Tag Archives: எண்ணம்

நான்கு சிறுகதை – வாசக அனுபவம்

‘இலக்கியச் சிந்தனை’யால் சிறந்த சிறுகதையாகத் தேர்வாகியுள்ள கதை: Marathadi : மீனாமுத்து: “யாத்தி”

அமெரிக்கா போன்ற சட்டதிட்டங்கள் ஓரளவு கடுமையாக, உடனடியாக நிறைவேற்றும் நாடுகளிலேயே, இந்தக் கொடுமை எளிமையாக, அன்றாடம் நடந்தேறுகிறது, ‘படித்தவர்கள் பண்பற்றவர்கள்’ என்பது போல் பல கேஸ்கள்; சமீபத்தில் கைராசியான நியு யார்க் மருத்துவ தம்பதியர்கள் கைதாகி, குற்றமும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

நிகழ்வை ஆர்ப்பாட்டமில்லாமல் எளிமையாகக் கண்முண் கொணருகிறார். அதிர்ச்சிக்காக மட்டும் இல்லாத நேர்த்தியான முடிவு. மிகவும் பிடித்திருந்தது.

மென்மையான எழுத்துக்களை தட்டச்சும்போது கூட என்னுடைய கீபோர்ட் சத்தமெழுப்பி, சிந்தையைக் கலைத்துப் பொடும். அது போல், சிறுகதையைப் படிக்கும்போது ஆச்சரியக்குறிகள் தொடர்வண்டியாக நடுவில் வந்து ஓசையெழுப்புகின்றன.


Thinnai: “ஒரு நாள் உணவை… – ரெ.கார்த்திகேசு”

குழந்தைகளை கம்பேர் செய்யக்கூடாது; சுஜாதாவையும் சுரதாவையும் ஒப்புமையாக்கி தராசு எல்லாம் கூடாது என்று எண்ணுபவன் நான். இருந்தாலும், முந்தைய கதையில் முழுநீள வாழ்க்கையே விவரித்திருக்க, இங்கு சம்பவம் விரிகிறது.

விவரணப்படம் போல் ஆகிவிடும் அபாயம் இருந்தாலும், அவ்வாறு போரடிக்காத சஸ்பென்ஸ் நோக்கிய விறுவிறுப்பு. மணமான இல்லறத்தில் நிகழ்வதை படம் பிடித்து ஓடவிடும் லாவகம்.

நான் என்ன நினைக்கிறேன் எனக் கேட்டுவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி 10-15 நிமிடம் பேசுவார்கள். சிலர் நம் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டே பேசுவதால் அகலவும் முடிவதில்லை.

போன்ற களையான பிரதேசங்கள்.

தவறவிடக்கூடாத ஆக்கம்.


அ.முத்துலிங்கம் எழுதி விரைவில் வெளிவரப்போகும் சுயசரிதைத் தன்மையான நாவலின் ஓர் அத்தியாயம்தான் மேலே தந்திருப்பது.

என்று பீடிகையுடன் முடிகிறது: Thinnai – யுவராசா பட்டம் – அ.முத்துலிங்கம்

விமர்சிக்கலாம் என்று படிக்க ஆரம்பிக்கும் ஆணவம், தொலைந்து போக வைக்கும் சாமர்த்தியம். ‘நிஜம்தானோ!’ என்னும் பிரமிப்பு. ‘அச்சச்ச்சோ’ என்று தொடரும் பரிதவிப்புடன் பதற வைத்து எழுத்துக்குள் மூழ்க வைக்கிறார்.


நுனிப்புல்: ஐந்தும் ஆறும் – புனைவு என்பது உணர்ச்சிகளை சித்தரிப்பது; கேள்விகளை எழுப்புவது.

