம் கிராமங்களையும் பதினெட்டு லட்சம் விவசாயிகளையும் உலகப்பொருளாதாரத்தோடு ஐக்கியப்படுத்துகிறது. கொசுறாக மின்னஞ்சல் அனுப்புவதும், இந்தியா எ·ப்எமில் பாட்டு கேட்பதும் அரட்டை அடிப்பதும், பத்தாவது பரீட்சை முடிவுகள் பார்ப்பதும் செய்கிறார்கள்.

* பிபிசி: இரத்தகுழாய்களில் இருந்து கொழுப்பு வெளிவரும் கொடூரமான சித்தரிப்பை புகைபிடிப்பவர்களுக்கான புதிய பயமுறுத்தலாக விளம்பரம் செய்கிறார்கள். புகைபழக்கத்தால் பிரிட்டனில் வருடத்திற்கு 120,000 மக்கள் இறக்கிறார்கள். விளம்பரம் நண்பர்கள் சிகரெட் பத்த வைப்பதில் தொடங்குகிறது. புகை வருவதற்கு பதிலாக சிகரெட் நுனியில் இருந்து கொழுப்புக் கசிவதாக தொடர்கிறது. 2010-க்குள் ஒண்ணரை மில்லியன் மக்களை மனம் மாறச் செய்யும் என்னும் நம்பிக்கையில் விளம்பரம் ஆரம்பித்துள்ளது.

* பிபிசி: இங்கிலாந்து மக்களின் குணாதிசயங்களை மாற்றும் வலையகங்களாக கூகிள், ஈ-பே, ·ப்ரெண்டெஸ் ரியுனைடெட் தளங்கள் உள்ளது. புதுமையான வலைத்தளங்கள் பட்டியலில், நண்பர்கள் பலரை வலைப்பதிய வைக்கும் ப்ளா·கர், அரட்டை அடிக்கும் ஏஓஎல்-மெஸெஞ்சர், எம்பி3 திரைப்பாடல்களைப் பகிர்ந்து கொள்ள உதவும் நேப்ஸ்டர் ஆகியவை இடம்பிடித்துள்ளன.

* பிபிசி: மக்களின் தேடலுக்கு முதல் காரணம் ‘வதந்தி’. பிரிட்டிஷ் மகாபிரபுகளுக்கு இளவரசர் சார்லஸ் செய்யும் லூட்டிகள் தேட வைத்தது என்றால், உலகத்தில் உள்ள அனைவரும் ப்ரிட்னி ஸ்பியர்ஸின் கல்யாணம், காதல், எம்டிவி முத்தம் என்று தேடினார்கள். ‘குழந்தை பொறுக்கி’ என்று பட்டம் பெற்ற முன்னாள் இசை சக்கரவர்த்தி மைக்கேல் ஜேக்ஸன், ‘இணைய கவர்ச்சி ராணி’ என்று புகழ் தேடிக் கொண்ட பாரிஸ் ஹில்டன் ஆகியோருடன் ஈராக் யுத்தம், ‘மேட்ரிக்ஸ்’ திரைப்படம் ஹாரி பாட்டர் ஆகியோரும் தலை பத்துத் தேடலில் இடம் பிடித்துள்ளார்கள்.

* ஐஎச்டி: ‘குடியரசு’ கட்சியின் முக்கிய கொள்கைக்கே சோதனை. அரசாங்கம் எதிலும் மூக்கை நீட்டாமல் ஒதுங்கியே இருந்து குறைந்த செலவில் இயங்க வேண்டும் என்பது அவர்களின் தார்மீகக் கொள்கை. நிறுவனங்களுக்கு பல துறைகளிலும் கால்பதித்து லாபத்தை அதிகரிக்க வாய்ப்பு. செனேட்டில் அதிக அளவில் ‘சுதந்திர’ கட்சிவாதிகள் இருந்ததனாலும், பில் க்ளிண்டன் ஜனாதிபதியாக இருப்பதனாலும்தான் இதை செயல்படுத்த முடியவில்லை என்று குற்றம்சாட்டிவந்தார்கள். கடந்த மூன்றாண்டுகளாக செனேட், காங்கிரஸ், ராஷ்டிரபதி எல்லோரும் ‘குடியரசு’ கட்சிவசம் என்றாலும் அரசு ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதேத் தவிர குறையவில்லை. மக்களுக்குப் பிரச்சினைகள் தன்னலேயே தீர்ந்து கொண்டால் போதும். அரசு இயந்திரத்தைக் குறைத்துத் தன் மேல் பாரத்தை சுமத்தாதவரைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.

* நியு யார்க் டைம்ஸ்: சீனா சார்ஸ் கிருமியின் தாக்குதலை தடுக்க பத்தாயிரம் (சிவெட்) பூனைகளைக் கொளை செய்தார்கள். கிராமப்புற சீனர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளுள் இந்தப் பூனை வகையும் அடக்கம். இந்தப் பழக்கத்தினால்தான் போன வருடம் அதிக அளவு சார்ஸ் பரவியதாக நம்பப்படுகிறது.

