Category Archives: மெக்கெய்ன்

நவம்பர் 4, 2008!!

நம்ம ஊரு தேர்தல் போல எளிதாக புரிந்து கொள்ளக் கூடியதல்ல அமெரிக்க தேர்தல்! பல விதிமுறைகளும் “குழப்பங்களும்” நிறைந்தது.

அயோவா (Iowa)வில் ஆரம்பிக்கும் இந்த குழப்பங்கள், டிசம்பரில் Elecrol Collegeல் தான் முடியுது.

இதில் பணந்திரட்டும் சக்தி, விகிதாச்சார பிரதிநித்துவ கணக்கு, பிரதிநிதிகள்(Delegates), பெரிய பிரதிநிதிகள் (Super delegates), கட்சியின் இறுதி முடிவு (அப்ப ஓட்டு போட்ட மக்கள்..?), தேர்தல் கல்லூரி (Elecrol College)னு எவ்வளவு குழப்பனுமோ அவ்வளவு குழப்பி, குழம்பி கடைசியா புஷ் மாதிரி ஒருவரை அமெரிக்கா அதிபராய் ஆக்குவார்கள்!

‘Sliding Door’ (அதாங்க நம்ம 12B திரைப்படம்) போல — 2000ல் மக்கள் செல்வாக்கு இருந்தும் Electrol Collegeல் பெரும்பான்மை இல்லாததால் தோற்ற ஆல்கோர், ஒரு வேளை வெற்றி பெற்றிருந்தால் …………….. இவ்வளவு குழப்பங்கள் வந்திருக்குமா என்பது கடவுளுக்கே வெளிச்சம்!!

பெரிய புதன், பெரிய வெள்ளி மாதிரி தேர்தல் நேரத்தில் “பெரிய செவ்வாய்’ பிரபலம்.

அமெரிக்கர்கள் இரண்டு முறை ஓட்டு போடுகிறார்கள்.

முதல் முறை – களத்தில் இருக்கிற நாலோ அல்லது ஆறு பேரில் யார் சிறந்த ஜனாதிபதி (இரண்டு கட்சிகளிலும் சேர்த்து) என்று,

இரண்டாவது முறை, நவம்பர் 8ம் தேதி — இறுதியாக நிற்கும் “அந்த” இரண்டு பேரில், “அடுத்த நாலு வருடத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி யாரு?”னு முடிவு பண்றாங்க.

ஆரம்பத்தில் இரண்டு கட்சிகளுலிருந்து “போற வர்வங்கலாம்” – மொத்தம் 8 பேர்(!) களத்தில் இறங்க…

குடியரசுக் கட்சியிலிருந்து (சின்னம்:யானை & நிறம்:சிகப்பு) – ஜான் மெக்கெய்ன், மைக் ஹக்கபி, ரான் பால், ஆலன் கீஸ், மிட் ராம்னி, ரூடி ஜியூலியானி, ஃப்ரெட் தாம்ஸன், டன்கன் ஹண்டர்

ஜனநாயக கட்சியிலிருந்து (சின்னம்:கழுதை & நிறம்:ஊதா ) – பாரக் ஒபாமா, ஹிலரி கிளிண்டன், ஜான் எட்வர்ட்ஸ், மைக் கிரவல்,டெனிஸ் குசினிச், பில் ரிச்சர்ட்சன், கிரிஸ் டாட், ஜோ பிடன்.

ஜனநாயக கட்சியில் எளிதாக கணிக்க முடிந்தது…. பாரக் ஒபாமா அல்லது ஹிலரி கிளிண்டன் என்று..

ஆனால் குடியரசுக் கட்சியில் யார் வருவார்கள் என்பது அவ்வளவு எளிதாக சொல்ல முடியவில்லை (என்னைப் பொறுத்த அளவிலாவது…!!)

