Tag Archives: Natarajan

Want to disclose assets: To reveal or not? Should Indian judges be above the law?

முந்தைய பதிவு: Language of Lawyers – Tamil Nadu Courts Official Talk « தமிழ்நாட்டில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள்

நீதித்துறையில் சீர்திருத்தங்கள்

நீதிபதிகள் சொத்து மசோதாவுக்கு மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு

மாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சர் எம். வீரப்ப மொய்லி, நீதிபதிகள் தங்களது சொத்து விவரங்களை வெளியிடும் சட்ட மசோதா 2009-ஐ கொண்டு வந்தார். ஆனால் இந்த மசோதாவில் பிரிவு 6-ல் குறிப்பிட்டுள்ள விவரத்துக்கு பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

அதாவது உச்ச நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் அந்த விவரம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி ஆளும் காங்கிரஸ் உறுப்பினர்களிடமும் இந்த மசோதா தாக்கலுக்கு போதிய ஆதரவு கிடைக்காது என்பதை உணர்ந்த மொய்லி, இந்த மசோதா தாக்கல் செய்வதை ஒத்திவைப்பதாகக் கூறினார்.

245 பேரடங்கிய மாநிலங்களவையில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 79 ஆகும்.

“தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது சொத்து விவரத்தை தாக்கல் செய்வது கட்டாயமாக உள்ளது. அவர் தாக்கல் செய்த விவரம் பின்னர் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இதே சட்ட விதிமுறைதான் நீதிபதிகளுக்கும் பொருந்தும். எனவே நீதிபதிகள் தாக்கல் செய்யும் சொத்து விவரத்தை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட முடியாது என்ற 6-வது பிரிவை நீக்க வேண்டும்,” என்று பாஜக தலைவர் அருண் ஜேட்லி கூறினார்.

நீதிபதிகளின் சொத்து விவரத்தை வெளியிட இதுவரை தனியான சட்டம் கொண்டுவரப்படவில்லை. தற்போது நீதித்துறையில் பரவலான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. அதைத் தடுக்கும் வகையில் இந்த மசோதா கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. – மொய்லி.

நீதித்துறையில் ஊழல் சார்ந்த புகார்கள் குறித்து மிகக் குறைந்த எண்ணிக்கையிலான புகார்களே பதிவாகியுள்ளன. தற்போது ஒரே ஒரு வழக்குதான் நிலுவையில் உள்ளது. இதை விசாரிக்க மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி ஒரு தனி குழுவை நியமித்துள்ளார் என்று மொய்லி குறிப்பிட்டார்.

“தகவல் அறியும் உரிமை சட்டத்தில் (ஆர்டிஐ) உள்ள சாதக அம்சங்களுக்கு எதிரானதாக இந்த மசோதாவின் 6-வது பிரிவு உள்ளது,” என்று காங்கிரஸ் உறுப்பினர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார்.

“நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாடுகளை சீர்குலைக்கும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் நீதிபதிகளை நிர்பந்திக்க வழி ஏற்படும். இதன் மூலம் நீதித்துறை ஆதாயம் எதிர்பார்த்து செயல்படுவதைப் போன்ற தோற்றம் உருவாகும்,” என்று பிரபல வழக்கறிஞர் ராம் ஜேத் மலானி கூறினார்.

“சட்டத்துக்கு முன்பு அனைவரும் சமம். சட்டத்திலிருந்து எவருக்குமே விதிவிலக்கு கிடையாது. அந்த வகையில் இந்த மசோதாவை ஏற்கவே முடியாது,” என்று இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி. ராஜா கூறினார்.

Supreme-Court-Pending-lawsuits-US-America-comparison-vacation-holidays-numbers


சீர்பெற்று இயங்குமா நீதித்துறை?

உ . ரா. வரதராசன்

15-வது மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் அறிக்கையில் நீதித்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதி இடம்பெற்றிருந்தது. இதர கட்சிகளும்கூட இந்தப் பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தத் தவறவில்லை. மன்மோகன் சிங் தலைமையிலான தற்போதைய அரசு பதவியேற்ற பின்னர், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் கூட்டுக் கூட்டத்தைத் துவக்கி வைத்து உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், ஆறு மாதங்களில் நீதித்துறை சீர்திருத்தத்திற்கான திசை வழி தீர்மானிக்கப்பட்டு ஒரு காலக்கெடுவுக்கு உள்பட்டு அது செயல்படுத்தப்படும் என்று ஒரு திட்டவட்டமான முடிவையும் அறிவித்திருந்தார். மத்திய அரசின் சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி அண்மையில், இது தொடர்பாக அரசு விரைவில் முடிவெடுத்துச் செயல்படும் என்றும், இதற்கான சட்டமுன் வடிவுகள் அரசின் பரிசீலனையில் உள்ளன என்றும் பேசி வருகிறார்.

