
நவீன புராணங்களில் முதன்முதலில் தோன்றியதாக பார்சிவல் கதையை சொல்லலாம். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் நடந்ததாக நம்புகிறார்கள்.
தேடலில் உள்ள பலரும் தங்கள் தேடல் எது, விசாரணையின் எந்த கட்டத்தில் எப்படி இருக்கிறோம் என்று அறியாமல் தேடலை மட்டும் படு சிரத்தையாக தொடர்பவர்கள்.
பார்சிவல் வாழ்க்கையை விவரிக்கிறார்கள். அந்தக் கால அரசர்களுக்கேயுரிய எதிர்பார்க்கக் கூடிய திடீர் திருப்பங்களும் சுவாரசியங்களும் நிறைந்த கர்ணபரம்பரைக் கதை. இளைய தளபதி படம் போல் சண்டை, காதல், குடும்பம், மீண்டும் மோதல், காமம் என்று வாழ்க்கை ஓடுகிறது. வில்லன் யார், எந்த குறிக்கோளுக்காக வில்லனை துவம்சம் செய்ய நினைக்கிறான் என்று மசாலாப் பட நாயகன் மறந்து போவது போல் புறப்பட்டபோது இருந்த இலட்சியம் மறந்தே போச்சு.
தமிழ்ப்படங்களில் சேர வேண்டிய தாயும் சேயும் என்று நமக்குத் தெரிந்தவர், கதாபாத்திரங்களுக்கு புலப்படமாட்டார்கள். அப்பொழுதே உணர்ந்து கொண்டு விட்டால், எல்லாம் சுபமாக அப்பொழுதே முடிந்துபோகும். பார்சிவல் நிலையும் இப்படித்தான்.
குருட்டாம்போக்கில் சென்றாலும் ராஜாதி ராஜாவை சந்திக்க நேரிடும் முக்கிய தருணத்தில் கூட ‘கேட்கவேண்டிய கேள்வி’யை கேட்கவில்லை. கேட்டிருந்தால் மன்னனுக்கு மோட்சமும், மக்களுக்கு சுதந்திரமும், பார்சிவலுக்கு இராஜாங்கமும் உடனடியாக வாய்த்திருக்கும்.
அதை விட்டு விட்டு, இடைவெளிக்குப் பின் சுழன்று திரியும் திரைக்கதை போல் எங்கெங்கோ போகிறான். விக்கிரமாதித்தன் கதை மாதிரி வேதாளமாய் பல சுவையான நிகழ்ச்சிகள். இத்தனை அனுபவங்களுக்கும் மனித அறிமுகங்களுக்கும் முத்தாய்ப்பாக கட்டாங்கடைசியில் அந்த சக்தி வந்து சேர்கிறது. அடுத்தவர் மனதில் என்ன உணர்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் நெஞ்சம் வாய்க்கப் பெறுகிறான்.
மீண்டும் கோட்டைக்கு வந்து, ‘தங்களை வாட்டுவது யாதோ’ என்று இராஜாவை வினவ, இராச்சியம் அவனை சேர்ந்தடைகிறது.
நீதி என்ன? எப்படி இது சாத்தியமாகிறது என்கிறது கதை? உறவுகளினால் சாத்தியக்கூறுகள் தென்படுகிறது. மற்றவர்களின் பரிச்சயங்களால் பாலம் அமைக்கிறான்.
அனுபவம் + திரைகடலோடும் உழைப்பு + ஏதில் தாவடி பயணங்கள்.
மேல் விவரங்களுக்கு:
1. Parzival – Wikipedia | 2. Wolfram von Eschenbach: Parzival










