கல்லுக்குள் ஈரம்: திரைப்பட விமர்சனம்

‘கல்லுக்குள் ஈரம்’ பார்த்த போது ஏழு வயசு. இந்தப் பக்கத்தில் அம்மாவும் அந்தப் பக்கத்தில் அண்ணாவும் அமர்ந்திருப்பார்கள். தேவி காம்ப்ளெக்ஸா, வெலிங்டனா, சித்ராவா என நினைவில் இல்லை. இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு 21ல் உட்கார்ந்திருக்கும் தூக்கக் கலக்கத்தில் இப்படி சேர்த்து வைக்காமல் சாகடிச்சுட்டாங்களே என்பது மட்டுமே தோன்றியது.

சினிமாகாரர்களை கொஞ்சம் சொல்வதால் மனம் இன்றும் ‘க.ஈ.’ படத்தை நினைவில் வைத்திருக்கவைக்கிறதோ? மற்ற பாரதிராஜா எடுத்த, தற்போதைய அமீர் / சசிகுமார் வகையறா எடுக்கும், மதுரைப் பக்கத்தில் உள்ள டவுன் பஸ் மட்டுமே நிற்கும் சந்து பொந்துகளை முதலில் காட்டியதால் நிழலாடுகிறதோ? மனோபாலா, ரங்கராஜன், மணிவண்ணன் போன்ற பிற்கால பிரபலங்களின் கன்னி தொடக்கம் இங்கே இருந்திருக்குமே?

தெரியவில்லை. எனவே, மீண்டும் பார்த்தேன்.

‘முதல் மரியாதை’யின் இளவட்டக் கல் இருக்கிறது. அந்தப் படத்தில் ஜெயிலில் இருந்து திரும்பும் சத்யராஜ் போலவே பாசமிகு மாமன் (சேனாதிபதி?) இருக்கிறார். கவுண்டமணிக்கு மிக விரிவான கதாபாத்திர உருவாக்கம். ’க.ஈ.’ வந்ததற்கு அடுத்த ஆண்டு வந்த பாலைவனச் சோலை கும்பலில் இருந்து இதில் உடல் ஊனமுற்றவராக சந்திரசேகரும், பள்ளி ஆசிரியராக ஜனகராஜும் இருக்கிறார்கள்.

மனதிற்கு நெருக்கமான கதை. திரைப்பட கதாநாயகனை கணவனாக அடைய விரும்பும் சினிமா மோக மனம் கொண்ட விஜயசாந்தியும் டீக்கா டிரெஸ் போட்டிருக்கும் ஆங்கிலம் பேசும் அடாவடி ஆதர்ச இயக்குநரை விரும்பும் அருணாவும் வசிக்கும் கிராமம். நாள் முழுக்க உழைத்து, அரை வயிற்றுக்கு சாப்பிட்டு, கோலமிக்க ஆறும், ஓய்வெடுக்க மலைமுகடுகளும், அடர்த்தியான காடுகளும் கொண்ட கனவு கிராமம். முனிக்கு படையல் போட்டதில் தெய்வ குற்றமும், அடுத்தவர் வாழ்க்கையை மெல்வதில் சுகமும் காணும் நெருக்கமான உறவு வேண்டாமலேயே உங்களைத் துரத்தும் கிராமம்.

படத்தில் உள்ள அத்துணை கதாபாத்திரங்களை ஆழமாக உலவவிடவில்லை. மாடன் வழிபாட்டை விரிவாகக் காட்டவில்லை. உள்ளூர் பெண்ணொடு ”டைரக்டர்” இப்படியெல்லாம் நடந்து கொள்வது சாத்தியமேயில்லை. இதற்கு முந்தைய ஆண்டு வந்த “புதிய வார்ப்புகள்” போல் அசல் தெருக்கூத்தைக் காணமுடியவில்லை, என்றெல்லாம் விமர்சிக்கலாம்.

ஆனால், இரண்டு மணி நேரத்தில் கட் அவுட் மாந்தர்களையும் தோட்டி குடும்பத்தையும் இன்று கூட யாரும் இவ்வளவு இயல்பாக கோர்க்கவில்லை என்பதால் சபாஷ் போட வைக்கிறது. அப்படி கோர்த்தால் என்ன ஆகும் என்பதை நிதர்சனமாக முடிப்பதால் முக்கியமாகவே நிற்கிறது. எல்லாவற்றையும் விட ஊரில் இருப்போர் வாழ்க்கையையும் வருகை தருவோர் இயல்பையும் உணர்த்துவதால் இன்றும் விருப்பத்துடன் ரசிக்க வைக்கிறது.