இது “சீர்திருத்தங்களின் காலம்’. எனவே நீதித்துறையையும் ஒரு சீர்திருத்தச் செயல்திட்டத்தின் கீழ் உட்படுத்துவது தவிர்க்க இயலாதது. ஆனால்,

  • இந்த சீர்திருத்தங்களின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்?
  • இவை எதை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும்?

என்ற கேள்விகள் ஆட்சியாளர்கள் மற்றும் நீதித்துறையினர் முன் உள்ளனவா என்பது சந்தேகமாகவே உள்ளது.

நீதித்துறை தொடர்பான அண்மைத் தகவல் ஒன்று நம்மை அதிர்ச்சியில் உறைய வைப்பதாக உள்ளது. இந்திய நாட்டின் மக்கள்தொகையில் 91 சதவிகிதம் பேர் நீதிமன்றங்களை அணுகவே தயக்கம் காட்டுகிறார்கள் என்ற செய்திதான் அது. கூடவே இந்தியத் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் நமது நாட்டின் நீதிமன்றங்களில் மூன்றரை கோடி வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன என்றும், புதிதாகப் பதிவாகிற வழக்குகள் ஆண்டொன்றுக்கு 28 சதவிகிதம் என்ற அளவில் அதிகரித்து வருகின்றன என்றும் கூறியுள்ளார்.

9 சதவிகித மக்கள் மட்டுமே நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்ட முற்படுகிற கட்டத்திலேயே இந்த நிலைமை என்றால், இன்னும் கூடுதலான மக்கள் பிரிவினர் நீதிமன்றங்களை அணுக முற்பட்டால், நிலைமை என்னவாகும் என்ற மருட்சியும் ஏற்படுகிறது.
ஒரு ஜனநாயக அமைப்பில் ஆட்சியாளர்கள், நிர்வாக இயந்திரம், நீதித்துறை ஆகிய அனைத்துமே மக்களின் நலன் கருதியே இயங்கக் கடமைப்பட்டவை என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். நம் நாட்டின் அரசியல் சட்டம் அதன் முகவுரையிலேயே சமூக – பொருளாதார – அரசியல் நீதி உத்தரவாதம் செய்யப்படும் என்ற வாக்குறுதியை மக்களுக்கு நல்கியிருக்கிறது. 18 வயதை எட்டிய அனைவருக்கும் வாக்குரிமை என்ற அரசியல் உரிமை மட்டுமே மக்களுக்கு அரசியல் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள நீதியை வழங்குவதாகிவிடாது. ஏற்றத்தாழ்வுகளும், சமூக அவலங்களும், ஒடுக்குமுறையும், நீடித்து நிலவுகின்ற இந்திய சமூகம் உண்மையான நீதியை மக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

  • இந்தப் பின்புலத்தில் நீதித்துறை இன்று எங்கே நிற்கிறது?
  • எப்படிச் செயல்படுகிறது?
  • யாருக்காக இயங்குகிறது?

என்ற கேள்விகளுக்கான பதிலினைத் தேடினால், அது ஏமாற்றம் அளிப்பதாகவே அமைகிறது. “தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி’ என்ற சொல்லலங்காரம் நமது காதுகளில் ரீங்காரமிட்டாலும், இன்றைய நீதித்துறை அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதியைக் காலத்தே வழங்குகிற நிலையில் இல்லை. நீதிமன்றங்களை நாடி வழக்குத் தொடருவது என்பது பெருஞ்செலவுகளை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. லவச சட்ட உதவி என்கிற ஏற்பாடு ஏட்டளவில் நிற்கிறதே தவிர, மக்கள் பயன்பாட்டுக்கு உதவுவதாக இல்லை.

நீதித்துறையின் பல்வேறு அடுக்குகள், சிக்கல்கள் மிகுந்த நடைமுறைகள், வழக்குகள் கையாளப்படுகிற விதம் இவையாவுமே சாதாரண மக்களுக்கும், நீதித்துறைக்கும் இடையே ஓர் ஆழமான அகழியைத் தோற்றுவித்துள்ளன.

