Tag Archives: ஜோ

இந்தியாவில் இருந்து வந்தோர் எவரை ஆதரிக்கிறார்கள்?

இந்தியாவில் வசிக்கும் இன்னொரு தமிழரின் பார்வை:

“கமலாவா டிரம்பா என்பதை விட வெல்லப்போவது இலான் மஸ்க், பாலாஜி ஸ்ரீனிவாசன் முதலியவர்களின் conviction-ஆ அல்லது அமெரிக்காவின் (டிவி) ஊடகங்களின் கணிப்பு (எ) பிரசாரமா என்பதில்தான் எனக்கு அதிகம் சுவாரசியம்! என்னுடைய மற்றுமொரு கணிப்பு என்னவென்றால் அமெரிக்கவாழ் இந்தியர்கள் டிரம்ப் வருவதை (அவர் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரானவர் என்பதனாலேயே) விரும்பவில்லை. கமலாம்மா இந்தியர் என்பதைக் காட்டிலும் டிரம்ப் வந்தால் என்ன பண்ணித் தொலைவாரோ (னோ) என்பதுதான் அவர்களின் கவலையாக உள்ளது.”
———-

இனி என் பார்வை:

அமெரிக்க இந்தியர் கொள்கைப் பற்றாளர் கிடையாது.
அமெரிக்க இந்தியருக்கு மூன்றே குறிக்கோள்:
1. பணம் – பங்குச் சந்தையில் காசு பார்த்தல்
2. குழந்தை – அவர்களை ஒரு வழியாக்குதல்
3. சோம்பேறி – ஓய்வு, டிவி, வம்பு பேசுதல்

அவர் செங்கொடி ஏந்தி சித்தாந்தத்தைத் தூக்கிப் பிடித்ததில்லை.
அவர் அரியணையில் அமர்ந்து மார்கஸ் அரேலியஸ் (Marcus Aurelius) மாதிரி ‘தியானங்களின் சுருக்கம்’ சிந்திப்பதில்லை.
அவர் அரசியல் பற்றி கவலைப்படாத நடுத்தர வர்க்கம்.

அவருக்கு தங்கம் வேண்டும். திருட்டு டிவி வேண்டும். கிசுகிசு வேண்டும். கிளுகிளுப்பு வேண்டும். முகப்புத்தகமும் இன்ஸ்டா ரீலும் வேண்டும். விஜய்யும் அஜீத்தும் வேண்டும்.
சொல்லப் போனால் தமிழ்நாட்டில் வசிப்பதாகவே நினைப்பு.
அவருக்கு தமிழக அரசியல் விவரமாகத் தெரியும். அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கையோ உக்ரெயினுக்கான உதவிக்கான பின்புலமோ அறிய வேண்டிய ஆர்வமோ தேவையோ இல்லாத ஜந்து.

புலம் பெயர்ந்தோருக்கு எதிரானவர் டிரம்ப் என்பதே ஆதிசங்கரரை ‘மாயாவாதி’ எனத் திட்டுவது போல் அர்த்தமற்றது.
சட்டபூர்வமாக உள்நுழைந்தோருக்கு குடியுரிமை தருவதற்கு தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும் கமலா ஹாரிசும் இழுத்தடிக்கிறார்கள்.
அந்த மாதிரி எச்1.பி., பி1 விசாக்களில் வந்தவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் சட்டு புட்டென்று குடியுரிமைத் தருவதாக விவேக் ராமசாமியும் டொனால்ட் டிரம்ப்பும் உறுதியளிக்கிறார்கள்.

எல்லோருக்கும் இருபது டாலர் குறைந்த பட்ச ஊதியம் தருவதாக கமலா ஹாரிஸ் வாக்குறுதி அளிக்கிறார்.
அது வாங்க முடியாமல் அல்லாடும் அப்பாவி அத்துமீறி ஊடுருவல்வாதிகளை, அவர்களின் சொந்த ஊருக்கே திருப்பி அனுப்புவதாக வாக்குறுதி அளிக்கிறார் டிரம்ப்.

