Vairamuthu Question & Answer – MSV, Rajaraja Chozhan


அல்லிமுத்து, பர்கூர்.

ஒழுக்கம் – சுத்தம் உங்கள் விளக்கம்?

சாட்சியில்லாத இடத்திலும் நேர்மையாயிருப்பது ஒழுக்கம்.

கண்காணா இடங்களையும் தூய்மையாய் வைத்திருப்பது சுத்தம்.


விஜி செந்தில், பேராவூரணி.மேட்டுக்குடி மக்களுக்கே ஆதரவு தந்த ராஜராஜசோழனை மாமன்னன் என்பது பொருந்துமா?

கல்வெட்டுச் செய்தி ஒன்று அறிந்தபோது மாமன்னன் ராஜ-ராஜனைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது. இறைவன் பெயரால் அமைக்கப்பட்ட ஆலயத்தை நகர்த்தி நகர்த்தி மக்களுக்குக் கொண்டு சென்ற மாண்பு கண்டு வியந்துபோனேன்.

தாயின் நினைவாய், தந்தையின் நினைவாய்த் தஞ்சைப் பெருவுடை-யார் ஆலயத்தில் அணையா தீபம் ஏற்றிக்கொள்ளலாம் என்றோர் ஆணை பிறப்பித்தான் அரசன். போகப் போகத்தான் தெரிந்தது அது தீபமல்ல ஏழைகளுக்கான திட்டம் என்று.

அணையா தீபம் ஏற்ற வருகிற செல்வந்தர்களுக்கு அரசன் ஒரு நிபந்தனை விதித்தான்.

சந்திரசூரியர் உள்ளவரை அந்த அணையா-விளக்கு ஒளிவிடவேண்டு-மென்றால், அது எரியத் தேவையான திரிக்கும் எண்ணெய்க்குமான பொறுப்பை சம்பந்தப்பட்டவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்காக 96 ஆடுகளைக் கோயிலுக்கு அவர்கள் கொடை கொடுத்துவிட வேண்டும். அந்த ஆடுகளை ‘சாவா மூவாப் பேராடு’ என்கிறது கல்வெட்டு. அந்த ஆடுகள் சோழமண்டலத்தில் உள்ள ஓர் ஏழைக் குடிமகனை அழைத்து ஒப்படைக்கப்படும். அவன் அதை வளர்த்துக் காத்து ஆண்டு அனுப-வித்துக் கொள்ள வேண்டியது; ஆலயத்தில் எரியும் தீபத்திற்கான எண்ணெய்ச் செலவை மட்டும் அவன் ஏற்றுக் கொள்ள வேண்டியது.

எரியும் தீபம் எரிந்து கொண்டே-யிருக்கும்; ஓர் ஏழைக் குடும்பம் வாழ்ந்து கொண்டேயிருக்கும். தீபத்தில் எண்ணெய் உயர உயர சோழமண்டலத்தின் பால்வளமும் பெருகிக் கொண்டேயிருக்கும்.

ஆலயத்தில் எரியும் ஒரு சுடர் நெருப்பினால் ஓர் ஏழைக் குடும்பத்-திற்குப் பால் வார்த்தவன் என்றும், நெருப்பிலே பால் கறந்தவன் என்று-மல்லவா அந்த மாமன்னனுக்கு மெய்க்கீர்த்தி பாடத் தோன்றுகிறது.


அப்துல் அஜீஸ், திருநாகேஸ்வரம். மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் பற்றி உங்கள் மதிப்பீடு?

மும்பையில் (பழைய பம்பாயில்) ஒரு மெல்லிசை நிகழ்ச்சி. மெல்லிசை மன்னரின் இசைமழையில் அரங்கம் மிதக்கிறது ஆனந்தத் தெப்பத்தில். மேடைக்கு ஒரு துண்டுத்தாள் வருகிறது. அதில் இருந்த செய்தி இதுதான்.ஓடம் நதியினிலே பாடுங்கள், எழுதியவர் யாரென்று பார்க்கிறார்கள். ‘இப்படிக்கு நௌஷாத்’ என்றிருக்கிறது. ‘அய்யோ… இது நேயர் விருப்பமல்ல. கடவுள் விருப்பம்’ என்று கும்பிடுகிறார் மெல்லிசை மன்னர்.

