ஒரு படக்கதை – கிறுக்கல்கள் : ரா பார்த்திபன்


தமிழகத்தை சேர்ந்த பலரும் புத்தககங்கள்… மன்னிக்க…. இலக்கியங்களையும், ஆரோக்கியமான விஷயங்களையும் படிப்பதில்லை என்பது சிலர் சொல்லும் குற்றசாட்டு. இன்றைய தமிழ் சினிமா செல்லும் திரை ரசிகர்கள்தான் இவர்களின் முக்கிய இலக்கு. புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வாஸ்துவும் சமையல் புத்தகங்களும் வாங்குபவர்களை நோக்கியும் இலக்கியவாதிகள் பலர் இவ்வாறு சொல்லி வருகின்றனர்.

இவர்களில் சிலராவது ‘கிறுக்கல்கள்’ போன்று ஒரு புத்தகத்தையாவது வெளியிட வேண்டும். பார்த்திபன் என்னும் பெயருக்காக பல பிரதிகள் விற்றாலும், புரட்டிப் பார்ப்பதற்கு அனைவருக்கும் ஆர்வத்தைக் கொடுக்கும் புத்தகம். தமிழ் தெரிந்தும் அதிகம் வாசிக்காத கல்லூரி நண்பர் வீட்டுக்கு வந்திருந்தார். இருக்கும் ஒரு சில தமிழ் புத்தகங்களை பராக்குப் பார்த்து வந்தவர், மேற்கண்டதைக் கண்டவுடன் நின்றார். ‘என்னப்பா இது? ஷேப்பே வித்தியாசமா இருக்கு’ என்று எடுத்தார்.

என்னுடைய வீட்டில் இருந்து இதுவரை விசி++, சி#, ஜாவா என்று தொழிற்நுட்பப் புத்தகங்களையே கடன் வாங்கிச் சென்றவர், கடனாகக் கேட்ட முதல் புத்தகம் ‘கிறுக்கல்கள்’. நல்ல வடிவமைப்புக் கொண்டிருந்தால், உள்ளிருக்கும் விஷய செறிவுகளைப் பின்னுக்குத் தள்ளிக் கொள்ளலாம் என்பதற்கு நல்ல உதாரணம். தமிழை உலக மயமாக்கப் போகிறோம், செம்மொழி என அறிவிக்க வேண்டும் என்பவர்களுக்கும் இது போன்ற வெளியீடுகள் வரப் பிரசாதம்.

ரயிலில் ஒரு நாள் புரட்டிக் கொண்டிருக்கையில், பக்கத்து இருக்கை அமெரிக்கர் கூடத் திரும்பி பார்த்து, படம் பார்த்து விட்டுத் தருவதாகக் கேட்கிறார். அவருக்கு பலான புத்தகமோ என்னும் சபலமோ என்றறியேன். ஆனால், முழுவதும் ஒரு சுற்று திருப்பி விட்டுக் கொடுக்கும்போது ‘அற்புதமான ஆக்கம்’ என்று நன்றி சொல்லி வியந்தார். இது பார்த்திபனுக்கு எகத்தாளமா அல்லது பாராட்டு முத்திரையா என்று எனக்குத் தெரியாது.

கறுப்புப் புள்ளியையும் பாரதியின் அவுட்லைன்னையும் வைத்து மேட்டர் எழுதுவது; ‘ஹே ராம்’ படம் குறித்த பதிவுகள், சினிமாவுக்கு வந்த கதை, ‘அடுத்த வினாடி’ ரூமி மாதிரி சுய முன்னேற்றக் கட்டுரைகள்; நிறைய காதல் புலம்பல்கள், நிறுத்தல் குறிகளை வைத்து வார்த்தை அடுக்குகள் எனக் கண்ணைப் பறிக்கும் இணையத்தளம் போல் உள்ளது இந்தப் புத்தகம். அனைத்துக்கும் சுவையான பார்த்திபனின் பின்னூட்டங்கள், குறிப்புகள் என சுய அலசலாக வருகிறது மேலும் மெருகு சேர்க்கிறது.

பார்க்க வேண்டிய புத்தகம்.

புத்தகத்தில் இருந்து

“கிறுக்கலைக் கூட கவிதையென்று சொல்லிக் கொள்ளும் ஆசை… அதைப் புத்தகமாகப் பதிவு செய்து கொள்ளும் ஆசை… விமர்சகர்கள் கூட, ‘போனாப் போகுது’ என்று பாராட்டி விட மாட்டார்களா என்ற ஆசை…

இப்படிப்பட்ட அல்ப ஆசைகள் அறிவிப்பது என்னவென்றால், நம்மை இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பது புவியீர்ப்பு அல்ல…

ஆசை…ஆசை…ஆசை…ஆசை…!”

நன்றி: தமிழோவியம்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.