கமலா வழிப்படி பார்த்தால் ஏழைகளை உறிஞ்சும் சக்தி டெமொகிரட்ஸ் தான்.
டிரம்ப் வழிப்படி பார்த்தால் சட்டபூர்வமாக வசிப்போருக்கு சரியான சம்பளம் வரும் பாதைக்கான கால்கோள் இடுபவர் ரிபப்ளிகன் தான்.

முழு ராஜ்ஜியமும் கையில் இருந்த போதும் துப்பாக்கிகளைத் தடை செய்யும் திட்டமோ, புவி வெப்பமயமாதலைக் குறைக்கும் சட்டமோ இயற்றாத ஒபாமா போன்ற ஹாரிஸை நம்பும் இந்திய வம்சாவழியினர் அதிகம்.
அவர்கள் மாற்றத்தை விரும்பாதவர்கள்.
ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால் பங்குச் சந்தை சரியாது. பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும். ஆள் குறைப்பு நடக்காது.
நேற்று போல், நாளையும் இருக்கும்.

டிரம்ப் வந்தால் களை பிடுங்கப்படும். அரசாங்க ஊழியர் முதல் கடைநிலை இட்லி கடை எல்லோரும் ஓராண்டிற்காவது சிரம தசைக்கு உள்ளாவார்கள்.
ட்ரம்ப் ஆதரவாளர்கள் இந்த அறுவை சிகிச்சையை விரும்புகிறவர்கள்.
குற்றங்கள் குறைய வேண்டும் என நினைப்போர் டிரம்ப் பக்கம். குழந்தைகளுக்கு அறியா வயதிலேயே பாலியல் கல்வி கூடாது என நினைக்கும் பழமைவாத கலாச்சார காவலர்கள் டிரம்பின் பக்கம்.
முந்தா நாள் போல் நாளையும் இருக்கும்!

Generalization is the mother of all screwups.

'நான் சம்பாதிப்பதை அரசாங்கம் பிடுங்கிக் கொள்ளலாமா?' – ஜோ

கடந்த ஞாயிறன்று பராக் ஒபாமா ஒவ்வொரு தெருவாக சென்று வாக்கு சேகரித்தார். அப்பொழுது குழாய்களை சரி செய்யும் ஜோ (Joe Wurzelbacher) என்பவர் கேட்ட கேள்விக்கு விரிவாக பதிலளிக்கிறார்:

வருடத்திற்கு 250,000 டாலருக்கு மேல் சம்பாதிக்கும் என்னை மேலும் வரி போட்டு வாட்டுவது சரியாகுமா? என்பது அவருடைய கேள்வி.

விவாதம் முடிந்தவுடன் சிபியெஸ் தொலைக்காட்சியின் கேட்டி கௌரிக் உடன் ஜோ உரையாடினார். அந்த ஒளிப்பதிவு மற்றும் பேட்டி:
Joe The Plumber's Chat With Couric – Horserace

மேலும் விவரங்களுக்கு: And Then There’s Joe – The Caucus Blog – NYTimes.com

உள்ளடக்கமும் உருவமும்: துணை ஜனாதிபதி வேட்பாளர்கள் விவாதம்

அமெரிக்க ஜனாதிபதியாக போட்டியிடும் பராக் ஒபாமாவுக்கு துணையாகப் போட்டியிடும் ஜோ பைடனும், குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கெய்னுடன் களமிறங்கும் சாரா பேலினும் முதலும் கடைசியுமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட விவாதத்தில் கலந்து கொண்டனர்.

இந்த விவாதத்தில் யாரும் வெற்றி பெற்றது போல (எனக்குத்) தெரியவில்லை. ஆனால், ஜோ பைடன் வென்றதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். எனினும், சாரா பேலினும் சரிசமமான மனங்களை கவர்ந்திழுத்து, ஏற்கனவே குடியரசு சார்புடையவர்களையும் தக்கவைத்திருப்பார் என்றே எனக்குப் படுகிறது.

ஏன்?

  • ஒபாமாவின் திட்டங்களை பைடன் வலியுறுத்தினார்.
  • ஜான் மெகயினை மிகக் கடுமையாக தாக்கினார் பைடன்.
  • அவ்வாறே பராக் ஒபாமாவை எள்ளலுடன் விமர்சித்தார் பேலின்.
  • ‘தான் உள்கை அல்ல!’ → தலைநகருக்கு அப்பால் தன்னுடைய பேட்டை என்பதால் அனைத்தையும் புரட்டிப் போடுவேன் என்றார் பேலின்.