Who is Who in Tamil TV Morning Shows

ஒவ்வொரு நாளும் காலையில் கன்னலுக்கு ஓரிருவர் வருகிறார்கள்.

கலைஞர் டிவியின் ‘விடியலே வா’வில் திராவிடர் கழக வரலாறு சொல்ல சுப. வீரபாண்டியனும் ”தீதும் நன்றும்” மனுஷ்யபுத்திரனும்; கூடவே குளிராடி மாட்டிக் கொண்ட டாக்டர் காளிமுத்து மாதிரி சித்த வைத்தியரும் வருகிறார். சிறப்பு விருந்தினர் நேர்காணலும் தினசரி உண்டு.

சன் தொலைக்காட்சியில் ஆன்மிகக் கதைகள் சொல்ல கி சிவகுமார்; அரட்டை அடிக்க பாரதி பாஸ்கரும் ராஜாவும்; சப்த நிமிடங்கள் சொல்ல குரல்வளமிக்க சண்முகம். வணக்கம் தமிழகத்தில் வரும் பிரபலங்கள், பெரும்பாலும் திரைத்துறை சார்ந்து இருக்கிறார்கள்.

பொதிகையில் இராமாயணத்தை வேளுக்குடியும் சிவனுக்கு இரா. செல்வக்கணபதியும்; நான்மணிக்கடிகைக்கு சாரதா நம்பி ஆரூரனும், தியான யோகம் சிந்திக்க ஜி கே பாரதியும்; ‘உயிர் யாரிடம்’ சொல்ல டாக்டர் ஜெயம் கண்ணன். தூர்தர்ஷனிலும் ஓவியரோ ஆசிரியரோ வந்து நேர்முகம் கொடுக்கிறார்கள்.

ஜெயாவில் உபன்யாசம் உண்டு. கூடவே (கமல் புகழ்) கு ஞானசம்பந்தனும் உண்டு. நான் பார்த்த நேற்று பொருளாதார வித்தகர் வந்து பங்குச்சந்தையில் முதலீட்ட அழைத்தார்.

பேரா. கு. ஞானசம்பந்தன் புத்தகங்களையும் தமிழிலக்கிய வரலாறையும் நயம்பட எடுத்துரைக்கிறார். மனுஷ்யபுத்திரனை அவரின் சட்டைத் தேர்வுகளுக்காக பார்க்க வேண்டும்; ’இவர் ஒரு காலத்தில் புதுக்கவிதை எல்லாம் எழுதினாராக்கும்’ என்று சொன்னால் நம்பமுடியாதபடி பேசுகிறார். சுப வீரபாண்டியனின் புளித்த மாவை இன்னும் ஒரு இழை கூட எவரும் திரிக்க இயலாது. சிவகுமாரை அவ்வப்போது நுழைக்கும் கம்ப ராமாயணத்திற்காக கேட்கலாம். பச் பச் பளிச்களுக்காக சண்முகத்தை தவறவிடக்கூடாது. ஆனால், டாக்டர் ஜெயம் கண்ணன் மட்டும்தான் ஃபேஸ்புக் குறித்து சொற்பொழிவாற்றுகிறார்.

இதையெல்லாம் காலங்கார்த்தாலே அலுவல் கிளம்பும் அவசரத்தில் யார் பார்க்கிறார்கள் என்பதெல்லாம் நீல்சன் சம்பந்தப்பட்ட விஷயம். ’டிக்… டிக்… டிக்’கில் வரும் கமல்ஹாசனின் விடியல் போல் பாலிமரில் வரும் திரை முன்னோட்டத்தில் துவங்கும் காலை எனக்கு பிடித்தமானது.

HBO Serials – “Getting On”: Doctors vs Nurses vs Patients

சன் தொலைக்காட்சி எதற்காக அதிகம் பார்க்கப்படுகிறது? கலைஞர் முன் நிகழ்த்தப்படும் கலை மற்றும் குத்தாட்ட நிகழ்ச்சிகளுக்காகவா? அல்லது வணக்கம் தமிழகம் போன்ற உரையாடல்களும் செய்திகளும் அறியவா? நிச்சயமாக, ராதிகா நடித்து, பாரா போன்றோர் எழுதும் நெடுந்தொடர்களுக்கத்தான்.

