Tag Archives: Manushangada

மனுசங்கடா – தமிழ் சினிமா: வணிகமும் விருதுப் படமும்

இன்று மனுசங்கடா திரைப்படம் காணக் கிடைத்தது. கூடவே, ‘திண்ணை’ கோபால் ராஜாராமும் இருந்தது படத்தைக் குறித்த பார்வையை விசாலாமாக்கியது.

படத்தைக் குறித்து சில எண்ணங்கள்:

  1. கோலப்பனாக நடித்தவர் அம்ஷனின் மகனாமே! நன்றாக செய்திருக்கிறார். அழகாகாவும் இருக்கிறார்.
  2. பையனே அப்பாவை ‘பாடி’ என்று சொல்வது சற்றே நெருடியது.
  3. அம்ஷனின் முந்தையப் படம் ‘ஒருத்தி’ சற்றே மறந்து போனது. ‘மனுஷங்கடா’ நிறைய தசாப்தம் நினைவில் நிற்குமாறு இருக்கிறது.

  1. கீழ்வெண்மணி என்றவுடன் நெஞ்சம் படபடக்கும். அதை சொல்லாமல் சொல்லும் காட்சியமைப்பு பதைபதைக்க வைத்தது.
  2. தமிழகத்தில் கூட படம் எடுக்க முடியாமால், மொழி புரியாத ஆந்திராவிற்குச் சென்று காட்சியாக்கமும் ஒளிப்பதிவும் செய்தது, இந்தியாவைக் குறித்த எதிர்மறை எண்ணத்தை அய்ர்வாக எழச் செய்தது.
  3. “அண்ணன்” ஆக நடித்தவருக்கு நல்ல குரல்வளம். ஆனால், நடிப்பு சற்றே சீரியல்தனம்

  1. உணர்ச்சிக் கொந்தளிப்புடன் கதையைக் காட்சியாக்கி இருக்கிறார். கிட்டத்தட்ட ஷங்கர் படம் பார்த்த ஆக்ரோஷத்துடன் படம் முடிகிறது. இந்த மனித உரிமை மீறல் அக்கிரமத்தை படம் பார்த்த திருப்தியோடு கை கழுவாமல் இருக்க வேண்டும்.

 

முந்தைய குறிப்புகள்:

மனுசங்கடா திரைப்படம் குறித்த மற்ற பார்வைகள்:

சுரேஷ் கண்ணன்

வாழும் போது மட்டுமல்ல, வாழாமல் செத்த பிறகும் சாவிலும் கூட விடாமல் துரத்துகிறது சாதியம். சட்டமும் நீதியும் கூட கெட்டி தட்டிப் போன அந்த இறுக்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. கோலப்பன் தேடுவது தந்தையின் பிணத்தையல்ல, இந்தியாவின் ஜனநாயகத்தை, அதன் அரசியல் அமைப்பு சட்டத்தையே குழிகளில் தேடுகிறான் என்கிற சமிக்ஞையோடு படம் முடிந்ததாக எனக்குப் பட்டது.

எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எளிய அலங்காரத்துடன் படம் நேர்மையாக நகர்கிறது. இதனாலேயே சிலர் சலிப்படையக்கூடும். ஜோடனைகள் இல்லாத உண்மை அத்தனை சுவாரசியமானதாக இருக்காதுதான்.

சமீபத்தில் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நோ்மையானதொரு தலித் சினிமாவை உருவாக்கியிருக்கிறார் அம்ஷன் குமார். ‘தீண்டாமை என்பது பெருங்குற்றம்’ என்பது பாடப்புத்தகங்களில் அல்ல, மனித மனங்களில் ஆழமாக எழுதப்பட வேண்டியது என்கிற செய்தியை இயல்பாக சொல்லிச் செல்கிறது இந்த திரைப்படம்.

இதில் வரும் நடிகர்கள் இயல்பான நடிப்பைத் தந்துள்ளனர். சினிமா ஆர்வலர்களின் ஆதரவு நிச்சயம் தரப்பட வேண்டிய திரைப்படம் இது.

விரிவான கட்டுரை வரும்.

மனுஷ்யபுத்திரன்

இன்று காலை அம்ஷன் குமாரின் ‘ மனுசங்கடா’ திரைப்படத்தை தியாகராய நகர் ஏஜிஸ் ல் பார்த்தேன். இரண்டு மூன்று வரிசைகளே நிரம்பியிருந்தன. பெரும்பாலான இருக்கைகள் காலியாக கிடந்தன. சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு ஏழாம்தர குப்பைப்படத்தைக் கூட முன்பதிவு செய்யமல் பார்த்துவிடமுடியாது. இன்றைய காலி அரங்கம் எனக்கு மனதை பிசைவதாக இருந்தது. நண்பர்களுக்கான தனிப்பட்ட ஒரு ஷோ போல இருந்தது.

