Category Archives: Kavariman

சிவாஜி பாட்டை பாராட்டினார் இளையராஜா

பஞ்சு அருணாச்சலம் சார் “கவரிமான்” என்ற படத்தில் நடிக்க சிவாஜியை ஒப்பந்தம் செய்தார். நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. (மனைவி சோரம் போகிற காட்சியை பார்க்கும் கணவனின் கேரக்டர்)

என் இசையில் முதன் முதலில் ஒரு தியாகராஜ கீர்த்தனை இடம் பெற்றது இந்தப் படத்தில்தான். “ப்ரோவ பாரமா?” என்ற கீர்த்தனையை ஜேசுதாஸ் பாட, டி.வி.கிருஷ்ணன் அவர்களின் வயலினும், டி.வி.கோபாலகிருஷ்ணனின் மிருதங்கமும் இணைந்தன.

சிவாஜி இந்தப் பாட்டுக்கு வாயசைத்ததை கண்டு வியந்து போனேன்.

ஆரம்பத்தில் ஜேசுதாஸ் ராகம்பாடி, தாளம் ஏதும் இல்லாமல் திடீரென்று `ப்ரோவபாரமா’ என்று தொடங்குமாறு பதிவு ஆகியிருந்தது.

ராகம்பாடி, `ப்ரோவ பாரமா’ தொடங்குவதற்கு இடையில் தாளத்தில் ஏதாவது வாசித்திருந்தால் நடிப்பவர்களுக்கு பாடல் தொடங்கும் இடம் சரியாகத் தெரிந்து வாயசைக்கலாம்.

ராகம்பாட, வெறும் தம்புரா மட்டும் போய்க்கொண்டிருக்க, அது எவ்வளவு நேரம் போகிறது என்று கண்டுபிடித்து, பாடல் ஜேசுதாஸ் குரலில் வரும் அந்த நொடியை எப்படியோ கண்டுபிடித்து சரியாக வாயசைத்தார்.

இதைப் பாராட்டி, அண்ணன் சிவாஜியிடம், “எப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

“என்னை என்னடா நினைச்சிட்டே? சும்மா ஏனோதானோன்னு சினிமாவுக்கு வந்தவன்னு நினைச்சியா? இதெல்லாம் முடியாட்டா ஏண்டா ஒருத்தன் நடிகனா இருக்கணும்?” என்று கேட்டார் சிவாஜி.

“நடிகர் திலகம்” என்று சும்மாவா பட்டம் கொடுத்தார்கள்?

நன்றி: தினத்தந்தி :: திரைப்பட வரலாறு 704 சிவாஜிகணேசனுக்கு இளையராஜா புகழாரம் (வரலாற்றுச் சுவடுகள்)