Monthly Archives: ஜூலை 2023

தொய்யில் எழுதுதல்: புனைந்த ஓவியம்

கல்யாண்ஜியைத் தெரியும்.
வண்ணதாசன் சிறுகதைகளை விரும்பி வாசிப்பேன்.

அவர் ஒரு ஓவியரும் கூட – என்பதை வேலாயுத முத்துக்குமார் அவர்கள் மூலமாகத்தான் அறிகிறேன்.

செத்த காலேஜ் எனப்படும் ”இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்” (Museum of Natural History) போனால் நிறைய மிருகங்களையும் பறவைகளையும் விதம் விதமாக பாடம் செய்து வைத்திருப்பதைப் பார்க்கலாம். ஊர்வன, நடப்பன, பறப்பன, நீந்துவன, என்று கண்டம் கண்டமாகக் காணக்கிடைக்கும் விலங்குகளை தத்ரூபமாக அதன் ஒய்யாரத்துடனும் அலங்காரங்களுடனும் தீட்சண்யமான பார்வைகளுடனும் அருகருகே நிறுத்தி வைத்திருப்பார்கள். சிறுகதையையோ நாவலையோ வாசிப்பது அந்த வகை.

அதை எப்படி அனுபவிப்பது என்று #vannadasan -க்குள் சற்றே உள்ளிழுக்கிறார் வேலாயுத முத்துக்குமார்.

அதன் பிறகு ஆசிரியரை சந்திப்பது… வண்ணதாசனின் எழுதுபடங்களை உணர்வாக்கி நமக்குள் ”நெடுமண் இஞ்சி நீள் நகர் வரைப்பின் ஓவு உறழ் நெடுஞ் சுவர் நாள் பல எழுதி செவ்விரல் சிவந்த அவ் வரி அணங்கொழிலை”யும் பகிர்கிறார்.

எழுத்தை படிப்பது என்பது செத்த கல்லூரி அரும்பொருளகம்.
எழுத்தாளர்களை நேரில் பார்ப்பது என்பது விலங்குகளை சுதந்திரமாக உலவ விட்டு நாம் கூண்டுக்குள் இருக்கும் மிருகக்காட்சிசாலை விலங்காலயம்.
எழுத்தாளரை சந்தித்து உரையாடுவது என்பது அடர்காட்டின் உள்ளே பயணம் செய்து யாருமில்லா தனிமையில் அந்த உயிரினமும் நாமும் தூரத்தே நின்று ஒருவரையொருவர் நோட்டம் விடும் அபாயம் கொண்ட துணிகரச் செயல்.

நமக்காகச் சென்றிருக்கிறார். காசியபனின் அசடு, பூமணியின் பிறகு, கலாப்ரியாவின் தீர்த்த யாத்திரை, ”ஸ்வப்ந புஷ்பங்கள்” (யார் எழுதியது?), இராகுல தாசனின் அக்க்ரைப் பூக்கள், கதைப்பிதனின் தவிப்பு நூல்களுக்கான அட்டை ஓவியங்களை நம்முடன் பகிர்கிறார்.

#solvanam இதழில் முகப்புக் கட்டுரையாக கல்யாணியின் எழுத்துக்களையும் சந்திப்புகளையும் தூரிகை தீட்டல்களையும் அறிமுகம் செய்கிறார்.

#சொல்வனம் தளத்திற்கும் வண்ணதாசன் அவர்களுக்கும் நன்றி!

“உருத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்”

(குறுந். 276; 3-4)

உற்சவருக்கு உற்சவர்

பதினைந்தாண்டுகளுக்கு முன்பு எடுத்த படம்.

மைலாப்பூர் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் உற்சவத்தின் கிளை வைபவம்.

அடுத்த தலைமுறையை உருவாக்குவது எப்படி?

ஒரு பாரம்பரியத்தின் தொடர்ச்சியைத் தக்கவைப்பது எப்படி?

வாழையடி வாழையாக உங்களின் கலாச்சாரத்தையும் கொண்டாட்டத்தையும் கற்றுக் கொடுத்து, உணர்வுபூர்வமாகவும் செயல்ரீதியாகவும் பங்கெடுக்க வைத்து அர்ப்பணிப்புடன் ஈடுபட வைப்பது எப்படி?

இப்படித்தான்…

பெருமாளுக்கு பெரிய தேரா? இவர்கள் சின்னஞ்சிறிய தேரை இழுப்பார்கள்.

நந்தகோபாலனாக உற்சவர் மாறுகிறாரா? குட்டி கிருஷ்ணனும் பின்னாடியே சின்ன்னஞ்சிறிய பாலகர்களின் கைவண்ணத்தில் உலா வருவார்.

வீதி ஊர்வலங்களின் போது யானையின் தும்பிக்கை மட்டும் தனித்து ஆடும். யானை வாகனத்தின் பின் அர்ச்சகர் சாமரம் வீசினால், அதே போல் வேலைப்பாடுகள் நிறைந்த அம்பாரி கொண்ட சிற்றுரு கஜ வாகனமும் அதே ஒய்யாரங்களுடன் மாடவீதியுலா வரும்.

அலங்காரம் ஆகட்டும்; பக்தி ஆகட்டும்; திவ்விய பிரபந்த கோஷம் ஆகட்டும் – எந்தக் குறையும் இருக்காது.