இத்தனைக்கும் ‘ மனுசங்கடா’ தமிழின் மிக முக்கியமான படம். சாதியத்தின் கோரமுகத்தை வெளிப்படுத்தும் படம். தன் தந்தையின் பிணத்தை பொதுவழியில் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல உயர்நீதிமன்றம்வரை சென்றுபோராடும் ஒரு தலித் இளைஞனின் கதை. எந்த வணிக சமரங்களும் இல்லை. அவலத்தின் நடுவே காதல் கிளுகிளுப்புகளின் பூச்சுகள் இல்லை. ஒரு மனிதன் இறந்து அடக்கம் செய்யப்படும் வரையிலான இரண்டு நாளின் கதை. படத்தில் பிண்ணனி இசை என்று தனியாக எதுவும் இல்லை. சுற்றுச் சூழலின் அசலான ஒலிகளே பிண்ணனி இசை. சினிமாவின் அலங்காரங்கள் இல்லாமல் எதார்தத்தை மறுபடைப்பு செய்ய அம்ஷன் குமார் படம் முழுக்க முனைகிறார். அதில் பார்க்கும் கோர்ட் நாம் நிஜத்தில் பார்க்கும் கோர்ட். நாம் பார்க்கும் வருவாய் துறை அதிகாரியும் காவல்துறை அதிகாரியும் நாம் அன்றாடம் காணும் அதிகாரிகள். அதில் வரும் தலித் சமூக தலைவரை நானே நேரில் பலமுறை சந்தித்திருக்கிறேன்.

இந்தப்படம் தெளிவாக சொல்லும் செய்தி ஒன்று உண்டு. இந்த நாட்டில் அரசியல் சாசனமோ நீதிமன்ற உத்தரவுகளோ சாதிய அதிகாரத்தை, அதன் சட்டங்களை வெல்ல முடியாது என்பதுதான். ஒடுக்கப்பட்ட மக்கள் வன்முறையின் மூலமாகவோ போலி சமரசங்கள் வாயிலாகவோ பொய் வாக்குறுதிகள் மூலமாகவோ தங்கள் உரிமைகளை விட்டுத்தர நிர்பந்திக்கப்படுகிறார்கள். தன் தந்தையின் பொதுவழியில் கொண்டு சென்று புதைப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்றுவரும் இளைஞனால் கடைசியில் தன் தந்தையை காவல்துறையினர் பலவந்தமாக எங்கே புதைத்தார்கள் என்பதைக்கூட அறியமுடியாமல்போவது அவலத்தின் உச்சம்.

நடிகர்கள் தங்கள் பாத்திரத்தின் எல்லைமீறாமல் நடித்திருந்தார்கள். நவீன நாடகபாணியிலான நடிப்புமுறை சில இடங்களில் தூக்கலாக வெளிப்படுவதை தவிர்த்திருக்கலாம். எந்த ஊர் அடையாளமும் சாதி அடையாளமும் வெளிப்பட்டுவிடாமல் கதையை நகர்த்தியிருப்பது இயக்குனரின் வெற்றி என்றாலும் ஒரு முழுமையான எதார்த்த சினிமாவாக அது மாறுவதை பலவீனப்படுத்துகிறது. ஆனால் அத்தகைய அடையாளங்களை சுட்டினால் படம் வெளியே வந்திருக்காது. உயர் சாதிகளை சாதிப்பெருமை பேச மட்டுமே திரைப்படங்களில் வெளிப்படுத்த லைசன்ஸ் உண்டு. அம்ஷன் குமாரின் திரைப்பயணத்தில் நிச்சயம் இப்படம் அவருக்கு மிக முக்கியமான இடத்தைப்பெற்றுத்தரும்.

பல சர்வதேச விழாக்களில் படம் காட்டப்பட்டு கவனமும் பாராட்டும் பெற்றிருக்கிறது. விழாக்களில் மட்டுமல்ல, பொது சமூகத்தின் மனசாட்சியை இதுபோன்ற படங்கள் உலுக்கவேண்டும். பெரும் போராட்டத்திற்குப்பிறகு சென்னையின் சில திரையங்குகளில் சில காட்சிகள் மட்டுமே இந்த மூன்று நாட்களில் இப்படம் திரையிடப்ப்பட்டது
நாளை இருக்குமா என்று தெரியவில்லை. விளம்பரத்திற்கு கோடிகளை கொட்ட முடியாத, தியேட்டர்களை பிடிக்கும் வலிமையற்ற குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கும் ஒரு சமூகமாற்றத்திற்கான இயக்குனர் தமிழ்சினிமாவின் மிருகவிதிகளின் முன் தன் படைப்பை அத்தோடு மறந்துவிட வேண்டியதுதான்.

சினிமா என்பது தமிழர்களின் கலை அல்ல, அபின். இங்குவேண்டப்படுவது மிகையுணர்ச்சிகளின் அதீத நாடகமேயன்றி எதார்த்தத்தின் சித்திரங்கள் அல்ல

பொன் சுதா

இன்குலாப்பின் கனல் தீராத கவிதை வரியை தலைப்பாக்கி வெளியாகி இருக்கும் திரைப்படம்.