* நியு யார்க் டைம்ஸ்: இசைவிரும்பிகள் காசு கொடுக்காமல் எம்பி3க்களைத் திருடுவதை தடுக்க தொழிற்நுட்பத்தின் ஐந்து ‘தாதா’ நிறுவனங்கள், இண்டெல், நோக்கியா, சாம்சங், தோஷிபா, மாட்ஸ¤ஷிடா கைகோர்த்துக் கொண்டன. மைக்ரோசா·ப்ட் ‘என் வழி தனி வழி’ என்று இன்னொரு காக்கும் வித்தையை முன் வைத்திருக்கிறது. இந்த இரண்டு பேர் தவிர ஆப்பிள் மெக்இண்டாஷ், ரியல் நெட்வொர்க்ஸ், சோனி, ·பிலிப்ஸ் இன்ன பிறர் சேர்ந்து கொண்டு எங்கள் காப்புரிமை நுட்பமே தலை சிறந்தது என்று பறை சாற்றி வருகிறார்கள். ‘ஊர் ரெண்டு பட்டால் ‘கூத்தாடி’ திருடனுக்குக் கொண்டாட்டம்’.

* பிபிசி: இந்தியாவில் மீன்களைக் கொண்டு மலேரியாவைக் கட்டுபடுத்துகிறார்கள். இந்தியாவின் பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க நிதியை பூச்சி மருந்துகள் மூலம் மலேரியா தடுப்பதில் செலவழிக்கிறார்கள். ரொம்ப சுளுவான இந்தப் புது ஐடியா மூலம் மலேரியா பரப்பும் கொசுக்கள் உள்ள குட்டை குளங்களில் இந்த மீன்களை விட்டு விடுகிறார்கள். கொசுக்கள் முட்டை பொரித்தவுடன், குஞ்சுகள் பறப்பதற்குள் மீன்களுக்கு உணவாகி விடுகின்றன. பூச்சி மருந்துகளுக்கு பாச்சா காட்டும் எதிர்ப்புத்தனமை வளர்ந்துவிட்ட கொசுக்களை அழிப்பதற்கு இதுதான் எளிதான உத்தி.

நன்றி: தமிழோவியம்

காதலர் தினத்துக்கு ஒரு அமெரிக்க அபலையின் கடிதம்

என் முன்னாள் காதலன் எழிலனுக்கு,

எப்படி இருக்கிறாய்? நான் இப்போது தான் உனது கல்யாணப் பத்திரிகை கிடைக்கப் பெற்றேன்.

உங்களுக்கு எல்லாம் திருமணமாவது புத்தி புகட்ட வேண்டும். அப்பாவி இந்தியனாய் கல்லூரியில் நுழைந்தாய். இந்திய மாணவர்களில் பலருக்கு அமெரிக்கப் பெண்களைப் பற்றிய பிம்பம் தான், உன் மனத்திலும் குடி கொண்டிருந்திருக்கும்.

வெள்ளைக்காரியோடு படுத்து எழுந்திருப்பதுதான் லட்சியம். முடி வெள்ளையாக இருந்தால் வலையில் விழ வைப்பது எளிது. கொஞ்சம் பணம், மனதை வசீகரிக்கும் பரிசுகள் கொடுக்க வேண்டும்.

இந்தியப் பெண்கள்தான் குடும்பப் பாங்கானவர்கள். வீட்டுக்கு விளக்கேற்ற பொருத்தமானவர்கள். அமெரிக்க வனிதைகளோ, விலைமாதருக்கு ஒப்பானவர்கள். அவர்களுக்கு திருமணம் வேண்டாம். குழந்தைகள் வேண்டாம். மனசாட்சி கூட கிடையாது.

உங்கள் ஊரில் பெண் என்றால் மதிக்கத்தக்கவள். அமெரிக்காவில் அவர்கள் பாலுறவைக் கற்றுக் கொடுக்கும் சாதனம். தமிழ் நாட்டில் தெய்வீகக் காதல் செய்வாய். அமெரிககாவில் அதுவே டைம் பாஸ¤க்கு செய்யப்படும் கேளிக்கை. அங்கு கல்யாணம் செய்து கொண்டால், வாழ்நாள் முழுக்க ஒருத்தியோடு அனுசரித்துப் போய் குடும்பம் நடத்துவாய். இங்கு மோதிரம் மாற்றினால், விவாகரத்துக்கு காரணம் தேடிக் கொண்டிருப்பாய்.

எப்படி உன்னால் தமிழ் நாட்டில் இல்லாத போது ஒரு கொள்கை, உன் பெற்றோருடன் இருக்கும் போது வேறோரு கொள்கை என்று வாழ முடிகிறது?