எந்தவொரு இயக்கத்தையும் சித்தாந்தத்தையும் இரத்தமும் சதையுமாக நரம்பெல்லாம் பாய்ச்சுவது இப்படி வழித்தோன்றல்களை உருவாக்குவதில் உள்ளது.

அவர்களுக்குள் தென்கலையா… வடகலையா? என்னும் கோஷ்டிச் சண்டையும் இப்படித்தான் உருவேற்றம் காண்கிறதா என்றால்…

உற்சவமூர்த்தியும் பால்யமூர்த்தியும் ஒன்று என்பது அத்வைதம்,

பெரிய வாகனத்தில் வரும் பெருமாள் வேறு; குழந்தைகளுக்கான பொம்மைப் பெருமாள் வேறு என்பது துவைதம்,

வேறெனினும், பரமாத்மாவுக்குள் ஜீவாத்மா அடக்கம் என்பது விசிஷ்டாத்வைதம்.

Elemental – எலிமெண்டல்

டிஸ்னியுடன் சேர்ந்த பிறகு பிக்ஸாரின் படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதல பாதாளத்திற்குச் செல்ல ஆரம்பித்தன, அதன் உச்சகட்ட தீவிரமாக சமீபத்திய படத்தைச் சொல்லலாம்.

கலக்கல் படங்களை எடுத்தவர்கள்: அப், இன்கிரெடிபிள்ஸ், கோக்கோ, டாய் ஸ்டோரி, இன்சைட் அவுட், மான்ஸ்டர்ஸ் இன்க், கார்ஸ், ஃபைண்டிங் நீமோ, இன்சைட் அவுட்.

கடந்த படமான “டர்னிங் ரெட்” (சிவப்பாக மாற்றம்) – பெரும் ஏமாற்றம். இந்தப் படம் அதன் அடுத்த கட்டம்.

எல்லோரையும் திருப்தி செய்யும் விதமாக கதை எழுத முடியாது! அனைவரையும் உள்ளடக்கி பூர்வகுடி முதல் பல்லுயிர் பேணல் வரை வோக் கலாச்சாரமாக சர்வ ரோக நிவாரணியாக சினிமா எடுக்கக் கூடாது. லத்தீன் அமெரிக்கர்கள், இஸ்லாமிய மதப் பற்றாளர்கள், ஐரிஷ் வந்தேறிகள், ஆஃப்கன் அன்னியமாக்கப்பட்டவர்கள், தெற்காசிய அயல்வாசிகள் – எல்லோரையும் குறிப்பால் உணர்த்துகிறார் இயக்குனர் – நெருப்புக்காரர்கள்.

வெள்ளையர்கள் போல் தண்ணீர்காரர்கள். அவர்கள் இயல்பாக அவர்களின் நாடாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். கலை, பண்பாடு என்று செழுமையாக்கிக் கொண்டிருப்பவர்கள். நதி போலே ஓடிக் கொண்டிருப்பவர்கள். வளைந்து கொடுப்பவர்கள்.

அயல்தேசிகளும் உள்ளூர்வாசிகளும் – தீயும் நீரும் – இணைந்தால்?

இதுதான் முடிச்சு.

வழக்கம் போல் சுவாரசியமான வசனங்கள். பிரமிப்பான ஜவலிப்புகள். ரசனையான பின்னணி அணிகலன்கள். அர்த்தபுஷ்டியான கதாமாந்தர்கள். நுணுக்கி செதுக்கப்பட்ட சின்னச் சின்ன வர்ணணைகள். எல்லாமே பிக்சார் தரம்.

எல்லாவற்றிலும் வென்று உச்சத்தை எட்ட விரும்பும் பொறியும் + ஏதொவொன்றில் திருப்திப்பட்டு கிடைத்த வாழ்க்கையில் திருப்தியுறும் ஓடையும் – ஒரு குடித்தனத்தில் மணமுடிக்க இயலுமா!?

இதெல்லாம் வைத்து கலக்கியிருக்க வேண்டாமா அனிமேஷன் படம்? இந்த பின்பிலத்தைக் கொண்டு பிக்சார் பின்னி சிம்மாசனமிட்டிருக்கலாமே!

ஆனால் – அன்னியோன்யம்? மனதில் நிற்கும் சித்தரிப்பு?? உள்ளுணர்வை உரசி சிந்தையை ஆக்கிரமித்து உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உணர்வு பூர்வமான கொந்தளிப்பு!? எல்லாம் கோட்டை விடுகிறார்கள்.

ஒரு காலத்தில் பாரதிராஜா என்றால் நம்பிக்கையாகப் போவேன். என்னுயிர் தோழன். புது நெல்லு புது நாத்து, நாடோடித் தென்றல் என்று தொடர் சறுக்கல்களில் ‘சரக்கு தீர்ந்து போச்சு மாஸ்டர்!’ என்று விட்டு விட்டேன். அது போல் பிக்சரும் தங்களின் காயல்கல்பத்தை காற்றில் தொலைத்து இன்னும் தங்களின் ஆன்மாவை ரத்தமும் சதையுமாக மென்று கடித்து துப்பியிருக்கிறார்கள்.

சற்றே இலகுவாக, ஜாலியாக, உண்மையாக லேசாக்கி ஊதியிருக்கலாம்.