நேற்றுப் பார்க்க வாய்த்தது.

சாதியத்தின் கோரமுகத்தை மூக்கு உரசும் தூரத்தில் உணர்ந்த அனுபவம்.

திருநாள்கொண்டசேரி சம்பவம் திரையாக்கமாகி இருக்கிறது.

பிறப்பில் துவங்கி ஒவ்வொரு நொடியிலும் உணரும் சாதிய ஒடுக்கு முறையை இறந்த பின்னாலும் பிணமாய் அனுபவிக்க நேரும் கொடூரமே கதைக் களம்.

பொது வழியில் ஒடுக்கப் பட்டோரின் பிணங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க மறுக்கும் சாதிய திமிர் கொழுத்த கிராமங்களில் ஒன்று அம்மையப்பன் கிராமம்.

ஒடுக்கப் பட்டவர்களின் பிணத்தை எடுத்துச் செல்ல ஒதுக்கப் பட்ட தனிப் பாதை என்பது வெறும் முட்காடு. அதை பாதையாக்க எந்த முயற்சியும் செய்யாத ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள்.

இறந்த தன் தந்தையை பொதுவழியில் எடுத்துச் செல்ல முடிவு செய்து நீதிமன்றத்தை நாடுகிறான் கதாநாயகன் கோலப்பன். அதிசயமாய் நீதி வெல்கிறது. பொதுப்பாதையில் பிணத்தை எடுத்துச் செல்ல உத்தரவிடுகிறார் நீதிபதி. பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கும் அதிகாரிகளுக்கும் ஆணையிடப்படுகிறது.

அந்த தீர்ப்பின் படி, பிணம் பொது வழியில் அனுமதிக்கப் பட்டதா? எப்படி ஆதிக்க சாதியினரும் அதிகாரிகளும் அதற்கு எதிர்வினை ஆற்றினார்கள் என்பதே ஆழமும் அழுத்தமுமான கதை.

உண்மையின் கதையாடல்கள் வலியோடு பதிவாகி இருக்கிறது. எவ்வளவு கேவலமான சமூகத்தில் வாழ்கிறோம் என்கின்ற எதார்தத்தின் சூடு கட்டாயம் உரைக்கும் உணர்வுள்ளவர்களுக்கு.

சிறிய முதலீட்டில் சமூக அக்கறையுள்ள படைப்பை வழக்கிய அம்ஷன் குமார் அவர்களுக்கு மதிப்பு மிகுந்த வாழ்த்துக்கள்.

திரைக்கதையில் உதவிய எழுத்தாளர் அழகிய பெரியவன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

சாதியை வெறுக்கும் முற்போக்கு மனநிலை உள்ளவர்கள், மாற்றுத் திரைப்படங்களை ஆதரிப்பவர்கள், கொஞ்சம் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் திரையரங்களில் மனுசங்கடாவைப் பார்ப்பதை தனது கடமையாக உணர வேண்டும்.

அது அப்படி இருந்திருக்கல்லாம், இது இப்படி இருந்திருக்கலாம் என்கிற சில லாம்கள் உண்டு தான்.

அதையெல்லாம் மீறி உண்மையும் நேர்மையுமான அக்கறையுமான ஒரு திரைப்படம் என்பதை உறுதியாய் உணர முடிகிற படைப்பு மனுசங்கடா ..

R R Srinivasan

அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவிற்குப் பிறகு எழுந்த ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி கலை இலக்கியங்களில் பிரதிபலித்தது. சாதி குறித்த பார்வையும் அழுத்தமும் பல விதங்களில் வெளிப்பட்டன, அப்பார்வையை ஆவணப்படங்கள்
அர்ப்பணிப்போடு முன்னெடுத்துச் சென்றன,,,ஆனால் நம்முடைய புனைவுத் திரைப்படங்களோ 25 வருடங்களுக்கு மேலாகியும் நேரடியாகச் சாதி குறித்துப் பேசவில்லை அல்லது தயங்குகின்றன. எளிமையான ஆவணத்தன்மையுடன் “மனுசங்கடா” அதனைப் பேசுகிறது. 25 வருடங்களாக நடந்த சாதி குறித்த விவாதங்களைப் புறக்கணிக்காமல் சாதி வன்கொடுமையைப் பேசுவது , சாதியை நேரடியாகத் தாக்குவது இக்காலத்தின் தவிர்க்க முடியாத கருப்பொருளாகும்.