‘நந்தா’ திரைப்படத்தில் பல காட்சிகள் சிறப்பாக இருந்தாலும், அந்த துவக்க காட்சியில் நடக்கும் பிரதோஷ உபன்யாசம் மறக்க முடியாதது. எள்ளல்தன்மையுடன் தொடரும் திரைக்கதையில் வீட்டில் நடப்பதைக் காட்டி லெக்சர் மகிமையை சிந்திக்கவைப்பார்கள். திருக்குறள் என்னதான் கலக்கலாக இருந்தாலும், அதைப் போல் போதனை இலக்கியம் எனக்கு அசூயையே தருகிறது.

ஒரு வேளை.. ‘பெண்ணெழுத்தின் நாடித்துடிப்பு பெண்ணிற்குத்தான் புரியும்’ என்னும் மங்கையர் மலர் கால ஃபீலிங்குடன் மனைவியிடம் கொடுக்க, அவரோ லாஜிக்கலாக கேள்விகளை எழுப்பும் அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டார். ‘எலக்கியம்னா அனுபவிக்கனும்; நோ க்வெஸ்டின்ஸ்’ என்று மகளுக்கு ஈசாப் நீதிக்கதைகளை வாசிப்பதுடன் அனுபவம் முடிந்தது.

ஹில்லரி விடைபெற்றுக் கொண்டாரா – டெக்சாஸ் தர்க்கம்: சரசர குறிப்புகள்

இன்று தொலைக்காட்சியில் பார்த்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களின் விவாதத்தில் கவனத்தை ஈர்த்தவை:

  • ‘இளைய தளபதி’ விஜய் பொது நிகழ்ச்சிகளில் அல்லது தான் நடித்த சினிமா படத்திற்கான சன் டிவி பேட்டியில் வரும்போது, பரபிரும்மம் போன்ற நிர்ச்சலனமான முகபாவத்துடன் கலந்து கொள்வார். பராக் ஒபாமாவும் அப்படியொரு அகத்தின் பிரதிபலிப்புகளை வெளிக்கொணராத தோரணையைக் கட்டிக் காத்தார்.
  • இதற்கு நேர் எதிராக இருந்தார் ஹில்லரி கிளிண்டன். இராக் போருக்கு ஆதரவாக வாக்களித்தவர் எவ்வாறு மெகெயினுடன் தர்க்கிக்க முடியும்?‘ என்று ஒபாமா குற்றஞ்சாட்டியவுடன், இருக்கையில் நெளிந்து, ஓரத்திற்கு சென்று பதுங்கிக் கொள்வது போன்ற உடல் மொழி வெளியானது.
  • ஆனால், ஒபாமாவோ, ‘வெறும் வார்த்தைக் கோட்டை எழுப்புகிறார்; அது கூட சொந்த சரக்கல்ல; கட்சித் தலைவர்கள் சொன்னதை ஜெராக்ஸ் போடுகிறார்என்ற ஹில்லரியை, மிகக் கடுமையான குரலில் நடுவில் புகுந்து உலப்பி, கடுமையான தொனியில் கண்டித்தார்.
  • தன்னுடைய நேரம் வந்தபோது, இதற்கு பதிலாக, ‘எனக்கு வாக்களித்த இருபது மில்லியன் மக்கள் மருண்டுதான் போய் இருக்கிறார்களா? அவர்களை அவ்வாறு நம்பிக்கையுடன் செலுத்தவைத்து, என்னைப் பரிந்துரைத்த நாளிதழ்களும் கற்பனையில்தான் மிதக்கின்றனவா? கனவு காண்பது தவறா’ என்று ஒரு போடு போட்டார்.
  • இருவருமே தங்கள் கொள்கைகயும் கோட்பாடும் திட்டங்களும் ஒத்துப் போகின்றன என்றனர்; பெருமளவு வித்தியாசங்களை முன்னிறுத்தவில்லை.
  • ஹில்லரி பேசும்போது, சின்சியராக ஒபாமா எதையோ எழுதிக் கொண்டிருந்தார். கையெழுத்து போட்டு பழகிக் கொண்டாரா அல்லது ஸ்ரீராமஜெயம் எழுதினாரா என்பதை ஹில்லரியிடம் யாரும் வினவவில்லை.
  • ஹில்லரியைப் போலவே, அவர் குறிப்பெடுக்க வைத்திருந்த பேப்பர்களும் படபடவென்று அடித்துக் கொண்டு கவனத்தை சிதற வைத்தன.
  • ஜான் எட்வர்ட்சுக்கு வாக்களித்தவர்களை — இருவர்களுமே குறிவைத்து பேசினாலும், எட்வர்ட்ஸின் பெயரைக் குறிப்பிட்டே வாக்குகளைக் கோரினார் ஹில்லரி. ஒபாமா ஜான் எட்வர்ட்ஸின் பெயரை முன்வைக்கவில்லை. (அவசியமும் இல்லை!)
  • மொத்தத்தில் நிறைய நேரம் ஒபாமா பேசிய மாதிரி காட்சியளித்தது. ஹில்லரியை விட தெளிவாக, கோர்வையாக, சுவையாக, அதிபருக்குரிய மிடுக்குடன் கலக்கினார்.
  • இறுதியாக ஹில்லாரி, ‘என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்களை உலகமே அறியும். எனினும், என்னைவிட அதிகமாக பாதிக்கப்பட்டவர்களான — போர்முனையில் அடிபட்டு, கை காலிழந்து வருபவர்கள், வீடுகளுக்கு மாதாந்திர தவணை செலுத்த முடியாமல் பற்றாக்குறையில் தவிப்போர் உட்பட பலரின் பிரச்சினைகளை பார்த்து வருகிறேன்’ என்று தொடங்கி, நடுவில் ஒபாமாவுடன் மேடையைப் பகிர்வதன் பெருமையை உணர்த்தி, பராக்கையும் மனமாரப் பாராட்டிவிட்டு, ஜனநாயகக் கட்சியின் ஒற்றுமையை வலியுறுத்தி, முத்தாய்ப்புடன் முடித்துக் கொண்டார். இதெல்லாம், ஹில்லரிக்கு வாக்குகளாக மாறி, டெக்சஸில் பெருவெற்றியாகி — பிரதிநிதிகளைக் குவிக்கும் வாய்ப்புகள் குறைவு.
  • மேடைக்கு வருவதற்கு முன்பே ஹில்லரி க்ளின்டன் – வெகு சகஜமாக, ஒபாமாவை நெருங்கி, பரஸ்பரம் கைகுலுக்கி, தங்கள் பாதுகாவலர்களின் உயரங்களை ஒப்பிட்டு, ஜாலியாக அரட்டையடித்துக் கொண்டிருந்ததாக, சி.என்.என் தொகுப்பாளர் ஜான் கிங் பகிர்ந்து கொன்டார்.

தொடர்புள்ள தமிழ் சசியின் பதிவு: ஒபாமா – ஹில்லரி டெக்சாஸ் விவாதம்

முழு விவாதத்தையும் சி.என்.என்.னில் வாசிக்கலாம்.

ஜனநாயகக் கட்சி – என்ன நடக்கிறது?

