முதலில் விடை தெரியாத கேள்வி:
- விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆர்வத்துடன் துவங்கியவர் ரணில் விக்கிரமசிங்கே.
- ஏ9 சாலையை மீண்டும் திறந்து யாழ்ப்பாணத்தை மீண்டும் அடைய வைக்க ஒப்பந்தமானது.
- ‘அங்கே மீன் பிடிக்க செல்லக்கூடாது; இங்கே சென்றால் மீனவர்களுக்கு ஆபத்து‘ போன்ற கெடுபிடிகள் தளர்ந்தது.
அமைதியைக் குறிவைத்து இப்படி ஏகப்பட்ட ஆக்க பூர்வமான ரணிலுக்கு தமிழர்கள் ஆதரவு ஏன் கிடைக்கவில்லை? ‘நிச்சயம் ஒடுக்குவேன்‘ என்று அறிவித்த ராஜபக்சவுக்கு 51 சதவீதமும், பேச்சுவார்த்தையில் உறுதுணையாற்றிய விக்கிரமசிங்க்வுக்கு 49 சதவிகிதமும் வாக்கு கிடைக்கிறது.
முன்னாள் ஜனாதிபதியாகி ஓய்வெடுக்கும் சந்திரிகா குமாரதுங்கா. தமிழர்கள் வாக்களித்திருந்தால் மீண்டும் ரணில் வந்திருப்பார்.
இலங்கையில் சாதாரண பொதுபுத்தி எடுபடாது. ‘இப்படித்தான் யோசிப்பார்கள்’ என்று எதிர்பார்த்தால், நேர் எதிர் வியூகம் அமைத்து பாதாள குழியில் விழுவது போன்ற முடிவுகள் சகஜம். இதை பின்னணியாக வைத்துக் கொண்டுதான் ‘அடுத்து என்ன‘ என்று ஆருடம் போடமுடியும்.
இலங்கை அரசுக்கு தமிழர்கள் மேல் பரிவு இருப்பது போல் காண்பித்துக் கொள்வது காலத்தின் கட்டாயம். சிலசமயம் இந்த நாடகத் தோற்றத்தில் வெற்றி காண்கிறார்கள். முல்லைத்தீவு சம்பவம் போல பெரிய தாக்குதல்கள் முதல் அன்றாடப் போரில் இறப்புகள் உட்பட, ஈழத்தமிழர்களுக்கு விடுதலைப் புலிகளுக்கு மாற்றான சக்தியாக இல்லாமல், ரேசிஸ்டாக பேரினவாதத்திற்கு ஆதரவான சித்தரிப்புக்குள் அடங்கிப் போகிறார்கள்.
விடுதலைப் புலிகளுக்கும் போரின் மகத்துவம் தெரிந்தே இருக்கிறது. சுனாமி வந்தால் பணம் கிடைக்கும். போர் என்றால் பணம் கொட்டும். இதை முன்னிட்டுதான் தமிழர்புனர்வாழ்வுக் கழகத்தின் உடமைகளை முடக்க அமெரிக்கா முடிவெடுத்திருப்பது முக்கியமானதாகிறது. இதனால் ஆட்கடத்தல், போதை மருந்து சரக்கு பரிமாற்றம் போன்ற அதிகாரபூர்வமற்ற வழிமுறைகளினால் நிதி திரட்டப்படும். பிரபாகரனுக்கு கையிருப்பு குறைவதை விட கரும்புலிகளின் சேர்க்கைதான் மிகப் பெரிய பிரச்சினை.
சிறார்களை முளைச்சலவை செய்கிறார்கள்; கஞ்சா கடத்தல் போன்ற சட்ட விரோத செய்கைகளில் ஈடுபடுகிறார்கள்; அப்பாவி சிங்களர்களைக் கொல்கிறார்கள் போன்ற மனித உரிமை நெறிகளை கைவிட்டுவிட்டதாக விடுதலைப்புலிகள் தோற்றம் காண்பிக்கும்வரை அவர்கள் மீது கரிசனப் பார்வை உலக அரங்கில் கிட்டப்போவதில்லை.
சூடான், ருவாண்டா மாதிரி பிரச்சினை இன்னும் கைவிட்டுப் போகவில்லை என்று ஐ.நா. எண்ணுகிறது. ஈராக், இரான் மாதிரி எண்ணெய் வளமும் கிடையாது. அப்புறம் எப்படி கரிசனம் கிடைக்கும்?
சைப்ரஸுக்கே இப்போதுதான் தனி நாடாக முடிகிறது. ஃபாக்லாந்துக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. இது போல் மேற்கத்திய நாடுகளின் பிரச்சினைகளே முடிவுறாத நிலையில், அமெரிக்காவும் இங்கிலாந்தும் இலங்கைக்கு அறிவுரை சொல்லி, ஈழத்தின் அவசியத்தை எடுத்துரைத்து, சுதந்திரம் கிடைக்கும் அதிகாரத்தை தரும் நிர்ப்பந்த நிதர்சனங்களை வலியுறுத்தும் நிலையில் இல்லை. சீனா, ரஷியா, இந்தியா போன்ற இன்ன பிறருக்கும் இப்போதைய குழப்ப சிக்கல்களே சாலச் சிறந்ததாக இருக்கும் வேளையில் தெற்காசிய கூட்டமைப்புகளும் இடித்துரைத்து ராஜபக்ஷவை கண்டிக்க முடியாத அவலம்.
விடுதலைப் புலிகளிடம் இன்னும் போதுமான அளவு நிலப்பரப்பு இல்லை. அதற்கு ஈடாக உயிரின் அருமை தெரியாத, தற்கொலையை விரும்புவதற்கு அடிமையாக்கப்பட்ட, கரும்புலிகள் நிறைய இருக்கிறார்கள்.
பேரம் பேச தேவையான அளவு இராச்சியம் கிடையாது. ஆனால், அதற்கு ஈடாக அமைதி காலத்தில் சேகரித்த படைகலன்கள் குவிந்திருக்கிறது.
செத்து மடிவதற்கு சிறார்களும் அவர்கள் சக தமிழர் மீதோ அல்லது எதிராளி மீதோ வீசுவதற்கு சவாப்தாரியாகாத குண்டுகளும் இருக்கும் வரை அமைதிப் பேச்சுவார்த்தை பாவ்லாக்கள் கிடைக்காது.
கடைசியாக இஸ்லாமியர்கள் இருதலைக் கொள்ளி எறும்புகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு புலிகளும் ஆகவில்லை; இலங்கை அரசு மீதும் கரிசனம் பெரிதாக இல்லை. மொத்தத்தில் இப்போதைக்கு ஈழத்தில் வசிக்கும் தமிழர்களின் நிலை பரிதாபகரமானது!
எது நடந்தாலும் விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் பொறுப்பேற்காமல் ‘அந்தப் பக்கம்தான் இந்த நிலை/அசம்பாவிதத்தீற்கு காரணம்‘ என்று சுட்டுவிரல் விளையாட்டு மட்டுமே முடிவாக சொல்ல முடிகிறது.
முந்தைய பதிவு: ஒரு கதை; ஒரு புத்தகம்; இரு தலைவர்கள் – விடுதலை தராத புலிகள்