வில்லன் -கதாநாயகன் என்ற எதிர்நிலைகளை உருவாக்கி ஒருவொரையொருவர் வெற்றி கொள்வது, தோல்வி அடைவது இது வணிக சினிமா மனோபாவம், மனுசங்கடா படத்தில் எதிரிகளில் குறிப்பிட்ட நபர்கள் என்று யாருமில்லை, வெகு தூரத்தில் அவர்கள் யாரென்று தெரியாமலே படமாக்கப்படுள்ளது, ஏனெனில் எதிரி தனிப்பட்ட ஒருவர் அல்ல,, அமைப்புதான்(System) எதிரி.அதை விவாதிப்பதே முக்கியம்.

சாதிக்கொடுமைகளின் உச்சமான அன்றாடம் நடக்கும் “புதைக்கும் உரிமை” மறுக்கப்பட்ட சமூகத்தின் குரல் திரைப்படத்தில் புனையப்பட்டது வரலாற்று முக்கியத்துவமானது.

மனுசங்கடா: “கோர்ட்டாவது மயிராவது..”   | கருப்பு

திருநாள்கொண்டசேரி. நாகப்பட்டினம் மாவட்டம் , மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள வழுவூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமம். இக்கிராமத்தில் வசிக்கும் தலித் மக்களுக்கு தனியாக வசிப்பதற்கென சேரி ஒதுக்கப்பட்டிருப்பது போல, செத்துப் போனால் புதைப்பதற்கென தனியாக இடுகாடு ஒதுக்கப்படவில்லை. ஒரே இடுகாடு என தப்பர்த்தம் கொள்ள வேண்டாம். இடுகாடே கிடையாது. ஒதுக்கப்படவில்லை.

பிறகு, செத்துப் போகிறவர்களை எப்படித்தான் அடக்கம் செய்வார்களாம் என்றால், அக்கிராமத்திலிருத்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் மதிமலை என்கிற இடத்தின் ஆற்றங்கரையில்தான் புதைக்க வேண்டும். அதுதான் அந்த பகுதியில் காலங்காலமான நடைமுறை. அவ்வளவு தூரம் சுமந்து சென்றுதான் பிணங்களைப் புதைத்து வருகிறார்கள் தலித் மக்கள்.

ஆனால் ஒரு கண்டிஷன். அவர்கள் பிணத்தைத் தூக்கிக் கொண்டு ஊரின் பொதுப் பாதையில் செல்லக் கூடாது, கல்லும் முள்ளும் பாவிக் கிடக்கும் வரப்பின் வழியாகத்தான் பிணத்தை எடுத்துச் செல்ல வேண்டும். எப்பேர்ப்பட்ட நீதிபதிகளும் கூட மீறவியலாத இந்த கண்டிஷனை போட்டு வைத்திருப்பது அக்கிராமத்தின் சாதி இந்துக்கள்.

அவர்களுடைய அடாவடியிலிருந்து விலகியிருக்க நினைக்கும் தலித் மக்கள் , தங்கள் பகுதியிலேயே தங்களுக்கென தனித்த சுடுகாடு வேண்டும் என்கிற கோரிக்கையை வைக்கிறார்கள். ஓராண்டில்லை. ஈராண்டில்லை. சுமார் நாற்பதாண்டு காலமாக எழுப்பப்பட்டு வரும் அந்த கோரிக்கையை அரசாங்கம் கண்டுகொள்ளவேயில்லை. ஆயிரமாயிரம் புகார்கள். ம்ஹூம். நடவடிக்கையே இல்லை. தலித் மக்களில் எவரேனும் இறந்து போகும் ஒவ்வொரு முறையும், சாதி இந்துக்கள் தங்களின் மனநோயை வெளிப்படுத்தத் தவறியதே இல்லை. பொதுப் பாதையில் பிணம் எடுத்துச் செல்ல முயற்சிக்கும் தலித்துகளை கடுமையாகத் தாக்கியும் அவமானப்படுத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில், கடுமையான ஒரு மழை காலத்தில், தலித் மூதாட்டி ஒருவர் இறந்து போகிறார். வழக்கமாகப் பிணம் தூக்கிச் செல்லும் வரப்பில் தண்ணீர் அதிகமும் தேங்கி இருந்ததால் பொதுப்பாதையில் செல்ல காவல் துறையினரிடமும் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தினரிடமும் அனுமதி கேட்கின்றனர் தலித் மக்கள். அப்படிப்பட்ட தனிமனித உரிமைக்கான சட்டம் இருப்பதையும் எடுத்துச் சொல்லி கெஞ்சுகின்றனர். தலித் மக்கள் பொதுப்பாதையில் சடலத்தைத் தூக்கிச் செல்லலாம் என கோர்ட் ஆணையிட்டுவிட்டது. தலித் மக்களின் கெஞ்சலைக் கண்டும் கோர்ட் ஆணையை நிறைவேற்றும் பொருட்டும் போலிஸ்காரர்கள் சாதி இந்துக்களிடம் செல்கின்றனர். அவர்களிடம் கெஞ்சுகின்றனர். “ஐயா.. போனா போகட்டுங்யா.. எப்படியாவது அவங்களுக்கு வழி உட்ருங்யா ப்ளீஸ்” எந்த கெஞ்சுதல், வேண்டுதல், சாதி இந்துக்களிடத்தில் நிறைவேறியிருக்கிறது?