நான் எச்.பி.ஓ. பக்கம் ஒதுங்குவதும் HBOவின் சீரியல்களுக்காகத்தான்.

இந்த வருடம் மூன்று சுவாரசியமானதாகத் தெரிகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட True Detective ஏமாற்றவில்லை. அதைத் தனியாக கவனிப்போம்.

பிபிசி-யில் இருந்து அறிவுக்கடன் வாங்கி Getting On உருவாகி இருக்கிறது. ஆஸ்பத்திரியில் நடப்பதை வைத்து காமெடி செய்கிறார்கள். ER, Grey’s Anatomy போன்றவை மருத்துவமனையை இறுகிய முகத்துடன் அணுகி தமிழ்த் தொலைக்காட்சி போல் அழ வைத்து, நேஷனல் ஜியாகிரபி போல் உடலின் கூறுகளை அணு அணுவாக ஆராய்ந்து, பி.பி.எஸ். போல் ஆவணப்படத்தின் ஆழத்துடன் நோய்களையும் சிகிச்சைகளையும் சொல்வதைப் பார்த்த கண்களுக்கு ஆறுதலாக இருந்தது.

முன்னாபாய் எம்பிபிஎஸ் பார்த்ததால் மட்டும் அல்ல… மருத்துவர்களை விட நர்ஸ்கள் மேல் நிறையவே மரியாதை உண்டு. மனைவியின் பிரசவத்தின் போது கண்கூடாக பார்த்ததினால் இருக்கலாம். உறவினர்களை பார்க்க செல்லும்போது இராப்பகல் பாராமல் உழைக்கும் சிரத்தையை தரிசித்ததால் இருக்கலாம். எச்.பி.ஓ.வில் வரும் “கெட்டிங் ஆன்” அவர்களின் சிரமங்களை கீழிரக்காமல், நகைச்சுவையாக சித்தரிக்கிறது.

”அரட்டை அரங்கம்” ஆரம்பிக்கும் முன்பு விசுவும், “சம்சாரம் அது மின்சாரம்” ஆல்பர்ட்டு ஆவதற்கு முந்தைய கிஷ்மூவும் தோன்றிய தூர்தர்ஷன் நிகழ்ச்சியில், மேல்நாட்டு கிஷ்மூ ஆங்கிலத்தில் பேசப் பேச, அதைத் தமிழில் விசு மொழிபெயர்ப்பார். அவர் “Peace” என்பார். விசுவோ, “பட்டாணி” என்பார்.

கொஞ்சம் போல் ஆத்திரமான கிஷ்மூ “Peace… Peace…”. விசு “பட்டாணி… பட்டாணி…”. இப்படியே நாலைந்து நிமிடம் எல்லா உணர்ச்சிகளிலும் வடிவங்களிலும் பட்டாணியும் அமைதியும் அல்லல்படும். அதைப் போன்ற எளிமையான துணுக்குகளும், வாழ்க்கையின் அபத்தங்களும், ஆராய்ச்சிகளின் வெற்றுணர்தல்களும், இன்ஷூரன்சின் அராஜகங்களும் போகிற போக்கில் கிண்டல் அடிக்க எச்பிஓ சரியான கன்னல்.

அமெரிக்காவிலும் அறிஞர் அண்ணா நினைவு நாள்

இன்று அண்ணாவின் நினைவு நாள். அவருக்கு அமெரிக்காவில் கூட அணுக்கத் தொண்டர்கள் இருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவர் கெண்ட்ரிக் லமார். அவரின் சமீபத்திய நினைவாஞ்சலியை கீழேக் காணலாம்.

இருவரின் ஊரும் ”கா”வில் அரம்பிக்கிறது. காம்ப்டனில் பிறந்து வளர்ந்தவர் கெண்ட்ரிக். காஞ்சீவரத்தில் பிறந்தவர் அண்ணா. “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்றார் அண்ணா. லமாரின் பாடலைக் கேட்டு எல்லோரும் அந்த வேத வாக்கியத்திற்கு ஒப்புக் கொண்டு சாமியாடுவதை விழியத்தில் பார்த்திருப்பீர்கள்.

”It’s a revolution, I suppose
We’ll paint it red to fit right in”
– என்கிறார் கென்ட்ரிக். புரட்சித் தலைவருக்கு குரு என்னுடைய குருதானே என்பதை இந்த வரிகள் உணர்த்துகின்றன.