ஆனால் இப்பொழுது குடியரசுக் கட்சியிலிருந்து ஜான் மெக்கெய்ன் என்று கிட்டதட்ட முடிவாகி விட்டது.
ஜனநாயக கட்சியில்தான் கடும் போட்டியா இருக்கு…

போன செவ்வாய் கிழமை (பிப்ரவரி 7, 2008) வரை ஹிலரி கிளிண்டன் 1045* பிரதிநிதிகளுடன் முன்னிலை இருக்க [பாரக் ஒபாமா 960* ]… { * — பெரிய பிரதிநிதிகளையும் சேர்த்து }

இந்த வாரம் (பிப்ரவரி 15, 2008), 1253 பிரதிநிதிகளுடன் பாரக் ஒபாமா முன்னிலையில் இருக்கிறார். [ஹிலரி கிளிண்டன் 1211….]

அடுத்த முக்கிய செவ்வாய், மார்ச் 4, 2008! பார்க்கலாம் — ஹிலரியா ஓபாமானு??

ஈராக் போர் – மெக்கெய்னும் ஒபாமாவும்

அமெரிக்கா, ஈராக்மீது போர்தொடுத்து இன்றுவரை அதில் மாட்டிக்கொண்டு முழிக்கிறது. ஈராக்கில் சதாம் ஹுசைன் கொல்லப்பட்டதுதான் மிச்சம். தினம் ஒரு கார் குண்டு. பலர் சாவு. பெய்ரூட், பாலஸ்தீனம்போல எப்போதும் கனன்று கொண்டிருக்கும் தீவிரவாத நெருப்பு. இந்தச் சாதனையை இன்றுவரை பெருமையாக சொல்லிக்கொள்பவர் ஜார்ஜ் புஷ். தனது அந்திமக் காலத்திலும்கூட ஈராக்கில் வெற்றியை நிலைநாட்டிய தனது பெருமையை ஊடகங்களில் தானே மெச்சிக்கொள்கிறார் புஷ்.

ரிபப்ளிகன் கட்சி வலதுசாரிக்கூட்டம் நிரம்பியது. ஏற்கெனவே வியட்நாமில் சண்டைபோட்டு பல மாதங்கள் கைதியாக இருந்து திரும்பிய போர்நாயகன் ஜான் மெக்கெய்ன் ஈராக் போரை ஆதரிப்பவர். இவரது பொன்வாக்கு: “They said that we would never succeed militarily; then we began to succeed militarily. Granted, we still have a long way to go in Iraq. And then they said they can’t succeed politically.”

ராணுவ வெற்றி என்பது எது? வெற்றி என்பதை எப்படி வேண்டுமானாலும் வரையறுத்துக்கொள்ளலாமா? சதாம் ஹுசைனைக் கொல்வதுதான் வெற்றி என்றால் அமெரிக்காவுக்கு ராணுவ வெற்றி கிடைத்துவிட்டது. சதாம் ஆட்சியை ஒழித்துக்கட்டுவதுதான் வெற்றி என்றால் அது நடந்துவிட்டது. அதற்குமேல்? அடுத்து பல பத்தாண்டுகளுக்கு ஈராக் ஒரு சுடுகாடாக மட்டுமே இருக்கப்போகிறது. அமெரிக்கப் போர் காரணமாக.

மெக்கெய்ன் தனது இணையத்தளத்தில் “Fighting Islamic Terrorists – Progress in Iraq” என்று ஒரு தனிப் பகுதியையே வைத்து நடத்துகிறார். அதைப் பார்ப்பவர்களுக்கு அமெரிக்கா, இஸ்லாமிய தீவிரவாதிகளை அடக்குவதற்காக ஈராக் போய் சண்டைபோடுவதான ஒரு தோற்றம் ஏற்படக்கூடும். அமெரிக்கா ஈராக்மீது போர்புரிய ஆரம்பித்தபோது, ஈராக் ஒரு தோல்வியுற்ற அரசமைப்பாக இல்லை. அங்கே, ஏகப்பட்ட நெருக்கடிகள் இருந்தாலும், பல சேவைகள் தொடர்ந்துவந்தன. ஆனால் அமெரிக்கப் படையெடுப்புக்குப் பிறகு அத்தனை அரசாங்கச் சேவைகளும் நொறுங்கிப்போயின. விளைவாக பொதுமக்கள் கடுமையான நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார்கள். தீவிரவாதக் குழுக்கள் வலிமை பெற்றன. கள்ள ஆயுதச் சந்தையில் கிடைக்கும் அமெரிக்க மற்றும் பிற நேச நாடுகளின் ஆயுதங்களையே கையில் ஏந்தி தீவிரவாதிகள் அமெரிக்கப் படைகளையும் பொதுமக்களையும் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள்.