  • அரிசோனோ, கலிஃபோரினியா போன்ற இடங்களில் அதிகம் வாழும் லத்தினோ (ஸ்பானிய அல்லது போர்ச்சுகீசிய மொழி பேசும் மக்கள்; பெரும்பாலும் மத்திய/தென் அமெரிக்காவிலிருந்தோ மெக்சிகோவிலிருந்தோ குடியெர்ந்தவர்கள்) வாக்கு வங்கியைப் பெற காரணமாயிருந்ததாக டாயில் (Patti Solis Doyle) மாற்றப்பட்டிருக்கிறார்.
  • லத்தீனோக்கள் அதிகம் வாழும் டெக்சாஸில், தற்போதைய நிலையில் ஹில்லரி கிளின்டன் முன்னிலை வகித்தாலும், இந்த மாற்றம் சறுக்க வைக்கலாம்.
  • எனினும், ஆப்பிரிக்க – அமெரிக்கரை, தலைமைப் பதவிக்குக் கொண்டு வந்ததன் மூலம் ஒபாமாவின் கறுப்பின வாக்குகளை சிதறடிக்க முடியும்.
  • மனைவி மிஷேல் வேண்டுகோளுக்கு செவிமடுத்த பராக் ஒபாமா, தன்னுடைய புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முயன்று கொண்டிருக்கிறார்.
  • ஜான் எட்வர்ட்ஸின் ஆதரவைப் பெற ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் இருவரும் பெரும் முயற்சி எடுத்து வருகிறார்கள். கடந்த வியாழன் அன்று ஹில்லரி சந்தித்திருந்தார்; இன்று ஒபாமாவின் மண்டகப்படி.
  • நாளைய ப்ரைமரிக்குப் பிறகு க்ளின்டனின் பிரதிநிதிகள் எண்ணிக்கையை ஒபாமா எட்டிப்பிடித்து விடுவார் என்கிறார்கள்; எனினும், மார்ச் மாசத்தில் நடக்கும் டெக்சாஸ், ஒஹாயோ மாகாணங்களில் தற்போதைக்கு ஹில்லரி பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெல்லலாம் என்று கணித்திருக்கிறார்கள்.
  • குடியரசுக் கட்சியைப் போலவே ஜனநாயகக் கட்சியும், விகிதாச்சார பிரதிநித்துவ கணக்கெல்லாம் போட்டு சமநீதி வழங்காமல், வெற்றி பெற்றவருக்கே அனைத்து பிரதிநிதிகளையும் வழங்கி வந்திருந்தது. 1988 -ல் நடந்த ஜெஸ்ஸி ஜாக்ஸன் x மைக்கேல் டுகாகீஸ் போட்டிக்கு பிறகே இந்த முறை, தற்போதுள்ள நடைமுறைக்கு மாறியிருக்கிறது.
  • எம்.எல்.ஏ/எம்.பி. போன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், கட்சி பெருசுகள் நிறைந்த பெரிய பிரதிநிதிகள் என்றழைக்கப்படும் சூப்பர் டெலகேட்ஸ் கையில்தான் இப்போதைக்கு ஜனநாயகக் கட்சியின் தேர்தல் முடிவுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
  • பெரிய பிரதிநிதிகளைக் கவர்வதிற்கான போட்டியில் ‘யார் மெக்கெயினுக்கு சரியான போட்டி’ என்று நிரூபிப்பதில் இரு வேட்பாளர்களும் கவனம் செலுத்துகிறார்கள். ‘நான் இதுவரை சந்தித்த அளவு அவதூறுகளை ஒபாமா அனுபவித்ததில்லை’ என்று ஹில்லாரியும்; ‘என் அளவுக்கு பணந்திரட்டும் சக்தியும், தெற்கு மாகாணங்களில் புதிய வாக்குகளையும் சேகரித்து வெல்லக்கூடியவர் எவருமில்லை’ என்று ஒபாமாவும் கட்சிப் பெரியவர்களிடம் நல்ல பெயர் எடுக்க முயல்கிறார்கள்.
  • கொசுறு: முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளின்டனையும் ஜிம்மி கார்டரையும், சிறந்த ‘பேசும் புத்தகத்திற்கான’ க்ராமிப் போட்டியில் ஒபாமா வென்று, முதல் பரிசைப் பெற்றுள்ளார்.