அதற்கு முன் கோவில் சுவர்களில் சிவப்பும் வெளுப்பும் இருக்கும். அதை மாற்ற தி.மு.க., அதிமுக, தே.மு.தி.க., என எல்லோர் கொடிகளிலும் சிகப்பை அறிமுகம் செய்து, பட்டி தொட்டியெல்லாம் கொள்ளையடித்தவர் அண்ணா.

”Bury me alive, bury me with pride”
– என்கிறார் லமர். அண்ணா இருக்கும்போதே பதவியாசை கொண்டு போட்டி நடந்ததை இங்கேக் குறிப்பிடுகிறார். அறிஞர் ஆவதற்கு முன்பே அண்ணாவை புதைத்துவிட்டதை குறிப்பால் உணர்த்துகிறார் கெண்ட்ரிக்.

இந்தப் பாடலின் போது டெய்லர் ஸ்விஃப்ட் தலையாட்டுவது துணையிருந்தாலும் அதை மேடையில் ஏற்றாத அண்ணாவின் நற்குணத்தையும் மக்கள்செல்வம் இல்லாத நிலையையும் நமக்கு அறிய வைக்கிறது.

கடல் கடந்து அண்ணா புகழ் பாடும் கெண்ட்ரிக் வாழ்க! அவரின் இசைக்கு ஆடும் ஸ்விஃப்ட் புகழ் ஓங்குக!!

அறம் – ஆகாரம் – ஆகாத்தியம்

கல்ப காலம் கழித்து நேற்று அன்னா ஹசாரேவாக இருந்தேன்.

இதுதான் காரணம் என்றில்லை. கடையில் வாங்கும் பொறை போன்ற தானியக் கலவைகளின் மேல் கோபம் ஒரு காரணம். அதே அதே காலை உணவா என்னும் அலுப்பா என்பது இன்னொரு காரணம். காலை உணவைத் தவறவிடுவது மாபாதகம் இன்னொன்றில்லை என்று அறிந்தது மற்றொரு காரணம். அரசன் போல் பிரேக்ஃபாஸ்ட் உண்ணாவிட்டால், மதிய உணவு புசித்து உடல்நலத்தை கெடுக்க வேண்டாம் என்பது அடுத்த காரணம். உடம்பில் இருக்கும் கொழுப்பு கவனித்துக் கொள்ளும் என்பது முக்கிய காரணம்.

நேற்றைய தினம் அமாவாஸ்யை. பெற்றோரில் எவரையேனும் இழந்தவர்கள் இரவு சாப்பிடக் கூடாது. இரமலான் கூட வரப் போகிறது. ரம்ஜானுக்கு ஐந்து மாதம் இருக்கிறது என்றாலும், தேர்தல் வரும்போதா வேட்பாளர் களத்தில் இறங்குவார்? திங்களன்றுதான் ஏகாதசி கழிந்திருக்கிறது. உண்ணாவிரதத்திற்கு பெயர் பெற்ற அண்ணல் அரிச்சுவட்டில் உபவாசம் இருக்க உகந்த நாள்.

அம்பரீஷன் போல் துர்வாசர் யாரும் இங்கு வீட்டிற்கு அதிதியாக வரப் போவதில்லை. அவரவர்களின் இரயில் நிலையங்களிலும் பொதுச்சோலைகளிலும் வீடற்றோர் இன்னொரு பட்டினியை முடித்து எழுந்திருப்பர். அவர்கள் நிலைத்தகவல் இடும் காலம் வரும் முன் சோம வார விரதமும் இருந்துவிட வேண்டும்.

ஜெமோ எஃபெக்ட்: படிப்பதில் எல்லாம் வெண்முரசு

Benji_Chinelo_Short_Story_Fiction_Red_New_Yorkerநியு யார்க்கரில் சினேலோ (Chinelo Okparanta) எழுதிய ”பென்ஜி” கதை வாசித்தேன். நாற்பதுகளைத் தாண்டிய பின்னும் மனைவியைத் தேடிக் கொண்டிருக்கும் குள்ளமாய், பணக்காரனாய், அம்மா கோந்தாக இருக்கும் ஆப்பிரிக்கனை பற்றிய கதை. மூன்று முக்கிய கதாபாத்திரங்கள். அம்மா, குள்ளப் பையன், அம்மாவின் புதுத் தோழி. நடுநடுவே வீட்டில் வேலைப் பார்க்கும் தோட்டக்காரரும், சிப்பந்திகளும் வந்து போகிறார்கள்.

