நம்முடைய கைபேசியிலோ, கணினியிலோ, இணைய இணைப்பு இல்லாத போதும் வாசிப்பதற்கு வசதியாக பதாகை இதழ் பிடிஎஃப் வடிவிலும் கிடைக்கிறது. அதைப் பற்றி சில குறிப்புகள்.
முதலில் உள்ளடக்கம்: இரண்டு மணி நேரத்திற்குள் வாசித்து முடிக்கும் அளவுதான் இருக்கிறது, வாரந்தோறும் வெளிவருவதால், இந்த சுருக்கமான 27 பக்க இதழ் என்று முடிவெடுத்திருப்பார்கள்.
மொழியாக்க கதைகள், சுவாரசியமான கட்டுரைகள், தொடர்கதையின் பகுதிகள் என்று எல்லாமும் கிடைக்கிறது. இந்த இதழ் வெளியானவுடன் ‘To Kill a Mockingbird’ கதை உருவான கதை வாசித்தேன். அந்தக் கட்டுரையை தமிழுக்குக் கொணர்ந்த உடனடித்தனமும் அந்த சம்பவங்களின் சுவாரசியமும் நம்முடைய இந்தியச் சூழலுக்கு எவ்வாறு பொருந்துகிறது என்று எண்ணிப் பார்க்க வைக்கும் உறுத்தாத மொழிபெயர்ப்பும் – இந்த இதழை முக்கியமாக்குகின்றன.
இனி *பிடிஎஃப்* புறத்தோற்றம் பற்றிய எண்ணங்கள்:
1. பிடிஎஃப் கோப்பின் முதல் பக்கத்தில் எந்த இதழ், எத்தனையாவது வெளியீடு, எப்பொழுது வந்தது போன்ற முகப்பு தலைப்புகள் எதுவும் காணக் கிடைக்கவில்லை.
2. இரண்டாம பக்கமாக – இம்பிரிண்ட் விவரங்களைப் போடலாம். யாரைத் தொடர்பு கொள்வது, எவ்வாறு படைப்புகளை அனுப்புவது, யார் இதை இணையத்தில் போடுகிறார்கள் என்றும் காப்புரிமை குறித்த விவரங்களையும் சேர்க்கலாம்.
3. தலைப்பிலேயே ஆசிரியர் பெயர் போடுவது உவப்பாக இல்லை. எழுதியவர் பெயரை – இன்னொரு எழுத்துருவிலும் (அல்லது சிறிய எழுத்து அளவில்); மொழியாக்கியவர் பெயரை மற்றொரு lineல் கொடுத்தால் – யார் படைப்பாளி என்பது தெளிவாகத் தெரியும்.
4. லூயிஸ் கரோலின் Alice’s Adventures in Wonderland நாவல் குறித்த பதிவு நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
5. சுட்டிகளை க்ளிக் செய்தால், அந்த தளத்தின் முகவரிக்கே செல்லுமாறு அமைக்கலாம். இப்பொழுது, காபி/பேஸ்ட் செய்துதான் அந்த உரல்களைச் சென்றடைய முடிகிறது.
7. Header and Footer போடலாம். ஒவ்வொரு பக்கத்தின் தலைப்பில், பதாகையின் இதழ் எண், எந்த நாளில் வெளியானது என்று சொல்ல வேண்டும். ஒவ்வொரு பக்கத்தின் அடியில் எந்தக் கட்டுரையை வாசிக்கிறோம் என்பதைச் சொல்லலாம்.
8. எல்லாக் கவிதைகளும் இடது பக்கமாக alignment கொண்டிருப்பதற்கு பதில், சிலவற்றை நடுவாந்தரமாக போடுவது, சிலதை வலதுபக்கமாக நெறிப்படுத்துவது என்று வித்தியாசமாக செய்தால், வாசகருக்கு ஆர்வம் அதிகரிக்கும்.
9. ஆக்கங்களின் பக்க இறுதியில், தொக்கி நிற்கும் கவிதை பத்திகளோ, கட்டுரையின் பாக்கி சொச்சங்களோ இல்லாமல், புதிய பாராக்கள், புதிய பக்கத்தில் துவங்குமாறு செய்யலாம்.
10. பார்டர் போட்டு கட்டம் கட்டலாம்.
நீங்கள் வாசித்துவிட்டீர்களா?