அவர்கள்தான் மனநோயாளிகளாயிற்றே! கொஞ்சமும் மசியவில்லை. மட்டுமின்றி, காவல் துறையினரையும் கூட மிரட்டுகின்றனர். அவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்து, அவமானப்பட்ட காவல்துறையினர் அந்த அவமானத்தால் கொண்ட ஆத்திரத்தையும் வெறித்தனத்தையும் தலித் மக்கள் மீது காட்டியுள்ளனர்.

“பொணத்த நீங்க எடுக்குறீங்களா? இல்ல நாங்க எடுக்கட்டுமா?”

“தலித் மக்கள் பொதுப்பாதை வழியாக சடலத்தைக் கொண்டு செல்லலாம்” என்கிற தீர்ப்பை கனம் கோர்ட்டாரே சொல்லிய பிறகும் அதை ஒரு டேஷ்க்கும் மதிக்காமல் ’கோர்ட்டாவது மயிராவது’ எனச் சொல்லி ( நன்றி : பாஜகவின் ஹெச். ராஜா ) போலிசையே எதிர்க்கும் ஆற்றல் சாதி இந்துக்களுக்கு இருக்கிறது என்றால் அந்த ஆற்றல் எங்கிருந்து வருகிறது? ஏன் வருகிறது?

சாதியுணர்வு ஒரு மனநோய் என்று பாபாசாகேப் அம்பேத்கர் சொன்னது எவ்வளவு உண்மை.
அந்த மன நோயாளிகளிடம் மல்லுக்கட்ட முடியாமல் போலீசே பிணத்தைச் சுமந்து சென்று அடக்கம் செய்திருக்கிறது. (இச்சம்பவம் தோழர் எவிடென்ஸ் கதிர் அவர்களின் கட்டுரை ஒன்றிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. அவருக்கு நன்றி. )

இப்படியான கேவலமான ஒரு செயல் உலகில் எந்த நாட்டிலாவது நடக்குமா?
இப்படியான சம்பவங்கள் ஒருமுறை இருமுறை, மும்முறைகளல்ல. காலங்காலமாக நடந்து வருகின்றன. இன்றைய டிஜிட்டல்இந்தியா வரை. இந்த டிஜிட்டல் தேசத்தைக் காறித்துப்ப வைக்கும் இப்படிப்பட்ட நிலைமை ஒவ்வொரு நாளும் ஏதோவொரு சேரியில் நடந்து கொண்டிருந்துதானிருக்கிறது.

அன்னாடம் நடந்துவருகின்ற இப்படியான சாதிய அசிங்கங்கள் குறித்து நம்மூரார் யாரேனும் வாய் திறக்கிறார்களா என்றால் இல்லை. மட்டார்கள். அவர்களுக்கு வேறு பல கேளிக்கைகள் இருக்கின்றன. சமயங்களில் இப்படிப்பட்ட செய்திகள் ஊடகங்களில் இடம் பெறும்தான். மற்ற செய்திகள் ஏதும் கிடைக்காத போது.

செத்தாலும் மறையாத இப்படிப்பட்ட சாதியக் கொடுமைகளை, (வெகுசன) அச்சு ஊடகங்களிலேயே சொல்ல முடியாத போது, திரைப்படங்கள் என்கிற வெகுமக்களுக்குப் பிடித்தமான கலையின் மூலம் காட்டுவது என்பதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், அதை சாத்தியப்படுத்தியிருக்கிறது ‘மனுசங்கடா’ திரைப்படம்.

பல்வேறு ஆவணப்படங்கள், ‘ஒருத்தி’ உள்ளிட்ட சுயாதீன படம் ஆகியவற்றின் இயக்குனரும், எழுத்தாளருமான அம்ஷன் குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். பல்வேறு படவிழாக்களில் கலந்து கொண்டு அங்கீகாரத்தைப் பெற்ற இப்படம் இப்போது, வெகுமக்களின் பார்வைக்கு வந்துள்ளது.
திருநாள்கொண்டசேரியில் நடந்தைப் போல பல்லாயிரம் கிராமங்களில் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் சாதிய அசிங்கத்தை அப்பட்டமாகவும் அதிர்ச்சியுடனும் காட்டியிருக்கிறது இப்படம். மட்டுமின்றி, சமத்துவம் பேசும் திரைப்படங்களைக் கூட பல கோடிகளில்தான் உருவாக்க முடியும் என்கிற மாயையையும் இப்படம் உடைத்திருக்கிறது.