பத்து… பன்னிரெண்டு வருடக் கதையை சிறுகதையில் கொடுக்கிறார். அம்மாவிற்கும் தோழிக்கும் நடுவே நடக்கும் உரையாடல், தோழிக்கும் பையனுக்கும் உரையாடல், கூடவே நிறைய சம்பவங்கள் என அமைதியாக நகர்கிறது. நைஜீரியா அறிமுகமாகிறது. முடிவெல்லாம் ஊகிக்க முடிந்தாலும் மனிதர்களின் குணாதிசயமும் சாமர்த்தியமும் சமரசமும் சுவாரசியமாக்குகிறது.

வெண்முரசு வாசித்து வரும் சமயத்தில் இந்தக் கதையும் வாசித்ததால், அந்தத் தோழி கதாபாத்திரத்தை சத்தியவதிக்கு ஒப்பிட்டுப் பார்த்தேன். பணக்கார நாற்பதுவயசுக்காரனை பீஷ்மராக வைத்துக் கொள்கிறேன். மகாபாரதத்திற்கு இப்படி ஒரு முலாம் பூசிப் பார்த்தால் மகாபாரதத்தின் சூட்சுமங்களை இன்னும் வெளிப்படையாக எழுத்தாளரும் விவரிக்கலாம். அந்த கதாபாத்திரங்களின் நிர்ப்பந்தங்களையும் நிராசைகளையும் வாசகரும் எளிதில் அணுகலாம்.

கதையில் இருந்து..

”பணம் போதலை போதவில்லையென் சிலர் எப்பொழுதும் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். அப்படி அலட்டுபவர்களிடம்தான் பணம் கொட்டிக் கிடக்கும். அல்லது பணம் குறைவாக இருப்போர்தான் செல்வச்செழிப்பில் இருப்பது போல் பாவ்லா காட்டுகிறார்கள் எனலாம். இந்த இரண்டு வர்க்கத்தில் அவள் எந்த ரகம்?”

ஜெயமோகன்: வெண்முரசு: முதற்கனல் – 2

முந்தைய பதிவு

1. ”கண்ணிலிருந்து மறைந்த பின்புதான் அவள் அறிந்தாள், அவன் ஒருகணம்கூட திரும்பிப்பார்க்கவேயில்லை என்று.”

திரும்பிப் பார்ப்பது கிரேக்க தொன்மத்திலும் ஆதிசங்கரர் புராணக் கதைகளிலும் கூட அடிக்கடி வருகிறது. உதாசீனப்படுத்துவது ஒரு வகை என்றால், “உனக்கும் கீழே உள்ளவர் கோடி!” என சொல்வது கூட திரும்பிப் பார்ப்பதில் ஒரு வகை.

2. ஜெயமோகனின் மகாபாரதம் படிக்கும்போது உங்களுக்கு எந்த மாதிரி உணர்வு வருகிறது? கல்கியின் “பொன்னியின் செல்வன்” போன்ற அனுபவம் என நினைத்து; சுஜாதா எழுதிய சரித்திர நாவலான “இரத்தம் ஒரே நிறம்” போன்ற எதிர்பார்ப்புடன் துவங்கினால்; சாண்டில்யன் கதை படிப்பது போல் இருக்கிறது. ஜெயமோகனிடம் எனக்குப் பிடித்ததாக இருப்பது அவர் எழுதும் உளவெளிப்பாடுகளின் பதிவுகள். நம் மனம் என்ன நினைக்கிறது, ஏன் அவ்வாறு முடிவெடுக்கிறது என்பதற்கான தத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளை வெளிப்படையாக விவரிப்பது எனக்குப் பிடிக்கும். இங்கே கதை மட்டுமே ஓடுகிறது. சாண்டில்யனில் அதுவும் ஓடாது. ஆனால், இன்னும் கொஞ்சம் நிதானமாக மாரத்தான் துவங்கி இருக்கலாம்.

3. ”அறம்” வந்தபிறகு இந்த சம்பவம் சார்ந்த நடைக்கு மாறிவிட்டாரோ? அல்லது அதுதான் இன்றைய தலைமுறைக்கு எடுபடுகிறதோ? அல்லது சட்டுபுட்டுனு எல்லாருக்கும் தெரிந்த கதைக்கு வருவதற்கான அவசரமோ? தினசரி வாசகர் வருகையைத் தக்கவைத்துக் கொள்ளும் விருப்பமோ?