பாலாஜி

Prejudiced generalizations: Gangs, drugs, violence & suicides

(வாய்ப்புக்கும் இடமளித்தமைக்கும்) நன்றி: தமிழ் உலா – என்றென்றும் அன்புடன்், பாலா

தமிழ் வலைப்பதிவுகள் பற்றிய பாஸ்டன் பாலாவின் பார்வை

கேள்வி: தமிழ்மணம் சேவை தொடங்கி கிட்டத்தட்ட நான்காண்டுகள் ஆகி விட்ட நிலையில், தமிழ் வலைப்பதிவுலகில் ஏற்பட்ட ஒரு முக்கியமான அல்லது குறிப்பிடத்தக்க விஷயமாக அல்லது வளர்ச்சியாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

பதில்: முதலில் தனிமனிதனாக எனக்கு ஏற்பட்ட வளர்ச்சியை சொல்லி விடுகிறேன். பதிவுலகம் இல்லாவிட்டால் நான் இந்த பரிபக்குவத்தை அடைய இன்னும் பல நாள் ஆகியிருக்கும்.

1995- இல் ‘ஆசை’ படம் பார்த்தபோது இப்படியெல்லாம் வக்கிரம் பிடித்தவர்கள் இருக்க மாட்டார்கள். இயக்குநர் வசந்த்துக்கு அதீத கற்பனை என்று புறந்தள்ளியிருந்தேன். ஆனால், ஒரு மாமாங்கம் கழித்து ‘சத்தம் போடாதே’வில் மீண்டும் ஒரு சைக்கோவை பார்த்தபோது நம்ப முடிந்தது.

அடுத்து கொஞ்சம் பெரிய அளவில் யோசித்தால்…

தமிழில் வலைப்பதிவுகள் மட்டும் இல்லாவிட்டால், மனநிலை பிறழ்ந்தவர்களின் எண்ணிக்கை எகிறியிருக்கும்.

அலுவலில் 14/15 மணி நேர கசங்கல். கணினி முன் இருக்கும்வரை காபி. கணினி விட்டு எழுந்தவுடன் பொய் கும்மாளங்களுடன் கோப்பை நிறைய குடித்தல். உடலை மாசு படுத்தும் இந்த பானங்களை உட்கொள்ளுவதால் முப்பதிலேயே அறுபதைப் போன்ற கிழடு தட்டிய தோற்றம் மட்டுமல்ல. அகமும் வயதாகிப்போகிறது.

இதை மறைக்க இணையம் உதவுகிறது. ‘அந்த நாள் ஞாபகம்’ என்று ஆட்டோகிரா·ப் போட்டு பழைய நினைப்புகளை பகிர்ந்து அலைபாயும் சீற்றத்தை தணிக்க வைக்கிறது.

அயல்நாடுகளில் வேலைக்கோ படிப்பதற்கோ சென்றவர்களின் நிலை மேலும் பரிதாபம். மனைவியை விட்டு பிரிந்து இருக்கும் நிலை சிலருக்கு. சன் செய்திகள் தொட்டு காதலுக்கு மரியாதை போன்ற திரைப்படங்கள் வரை நிஜம் முதல் நிழல் வரை வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் பொறுக்கி என்னும் சித்தரிப்பால், மணமுடிக்காத நிலை சிலருக்கு. உரையாட தோழமை இல்லை. பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாத மேற்கத்திய நாகரிக தனிமைச் சிறை. அமெரிக்காவில் வேலை பார்ப்பவர்கள் விளையாட்டைத் தவிர எதை வேறு குறித்தும் பேச்சை வளர்க்க மாட்டார்கள். சினிமாவா… நோ; செய்திகள் – நோ…நோ; அரசியல் – மூச்!

இவர்களுக்கெல்லாம் வலைத்தமிழ்ப்பூக்கள் வடிகாலாக, அகழ்வாரைத் தாங்கும் நிலமாக, பொறுமைக்கு பேர் போன பூமாதேவியாக ரட்சித்து, மன அழுத்தத்தை நீர்க்க வைக்கிறது.

