வயிறு வளர்க்கும் கூட்டம்
“ஒரு விசயத்தைப் பற்றிச் சரியோ, தப்போ என்பதைக் கவனிக்காமல், எதைச் சொன்னாலும் ஏட்டிக்குப் போட்டியாய் வம்பளந்து வயிறு வளர்ப்பதையே வாழ்க்கையாய்க் கொண்ட மக்கள் உலகம் எங்கும் இருந்துதான் வருகின்றார்கள். இவர்களுடைய உதவி யாருக்கும், எவ்வளவு குறைந்த விலைக்கும் கிடைக்கக் கூடும்.”
(“குடிஅரசு”, 25.12.1932)
எனது ஆசை
“எனக்கு ஆசை எல்லாம், மக்கள் பகுத்தறிவாளர்கள் ஆகவேண்டும்; ஜாதி ஒழியவேண்டும்; உலகில் `பார்ப்பனர்’ இருக்கக் கூடாது. இதுதான் என் கொள்கை.”
(“விடுதலை”, 28.8.1972)
சீர்திருத்தம்
“ஒரு சிறு சீர்திருத்தம் கொண்டு வருகின்ற காலத்திலும் சீர்திருத்த விரோதிகள் எழுந்து நின்று ‘வந்துவிட்டது மதத்திற்கு ஆபத்து‘, ‘மதம் போச்சுது, மதம் போச்சுது‘ எனக் கூப்பாடு போட்டால், இந்த நிலைமையில் சீர்திருத்தக்காரர்கள் என்ன செய்ய முடியும்?’
(‘குடிஅரசு’, 30.8.1931)
முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட
“ஒரு நாட்டு மக்களுக்கும், சமுதாய மக்களுக்கும் முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால், அந்த மக்களுக்கு முதலில் தாங்கள் யார் என்ற உணர்ச்சி பிறந்து, தங்களைப் பற்றித் தெளிவாய்த் தெரிந்து கொண்டு அதன் பயனாக, நாட்டுப் பற்றும், சமுதாயப் பற்றும் ஏற்பட்டாக வேண்டும்.”
(‘குடிஅரசு’, 25.8.1940)
தேர்தலும் – பொதுவுடைமையும்
“எலக்ஷன் போட்டி காலத்தில் பதவியையும், அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என்ற தேசியத்தின் பேராலும், சமுதாயத்தின் பேராலும் நடக்கும் போட்டியில் கலந்து கொண்டு பொது உடைமைப் பிரசாரமோ, சமதர்மப் பிரசாரமோ செய்வது என்பது ஒரு நாளும் அறிவுடைமையான காரியமோ, யோக்கியமான காரியம் என்றோ சொல்லிவிட முடியாது.”
(‘குடிஅரசு’, 12.6.1936)