4. ”அன்னை அவனுக்களித்தவை எல்லாம் வெறும் சொற்களாக இருந்தன. நதிகள், மலைகள், நகரங்கள், ஜனபதங்கள். ஒவ்வொன்றும் அவன் முன் சொல்லில் இருந்து இறங்கி விரிந்து பருவடிவம் கொண்டன.”

பட்டால் மட்டுமே புரியும். எத்தனை சொன்னாலும், எவ்வளவு படித்தாலும் அனுபவம் போல் வருமா?

5. சுட்ட ஒவியங்களாகப் போடாமல், இதற்கென பிரத்தியேகமாகப் போடப்படும் படங்களைக் கண்டு கொண்டாட வேண்டும். அந்தக் கால விகடனில் சில்பி போல் இந்தக் கதைக்கான ஓவியங்களும் காலந்தோறும் பேர் சொல்லும். வெறுமனே கூட்டுக்கலவையாக பல்லிளிக்காமல், பிரதிபிம்பமாக மனிதர்களின் அவயங்களை மட்டும் கிறுக்காமல், படு சிரத்தையாக, அமர்க்களமாக வந்து கொண்டிருக்கிறது. நாளைய தேதியில் பளபளா தாளில் மினுக்கும் ஓவியங்களுக்காகவும் பலரின் காபி மேஜைகளை அலங்கரிக்கும் புத்தகமாக உருவாகிறது.

6. ”பாதாளநாகம் போன்ற கரிய உடல் மீது புதுமழையில் முளைத்த பசும்புற்கள் காற்றில் சிலுசிலுக்க வளைந்து ஓங்கிக் கிடந்தது கோட்டை. ”

நான் இது வரை சீனப் பெருஞ்சுவரை நேரில் பார்த்ததில்லை. அங்கொரு செஞ்சிக் கோட்டையும் இங்கேயொரு லண்டன் பிரபுக்களின் பீரங்கி பாதுகாப்பு கொண்ட இருப்பிடங்களும் எங்கேயோயொரு ராஜபுத் அரண்மனையின் சிதிலமடைந்த மதில்களும் பார்த்திருந்தாலும், ஜெயமோகன் விவரிக்கும் அஸ்தினாபுரி கம்பீரமாக அதே சமயம் தத்துவார்த்தமாக எழுந்து நிற்கிறது.

7. ஆஸ்திகன் பகுதியை சன் டிவியின் முதல் வார மகாபாரதத்தில் பார்த்ததால், இன்னும் எளிதாக உள்வாங்க முடிந்தது. திரைக்காட்சியாக்கத்தில் கண்ட ஒன்றை, படிப்பது என்றுமே அந்த கதாபாத்திரத்தை உருவகப்படுத்த உதவுகிறது.

8. அந்தக் காலம் எப்படி இருந்திருக்கும்? யார் யார் வந்தார்கள்? எப்படி உட்கார்ந்திருந்தார்கள்? என்ன மாதிரியான அலங்காரம்? தாமதமாக வருபவர்களே முக்கியமானவர்களா? சுற்றுச்சூழலும் தட்பவெட்பமும் எங்ஙனம்? எங்கே நடக்கிறது என இடம் மட்டும் பெயர் சூட்டாமல், அந்த விவரிப்பிற்கு உயிர் தருகிறார் ஜெயமோகன்.

9. ஒவ்வொரு சொல்லும் ஆராயலாம். ஒரு பதமாக – அரணிக்கட்டை: பகுத்தறிவு: மரணத்திற்கு அப்பால் – 15

சுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 2

ஜெயமோகனின் வெண்முரசு – வேள்விமுகம்

தினம் ஒரு கதை எழுதுகிறார் ஜெயமோகன். அசகாய சூரன். யார் வேண்டுமானாலும் தினசரி ஒரு பகுதியாக மகாபாரதம் எழுதிவிடலாம். ஆனால், ஜெ.மோ. எழுதும்போது அது முக்கியத்துவம் பெறுகிறது.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படத்தை இயக்குவது போல்…
ஸ்டீவ் ஜாப்ஸ் காலத்து ஆப்பிள், புதிய நுட்பத்தை அறிமுகம் செய்வது போல்…
எனக்கு புதிய இடத்தில் வேலை கிடைப்பது போல்…

எல்லாமே எதிர்பார்ப்பு கலந்த ஆர்வம் எழவைக்கும் நிகழ்வுகள். வித்தியாசமாக இனி என்ன நிகழ்ந்துவிட முடியும் என நினைக்கும்போது அசத்தும் விஷயங்களைக் கொணர்பவை.

