யாத்ரா மார்க்கம் – புதுமைப்பித்தன் ==============…


யாத்ரா மார்க்கம் – புதுமைப்பித்தன்

====================================

சமீபத்தில் ‘பம்பாய் கிரானிக்கல்’ பத்திரிகையைப் புரட்டிக்

கொண்டிருந்தபொழுது, பிரிட்டிஷ் நாவலாசிரியர்களைப் பற்றி

அமெரிக்க பிரசுரகர்த்தர் சொல்லிய அபிப்பிராயம் என் கவனத்தை

இழுத்தது. அந்த பிரசுரகர்த்தர் பெயர் பெரிஸ் கிரீன்ஸ்லெட்.

அவர் சொல்லுகிறார்:

உங்கள் நாவலாசிரியர்கள் (பிரிட்டிஷ்) திறமைசாலிகள்.

தங்கள் இஷ்டப்படிக்கெல்லாம் பேனாவை வளையவைக்கும்

சக்தி பெற்றவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்

அவர்கள் புல் மேயும் ஆசாமிகளாயிருக்கிறார்கள்; அடிப்படையான

விஷயங்களைப் பற்றி சிந்திக்கிறதில்லை.

இதற்கு இவர் கூறும் காரணம் விசித்திரமாக இருக்கிறது; ஆனாலும்

அது அவ்வளவும் உண்மை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அவர்

கூறுவதாவது:

பிரிட்டிஷ் விமர்சகர்கள்தான் இந்த நிலைக்குக் காரணம். அவர்கள்

வெகுவிரைவில் திருப்தியடைந்து புகழ ஆரம்பித்து விடுகின்றனர்.

பிரிட்டிஷ் விமர்சகர்கள் உயர்வு நவிர்ச்சிகளையிட்டு அபிப்பிராயம்

கொடுத்த சில நாவல்களைக் கண்ணுற்றேன். அவற்றை என்னால்

வாசிக்க முடியவில்லை.

இதைப் பற்றி படித்தவுடன் நமது புத்தகங்களைப் பற்றி வெளிவரும்

‘மதிப்புரைகள்’ என் நினைவிற்கு வந்தன. தமிழில் வாசிக்கும் பழக்கம்

மிகவும் குறைவு. அதிலும் மதிப்புரை வாசிக்கும் பழக்கம், அம்மதிப்புரைகளில்

குறிப்பிட்ட புத்தக ஆசிரிய – பிரசுரகர்த்தர்களைத் தவிர வேறு யாரும்

கிடையாது என்றால், உயர்வு நவிற்சியில்லா மதிப்புரையின் தூண்டுதலால்

புத்தகம் வாங்கும் பழக்கம் எவ்வளவு அளவில் இருக்கிறது என்பதை

நான் திட்டமாகக் கூற முடியாது. ஆனால் ஒன்று. அவற்றின் உதவியை

நாடுகிறவர்களை ‘நமது’ மதிப்புரைகள் தவறான வழியில் செலுத்தும்

‘ஓர் மகத்தான’ தொண்டு புரிந்து வருகின்றன.

நான் இவ்விஷயத்தைப் பற்றி எனது நண்பர் ஒருவரிடம் குறிப்பிட்டேன்.

‘புஸ்தகப் பிரசுரமே சிசுப் பருவத்தில் இருந்து வருகிறது; நாம்

கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கவேண்டும்’ என்றார்.

(கட்டுரை வெட்டப்பட்டுள்ளது…)

புதுமைப்பித்தன்

மணிக்கொடி, 15 ஆகஸ்டு 1937

மணிக்கொடியில் கருத்துப் பரிமாற்றத்துக்கான பகுதி ‘யாத்ரா மார்க்கம்’.

அதில் புதுமைப்பித்தன் எழுதிய குறிப்புகள் இவை.

நன்றி: அன்னை இட்ட தீ (புதுமைப்பித்தனின் அச்சிடப்படாத/தொகுக்கப்

படாத படைப்புகள்)

வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.