சினிமா என்கிற கலையை எளிய மக்கள் அனைவராலும் உருவாக்க முடியும், (உருவாக்க வேண்டும்) அதில் மக்களின் பாடுகளைச் சொல்ல முடியும் (சொல்ல வேண்டும்) என்கிற வகையிலும், சாதியத்தின் அசிங்கத்தைக் அவ்வளவு வெளிப்படையாகக் காட்டியிருக்கும் வகையிலும் ’மனுசங்கடா’ முக்கியமான அரசியல் படமாகின்றது. படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டுகிறேன்.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ட்ரைபாட் இல்லாமல், காமிராவை கையால் வைத்தபடியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனாலும் நேர்த்தியான படப்பதிவு. டப்பிங்கே இல்லை என்பதை நம்ப முடியவில்லை. துல்லியமான ஒலிப்பதிவு. சபாஷ் அம்ஷன் குமார் & குழுவினர்.

படத்தில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களும் (ஓரிரு இடங்களைத் தவிர) நேர்த்தியாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக மையப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ராஜிவ் ஆனந்த் கவனிக்க வைக்கிறார். படம் தொடங்கியதிலிருந்து இறுதிவரை கொந்தளிப்பான முகத்தை கடைபிடித்திருக்கிறார் அவர். எல்லோரும் நவீன நாடக கலைஞர்கள். ஆகவே, ஒரு தேர்ந்த நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது ( அந்த வழக்கமான மாடுலேஷனை மட்டும் அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்).

நீதிமன்ற காட்சி அதன் சமன் குலையாமல் இருக்கிறது. அக்காட்சி முழுக்க, முழுக்க பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்தியலை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பேன். அவர் உருவாக்கிய சட்டம் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமைகளையும் மனதில் கொண்டு அவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்தில் மட்டுமே இருக்கிறது. அப்படிப்பட்ட சமத்துவ சிந்தனையாளர் அண்ணல் அம்பேத்கர்.
அரசின் சட்ட விதிமுறைகள் யாவும் அனைவருக்கும் சமமாகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில்தான் பாகுபாடுகளும் தாழ்வுகளும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன என்கிற அவலத்தை சமரசமின்றி சொல்லிச் செல்கிறது இப்படம்.

பெரும்பாலான வழக்குகளில் நீதிமன்றங்கள் நீதியற்ற தீர்ப்புகளைச் சொல்லி தங்களை அம்பலப்படுத்திக் கொள்கின்றன. அரிதாக, எப்போதாவது நீதிமன்றமே நீதியை நிலைநாட்டச் சொன்னாலும் கூட, அந்த தீர்ப்பு சாதியத்தின் மசுருக்குக் கூட சமானமாவதில்லை என்பதாகத்தான் இருக்கிறது.
அப்படிப்பட்ட அவலத்தைத் தான் பேசியிருக்கிறது இப்படம்.

சமூகத்தின் மீது அக்கறை கொண்டியங்கும் ஒவ்வொருவரும் அவசியம் காண வேண்டிய திரைப்படம் இது. இப்படத்தை ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய அக்கறையும் பொறுப்பும் நமக்கிருக்கிறது.

வணிக அடிப்படையில் பார்த்தால் இம்மாதிரியான சுயாதீன திரைப்படங்களுக்கான ஆரோக்கியமான சூழல் இல்லாததால் குறைந்தளவு காட்சிகள் மட்டுமே திரையிடப்படுகின்றன. ஆகவே, உடனடியாக இப்படத்தைப் பார்த்து விடுங்கள் தோழர்களே!

மேலும், இப்படிப்பட்ட அக்கறையான படங்களுக்காகவும் நம் குரல் ஒலிக்க வேண்டும். சமூக வலைதளங்களில் அதற்கான குரல் வலுவாக எழுப்பப்பட வேண்டும். இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலமாக சுயாதீன படங்களுக்கான ஆரோக்கியமான வெளியை உருவாக்க முடியும். அதன் மூலமாக வணிக சினிமா உருவாக்கியிருக்கும் கவர்ச்சியையும் அதுசார்ந்த போலியான பிம்பங்களையும் உடைக்க முடியும்.

இறுதியாக, ஒரு வேண்டுகோள் தலித்துகள் சாதி இந்துக்களைப் பார்த்து, ’நாங்க மனுசங்சடா…’ ’நாங்க மனுசங்கடா..’ என்கிற உண்மையைப் பலகாலமாகச் சொல்லி வருகிறார்கள். இனி கேட்க வேண்டியது, சாதி இந்துக்களைப் பார்த்துத்தான்.

“நீங்க மனுசங்களாடா?”

மனுசங்கடா – வெளி ரங்கராஜன் | malaigal.com

அண்மையில் சென்னையில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டுமே திரையிட வாய்ப்புகள் பெற்ற அம்ஷன்குமாரின்
மனுசங்கடா திரைப்படம் இன்றைய தமிழ் சமூகத்தின் முக்கிய பிரச்னையான சாதிய கட்டுமான இறுக்கத்தை ஒரு நேரிடையான மிகையற்ற யதார்த்த மொழியில் அதற்குரிய தீவிரத்தன்மையுடன் தோலுரித்துக்காட்டிய ஒரு சிறப்பான திரைப்படம்.