இப்படி இசைமேதைகளையே சுரக் கயிறுகளால் கட்டிப்போட்ட-வரல்லவா மெல்லிசை மன்னர்! எத்தனை மோதிரங்கள் பூட்டுவது அந்த வித்தக விரல்களுக்கு?

அறுபதுகளின் ஆகாயத்தையே தன் ஆர்மோனியத்துக்குள் அடைத்-துப் போட்ட அந்த ஆளுமையைச் சொல்லவா?

உணரமட்டுமே முடிந்த உணர்ச்சி-களுக்கு சப்த வடிவம் கொடுத்த சக்கரவர்த்தி என்று சொல்லவா?

தம்புராவின் சுதியிலேயே ஒரு மொத்தப் பாட்டும் அமையவேண்டும் என்று இயக்குநர் கேட்டபோது, ‘பொன்னென்பேன்… சிறு பூ வென்பேன்’ என்று பாடி முடித்த படைப்பாற்றலைச் சொல்லவா?

‘சிந்துநதியின் மிசை நிலவினிலே’ என்ற பாரதி பாட்டுக்கு இசை-யமைத்தபோது, ஒரு கவிஞன் எழுத எத்தனிக்கும் முணுமுணுப்பிலிருந்து இசையமைத்தால் என்ன என்ற உத்தி படைத்த புத்தியைச் சொல்லவா?

‘ஆடை முழுதும் நனைய நனைய மழை-யடிக்குதடி’ என்ற பாடலின் இணைப்-பிசையில், அழுகை வாத்தியம் என்று அறியப்பட்ட ஷெனாயில் ஆனந்தத் தாண்டவம் வாசித்த அதிசயத்தைச் சொல்லவா?

உப்புச் சப்பில்லாத படங்களுக்-கும் வஞ்சகமில்லாமல் வாசித்த வள்ளன்மை சொல்லவா?

‘என் பெயரே எனக்கு மறந்து-போன இந்த வனாந்தரத்தில்’ என்ற என் கவிதைக்கு இசையமைத்து இந்தியாவிலேயே புதுக் கவிதைக்கு இசை யமைத்தவர் என்ற புதுமை புரிந்ததைச் சொல்லவா!

வார்த்தைகள் பாடப்படும்போது ‘சற்றே விலகியிரும் பிள்ளாய்’ என்று வாத்தியங்களை ஒதுக்கிவைத்துத் தமிழுக்குத் தலைமை தந்த தகைமை-யைச் சொல்லவா!

  • பிறப்பு _
  • இறப்பு,
  • தாலாட்டு _
  • ஒப்பாரி,
  • காதல் _
  • பிரிவு,
  • கண்ணீர் _
  • புன்னகை,
  • விரக்தி _
  • நம்பிக்கை,
  • வெற்றி _
  • தோல்வி

என்று வாழ்வின் சகல உபநதிகளையும் தனக்குள் வாங்கி வைத்துக்கொண்ட சமுத்திர-மல்லவா மெல்லிசை மன்னர்!எல்லாவற்றுக்கும் மேலாய் தன் இசைக்குத் தமிழூட்டிய கவிஞனை மறவாத நன்றியாளர்; இசை நிழல்; தமிழே நிஜம் என்னும் பெருந்தன்மை-யாளர்.

எம்.எஸ்.வி மூன்றெழுத்தில் ஏழுசுரம்.

நூற்றாண்டுகளுக்குப் புகழ்சேர்த்த-வர் நூறாண்டுகள் வாழட்டும்!

One response to “Vairamuthu Question & Answer – MSV, Rajaraja Chozhan

  1. பிங்குபாக்: Vairamuthu answers – Bharathy, Tamil kavithai, Music Directors, Songs | Snap Judgment

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.