சிறுவர் புத்தகங்கள் – ஆர். பொன்னம்மாள் (7)


இராஜேஷ்: மாணிக்கமாக மாறிய சிறுவன் பெற்றப் படிப்பினையை சுவாரஸ்யம் குறையாமல் சொன்ன நாவல். வானதி வெளியீடு.

கனிந்த மனம்: சிறுவர் நாடக நூல். வானதி வெளியீடு.

பொன் மனம்: 1997-இல் குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய நாடகப் போட்டியில் ஏவிஎம் வெள்ளிப் பதக்கம் பெற்ற நாடக நூல். வானதி வெளியீடு. அருணை உதாரணச் சிறுவனாகக் கொண்டாடும் நாடகம்.

திருந்திய நெஞ்சம்: சிறுகதைத் தொகுப்பு. எல்லாமே சிறுவர்களுக்கான அற்புதமான கதைகள். ‘இப்ப என்ன அவசரம்’ என்று சோம்பேறித் தனத்தை வளர்த்துக் கொண்டு உல்லாசமாக இருக்கும் சிறுவன் திறமையிருந்தும், விழலுக்கு இறைத்த நீராய் பாராட்டுப் பெறாமல் நிற்பது, கானாப் பாடல் போல் சிறுவர் மனதில் பதியும் (வானதி வெளியீடு).

பாட்டி சொன்ன கதைகள் 1,2,3: 1980-ல் முதல் பாகம் வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப் பட்டது. நான்கு பாகத்தையும் எழுதிக் கொடுத்தாலே வெளியிடுவேன் என்றார் திரு. திருநாவுக்கரசு அவர்கள். சவாலுடன் முடித்துக் கொடுத்தார் என் அன்னை. 1992-ல் இரண்டாம் பாகமும், 1993-ல் மூன்றாம் பாகமும் வெளி வந்தது. நான்காம் பாகம் இன்னும் வெளிவர வில்லை. பழங்காலக் கதைகள். அத்தனையும் நவரத்தினங்கள். கையிலெடுத்தால் பெரியவர்களுக்கும் கீழே வைக்க மனம் வராது.

‘சொக்கா… சொக்கா… சோறுண்டா?’, இருட்டில் ஏன் சாப்பிடக் கூடாது என்பதை விளக்குகிறது. குணமித்திரன் கதை முழக் கயிறாலும் பொருள் ஈட்டலாம் என்று சொல்கிறது. ‘வர வர மாமியார் தேய்ந்து கழுதை போலானாள்’ என்பதை இப்போதும் படித்து வயிற்றைப் பிடித்துக் கொள்ளலாம். அஷ்டலட்சுமிகளையும் வீட்டுக்குள் வரவழைக்கும் தந்திரம் சொல்லப் பட்டிருக்கிறது.

(சிறு குறிப்பு வளரும்)

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.