இனப் பாகுபாடு, வெள்ளை, கருப்பு, பழுப்பு என்று எல்லாம் என்னைப் பிரித்து பார்க்கிறார்கள் என்று நீ புலம்பும் போது, எனக்குப் பாவமாய் தோன்றும். ஆனால், உண்மையில் நீங்கள் தான் இன வெறியர்கள்.

உன்னுடைய அம்மாவின் விருப்பதிற்காக, உங்களின் குலம், கோத்திரம், மொழி, ஜாதியை சேர்ந்த ஒருவரைத்தான் நீ மணமுடிப்பாய். நமது காதல் முக்கியமில்லை, நம்முடைய உண்ர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுக்கத் தேவையில்லை.

எனது அப்பா, அம்மா எவ்வளவோ தேவலை. அவர்களுக்கு உன்னை நான் வாழ்க்கத் துணையாய் தேர்ந்தெடுப்பது பிடிக்காவிட்டாலும், என் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுப்பவர்கள். நான் சந்தோஷமாய் இருப்பதற்காக அவர்களின் கோட்பாடுகளை உடைத்துக் கொள்ளத் தயங்காதவர்கள்.

நான் வெள்ளை என்பதால், உன் குடும்பம் நமது திருமணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நான் வெள்ளை என்பது எனது நிறம். அதை விட உனது மனதைக் கவர்ந்த பெண் என்பது முக்கியம். நான்கு வருடங்களாய் கழித்த, மனம் ஒன்றிய நேரங்களும், நம்மில் நாம் கண்ட குணாதசியங்களும், ஆசைகளும் பகிர்ந்து கொண்ட நேர்மையையும் விட, உன்க்கு இப்பொழுதுதான் தெரிந்த அந்த புதியவள் முக்கியமாகி விட்டாள்.

கோவிலுக்கு வாரம் தவறாமல் செல்கிறாய். நானும் வருவேன். அப்போழுது வேற்று மதக்காரி என உரைக்க வில்லை. எனது நாட்டில், நீ இருக்கிறாய். அப்பொழுது வேற்று ஊர்க்காரர்கள் எனஉணரவில்லை. என்னுடன் சேர்ந்து இருந்தாய். அப்பொழுதும் இனம், மொழி எல்லாம் காரணமாகப் படவில்லை.

இவற்றை உங்கள் அம்மாவிடம் விளக்கத்தான், புரிய

வைக்கத்தான் உனக்குத் தெரியவில்லை. அப்படி

எல்லாம் கிடையாதென்றால், அமெரிக்க ப்ளாண்ட்

உனக்கு ஒரு காட்சிப் பொருள். நயாகரா அருவி

சென்று குளிப்பது போல், நீர்வீழ்ச்சியில் ஒதுங்கி

வருவது போன்று அமெரிக்கப் பெண்களிடம் உறவு

வைத்துக் கொள்வது, எப்பொழுது வேண்டுமானாலும்

சென்று வரலாம். அனுமதிப்பார்கள். பார்ப்பதற்கு,

இரசிப்பதற்கு அழகாக இருக்கும். காசு கொடுத்தால், எப்படி சென்றடைய வேண்டும் என்று தெரிந்தால் போதும்.

ஆனால் வீட்டிற்குத் திரும்பிய பிறகு ஷவரில் குளிப்பது போன்றது தமிழ்ப்பெண் மண முடிப்பு. நிரந்தரமானது. அழுத்தம் அதிகமாக, வேகமாகத் தண்ணீர் வராது. அவ்வப்போது ரிப்பேரும் ஆகலாம்.

நயாகராவின் மேல் காதல்; ஆனால், ஷவரிடம் அனுதினம் உபயேபாகம். இருந்தாலும், வீட்டிலேயே நயாகரா இருந்தால் வேண்டாம் என்று சொல்லும் உன்னை ஆச்சரியமாகப் பார்க்கிறேன்.

நாங்கள் காட்சிப்பொருள் அல்ல. உன்னுடைய அம்மாவுக்கோ, அக்காவுக்கோ கொடுக்கும் மரியாதையை எங்களுக்கும் கொடு. நாங்கள் வளர்ந்த விதம் வேறு, கொடுக்கப் பட்ட சுதந்திரம் அதிகம் என்பதால், நாங்கள் உங்கள் ஊர் பெண்களை விட கீழ்த்தரமானவர்கள் இல்லை.

அடுத்த முறை விமானத்தில் இருந்து இறங்கும் போதோ, கோடை விருந்தின் பீயர் கெ·க்கின் அருகிலோ, கல்லூரி நூலகத்தின் உணவகத்திலேயோ எங்களைப் பார்த்தால், எங்களோடு அறிமுகப் ப்டுத்திக் கொண்டால், எங்களின் ஆர்வங்களையும், அழகையும், நிறத்தை மட்டும் வைத்து பார்க்காதே.

உன்னுடைய இனம் திருந்தும் என்னும் நம்பிக்கையுடன்,

(இன்னாளிலும்) உனது காதலி.