பொதுவாகவே சுதந்திர இந்தியாவின் அரசாங்கச் செயல்பாடுகள் பிரிட்டிஷ் காலனியாதிக்கக் காலத்து மரபுகளையும், பாணிகளையும் அடியொற்றி அமைந்துள்ளன. அரசு நிர்வாகம், நாடாளுமன்றம், நீதிமன்றங்கள் போன்ற எல்லாவற்றிலும் இதைக் காண முடியும். நமது நாட்டுச் சட்டங்களும், நீதிமன்ற நிர்வாகமும் இத்தகைய பாரம்பரியத்தைப் பெற்றிருப்பதானேலேயே அவற்றுக்கும், சாதாரண குடிமக்களுக்கும் இடையே இந்த இடைவெளி ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் மற்ற அங்கங்களைப் போலவே, நீதித்துறையிலும் காலாவதியாகிவிட்ட பழைய நடைமுறைகளைத் தொலைத்துக்கட்டி, இன்றைய காலச்சூழலுக்கேற்ப, சாமானியர்களும் எளிதில் அணுகக்கூடிய முறையில், வெளிப்படையான நடைமுறை மாற்றங்கள் கொண்டு வரப்படுவது இன்றைய தேவை.

நமது நாட்டின் சட்டங்கள் எளிமையாக்கப்படுவதும், அவற்றைச் செயல்படுத்தும் காவல்துறை மற்றும் அரசு நிர்வாகப் பிரிவுகளின் நடவடிக்கைகளில் உரிய மாற்றங்களைக் கொணர்வதும் இன்றியமையாத முதல்படியாகும். இன்றைய சட்டங்கள் மக்களுக்காக உருவாக்கப்பட்டனவா அல்லது வழக்கறிஞர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டனவா என்ற ஐயப்பாடே எழுகிறது. இதைக் களைவது அவசியமாகும்.

  • நீதித்துறையில் இன்று நிலவுகிற வழக்குகள் தேக்கம்,
  • காலதாமதம் ஆகியவற்றை
  • எதிர்கொள்ள ஒரு தொலைநோக்குப் பார்வையுடனான திட்டமிடல்,
  • நீதிமன்றக் கிளைகள்,
  • நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது,
  • வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தும் வகையிலான ஏற்பாடுகளை மேம்படுத்துதல்,
  • கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவது புதிய தொழில்நுணுக்க வளர்ச்சிகளை நீதிமன்ற நிர்வாகத்திற்குப் பொருத்தமான விதத்தில் பயன்படுத்துவது

ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நீதித்துறை சீர்திருத்தம் பற்றிய விவாதத்தில் முக்கிய இடம் பெறுவது, நீதிபதிகள் நியமனம் மற்றும் அவர்களது பொறுப்புணர்வு, நேர்மை, கடமையாற்றிடும் பண்புகள் சம்பந்தப்பட்டவையாகும். நீதித்துறையின் ஆரம்ப அடுக்குகளுக்கு நியமன ஏற்பாடு என்பது மாநில அளவிலான பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக நடைபெறுகிறது. ஆனால் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகிய உயரடுக்கு நீதிபதிகளின் நியமனம் இன்று அந்தந்த நீதிமன்றங்களின் நீதிபதிகள் அடங்கிய குழுவின் பரிந்துரை அடிப்படையிலேயே அமைவதற்கான ஒரு நடைமுறை, உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய கிளையின் ஒரு தீர்ப்பின் மூலம் உருவாக்கிவிட்டது.

இன்று பதவியில் இருப்பவர்களே, அந்தப் பதவிகளுக்கு அடுத்து வருபவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பார்கள் என்பது முறையான ஏற்பாடு ஆகுமா என்ற கேள்வி எழுவது இயல்பு.

அந்தக் குறிப்பிட்ட தீர்ப்புக்கூட 5க்கு 4 என்ற முறையில், நீதிபதிகள் கருத்து முரண்பட்டு ஒரு நூலிழைப் பெரும்பான்மையில் எடுக்கப்பட்ட முடிவாகும். “உலகமயம்’ பேசப்படும் இந்தக் காலக்கட்டத்தில் நீதிபதிகள் நியமனம் குறித்த இத்தகைய நடைமுறை வேறு பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள மறுப்பது ஏன் என்பது புரிந்துகொள்ள முடிவதில்லை.