ஷியா, சுன்னி முஸ்லிம்களுக்கு இடையே இருந்துவந்த வெறுப்பு சதாம் ஹுசைன் காலத்தில் உள்ளடங்கி இருந்தது. இப்போது அது வெளிப்படையாகப் பரவியுள்ளது.

ஆக, பின்விளைவுகள் எதைப்பற்றியும் சிந்திக்காமல் அமெரிக்கா ஆரம்பித்துவைத்த போர் இன்று ஒரு நாட்டை முற்றிலும் அழித்துள்ளது; இனியும் தொடர்ந்து அழிவு நிலையிலேயே அந்த நாட்டை வைத்திருக்கும்.

மற்றொருபுரம் அமெரிக்கா, இந்தப் போருக்குச் செலவழிக்கும் பணம் எக்கச்சக்கம். இதன் தேவை என்ன? அப்படி செலவழித்து என்ன சாதனையை அமெரிக்கா புரியப்போகிறது என்று அங்கு யாருமே கேட்பதில்லை. ஒபாமாவைத் தவிர!

இப்போது ஈராக்கில் நடக்கும் போரில் செலவழிக்கப்படும் பல நூறு பில்லியன் டாலர்களை அமெரிக்காவின் பொருளாதார மேம்பாட்டுக்கு செலவழிப்பேன் என்று சொல்லும் ஒரே ஆள் ஒபாமா. இந்தப் போர் நடந்திருக்கவே கூடாது என்று மனப்பூர்வமாகச் சொல்லும் ஒரே ஆள் ஒபாமா.

இந்தப் போரை ஆதரித்த ஒரே காரணத்துக்காகவே ஹிலாரி கிளிண்டன் பிரைமரியில் தோற்கடிக்கப்பட வேண்டியவர். இன்றுவரைகூட அவர், தான் செய்தது தவறு என்று ஒப்புக்கொள்ளவில்லை.

மெக்கெய்னுக்கு ராம்னி ஆதரவு

சற்று முன் வந்த செய்திகளின்படி பிரச்சார களத்தில் பரம விரோதிகள் போல நடந்துகொண்ட மிட் ராம்னியும், ஜான் மெக்கெயினும் கூட்டாளிகளாக இருக்கிறார்கள். விரைவில் மிட் ராம்னி மெக்கெயினுக்கு தன் ஆதரவை அறிவிப்பார் எனத் தெரிகிறது.

தேர்தல் களத்திலிருந்து விலகுமுன் மிட் ராம்னி 166 (286 என CNN சொல்கிறது) பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றிருந்தார்.

தற்போது மெக்கெயின் ஆதரவு பிரதிநிதிகள் எண்ணிக்கை 815. ராம்னியின் 166 சேர்த்தால் மொத்தம் தேவையான 1191க்கு மிக அருகில் வந்துவிடுவார்.

மிட் ராம்னியின் இந்த ஆதரவு குடியரசுக் கட்சியின் தீவிர பாரம்பரியவாதிகள்(Consertvatives) மத்தியில் ஜான் மெக்கெயினுக்கு ஆதரவைப் பெற்றுத்தரலாம்.

மிட் ராம்னியின் மெக் கெயின் ஆதரவு அவருக்கு துணை அதிபர் சீட்டுக்கு வழி வகுக்கலாம். ஏற்கனவே ஆட்டத்திலிருந்து விலகிய ரூடி ஜூலியானி, ஃப்ரெட் தாம்சன் ஆகியோர் மெக்கெயினுக்கு ஆதரவளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Romney To Endorse McCain – CBS

Romney backs McCain – CNN

நம்பிக்கை, வேறுவகை

ஒரிஜினல் வீடியோவை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மேரிலான்ட், வெர்ஜீனியா, டிசி: ஒபாமா & மெகெயின் வெற்றி

அமெரிக்காவில் இன்று நடந்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான தேர்தல்களில் குடியரசு கட்சி சார்பாக ஜான் மெக்கெயினும், ஜனநாயகக் கட்சி சார்பாக பராக் ஒபாமாவும் வென்றனர்.

