முதற் பிரசுரம் – ஆர். பொன்னம்மாள் (3)


அம்மாவின் தோழிகளை விரல் விட்டு எண்ண ஆரம்பித்தால் ஒரு கை அதிகம். முக்கியமானவள் ருக்மிணி. பதினாறு வயது; ‘எழுது’ என்று (நம் மரத்தடி தோழர்களைப் போல்) தூண்டினாள். ‘நானா? முடியுமா? அச்சில் வருமா?’ என்ற சந்தேகங்களைத் துடைத்தவள் தோழி. எழுதினாள். தோழி சொல்படி ஸ்டாம்பு வைத்து! முக்கால்வாசி திரும்பிக் கூட வரவில்லை.

கன்னடியன் வாய்க்காலில் குளிக்கப் பிடிக்காமல் ஒரு மைல் தூரமிருக்கும் தாமிர பரணிக்கு நீராடச் செல்வார்கள். அதுவும் எப்படி? படித்துறையில் அல்ல! தாண்டித் தாண்டி நடுப் பாறைக்கு. அவள் விரும்பிய தனிமை அங்குதான் கிடைத்தது. தேகம் சிலிர்க்கும் மட்டும் நீரிலேயே அமிழ்ந்து கிடப்பாள். மணிமுத்தாறு நதியிலும் அப்படித்தான். நீச்சலடித்தால் கூட தண்ணீரின் அலப்பல் தன் கற்பனையை பாதிக்கும் என்று தோழியிடம் நீச்சலைக் கற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள்.

கரையிலிருந்த செம்பருத்தி, தங்க அரளி, கொன்றை, நந்தியா வட்டை போன்ற மலர்களைத் தொடுத்து மாலையாகக் கட்டி ‘லஷ்மீபதி’க்குச் சாற்றுவதே அவளின் இறைத் தொண்டு.

இரண்டரை ஆண்டுகளோடு கிராம வாழ்க்கை முடிந்து மதுரை அருகில் நத்தம் என்கிற ஊருக்குக் குடித்தனம் பெயர்ந்தது.

அங்கேயும் அவளுடைய இலக்கியப் பசிக்கு உணவு கிடைத்தது. ‘அருணாசலக் கவிராயரின்’ ராம நாடகக் கீர்த்தனைகளை இரண்டே நாட்களில் பாடித் தொண்டை கட்டிக் கொண்டது. அங்கே, ஜகதலப் பிரதாபன், மதன காம ராஜனெல்லாம் கிடைக்கப் பெற்றாள்.

கரு.முத்து. தியாகராஜன் செட்டியார் நடித்தி வந்த ‘தமிழ்நாடு’ ஞாயிறு மலரில் ஒரு சிறுகதைப் போட்டி அறிவித்திருந்தது. ‘இரட்டைப் பரிசு’ என்று ஒரு கதை எழுதி அனுப்பினாள். திடீரென்று ஒரு மாலை… ‘போஸ்ட்’ என்று அவள் மடியில் விழுந்தது ‘தமிழ்நாடி’ன் ஞாயிறு மலர். அதில் ‘இரட்டைப் பரிசு’ பிரசுத்துக்க்குரிய கதையாக வெளிவந்திருந்தது. அவளுக்கு இறக்கை முளைத்து விட்டதா என்று தெரியவில்லை. பறந்தாள். அதன்பின், மாதமிருமுறை அவளது கதைகள் பிரசுரமாயின. ‘அன்பு மனம்’, வழிகாட்டி, இன்ப ரகசியம், விதி சிரித்தது, கண் திறந்தது, சந்தேகப் பேய் இவைகள் குறிப்பிடத் தக்கவை. வாசகர்களின் கடிதங்களையும் பெற்றவை.

முதல் கதைக்குக் கிடைத்த சன்மானம் ஐந்து ரூபாய். அப்புறம் ஒவ்வொரு கதைக்கும் பத்து ரூபாய். ‘தமிழ்நாடு’ நாளிதழின் ஆசிரியரான திரு. எம். எஸ். பி. சண்முகம் பாராட்டி எழுதிய கடிதங்கள் குடும்பத்தில் புயலை எழுப்பியது.

(சிறு குறிப்பு வளரும்)

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.