ஸ்டைலு:

  • பேலின் குத்திக் கொண்டிருந்த அமெரிக்க கொடி பின் பளபளாவென்று கண்ணைப் பறித்தது – நாட்டுப்பற்று மிக்கவர்.
  • ‘என் வழி தனி வழி’ என்று கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தனக்குத் தெரிந்த விடைகளை சொன்னார் பேலின்.
  • ‘மில்லியன், பில்லியன்’ என்று விஜய்காந்த் படம் போல் பைடன் பட்டியலிட்டார்.
  • தமிழ்க் கவியரங்குகளில் எல்லாவற்றையும் இரண்டாம் தடவை ரிப்பீட்டேய் என்று முழங்குவார்கள். பைடனும் தமிழகம் வந்திருப்பார் போல… பேசியதை எல்லாம் இரண்டு தடவை மறுமொழிந்தார்.

விஷயம்

  • ‘புஷ் ராஜாங்கம் மாபெரும் தவறுகளை இழைத்திருக்கிறது’ என்பதை வெளிப்படையாக பலமுறை ஒப்புக்கொண்டார் அவரின் கட்சியை சேர்ந்த பேலின்.
  • ‘என்னுடைய ஜனாதிபதியுடன் வேறுபடும் இடங்களைத் தயங்காமல் வெளிப்படையாக சொல்வேன்’ என்று முழங்கினார் பைடன்.

அப்படியானால்… இறுதியாக?

  • ‘அவரவர் நியாயங்களின் உட்புறச் சுவரைக் குடைந்துபார்க்க எல்லாருக்கும் சாத்தியமில்லை’ என்று பாரா சொல்வது போல் பைடனும் சொல்லி ‘ஆனால், அவரவர்களின் முடுவெடுக்கும் திறனை ஆராய்வது சாத்தியமே’ என்றது நெத்தியடி.
  • ‘புச்சா எதுனாச்சும் சொல்லுபா! இன்னும் பழைய பஞ்சாங்கத்தை வைத்து மாரடித்தால், உனக்கு நாங்க புதுசுன்னு புரியவைப்பதற்குள் தாவு தீருது’ என்பது பேலின் பதிலடி.

இரண்டணா கருத்து

  • பேலின் தம் கட்டி இவ்வளவு பெரிய அரங்கைக் கண்டு மிரளாமல், பைடனின் அதிரடி வினாக்களுக்கு மறைந்தோடி, புஷ்ஷையும் தன்னுடைய கட்சியையும் காவு கொடுக்காமல் → சிரித்து சிரித்து பல கோடி அமெரிக்கர்களை சிறையிலடைத்தார்.
  • இடுப்புக்குக் கீழே அடிக்கவும் தயங்கமாட்டேன் என்று → ஸ்பெயின் விஷயத்தில் மகயின் நாக்குழறியதையும், பேலினை டிக் சேனியோடு ஒப்பிட்டும், ஒபாமாவிற்கான புள்ளிவிவரங்களை பதினெட்டு வயசு பாலகரும் புரியுமாறு ஆணித்தரமாக ரிப்பீட்டியும் ஜோ பைடன் தன்னுடைய அனுபவத்தை எடுத்துரைத்தார்.

'அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்' – செய்தித் தொகுப்பு

1. ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாவதே உலகெங்கிலுமுள்ள மக்களின் விருப்பம்-பி.பி.சி :: தமிழ்செய்தி

ஒபாமாவின் தந்தையின் பிறப்பிடமான கென்யாவில் ஒபாமாவுக்கு 82 சதவீதமான ஆதரவும் இந்தியாவில் 9 வீதமான ஆதரவும் கிடைத்துள்ளது.