பெங்களூரு முதல் பாஸ்டன் வரை முந்தைய தலைமுறை போல் குடும்பத்தோடு ஒன்றி வாழாத நிலையில் சுருங்கி பதுங்குகுழி ஜீவனம். பேரக் குழந்தைகளுக்கு போர் அடித்தால் டிவியோ வெப்கின்ஸோ ஓடும். அடுக்களை வேலை முடிந்து களைத்த மனைவியோடு பேசுவதற்கு அந்தக்காலத்திலாவது நாலு நிமிஷம் கிடைத்தது. இன்றைய தொல்லைபேசி, செல்பேசி முதல் நள்ளிரவு அவுட்சோர்சிங் மின் அரட்டை காலத்தில், இல்லத்தரசியுடன் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தால்தான் உரையாடல் உண்டு.

மனதுக்குள் புதைந்து அழுத்தும் சமாச்சாரங்களைக் கொட்டி, அதற்கு கனிவாக நாலு பதில் வார்த்தை பெற இணையத்தை விட்டால் இவர்களுக்கு புகலிடம் இல்லை. விவாகரத்து, மக்கட்செல்வம் திசைமாறுதல் போன்ற பனிகளில் சறுக்காமல், காரோட்ட, வாழ்க்கைச்சங்கிலியாக வலைப்பதிவை பாவித்து போலி வாழ்க்கை வாழ வழிவகுத்திருக்கிறது.

இந்தப் பார்வை சுயமறுப்பை (denial) உருவாக்கினாலும், கொஞ்சம் வெகுசன பத்திரிகைகளின் சிந்தனையை பிரதிபலித்தாலும், தமிழ்ப்பதிவுகள் மீது நான்கு வருடம் முன்பிருந்த நம்பிக்கை உடைந்ததன் நிதர்சனமாக வைத்துக் கொள்ளவேண்டும்.

எப்படி உடைகிறது?

சமீபத்தில் படித்த Influencer: The Power to Change Anything (பார்க்க: Book Selections by Boston Globe – 2007 « Snap Judgment) புத்தகத்தின் உதவியோடு சில குறிப்புகள்.

பிரச்சினகள் நம்மை எப்பொழுதும் சூழ்ந்திருக்கிறது. தனிமனித அளவில் குடும்பத்திற்கான வருவாய் ஆகட்டும்; உலக அளவில் இராக், ஈழம், வறுமை ஆகட்டும்; பணக்காரியாக இருந்தால் பூமி வெம்மை அடைவதாகட்டும்; ஏழையாக இருந்தால் எயிட்ஸ் நோய் முதல் பட்டினி வரை பலவும் இருக்கிறது.

இவற்றைப் பார்த்து புலம்பி ‘எங்கே நிம்மதி? ஏது நீதி?’ என்று சொல்லி ஓடி வருபவர்கள் மட்டும்தான் தமிழ்ப்பதிவுகளை நிறைத்திருக்கிறார்கள். பதிவர்களுக்கு பொறுமை இல்லை; தீர்வுகளை திடமாக முன்னெடுத்துச் செல்லும் திறமை இல்லை.

அந்த மாதிரி இல்லாமல் தனிக்கட்டையாக துடிப்புடன் திட்டத்தை வலியுறுத்தி பெருமளவில் நிறைவேற்றிய சிலரை உதாரணமாக்கலாம்:

1. The New Heroes . Meet the New Heroes . Mimi Silbert | PBS: குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை அனுபவிக்கும் பதினான்காயிரம் சிறைவாசிகளுக்கு மறுவாழ்வு காட்டும் பாதையை சுட்டி, சாதாரண மனிதர்களாக உலா வர வைத்திருக்கிறார். இதே போன்ற அமைப்பை கலிஃபோர்னியா மாகாணமும் செய்து பார்த்து வருகிறது. தாதாக்கள், கட்டப்பஞ்சாயத்து, கள்ளக்கடத்தல், விபச்சாரம், திருட்டு போன்ற பஞ்சமாபாதகங்களுக்கு திரும்ப சென்று விடுபவர்களின் சதவீதம் – அங்கே 70 %. இவரிடம் மாட்டிக் கொண்டவர்களில் பத்தே சதவிகிதம்தான் மீண்டும் பழைய குருடிக்கு செல்கிறார்கள்.

