Tag Archives: வாயு

சிரியா – ஒபாமா நலமா?

சிரியா பிரச்சினையின் 101 என்ன என்பதை பா ராகவன் தி ஹிந்துவில் எழுதுகிறார். சிரியா ஏன் திடீரென்று செய்திகளில் அடிபடுகிறது?

ஒபாமாவிற்கு இந்த மூன்று மாத காலம் சிரமதசை நடக்கிறது. இதற்கு மாற்றாக குரு பார்வை, சுக்கிர பலம் எல்லாம் கிடைத்தால் நன்றாக இருக்கும். குரு போன்ற முக்கிய கிரகம் பார்ப்பதுதான் சிரியா மீது போர்மேகங்கள் சூழ்வதற்கான அஸ்திவாரம்.

இந்த மாத இறுதியில் ஒபாமாவின் சேமநல காப்பீடு திட்டம் முழுவீச்சுடன் இயங்கப் போகிறது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் சகல அமெரிக்கருக்கும் உடல்நல பாதுகாப்பு திட்டத்தை முடக்க எதிர்க்கட்சி திட்டம் போட்டிருந்தது. இந்த மாதிரி தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு தலைவலி கொடுக்கும் ரிபப்ளிகன் கட்சியை எப்படி சமாளிப்பது? முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பது போல் குடியரசு கட்சிக்கு பிடித்தமான நாட்டுப்பற்றை முதலில் கையில் எடுத்தார் ஒபாமா.

ஸ்னோடென் கிடைத்தார். அவரும் உலக மகா ரகசியம் போல் அமெரிக்கா வேவு பார்க்கிறது என்பதை சொல்கிறார். தேசநலன், தீவிரவாதிகளை கண்காணித்தல், அமெரிக்காவை பாதுகாத்தல் போன்ற விஷயங்கள் செய்தியில் அடிபடுகின்றன. Tea party செயல்பாடுகளை வருமானவரித்துறை மூலம் ஒடுக்கியதில் இருந்து ஒபாமா மீள்கிறார். தேயிலைக் கட்சிகாரர்களின் கெடுபிடிகளை மறக்கடித்து கொடி காத்த குமரனாக பராக் ஒபாமா மிளிர்கிறார்.

கொஞ்ச நாள் போனதும் எட்வர்ட் ஸ்னோடென் பழைய செய்தியாகிப் போகிறார். மீண்டும் ஒபாமா கேர் தடுக்கப்பட வேண்டும் என்று போர் முரசு கொட்டுகிறார்கள் ரிபப்ளிகன் கட்சியினர். எப்படித் தப்பிப்பது? இப்பொழுது Wag the Dog சமயம். அமெரிக்காவே சண்டக்கோழி. இதில் மிகப் பெரிய சண்டியர்களாக குடியரசுக் கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அஸ்திரம்தான் ”போர்”. ஒபாமாவே அதை கையில் எடுத்தால்…?

ஒபாமா கேர் பின்னுக்குத் தள்ளப் படுகிறது. சேமநலத் திட்டத்தை தடுத்து நிறுத்துவதைப் பற்றி பேசுவதற்கு பதில் போர் மூண்டால் எவ்வளவு ஏவுகணை விற்கும்… எத்தனை எஃப்16 தயாரிக்கலாம்… என்று முட்டைக்கணக்கு போடத் துவங்கி இருக்கிறார்கள். பெட்ரோடாலரும் வலுக் கொண்டது. ரூபாயும் போன்ற இன்ன பிற நாணய மதிப்புகளும் வீழ்ச்சி முகம் கொண்டன. இது பொக்கீடு (பட்ஜெட்) சமயத்தில் ஒபாமாவின் கரத்தை வலுப்படுத்தும். அப்படி இல்லாமல், அப்பொழுதும் பால் ரையான் & மார்க்கோ ரூபீயோ கோஷ்டியினர் தர்ணா நடத்தினால், சிரியா மீது நிச்சயம் குண்டு விழும்.

அதெல்லாம் சரி… சிரியாவில் எண்ணெய் இருக்கிறது என்கிறதே கட்டுரை… எவ்வளவு இருக்கிறது? சுவத்துக் கீரை வழிச்சுப் போடுடி, சொரண கெட்ட வெள்ளாடச்சி என்போமே அது போல் உலகத்தின் மொத்த பங்கில் 0.4% (0.004)! அது சும்மா அடுப்பு பொங்கக் கூடக் காணாது.