நாலைந்து வாரமாக வரும் ‘ஊ..ல..லா…‘வின் ஒன்றிரண்டு வாரங்களைப் பார்க்க முடிந்தது.
இத்தனை பேர் விண்ணப்பித்ததில் வெரைட்டியாக தேர்ந்தெடுப்பது கஷ்ட காரியம். ஏற்கனவே பாடியதை சிடியில் பதிந்து தர வேண்டும் போன்ற விதிமுறைகளால், சன் டிவி தேர்வாளர்கள் குழுவிற்கு வேலை குறைந்திருக்கும்.
ஏ ஆர் ரெஹ்மான் பங்குபெற்ற ம்யூசிக் க்ரூப்பின், ‘தலை’யாக பால் ஜேக்கப் இருந்திருக்கிறார். அவர் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறார். அன்று தலைவராக இருந்தவர், இன்று வாலாக இருக்கிறார். அப்பொழுது ஓரமாய் போஸ் கொடுத்த ரெகுமான், இன்று நடுநாயகமாக வளர்ந்திருக்கிறார்.
நிகழ்ச்சியை compere செய்யும் இருவருமே செம இளமை & துள்ளல். பின் வழுக்கையைத் தடவிப் பார்த்து, நரையை மறைத்துக் கொண்டாலும், மெட்ரோ அடுத்த ஜெனரேஷனைப் பார்க்கும்போது, வாழ்க்கை/வேலை/இறப்பு என்று பயம் எட்டிப் பார்த்து, ‘ஹெட்லைன்ஸ் டுடே’விற்கு கன்னல் மாற்றிவிட்டு, சோபாவில் சாயத் தூண்டுகிறது.
ஹெட்லைன்ஸ் டுடே குறித்துப் பேச்சு எழும் சமயத்தில், தெளிவாகப் பேசும் பிரண்ணாய் ராயும், புரியாத ஹிந்தியைக் கூட எளிமையாக்கும் துபேயும் கொண்ட தூர்தர்ஷன் காலங்கள் நினைவுக்கு வரும். ‘என்னதான் இவ்வளவு நியுஸ் சேனல் வந்தாலும், அந்தக் கால அலசல் போல் வருமா?‘ என்று ஹெட்லைன்ஸ் டுடே அங்கலாய்க்க வைக்கிறது.
இந்த கருத்துக்கும் விக்கியின் தமிழ்ப்பதிவர்கள் குறித்த கருத்துக்கும் சம்பந்தமில்லை. தலைப்புச் செய்திகள் இடும்போது பின்னணி இசை போடுவதில் குழப்பம்; செய்திகளை சகஜமாகத் தருகிறேன் என்று அரட்டை பாணியில் கொடுக்க முனைவது சரி – ஆனால், தத்துபித்து மொழியில் வளமும் இன்றி, ஆராய்ச்சியில் ஆழமும் இன்றி, பரப்பில் அகலமும் இன்றி, ‘முருகா… என்ன கொடுமை இது’ என்று சொல்லும் ‘ஹெட்லைன்ஸ் டுடே’ கண்டால் சன் செய்திகளின் தரம்/மணம்/குணம் மெச்சுவது சர்வ நிச்சயம்.
மீண்டும் ‘ஊலலா’விற்கே கன்னல் மாற்றிக் கொள்வோம்.
திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை என்று சென்னை தவிர்த்த கிராமங்களுக்கும் சென்று தோண்டித் துழாவியதை பெரிதாக பிரஸ்தாபித்தார்கள். வியாபார காரணமோ அல்லது நவநாகரிக மயக்கமோ அல்லது பாப் கலாச்சார மோகமோ… ‘யாமறியேன் அல்லாவே!’ ஒரு குத்துப் பாட்டுக் குழு, நாட்டுப் புற இளையராஜா மெட்டமைப்பு, வில்லுப்பாட்டு வேலன்கள், வேட்டி கட்டிய வெள்ளந்திகள் எல்லாரையும் ஒதுக்கி அறவே புறந்தள்ளி விட்டு, டிஸ்டில்ட் வாட்டரில் ஸ்ட்ரா போட்டு அருந்துபவர்கள் மட்டுமே தேர்வானார்கள்.
அங்கேயே சப்.
அதற்கடுத்ததாக பேசத் தெரியாத மூவர் அணியாக நடுவர் குழு அடுத்த சப்.
பால் ஜேக்கப் மண்டையாட்டுவார். கையை அசைப்பார். காலைத் தூக்கி நின்றாடுவார். கைலியை ஃபேஷனாக முண்டாசு தட்டுவார். மைக் கொடுத்தால் மௌனியாவார்.
சிவமணி குளிர் கண்ணாடியில் தஞ்சம் அடைந்திருக்கிறார். ஆங்கிலத்துக்கு நடுவே தமிழ் வார்த்தைகள் வருவது ஒகே. அதுவும் வராத நேரங்கள் அதிகம்.
இருப்பதற்குள் வசுந்தரா தாஸ் தேவலாம். மனதில் பட்டதைப் போட்டுடைக்கிறார். நல்ல கணிப்புகள். ஆனால், கூட கம்பெனிக்குத்தான் ஆள் லேது.
ஊலலா பங்கேற்பாளர்கள் அனைவரும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்களாகவோ, கல்லூரி மாணவர்களாகவோ இருப்பவர்கள். அல்லது அவ்வாறு காட்டிக் கொள்பவர்கள். பணத்தின் கருக்கு கலையாதவர்கள்.
பாடல் வரிகள் என்றால் ‘நடுநடுவே ரெண்டு மானே போட்டுக்க… தேனே சேர்த்துக்க’ என்னும் அலைவரிசையில் இருப்பவர்கள். வெற்றி பெறத் தேவையான பாடகரை அமுக்கும் பயிற்சியில் கைதேர்ந்தவர்கள். கீபோர்டிந் சூட்சுமங்களும், எலெக்ட்ரிக் கிடாரில் அபிநயமும் பிடிக்கத் தெரிந்த நண்பர்கள் கொண்டவர்கள். நாதஸ்வரமும் கடமும் மோர்சிங்கும் ஜலதரங்கமும் அலர்ஜியானவர்கள்.
சுயம்புவாக திறமை கொண்டவர்களையும் வார்ப்புரு எஞ்சினுக்குள் அடைத்து, பால் ஜேக்கப் ஆலையில் உருமாற்றி, ‘இப்படித்தான் இருக்க வேணும் ட்ரூப்பு’ என்று சீன தொழிற்சாலை தயாரிப்பு போல் வெளியாக்கும் ‘பழைய ட்யூன்; புதிய க்ரூப்’ வித்தை – ஊ… லலா…
1. Band Hunt with AR Rahman – Oohlalala Official Site
2. Music « Sun rises.. Sun sets… – Episode Experiences










