பூச்சி சங்கீதம்: வண்டுகளில் இசை லயமும் சத்தங்களும்


Bug Music: How Insects Gave Us Rhythm and Noise – by – David Rothenberg சமீபத்தில் வாசித்தேன்.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியாம் தமிழ் குடிமக்கள் இளையராஜாவா, ஏ ஆர் ரெஹ்மானா என பிணக்குப் போட்டு கொள்வதற்கான மூத்த காரணத்தை இந்தப் புத்தகம் ஆராய்கிறது. பல கோடி மில்லியன் ஆண்டுகள் முன்பே பூச்சிகள் இருந்ததை நாம் அறிவோம். அதில் இருந்து புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய் ஆனதும் அறிவோம்.ஆனால், அந்தப் பூச்சிகளிடம் இருந்துதான் ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் என்று அறிந்து கொண்டதை அறிவோமா?

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கொருமுறை குறிஞ்சி பூப்பது இருக்கட்டும்; பதினேழு ஆண்டுகள் கருத்தரிக்கப்பட்டு 17 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அளபெடை இசைக்கும் சிகாடா (cicada) பூச்சிகளை கவனித்திருக்கிறார். இவர் மட்டுமல்ல… இவருக்கு முன்னோடியாக 1690இலேயே மட்சுவோ பாஷோ என்பவர் சிக்காடாக்களின் தாளங்களை ரசித்து ஹைக்கூ ஆக்கியதையும் கவனிக்கிறார். 1980களில் வந்த ஆராய்ச்சி பத்திரிகைகளைப் புரட்டி அதில் கவனிக்கப்பட்ட பூச்சிகளின் ராகங்களையும் ஆய்கிறார். புத்தகத்தின் ஆசிரியர் டேவிடுக்கு அசாத்திய பொறுமை கலந்த விடா ஆர்வம்.

பறவையின் குரலில் பாட்டு கேட்பது எளிது. வைரமுத்து கூட குக்கூ எனக் இந்தக் குயில் கூவாதோ எனத் தொட்டு, மைனா, மயில், கோழி, வாத்து எல்லாவற்றையும் மெல்லிசையில் மடக்கியுள்ளார். டேவிட் ராதன்பெகும் அவ்வாறே. புறாக்கள் விருத்தம் போடுகிறதா, கிளி செப்பலோசையில் உருகுகிறதா, மஞ்சக் காட்டு மைனா எகனை மொகனையுடன் மெல்லிசைக்கிறதா என துவங்கி இருக்கிறார். இந்தப் புத்தகம் முடிந்தவுடன் கிரிக்கெட் பூச்சிகள், சுவர்க்கோழிகள் துணையுடன் இசைத் தொகுப்பே வெளியிட்டிருக்கிறார்.

இந்த சினிமாப் பாடல் எங்கிருந்து சுடப்பட்டிருக்கிறது என்பதற்கான ஆதி வேர், எங்கோ பூச்சிகளின் மெட்டில்தான் இருக்கும் என்று நீங்களும் ஆய்வுபூர்வமாக நம்பவேண்டுமானால், புத்தகத்தை வாசிக்கணும்.

One response to “பூச்சி சங்கீதம்: வண்டுகளில் இசை லயமும் சத்தங்களும்

  1. பிங்குபாக்: இசை – முப்பது பதிவுகள் | 10 Hot

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.