அண்மைக்காலங்களில் விளிம்புநிலை வாழ்வியல் பற்றிய சித்தரிப்புகள் குறித்த ஆர்வங்கள் தமிழ் சினிமாவில்பெருகத் துவங்கியிருக்கிற ஒரு சூழலில் தமிழ் சினிமாவின் வழமையான ரொமாண்டிசிஸத்தையும்,குரூரத்தையும் தவிர்த்துதீவிரத்தன்மை கெடாத ஒரு யதார்த்த சூழலை வடிவமைத்திருப்பது ஒரு சிறப்பான உத்தி.

அண்மைக்காலங்களில் தீண்டாமைச் சுவர்களும்,ஆணவக் கொலைகளும்தமிழ் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிக்கொண்டிருக்கிற ஒரு காலகட்டத்தில்தலைநகரத்திலிருந்து நூறு கிலோமீட்டர் தூரமே உள்ள ஒருகிராமத்தில் இன்றும் நிலவிவரும் ஒரு தீண்டாமை நடைமுறையை திரைமொழியின் வீச்சுடன் அம்பலப்படுத்தியிருப்பது ஒரு சமூக நோக்கம்கொண்ட துணிச்சலான முயற்சி.

இன்றைய ஜனநாயக அமைப்பில் தங்களுடைய அடிப்படை உரிமைகளைப் பெற நீதிமன்றம் மற்றும் ஊடகங்களை நாடுவதற்கு வாய்ப்பு பெற்றுள்ள கல்வி அறிவு பெற்ற தலித் இளைஞர்கள் கூட சாதியக் கட்டுமானம் ஆழமாக ஊடுருவியுள்ள கிராமிய அடிமட்ட அமைப்புகளை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத அவல நிலைதான் இத்திரைப்ப டத்தில் காட்சிகளாக வடிவம் பெறுகிறது.

நகரத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு தலித் இளைஞன் கிராமத்திலுள்ள தன்னுடைய தந்தையின் திடீர் மரணச் செய்தி கேட்டு துக்கத்துடன் கிராமத்துக்கு விரைகிறான்.அங்கு பொதுவழியில் தந்தையை மயானத்துக்கு எடுத்துச் செல்லமுடியாத சூழல் நிலவுகிறது.அவர்களுக்கென்று உள்ள முட்கள் நிறைந்த பாதை உபயோகிக்க பயனற்றதாக இருக்கிறது. பொதுவழியை உபயோகிக்கும் தங்கள் உரிமையை நிலைநாட்ட நீதிமன்றத்தை அணுகி உத்தரவுபெற்ற பிறகும் கூட கிராமிய அதிகாரிகளும் காவல்துறையும் ஆதிக்க சக்திகளுக்கு துணைநின்று பிணத்தைப் பறித்து தாங்களே எடுத்துச்சென்று புதைக்கின்றனர்.தந்தையின் புதைக்கப்பட்ட இடத்தைக்கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாதஅவலத்தையேயே தலித் எதிர்கொள்கிறான். .மரணத்துக்குப்பிறகும்ஒரு தலித் உடல் அவமானத்துக்குரிய பொருளாகவேஇருக்கிறது. மூன்று நாட்களில் நடைபெறும் இச்சம்பவங்களின் மூலமாக இன்றைய கிராமிய
யதார்த்தம் ஒரு வலுவான அழகியல் ஆவணமாக முன்நிறுத்தப்படுகிறது.

எந்தவிதமான செயற்கைத்தன்மையும் அற்று ஒரு இயல்பான உயிரோட்டம் கொண்ட பாத்திரங்களாக நடிகர்கள் இயங்குகின்றனர்.ஹீரோதன்மை அற்ற ஆனால் இயல்பான கோபம் கொண்ட தலித் இளைஞன்,கூட வேலை பார்க்கும் அவன் சுக துக்கங்களில் பங்குகொள்ளும் சகதோழி,நிலைமைகள் குறித்த புரிதலும் அணுகுமுறையும் கொண்ட தலித் தலைவர்,விரைந்து செயலாற்றி நீதிபெற்றுத்தர உறுதிபூணும் வக்கீல்,நிலைமைகளை உணர்ந்து தெளிவான தீர்ப்பு வழங்கும் நீதிபதி,கணவன் இறந்த துக்கத்தை ஒப்பாரிப்பாடல்களால் அரற்றித் தீர்க்கும் வேளையிலும் தன் மகனுக்கு மனைவியாகப் போகிறவளை வாஞ்சையுடன் தடவிப் பார்க்கும் தாய் என பாத்திரங்கள் மிகவும் உயிர்ப்புடன் வெளிப்படுகின்றன. பிணத்தை வீட்டுக்குள் எடுத்துச் சென்று தாழிட்டுக் கொள்வது, காவல்துறை அச்சுறுத்தல்களுக்கிடையிலும் பிணத்தை தர மறுப்பது, இறுதியில் காவல்துறை வன்முறையை பிரயோகித்து பிணத்தை பறித்துப் புதைப்பது என இறுதிக்காட்சிகள் ஒரு அதிகபட்ச நாடக உயிர்ப்புடன் வெளிப்படுகின்றன.