  • நீதிபதிகள் நியமனம்,
  • அவர்களின் இடமாற்றம்,
  • பணிநீக்கம்,
  • பொறுப்புணர்வுடனான செயல்பாடு

குறித்த முடிவுகளை மேற்கொள்ள தேசிய நீதித்துறை ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்; அதன் உறுப்பினர்களாக நீதித்துறை, நிர்வாகத்துறை, நாடாளுமன்றம், வழக்கறிஞர் சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை உடனடியாகப் பரிசீலிக்கப்பட்டு, உரிய அரசியல் சட்டத் திருத்தங்கள் மூலமாகச் செயல்படுத்த வேண்டியது மிக மிக இன்றியமையாததாகும்.

இன்றைய சமூகச் சூழலில் பல்வேறு நிலைகளில் நிலவுகிற ஊழல் நீதித்துறையையும் விட்டு வைக்கவில்லை என்பதற்கான உதாரணங்கள் பல உண்டு. நீதித்துறையை ஊழலுக்கு அப்பாற்பட்டதாகச் செயல்பட வைப்பது ஒரு சவாலாகவே நிற்கிறது. ஊழல், அரசியல் தலையீடுகள், செல்வாக்கு மிக்க வழக்கறிஞர்களின் குறுக்கீடுகள் போன்றவை பரவலாக இல்லாவிட்டாலும், நீதித்துறையின் மாண்பைக் குலைப்பதாகவும், அதன் மீதான மக்களின் நம்பகத் தன்மையை ஊனப்படுத்துவதாகவும் அமைவது கவலையோடு பரிசீலிக்க வேண்டிய ஒன்று.

உச்ச நீதிமன்றம் நீதிபதிகளுக்கான ஒழுக்கக் கோட்பாடு ஒன்றைத் தானாகவே வரையறுத்துக் கொண்டுள்ளது. இது ஒரு நல்ல முன்முயற்சி என்றபோதிலும், இதற்கு சட்ட அடிப்படை ஏதுமில்லை.

மேலும் இதன்கீழ் நீதிபதிகள் அவர்களது சொத்து விவரங்களைத் தலைமை நீதிபதிக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும், அது ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒழுக்கக் கோட்பாடுகளை மீறுகிற நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் தலைமை நீதிபதியே ஒரு நடைமுறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் அதில் இடம்பெற்றுள்ளது. இதே உச்ச நீதிமன்றம்தான் தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டிய சொத்து விவரப் படிவத்தை வரையறுத்துத் தந்துள்ளது. அது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்ற நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.

இப்போது மத்திய அரசு பரிசீலிப்பதாகச் சொல்லப்படும் சட்டமுன்வடிவிலேயும் நீதிபதிகள் சொத்துக் கணக்கைக் காட்டுவது நீதிமன்ற நிர்வாகத்தின் உள் – ஏற்பாடு என்ற அளவோடு நிறுத்திக் கொள்ளப்படுவதற்கே வகை செய்யப்படுவதாகப் பேசப்படுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டமும் நீதித்துறைக்குப் பொருந்தாது என்று வரம்பு கட்டி நிறுத்தப்பட்டுள்ளது.

ஆட்சியாளர்கள், அரசு நிர்வாகத்தின் அனைத்து அடுக்குகள், நாடாளுமன்றம் – சட்டமன்றம் உள்ளிட்ட அனைத்தையும் தன் முடிவுக்கு உள்ளடக்குகிற எல்லையற்ற அதிகாரத்தைச் செலுத்துகிற நீதித்துறை, அதன் செயல்பாடுகள் குறித்து யாருக்கும் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பை ஏற்க வேண்டியதில்லை என்ற இன்றைய நிலைமை நீடிப்பது ஆரோக்கியமானதல்ல.

நீதிமன்ற அவமதிப்பு என்பது ஒரு பெரும் குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்றங்கள் நியாயமான விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையாக இருக்க முடியாது.

“நீதித்துறையை அவதூறு செய்வது, நீதிமன்றங்களின் மதிப்பைக் குலைக்கும் வகையில் கருத்துத் தெரிவிப்பது’ ஆகியவை நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகக் கருதப்படும் என்று தற்போதுள்ள சட்டம் திருத்தப்படுவதும் அவசியமாகும்.