ஒபாமா கடந்த எட்டு மாகாணங்களைத் தொடர்ச்சியாக வென்றதன் மூலம் பெரும்பான்மை பிரதிநிதிகளை ஹில்லரி க்ளின்டனிடமிருந்து கைப்பற்றியிருக்கிறார். எனினும் மார்ச் 4 நடக்கும் அடுத்த கட்ட ப்ரைமரிகளில் ஹில்லாரி தலைதூக்கினால் மீண்டும் முன்னிலை பெறமுடியும்.

அடுத்த செவ்வாய் அன்று, இரண்டு மாகாணங்கள் – விஸ்கான்சினும் ஹவாயும் வாக்களிக்க இருக்கிறது.

மார்ச் நான்கு வாக்குப்பதிவு நடக்க இருக்கும் டெக்சாஸில், இன்று நடந்த மேரிலாந்து மாகாணம் போலவே – பெருமளவில் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் இருப்பதும் அவர்களில் பெரும்பானமையோர் ஒபாமாவுக்கு வாக்களிப்பதும் குறிப்பிடத்தக்கது.

அனைத்துப் போட்டிகளிலும் வென்றதன் மூலம் மெகெயின் பலமடைந்திருந்தாலும், வெர்ஜீனியாவில் இழுபறியாக ஊசலாடி நூலிழையில் மைக் ஹக்கபீயை தோற்கடித்திருக்கிறார். எவாஞ்சலிகல் கிறித்துவர்களின் வாக்கையும், குடியரசு கட்சியின் பாரம்பரிய (பழமைவாத) வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறவும் மேலும் முயற்சியெடுக்க வேண்டும் என்று நோக்கர்கள் அபிப்ராயம் தெரிவித்துள்ளார்கள்.

மெக்கெய்னுக்கு 'வலது' கை தேவை

இன்றைய முன்னோட்டத் தேர்தல்களில் பராக் ஒபாமா பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார். இது நாடு முழுவதுமாக அவரது பரப்பு விரிவதைக் காட்டுகிறது. ஒரு வகையில் எதிர்பார்க்கப்பட்டது என்பதால் ஹில்லரி கிளிண்டனுக்கு ஏமாற்றம் அதிகம் இருக்காது.   மறுபுறம் இன்னும் முடிவுகள் வராத நிலையில் மெக்கெய்ன் திணறிக்கொண்டிருக்கிறார்.  ஹக்கபீ தொடர்ந்து விளையாடிக்கொண்டிருப்பதில் நியாயம் இருப்பதைப்போலத்தான் தோன்றுகிறது. இன்றைய முடிவுகளின் பாடம் என்று ஒன்று இருந்தால் அது மெக்கெய்ன் பொதுத்தேர்தலுக்குத் தயாராக தீவிர வலதுசாரி போக்குகொண்ட  நபரைத் துணைஅதிபருக்கு அறிவிக்க வேண்டும்.  இந்தத் தேர்தலில் இவாஞ்சலிக்கல், கருக்கலைப்பு எதிர்ப்பு உள்ளிட்ட பல குழுக்கள் மெக்கெய்னுக்கு எதிராக இருக்கின்றன.  இவற்றைச் சமாளிக்க அவருக்கு ஒரு வலதுகரம் தேவை.  இன்னொருபுறத்தில் மெக்கெய்ன் எதிர்ப்பு வாக்குகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக விழுவதால் ஹக்கபீ முன்னேற்றம் காணுவதைப் போல இருக்கிறது.  ஆனாலும் அவர் நீண்ட தூரம் போயாக வேண்டியிருக்கிறது.