இத்தகைய மிகைத்தன்மையோ குரூரங்களோ அற்ற ஒரு இயல்பான காட்சிமொழி க்கு நம் பொது தமிழ்சினிமா மனநிலை அதிகம் பழக்கப்படாததால் இது ஒரு நவீன நாடகம் போன்றும் ஆவணப்படம் போன்றும் நகர்வதாக நம் சூழலில் தயக்கங்கள் நிலவுகின்றன.ஆனால் மாற்று சினிமா குறித்த அறிவும்,ஆவணப்பட அனுபவமும்,நவீன நாடக நடிகர்களை தன்னுடைய படைப்புகளில் தொடர்ந்து உபயோகப்படுத்தியும்வரும் இயக்குனர் அம்ஷன்குமார் இத்துறைகளின் ஊடாட்டத்தை ஒரு செறிவான காட்சிமொழியாக இத்திரைப்படத்தில் உருமாற்றி இருப்பதை பல காட்சிகளில் காண முடிகிறது.

முக்கியமாக பிணத்தை எடுப்பதற்கு முன்பாக அந்த தலித் இளைஞர்கள் ஆடும்பறையாட்டமும்,தான் குழியில் தள்ளப்பட்டு மண்வீசப்படுவதாக அந்த தலித் இளைஞன் காணும் முடிவற்ற கனவும் காலம்காலமான கூக்குரலின் குறியீடுகளாக உள்ளன.

வெற்று முழக்கங்களோ,உரத்த குரல்களோ இன்றி ஒரு படைப்புக்கலைஞன்செய்யத்துணியும்இத்தகைய ஆதிக்கத்துக்கு எதிரானஅழகியல் பதிவுகள் தான். இப்பிரச்னை குறித்த அதிகபட்ச கவனத்தை வேண்டுவதாக இருக்கின்றன.

அம்ஷன் குமார்

தோழர் ஆர்.நல்லகண்ணு (ஆர்என்கே) தோழர் சி .மகேந்திரன் ஆகியோருக்கு மனுசங்கடா படத்தை போட்டுக்காட்டினேன். 93வயதான பெருமதிப்பிற்குரிய தோழர் ஆர்என்கே அவர்கள் இந்திய கம்னியூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர். மக்கள் நலப்போரட்டங்களும் தியாகங்களும் நிறைந்த நெடிய வரலாறாக அவரது வாழ்க்கை விளங்குகிறது. படத்தை வெகுவாகப் பாராட்டினார். திரையரங்குகளைத் தாண்டி படத்தை மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பள்ளிகளில் திரையிட்டுக் காட்டவேண்டும் என்றார். மனுசங்கடா பாடல் எழுதிய கவிஞர் இன்குலாப் பற்றி பேச்சு எழுந்தது. படத்திற்காக சமீபத்திய சாதி வெறித்தனங்களை அவர் பாடல் வரிகளில் சேர்த்திருப்பதை கூறினேன். அதனால் பழைய பாடல் வரிகளில் இடம் பெற்ற குளப்பாடி சம்பவம் இதில் இடம் பெறவில்லை என்பதை தெரிவித்தேன்.1980 இல் பெரம்பலூரிலுள்ள குளப்பாடி கிராமத்தில் ஜாதி வெறிபிடித்த சிவசாமி தனது கிணற்றில் தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் குளித்தது பொறுக்கமுடியாமல் நீரில் மின்சாரம் பாய்ச்சிக் கொன்ற சம்பவம் இன்குலாபை பின்வருமாறு எழுத வைத்தது.

`குளப்பாடி கிணத்து தண்ணி புள்ளைய சுட்டது
தண்ணியும் தீயாய் சுட்டது `

தோழர் ஆர் என்கே அவர்கள் அச்சமயம் விவசாய சங்கத் தொழிலாளர் தலைவராக இருந்தார்.அவரது முயற்சியின் விளைவாக அப்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரான திரு.அழகர்சாமி சட்டமன்றத்தில் இதுபற்றிய கவனத்தைக் கொண்டுவந்தார்.

தோழர் சி.மகேந்திரன் எனது நெடுநாளைய அன்புத்தோழர். படம் பற்றி நுணுக்கமாக பல கருத்துகளை தெரிவித்தார். இருவர் பேசியதையும் விரைவில் காணொளியாக யூடிபில் பார்க்க முடியும். அவர்களுக்கு படத்தைக் காட்ட முடிந்தது எனக்கு வாய்த்த அரிய சந்தர்ப்பம்.