மாநில ஆட்சி மொழிகள் உயர் நீதிமன்ற நிர்வாக மொழியாக அமைய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் கிளை தென்மாநிலம் ஒன்றில் அமைய வேண்டும் என்ற கோரிக்கைகள் இன்றளவும் ஏற்கப்படாத நிலை தொடருவது, பாமர மக்களுக்குப் பயன்படும்விதமாக நீதித்துறையின் செயல்பாடு அமைவதற்கு இடந்தராது. நீதித்துறை சீர்பெற்று விளங்க இந்த அம்சங்களும் கவனத்தோடு பரிசீலிக்கப்பட வேண்டும்.

Pending-court-cases-Delhi-Civil-criminal-law-order-judges-justice


நல்லது நடந்திருக்கிறது!

தினமணி தலையங்கம்

நீதிபதிகளின் சொத்துக் கணக்குகளை அறிவிக்க வகைசெய்யும் மசோதா, மாநிலங்களவையின் கடுமையான எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் அரசால் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து ஒருசில மாற்றங்களுடன் இந்த மசோதா அவையின் ஒப்புதலுக்கு வைக்கப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்திருக்கிறார்.

அறிமுகக் கட்டத்திலேயே முடக்கப்பட்டுவிட்டிருக்கும் இந்த மசோதாவில் காணப்பட்ட சில பிரிவுகள் எதிர்க்கட்சியினர் மட்டுமன்றி ஆளும் கூட்டணித் தரப்பில்கூட சிலருக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்பதுதான் உண்மை. மத்திய சட்ட அமைச்சருக்கேகூட அந்த மசோதாவில் முழுத் திருப்தி இருக்க வழியில்லை என்பது அவரது முந்தைய சில கருத்துகளிலிருந்து யூகிக்க முடிகிறது.

இப்போதைய நிலையில் உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்குகளை தலைமை நீதிபதியிடம் தெரிவிப்பதாகவும், அதைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் கருத்து. தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி நீதிபதிகளின் சொத்துக் கணக்கை பொதுமக்கள் கோர முடியாது என்பதில் நீதிபதிகள் பிடிவாதம் பிடிக்கிறார்கள். இந்த நிலையில், நீதிபதிகளையும் ஒரு சில அடிப்படை விஷயங்களில் வெளிப்படைத்தன்மை உடையவர்களாக்குவதுதான் இந்த மசோதாவின் உள்நோக்கம் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், நீதிபதிகள் சொத்துக் கணக்கு அறிவிப்பு மசோதா 2009-ன்படி, உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்கை சம்பந்தப்பட்ட தலைமை நீதிபதியிடம் ஆண்டுதோறும் தாக்கல் செய்தாக வேண்டும் என்கிற சட்ட நிர்பந்தம் ஏற்படுகிறது. அதேநேரத்தில், இந்த மசோதாவின் பிரிவு எண் 6-ன் படி, நீதிபதிகள் தாக்கல் செய்த சொத்து விவரங்களை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது இல்லை என்றும் காணப்படுகிறது.

தலைமை நீதிபதியிடம் சொத்து விவரம் தரப்பட்டு, அது வெளியில் யாருக்கும் தெரிவிக்கப்படாமல் இருப்பதற்கு சட்டமும் மசோதாவும் எதற்கு என்பதுதான் கேள்வி.

சமீபகாலமாக, பல நீதிபதிகளின் மீது பகிரங்கமாக ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. தங்களது வருமானத்துக்கு மீறிய சொத்துகளுக்குச் சொந்தக்காரர்களாகப் பல நீதிபதிகள் இருக்கின்றனர் என்று பரவலாகவே ஒரு கருத்து நிலவுகிறது.

இந்த நிலையில், ஆண்டுதோறும் நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்கை வெளியிட்டு, அது பொதுமக்கள் பார்வைக்கு உள்படுத்தப்படுமானால், தவறுகள் தடுக்கப்படாவிட்டாலும், குறையுமே என்கிற எதிர்பார்ப்புத்தான், இப்படி ஒரு மசோதாவுக்கான அடிப்படை.

தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் தங்களது சொத்துக் கணக்கை வாக்காளர்களுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும், மக்களாட்சியில் அப்படிப்பட்ட வெளிப்படைத்தன்மை இருந்தால்தான் வாக்காளர்கள் தங்களது வேட்பாளர்களின் தகுதியை சீர்தூக்கி வாக்களிக்க முடியும் என்றும் தீர்ப்புகூறி, தேர்தலில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்தது நீதித்துறைதான்.

தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு என்ன சட்டமோ அதுதானே நீதித்துறைக்கும் இருக்க வேண்டும்? தனக்கொரு நீதி, அடுத்தவர்களுக்கு இன்னொரு நீதியென்று நீதித்துறையே சொல்வது நீதியாகுமா?

இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 19 (1) (அ)வின் படி ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் தகவல் பெறும் உரிமை தரப்பட்டிருக்கிறது. இதை உச்ச நீதிமன்றம் பலமுறை உறுதியும் செய்திருக்கிறது. இந்த நிலையில் துணிவாக, நீதித்துறையிலும் சில வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று அரசும், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் எதிர்பார்ப்பதில் என்ன தவறு?

இதனால் நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்படும் என்று கூறுவது வாதமல்ல, வறட்டுப் பிடிவாதம்.

இப்படி ஒரு சர்ச்சைக்கு வழிகோலியதே நீதித்துறைதான். நமது நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்குகளை மக்கள் பார்வைக்கு உள்படுத்தி, தாங்கள் லஞ்ச ஊழல் மற்றும் சொத்துக் குவிப்புக் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்திருக்க வேண்டாமா? எங்கள் சொத்துக் கணக்கை யாரும் கேள்வி கேட்கவோ, பரிசோதிக்கவோ கூடாது என்று நீதிபதிகள் அடம்பிடிப்பது, “அப்பன் குதிருக்குள் இல்லை’ என்கிற கதையாக இருக்குமோ என்கிற தேவையில்லாத சந்தேகத்தை அல்லவா கிளப்பி இருக்கிறது.

வெளிப்படைத் தன்மை என்பது மக்களாட்சியில் நீதித்துறை உள்பட ஆட்சியில் எல்லா பிரிவுகளுக்கும் இருந்தாக வேண்டும். நீதிபதிகளின் சொத்துக் கணக்கு அறிவிப்பு மசோதா 2009-லிருந்து 6-வது பிரிவு அகற்றப்பட்டு, மக்கள் மன்றத்தின் முன் நீதிபதிகளும் தங்களது நேர்மையை நிரூபிக்க சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

சமீபத்தில் சட்டக் கமிஷன் தலைவர் ஏ.ஆர். லெட்சுமணனின் புத்தக வெளியீட்டு விழாவில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறியிருப்பதைப்போல, “மக்களின் எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில் நீதித்துறை நடந்து கொள்ள வேண்டும்’!

HT-Domestic-Violence-Dowry-Laws-Reality-India-Women-Kids-Marriages


சொத்து விவரங்களை வெளியிட்டார் உயர் நீதிமன்ற நீதிபதி

நீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிடுவது தொடர்பான சர்ச்சை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்ற நீதிபதி கே.கண்ணன் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.

நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை தாங்களாகவே முன்வந்து வெளியிட வேண்டும் என நாடு முழுவதும் 600 நீதிபதிகளுக்கு வழக்கறிஞரும், சமூக நல ஊழியருமான பிரசாந்த் பூஷண் கடந்த ஜனவரியில் கடிதம் எழுதினார்.

அவரது கடிதத்துக்கு நீதிபதி கே.கண்ணன் மட்டுமே பதிலளித்துள்ளார். தனது பெயரில் ரூ.1.03 லட்சம் வங்கி இருப்பில் உள்ளதாகவும், ரூ.3.87 லட்சத்தை முதலீடு செய்துள்ளதாகவும், தனது மனைவி பெயரில் ரூ.10.59 லட்சம் வங்கி இருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இப் பிரச்னை குறித்து தனது இணையதளத்தில் நீதிபதி கண்ணன் தெரிவித்துள்ளதாவது:

நீதித் துறை சரியாக செயல்படுவதற்கு நீதித் துறைக்கு உள்ளேயே வழிவகை காண வேண்டும். நீதித் துறையில் ஊழலை ஒழிக்க தற்போதுள்ள முறைகள் பயன் அளிக்கவில்லை எனில், நீதிபதிகளை நியமிக்கவும், நீக்கவும் புதிய வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

நீதிபதிகள் சொத்து விவரங்களை அறிவிக்கலாம் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி: நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை அறிவிக்க விரும்பினால் யாரும் தடுக்கப் போவதில்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: நீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என சட்டம் இயற்றப்படவில்லை எனில், அது தொடர்பாக நீதிபதிகளிடையே கருத்தொற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும்.

நீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என 1997-ல் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா கொண்டு வந்த தீர்மானத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பின்பற்றி வருகின்றனர். சில உயர் நீதிமன்றங்கள் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றார்.

நீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிடத் தேவையில்லை என்ற தொனியில் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்திருந்ததாக கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி டி.வி.சைலேந்திர குமார் ஒரு கட்டுரையில் குற்றம்சாட்டியிருந்தார்.

அதற்கு மேற்கண்டவாறு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.


சட்டமெனும் இருட்டறை!

தினமணி தலையங்கம்

எப்போது ஒரு பிரச்னை ஆட்சியாளர்களை அலட்டுகிறதோ, சிந்திக்க வைக்கிறதோ அப்போதே அந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு விரைவிலேயே ஏற்படும் என்கிற நம்பிக்கையும் பிறக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் கலந்துகொண்ட முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் அனைவரும் ஒத்த கருத்தினராக இருந்து கவலை தெரிவித்த விஷயம் தீர்ப்புக்காகத் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் பற்றியது.

ஜூன் 30, 2009 நிலவரப்படி,

  • உச்ச நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 52,592.
  • பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் 40,17,596.
  • மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளோ ஏறத்தாழ மூன்று கோடி.

இந்தப் புள்ளிவிவரங்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே வழங்கி இருக்கிறார். பிரதமரும் தமது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த அளவுக்கு வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு என்ன காரணம்? உச்ச நீதிமன்றக் குறிப்புப்படி, தேங்கிக் கிடக்கும் இந்த வழக்குகளை விசாரித்து

  • ஒரு வருடத்தில் அத்தனை வழக்குகளையும் பைசல் செய்வதற்கு 1,500 உயர் நீதிமன்ற நீதிபதிகளும்,
  • 23,000 கீழமை நீதிமன்ற நீதிபதிகளும் தேவை.
  • உயர் நீதிமன்றங்களில் மட்டும் சுமார் 280 நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கிறார்கள்.

முதலில் நீதிபதிகளுக்கான பணி இடங்கள் முறையாகவும் விரைவாகவும் நிரப்பப்பட வேண்டும்.

இப்போது உடனடியாக ஓய்வுபெற்ற நீதிபதிகளை ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விசாரிக்க நியமிக்கலாமே.

சமீபத்தில், சென்னையில் சட்ட அமைச்சர் முன்னிலையில் “மெகா லோக் அதாலத்’ என்ற பெயரில் ஒரே நாளில் 15,650 வழக்குகளைப் பைசல் பண்ண முடிந்திருக்கிறதே?

இதேபோல போர்க்கால அடிப்படையில் எல்லா நீதிமன்றங்களிலும் வழக்குகள் பைசல் செய்யப்படுவதில் என்ன தடை இருக்க முடியும்?

தேவையில்லாமல், காலனி காலத்திய நீதிபதிகளின் பாணியில் அளவுக்கு அதிகமான விடுமுறைகளை இப்போதும் நமது நீதிபதிகள் அனுபவித்துக் கொண்டிருப்பதே தார்மிகக் குற்றம். இத்தனை வழக்குகள் தேங்கிக் கிடக்கும்போது, பொறுப்புணர்வுடன் விடுமுறைகளைக் குறைத்துக் கொண்டு வழக்குகளைப் பைசல் செய்ய வேண்டும் என்கிற அக்கறை நீதிபதிகளுக்கும், நமது வழக்கறிஞர்களுக்கும் ஏன் வருவதில்லை?

பண்டைக் காலங்களில் கிராமப் பஞ்சாயத்துகள் இருந்தன. ஊர்ப் பெரியவர்கள் கூடித் தீர்ப்பளித்தனர். அதே பாணியில் மத்திய அரசு கொண்டுவர இருக்கும் கிராம் நியாயாலய மசோதா வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அரசு நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு அளித்து, நீதிமன்றச் செயல்பாடுகளை நவீனப்படுத்த உதவ வேண்டும். நீதிமன்ற ஆவணங்கள் கணிப்பொறியின் உதவியுடன் பதிவு செய்யப்பட வேண்டும்.

இன்றைய நிலையில், இந்தியாவில் வழக்கு விசாரணைக்கான சராசரி கால அளவு என்ன தெரியுமா? 15 ஆண்டுகளாம்.

இதை மூன்று ஆண்டுகளாகக் குறைக்க முயற்சிப்பதாகச் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

அதுபோல, கொலைக் குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பளிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக அந்த மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

உதாரணமாக, தில்லியில் மட்டும் ஆண்டொன்றுக்கு 380 கொலைகள் நடப்பதாகவும், ஆனால் சுமார் 250 வழக்குகளைத்தான் பைசல் செய்ய முடிகிறது என்றும் கவலை தெரிவித்தனர்.