அவ்வப்போது தோன்றுபவற்றை எழுதி வைக்கலாம். முதல் பகுதி குறித்து

  1. அம்மா ஆர். பொன்னம்மாள் எழுதிய கதையொன்றில் ஆஸ்திகரை கேள்விப்பட்டிருக்கிறேன். நாஸ்திகருக்கு எதிர்ப்பதம் ஆஸ்திகர் என்பது தவிர வேறு எதுவும் இவரைக் குறித்து என்னுடைய நினைவில் ஆழமாகப் பதியவில்லை. “தீபம்” பக்கங்களைப் புரட்டினால் அல்லாது தொலைபேசும்போது கேட்டால் ஏதாவது மேட்டர் கிடைக்கும். விசாரிக்க வேண்டும்.
  2. முதல் பகுதியில் நிறைய பெயர்கள். கத்ரு-விற்கும், வினதை-க்கும் நடுவே கிடந்த ஓரகத்தி சண்டைகளை ஏற்கனவே கேட்டிருப்பதாலும், அருணனும், கருடனும் அறிந்திருப்பதாலும், அந்தப் பகுதிகளைப் படிக்க சிரமமில்லை. ஆனால், சுவாரசியமுமில்லை.
  3. இந்தப் பத்தியில் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுபவையாக அந்த வரம் தரும் பகுதி அமைந்திருக்கிறது. மேட்ரிக்ஸ் படத்திற்கு பிறகு “What is your purpose in life?” வேரூன்றிய மாதிரி, கல்வியா / செல்வமா / வீரமா-விற்கு பதில், “உள்ளிருந்து எழும் கனல், அதை அடைய அடைய அடுத்ததை நோக்கும் தாகம்” என்னும் வேண்டுகோள் – புதிய கீதை ஒன்று.
  4. ஜரத்காரு – மின்மினி – பிண்டம் – பித்ரு…விற்கெல்லாம் இன்னும் கொஞ்சம் நீட்டி முழக்கி இருக்கலாமோ? சுண்டுவிரல் அளவில் நடமாடும் மூதாதையர்களைக் கண்டு நாம் பயப்படுகிறோம். அவர்களுக்கு திவசம் போடுகிறோம். வாழைக்காய் கொடுக்கிறோம். அவர்களும் அந்தக் கன்றுக்குட்டியையும் எண்ணெயையும் வைத்துக் கொண்டு கடைத்தேறுகிறார்கள்.
  5. வரமோ… சாபமோ… கொடுத்ததற்குப் பின்னேயே கவலை கொள்கிறோம். ஆத்திரம் வந்தால் திட்டிவிடுவது ஆகட்டும்; அன்பு பெருகினால் வைரமாலை வாங்கி விடுவது ஆகட்டும். சிந்திய வார்த்தைகளையும் வாங்கிய கடனையும் அடைப்பது பெரும்பாடு என்பதை மகாபாரதத்தைப் பார்த்தும் அமெரிக்கா புரிந்துகொள்ளவில்லை.
  6. ’தழுவித்தழுவி இறுகியபின் மேலும் தழுவும்பொருட்டு அவர்களின் தழுவல் சற்றே தளர்ந்தபோது இருவருக்கும் நடுவே காலம் புகுந்து கொண்டது.’ : )
  7. கடிதம் இல்லாமல் ஜெ.இன்-னா? – http://www.jeyamohan.in/?p=44023 :: http://mahabharatham.arasan.info/2014/01/1.html
  8. இவ்வளவு பெரிய கதையில் அயர்ச்சியூட்டும் பிரயோகங்கள்… ஒரே மாதிரிக் கதைகளை வேறுவேறு விதமாக சொல்வது… பத்தாண்டுகளாக தொடர்ச்சியான மொழிநடை! பிரமிக்க வைக்கிறார்.
  9. ’உன்னுடைய சின்னஞ்சிறு உடலுக்குள் விதைக்குள் பெருமரம்போல இப்பிரபஞ்சத்தின் பெருநிகழ்வொன்று குடியிருக்கிறது.’ – இது ஜெயமோகனை நோக்கி சொல்லப்பட்டாலும் சரியே!