2. ஹெச்.2-பி விசா நடைமுறைகளை ஒழுங்குபடுத்த ஒபாமா ஆதரவு! :: வெப்துனியா

அமெரிக்காவில் வேளாண் துறை அல்லாத மற்ற துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் துறைகளில் ஏற்படும் பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்க, வெளிநாடுகளில் இருந்து ஹெச்.2-பி விசா மூலம் குறிப்பிட்ட காலத்துக்கு தற்காலிகமாக ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

3. அமெ‌‌ரி‌க்க ‌நி‌தியை பா‌கி‌ஸ்தா‌ன் இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திராக பய‌ன்படு‌த்து‌‌கிறது: ஒபாமா கு‌ற்ற‌ச்சா‌‌ற்று! :: வெப்துனியா

தீ‌விரவா‌த‌த்து‌க்கு எ‌திரான போரு‌க்காக அமெ‌ரி‌க்கா, பா‌கி‌ஸ்தா‌னு‌க்கு 10 ‌பி‌‌ல்‌லிய‌ன் டால‌ர் நி‌தி அ‌ளி‌‌த்து‌ள்ளது. ஆனா‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் அரசு அ‌ந்த ‌நி‌தியை பய‌ன்படு‌த்‌தி இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திராக போரு‌க்கு த‌ன்னை தயா‌ர் படு‌த்‌தி வரு‌கிறது எ‌ன்று கு‌ற்ற‌ம் சா‌‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

4. இந்தியாவுடன் நிரந்தர உறவு: அமெரிக்க குடியரசு கட்சி விருப்பம்! :: வெப்துனியா

இந்தியா-அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திலும் குடியரசுக் கட்சியின் பங்களிப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது

5. தட்பவெப்ப நிலை : ஒபாமா, மெக்கைனுக்கு ஐ.நா. வலியுறுத்தல் :: யாஹூ

புவி வெப்பமடைவதற்கு காரணமான பசுமைக்குடில் வாயுக்களை (கரியமில வாயு உள்ளிட்டவை) வெளியிடுவதில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் அமெரிக்காவும் முக்கியத்துவம் பெறுகிறது என்ற அவர், உலக அளவில் பொருளாதாரத்தில் மேம்பட்டு இருக்கும் அந்நாடு, புவி வெப்பமடைதலை தடுப்பதற்கு குறிப்பிடத்தக்க வகையில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்குப் பிறகு, அப்பதவியை வகிக்கவுள்ள பராக் ஒபமா அல்லது ஜான் மெக்கைன், தற்போதையை நிலையைக் காட்டிலும் மிகச் சிறப்பான வகையில் தட்பவெப்ப நிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பான் கி-மூன் வலியுறுத்தியுள்ளார்.

6. ஒபாமாவின் காணாமல் போன சகோதரர் கண்டுபிடிப்பு :: கூடல்

பராக் ஒபாமாவிற்கு ஜார்ஜ் ஹூசைன் ஓனியான்கோ ஒபாமா என்ற தம்பி இருக்கிறார். இவருக்கு இப்போது 26 வயது ஆகிறது. இவர் இப்போது ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியின் புற நகர் பகுதி ஒன்றில் வசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறார். ஜார்ஜ் ஒபாமா வேறு ஒரு மனைவிக்கு பிறந்தவர் என்று இத்தாலியின் வேனிட்டி பேர் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

தான் இரண்டே முறை தான் பராக் ஒபாமாவை பார்த்ததாகவும், 5 வயதாக இருக்கும் போது ஒருமுறையும், கடந்த 2006 ம் ஆண்டு பராக் ஒபாமா நைரோபிக்கு வந்திருந்த போது ஒருமுறையும் மட்டுமே பார்த்ததாக ஜார்ஜ் ஒபாமா கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் லண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி டெலிகிராப் என்ற செய்தி தாளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

7. சர்வதேச தலைவர்களுக்கான கூட்டத்தில் கார்த்தி ப.சிதம்பரம் :: மாலைச்சுடர்

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மேடாலின் கே.ஆல்பிரைட் அழைப்பினை ஏற்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் அமெரிக்கா பயணமானார்.

8. யுஎஸ் மீது புதின் தாக்கு :: மாலைச்சுடர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் பலனடையும் நோக்குடன் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒருவர் ஜார்ஜியா பிரச்சனையை கிளப்பி இருப்பதாக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் குற்றம் சாட்டியுள்ளார். அவர் குடியரசு கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைனை குறி வைத்து இவ்வாறு கூறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

9. ஒபாமாவை கொல்ல சதி :: மாலைச்சுடர்

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 750 அடி தொலைவில் இருந்து ஒபாமாவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது என்று அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.