இதே நிலைமைதான் ஏனைய மாநிலங்களிலும். இந்தப் பிரச்னைக்கு உடனடியாக முடிவு காணப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

இந்தியச் சிறைச்சாலைகளில் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை திடுக்கிட வைக்கிறது.

  • இந்தியாவில் உள்ள சுமார் 1,500 சிறைச்சாலைகளில் இரண்டரை லட்சம் கைதிகளைப் பாதுகாப்பதற்கான வசதிகள்தான் உள்ளன.
  • ஆனால் சிறைகளில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கையோ மூன்றரை லட்சத்துக்கும் அதிகம்.
  • இதில் 70 சதவிகிதம் கைதிகள் விசாரணைக் கைதிகள். அதாவது, இவர்கள் குற்றம் செய்தார்களா என்பதுகூட நிரூபிக்கப்படாமல், சிறையில் காலத்தைக் கழிப்பவர்கள்.

இதைவிடக் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா? இந்த விசாரணைக் கைதிகளில் 70 சதவிகிதம் பேர், சிறு குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களில் பலர் தண்டிக்கப்பட்டால்கூட ஒரு சில நாள் தண்டனைதான் கிடைக்கும். ஆனால் தீர்ப்பு எழுதப்படாமல், குற்றம் நிரூபிக்கப்படாமல் மாதக் கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிரபராதிகளின் அவலம் எழுத்தில் எழுதி மாளாது.

உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் பலமுறை, இதுபோன்ற விசாரணைக் கைதிகளை சொந்த ஜாமீனில் விடும்படி அறிவுறுத்தியும், காவல்துறையினரும் கீழமை நீதிமன்றங்களும் அதை சட்டை செய்வதாகத் தெரியவில்லை.

விசாரணைக் கைதிகள் என்கிற பெயரில் மூன்று மாதத்திற்கும் அதிகமாக, சிறு குற்றங்களில் கைது செய்யப்பட்ட யாரையும் சிறையில் வைத்திருப்பது மனித உரிமை மீறல் என்று கருதப்பட வேண்டும். அப்படிப்பட்ட மனித உரிமை மீறல்களுக்குச் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். கீழமை நீதிமன்றங்கள் இந்தப் பிரச்னையில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

பிரதமரையும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தேசத்தையும் சிந்திக்க வைக்கும் பிரச்னையாக இது மாறினால் மட்டும்தான் இதற்குத் தீர்வு ஏற்படும்.


In US, disclosure of judges’ wealth is mandatory – India – NEWS – The Times of India: US, Argentina, Latvia, Mongolia and South Korea are some of the countries that have laid down legal procedures for disclosure. A report prepared by the Commonwealth Human Rights Initiative (CHRI) pointed out that in Russia and Philippines, there were some restrictions to accessing information but not complete denial.

Concerns consensus: “It takes some doing for the CPM’s Brinda Karat, the ruling Congress’s Jayanthi Natarajan, and the BJP’s Arun Jaitley, not to mention maverick-in-chief Ram Jethmalani, to agree on anything. This is the doing of the Judges (Declaration of Assets and Liabilities) Bill, denounced by its variegated critics as placing the judiciary above the rule of law.”

Judges and public scrutiny – Should judges declare their assets to the public? Views – livemint.com: “The government’s legislation to have judges declare assets, but not to the public, is only making the judiciary vulnerable to public perception of corruption and political interference”

OUTLOOK –
BLOGS / Sundeep Dougal :: What The SC Judges Must Do
: “first time in history that before introduction in Parliament the Bill has been circulated to the judicial institution itself, and it is on their objection that this clause 6 has been introduced”

Judges’ Assets Bill in LS today, not to cover independent kin: “the proposed law should make it mandatory for the judges to declare the assets of their “independent” children too, the Bill doesn’t have any such provision.”

Bibek Debroy Column : The jury is in on the Judges Bill: “First, to paraphrase what former Chief Justice Verma said, you maintain confidentiality only if you have something to hide. Second, it differentiates among India’s citizens (and public servants), be it on grounds of Article 19 or otherwise. Third, it is possible selective disclosure of this “confidential” information may make judiciary more amenable to executive pressure. Fourth, in absence of information on assets, what happens to possible inquiries against judges?”