1. இது ரஜினி படமா?
ஆமாங்க… அப்படித்தாங்க தலைப்பிலும் முன்னோட்டத்திலும் சொல்லிக் கொள்கிறார்கள்
2. அனிருத் இசை எப்படி?
ரஜினி படத்துக்கு யார் இசையமைச்சாலும் ஒரே மாதிரிதானே இருக்கும்! தர்பார் மாதிரி, ஜெயிலர் மாதிரி… ஒரே மாதிரி!
3. படம் எப்படி இருக்கு?
ரஜினி வெறியர்னா பல முறை பார்க்கலாம். இயக்குநர் ஞானவேல் பிரியர்னா இரண்டு முறை. சினிமா தாகம் கொண்டவர்னா நீலச்சட்டை மாறன் அலுக்கும் வரை.
4. உங்களுக்கு படம் பிடிச்சிருந்ததா?
நான் ப்ரியா முதல் லிங்கா வரை எல்லாமே நல்லா இருந்ததா நெனக்கிறவன். அவர் நடிச்சா அது ஆஸ்கார்.
5. அபிராமி?
முத்தமென்றால் கமலின் விருமாண்டி..
நடிப்பென்றால் ரஜினியின் வேட்டையன்.
நினைப்பென்றால் ஹம்மா… ஹம்மா (மிடில் கிளாஸ் மாதவன்)
6. வெள்ளித்திரையில் ஓடுமா?
தீபாவளிக்கு சன் டிவி.
கிறிஸ்துமசுக்கு அமேசான்.
அதன் பிறகு ஐபிடிவி.
7. இது யாருடைய படம்?
ஃபாஹத் ஃபாசில் மீண்டும் மீண்டும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னப்படும் என்பதை நிரூபிக்கும் படம்.
8. கதையும் வசனமும்?
அதெல்லாம் ரஜினி படத்தில் தேவையா என்ன? இருந்தாலும் ஓரிரண்டு ‘பேட்ட’ போன்ற அரிதாரங்களும் ’உன்னையக் கட்டிப் பிடிச்சுக்குவேன்; இல்லே வெட்டி சரிச்சுடுவேன்’ போன்ற அண்ணாத்த பன்ச்கள் கூட இல்லாதது ஞானவேலின் திமிர் கலந்த அலட்சியம்.
9.படம் உங்களுக்குப் பிடிக்கலையா?
இந்தியன் 2 போன்ற ஷங்கர் கொடுமைகளுக்கு இதெல்லாம் கோடி தரம் மேல். மெக்காலே என்பவர் இந்திய நவீனக் கல்வியின் பிதாமகன் என்பதெல்லாம் கோடி தரம் புளித்துப் போன பிரச்சாரம். படம் வேலை செய்வது இந்த இரண்டு துருவ உச்சநிலைகளுக்கு நடுவே எங்கேயோ கேட்ட குரல்.
10. லிங்கா போல்… பாபா போல் இருக்கிறதா?
அதெல்லாம் மசாலா. இது தீபாவளி லேகியம்.