நூல் ஒன்று – முதற்கனல் – 1

அ. முத்துலிங்கமும் தற்கால உலக இலக்கியமும்: சிறுகதைகள்

விடுமுறையில் ரெண்டு கதைகள் படித்தேன். இரண்டுமே பயங்கர எதிர்பார்ப்போடு படித்தேன். இரண்டுமே திருப்தியான கதைகள்.

1. http://www.newyorker.com/fiction/features/2013/10/21/131021fi_fiction_munro
முதியோர் இல்லம் அனுப்ப படுபவரின் வாழ்க்கையை சொல்கிறார் நோபல் பரிசு பெற்ற ஆலிஸ் மன்றோ. இணையத்திலேயே இலவசமாகப் படிக்கலாம்.

2. http://harpers.org/archive/2013/10/sic-transit-2/
இது இணையத்தில் இலவசமாகக் கிடைக்கவில்லை. சாதாரண விஷயத்தை எப்படி பிரும்மாண்டமாக்குவது என்பதை உணர்த்துகிறார். சமூகக் கதையில் மர்மத்தை உண்டாக்குகிறார். பிறன்மனை நோக்குவதை அறப்பார்வையாக சொல்வதை சத்தமாக கத்தாமல் சன்னமாக உணர்த்துகிறார்.

தமிழில் அ முத்துலிங்கம் கொஞ்சம் இவர்களை எட்டிப் பிடித்து தாண்டிக் கூட விடுகிறார் இங்கே:
http://amuttu.net/viewArticle/getArticle/334

சிறுகதை: பாவண்ணன் – பாதை

முதியோரை நாம் எப்படி நடத்துகிறோம்? வயதான பிறகு தோன்றும் கனவுகளுக்கு என்ன அர்த்தம்? மனநிலை பாதிக்கப்பட்டவர்களை சமூகம் எவ்வாறு பார்க்கிறது?

பாவண்ணனின் “பாதை” கதை இவற்றை பேசுபொருள்களாகக் கொண்டிருக்கின்றன.

தமிழில் முக்கியமான சிறுகதை எழுதும் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஒரு நடையில் தேர்ந்த பிறகு இன்னொரு நடைக்குத் தாவிடுகிறார்கள். அதாவது, எனக்கு சி/சி++/சி# நன்றாக நிரலி எழுத வரும். அவற்றில் திறமைசாலி ஆனவுடன், சீக்வல், எஃப்# என்று வேறு நுட்பத்திற்கு சென்று பயில்வேன். அந்த மாதிரி எதார்த்தம் முடிந்த பிறகு மாயாஜாலம்; அதன் கூடவே அதிபுனை, அறிபுனை என்று கூடு விட்டு கூடு பாய முயல்கிறார்கள்.

சில சமயம் அவர்கள் அந்த புதுப் பகுதியிலும் வெற்றி காண்கிறார்கள். புதிய வாசக்ர்களை ஈர்க்கிறார்கள். தங்களைப் படிக்கும் நுகர்வோர் வட்டத்தைப் பெரிதாக்கிக் கொள்கிறார்கள். இது சாதகமான விஷயம்.

ஆனால், பாவண்னன் இப்படி எல்லாம் குரங்கு போல் கிளை பாய்வதில்லை. இது எனக்குப் பிடித்த விஷயம். எடுத்துக் கொண்டதில் முழுமையாக பரிமளிப்பது மகிழ்ச்சி தருகிறது.

இன்னும் சிலர் ஜே.பி.சாணக்யா, பெருமாள் முருகன் போன்றோர் அலைபாயாமல் ஒரு அலைவரிசையிலேயே இயங்கினாலும், அவரவர்களின் முதல் பருவத்தின் சிறுகதைகள் போல் தற்கால புனைவுகள் கவரவில்லை. இவர்களுக்கு கதை எழுதும் வித்தை கைவசப்பட்டிருப்பதால் கதை நன்றாகவே கட்டமைக்கப்பட்டிருக்கும். இருந்தாலும் கதை வாசித்து முடித்த பிறகு ஏதோ தவறவிட்டது போல் இருக்கும். பாவண்ணன் இந்த வகைக்குள்ளும் இன்றளவும் சிக்காமல் இருப்பது இன்னும் மகிழ்ச்சி தருகிறது.

நீங்களும் கதையைப் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை சொல்லுங்களேன்…
http://puthu.thinnai.com/?p=23838