2. Rx for Survival . Global Health Champions . Donald R. Hopkins, MD, MPH | PBS: வறுமைக்கோட்டுக்கு கீழே பாதாளத்தில் வசிக்கும் ஏழைகளை பாதிக்கும் நோய் அது. தோலில் இருந்து பூச்சிகள் குபுக்கென்று வெளியேறும் கினியாப் புழு வியாதி. பாதிக்கப்பட்டவர்களை 99.7% அதிரடியாக குறைத்துள்ளார்.

3. The Purpose Prize | Meet Donald Berwick: விகடனில் ஜோக் படித்திருப்போம். பம்மல் கே சம்பந்தத்தில் பார்த்திருப்போம். உடலுக்குள் அறுவை சிகிச்சைக் கருவிகளை வைத்துவிடுவது முதல் பல்வேறு கவனச் சிதறல்கள். அமெரிக்காவில் நேற்றுதான் ஒப்புதல் போட்டிருக்கிறார்கள். ‘மருத்துவர்களின் அஜாக்கிரதையால் குழந்தை மாறிக் கொடுத்தனுப்பி விட்டால் மகப்பேறுக்கான செலவு இலவசம். அறுவை சிகிச்சை தவறாக செய்தால் பணம் தர வேண்டாம்.’ இந்த மாதிரி பெரிய மனசு அறிக்கை விடாமல், ஒண்ணேகால் லட்சம் உயிர்களை கடந்த பதினெட்டு மாதங்களில் காப்பாற்றியிருக்கிறார். அடுத்த குறிக்கோள்: ஐம்பது லட்சம் பேர்.

இந்த மாதிரி நாலைந்து பேர் தமிழ்மணத்தில் உலாவினால் போதும். ஒருவரின் தாக்கம் பலரை சென்றடையும்.

மேலும் ஒவ்வொரு சாதனைக்கும் பின்னணியில் அவரவர்கள் உறுதியாக நம்புகின்ற வழிகாட்டல்கள் இருந்திருக்கிறன. அதைப் பலரும் பின்பற்றி கடைபிடிக்கக் கூடியதாக மாற்றக்கூடிய திறன் இருந்திருக்கிறது.

இரண்டாவதாக எடுத்துக்காட்டிய டொனால்ட் ஹாப்கின்ஸை மீண்டும் உதாரண புருஷராக எடுத்துக் கொள்ளலாம்.

உலகத்தின் ஒவ்வொரு கிராமத்தின் நீர் ஆதாரத்திலும் கடைபிடிக்க மூன்று சீவாதாரமான பாவனைகளில் கவனம் செலுத்தினார்:

அ) எல்லோரும் தண்ணீரை வடிகட்ட வேண்டும்.
ஆ) யாருக்கு ஏற்கனவே கினியாப்புழு நோய் தாக்கப்பட்டிருக்கிறதோ, அவர் நீர்நிலைக்கு செல்லக்கூடாது.
இ) முதல் இரண்டை எவர் கடைபிடிக்கவில்லையோ, அவரை தைரியமாக மற்றவர்கள் தட்டிக்கேட்க வேண்டும்.

கடைசியாக் உந்துகை நிறைந்த மாந்தர்களை களப்பணியாளர்கள் ஆக்கி இருக்கிறார்.

தமிழ்மணத்துக்கும் வலைப்பதிவுகளுக்கும் கூட டோனால்ட் ஹாப்கின்ஸின் வழிமுறைகள் பொருந்தும்.

ஆசையுடன் சத்தம் மட்டும் போடும்
சைக்கோ பாலாஜி.
பாஸ்டன்.