நன்றி: ரைம்ஸ் வித் ஆரஞ்ச்
சமீபகாலமாக (அதாவது கடந்த நான்கு வருடங்களாக) எனக்கொரு பிரச்சினை.
தொலைக்காட்சியில் அசின் கலந்து கொள்ளும் உன்னத நிகழ்ச்சியோ, கமலின் திரைக்காவியமோ, காலச்சுவடு வெளியிட்ட இலக்கியமோ, பூங்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட இடுகையோ… எதையெடுத்தாலும் நொட்டை எங்கிருக்கும் என்று தேடி கண்டுபிடித்து விடுகிறது. இதுதான் மிட்-லைஃப் க்ரைசிஸ் என்று சொல்லி சமாளித்து வருகிறேன்.
சோனியாவா… அயல்நாட்டவர்; ஜனாதிபதியா… கைநாட்டு; நரசிம்மராவ்… ஊழல்; டென்டுல்கர்… ஓய்வு; அச்சுதானந்தன்… 84 வயசு.
என்றுதான் சிந்தையிம் முதல் எண்ணம் உதிக்கிறது. ரொம்பவே கசக்கினால்,
சோனியா… புத்துணர்ச்சி; பிரதிபா… முதல் பெண்; பிவி.என்.ஆர்… மன்மோகன் கொணர்ந்தவர்; அச்சுதானந்தன்… கலைஞர் போல் சுறுசுறுப்பு.
அன்றாட Jeopardy க்விஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சி முன் ஆஜர். ஒவ்வொரு நாளும் ஆர்வத்துடன் பார்ப்போம். அதுவும் கடந்த வாரம் ‘பத்து முதல் பன்னிரெண்டு’ வயதினருக்கான வினாடி வினாப் போட்டி. மூன்று பேர் கலந்து கொள்வார்கள். வீட்டில் ஆளுக்கு ஒருவராகத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்வோம். நாம் சொன்ன ஆள் கடைசியில் ஜெயித்தால் சின்ன சந்தோஷம்!
முதலில் சிறுமி அறிமுகம் செய்து கொண்டார். இரண்டாவதாக ஆப்பிரிக்க அமெரிக்கன்; கடைசியாக டிப் டாப் தோற்றத்தில் இன்னொரு பையன்.
நான் ‘முதலில் பெயர் சொன்ன சிறுமி’ என்கிறேன். மகள் ‘கறுப்பு’ என்கிறாள்.
நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு அட்வைஸ் ஆரம்பிக்கிறது. ‘எப்படி நிறத்தால் ஒருவரை அழைக்கலாம்? தவறல்லவா… நாம் இந்திய துணைக்கண்டத்தில் இருந்து வந்ததால் இந்திய – அமெரிக்கர்கள். அவ்வாறே அவர்கள் அப்பிரிக்க – அமெரிக்கர்கள்’.
கீபோர்டைக் கண்ட வலைப்பதிவனாய், சொற்பொழிவு தொடர்ந்து நீண்டது. இறுதியில் சொன்னாள்.
‘அந்த ஓரத்தில் இருக்கிறானே… கடைசியாக அறிமுகம் ஆனானே… அவன் கறுப்பு கோட் போட்டிருக்கிறான். அவனைத்தானே நான் சொன்னேன்!’
அதே போல் தங்கமணி நடத்திய எழுத்துச் சண்டைகள் என்று படித்தவுடன், அவர் அப்ரூவ் செய்த இடுப்புக்கு கீழ் அடித்த அனாநி கருத்துக்கள்தான் மனதில் நிழலாடியது. ஏனோ, அவரின் கதைகள், கருத்துகள், இன்ன பிற எதுவுமே நிழலாடவில்லை.










