இன்று டெக்சாஸில் சி.என்.என் தொலைக்காட்சியில் ஜனநாயகக் கட்சியின் விவாதம் நடைபெற்றது. டெக்சாஸ், ஓகாயோ ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் இருக்கும் ஹில்லரிக்கு இந்த விவாதம் ஒரு முக்கிய வாய்ப்பாக இருக்கும் என கருதப்பட்டது. இந்த விவாதம் மூலம் தன் ஆதரவு வாக்குகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய சூழலில் ஹில்லரி இருந்தார்.
பொதுவாகவே விவாதங்களில் ஹில்லரி, ஜான் எட்வேர்ட்ஸுடன் ஒப்பிடும் பொழுது ஒபாமா அவ்வளவாக எடுபடுவதில்லை. பல இடங்களில் ஒபாமா தடுமாறுவார். ஹில்லரி தன் கருத்துக்களை தெளிவாக விவாதங்களில் எடுத்துரைப்பது அவருக்கு சாதகமான விடயம்.
இந்தக் காரணத்திற்காகவே Super Tuesdayக்குப் பிறகு ஒபாமாவுடன் அதிகளவு விவாதங்கள் நடத்த ஹில்லரி கோரியிருந்தார். ஆனால் ஒபாமா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அது குறித்த சர்ச்சைகளும் நிலவியது. ஹில்லரி அணியின் சார்பாக ஒபாமா விவாதத்திற்கு வர மறுப்பதாக விளம்பரங்களும் வெளியிடப்பட்டது.
சமீபத்தைய தொடர் தோல்விகளுக்குப் பிறகு இன்றைய விவாதம் ஹில்லரிக்கு முக்கியமானதாக கருதப்பட்டது.
ஆனால்…
இந்த விவாதம் இது வரை இருந்த விவாதங்களுக்கு நேர்மாறாக இருந்தது. ஹில்லரியை விட ஒபாமா சிறப்பாக செய்தார்.
என்னைக் கவர்ந்த சில விடயங்கள்
– க்யூபா குறித்த கேள்வி எழுந்த பொழுது ஹில்லரி, ஒபாமா இடையேயான வெளிநாட்டு உறவுகள் குறித்த முக்கியமான வேறுபாட்டினை உணர முடிந்தது. ஹில்லரி அமெரிக்கா க்யூபாவுடன் உறவுகளை பேண சில நிபந்தனைகள் விதிக்க வேண்டும் என்றார். அமெரிக்காவிற்கேயுரிய மேலாதிக்க தன்மையுடன் (Hegemony) ஒரு அமெரிக்க ஜனாதிபதி க்யூபாவிற்கு செல்வது குறித்த கருத்துகளை தெரிவித்தார். ஒபாமா அதனை மறுத்தார். நாடுகளுடான உறவை அத்தகைய மேலாதிக்க தன்மையுடன் அணுக கூடாது என்ற கருத்தை முன்வைத்தார். நம் நண்பர்களுடன் மட்டும் பேசக்கூடாது. எதிரிகளுடனும் பேச வேண்டும் என்றார். அவர் ஜனாதிபதியானால் அதனை நடைமுறைக்கு கொண்டு வந்தால் ஒபாமா உலக நாடுகளிடையேயான உறவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வர முடியும். (அமெரிக்க அதிகார மையம் அதனை அனுமதிக்குமா என்ற கேள்வி ஒரு புறம் உள்ளது)
– பொருளாதார சூழல் குறித்த கேள்விக்கு ஒபாமா அளித்த பதிலுக்கும், ஹில்லரி அளித்த பதிலுக்கு பெருத்த வேறுபாடு இருந்தது. ஹில்லரியின் அனுபவமும், ஒபாமாவின் அனுபவமின்மையும் வெளிப்பட்ட தருணங்களில் இது முக்கியமானது.
– ஹில்லரிக்கு ஒபாமாவை எதிர்த்து எத்தகைய பிரச்சரத்தை மேற்கொள்வது என்பதில் குழப்பம் உள்ளது போலும். அதனால் தான் ஒபாமா வேறு ஒருவரின் உரையை காப்பியடித்து பேசினார் (Plagiarism) என்றெல்லாம் பேசுகிறார். Hillary sounded very silly
– ஈராக் குறித்த கேள்விகள் வழக்கம் போல ஹில்லரிக்கு பலவீனமான விடயம். ஒபாமா ஈராக் விடயத்தில் தன்னுடைய Judgement சரியாக இருந்தது என்பதை தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறார். அது போல மெக்கெயினை எதிர்த்து தன்னால் மட்டுமே போட்டியிட முடியும் என்ற ஒபாமாவின் கருத்தும் பலமாக எடுபட்டது போல தான் தோன்றியது.
– ஒபாமாவின் பேச்சு, ஹில்லரியின் தீர்வுகள் (Speech Vs Solutions) என்ற கேள்வி எழுந்த பொழுது ஒபாமாவின் பதில் ஹில்லரியின் புதிய அஸ்திரமும் பலவீனமடைந்து போனதை தான் தெளிவுபடுத்தியது.
டெக்சாஸில் ஹில்லரி வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில், இந்த விவாதம் ஒபாமாவிற்கே சாதகமாக உள்ளது போல தோன்றியது.