வைத்தீஸ்வரன் கவிதைகள்


திகைப்பு

இருட்டுக்கு பயந்து
இமைக்கதவை மூடிக்கொண்டேன்
உள்ளே புது இருட்டு
“உர்” என்றது

—————————————————
உரிமை

அவன் வீட்டு சாக்கடையில்
அடுத்த வீட்டு நாய்படுத்துப்
புரளுவது ஒரு வழக்கமாச்சு.
உரிமையால்
ஆனமட்டும் விரட்டிப் பார்த்தும்
அது நகரவில்லை, ஒரு நாள்
ஆளுயுரத் தடியெடுத்து
ஆத்திரத்தால் அடித்துவிட
அது வள்ளென வால் மடக்கிக்
குதித்தோட,
அவன் வாய்க்குள்ளே
சள்ளென சகதி விழுந்தது தெறித்து.
அவன் வீட்டு சகதி.

—————————————————
குறி

வானத்தை சுட்டேன்
காகம் விழுந்தது
காகத்தை சுட்டேன்
காகம்தான் விழுந்தது.

—————————————————
க்ராஸிங்

மாலை யிருட்டில்
விருட்டென வெளியைக் கலக்கி
தொலைந்து போன
மின்சார ரயிலை
குறுக்கு மறுக்காய்
கேட்டுக்குள் பாய்ந்து
கூட்டமாய் தேடுகிறார்கள்
நகரத்து மக்கள்.

(நன்றி: வைதீஸ்வரன் கவிதைகள் – கவிதா பப்ளிகேஷன்: நவம்பர் 2001 – விலை ரூபாய் 90.)

http://tamil-lit.blogdrive.com/

One response to “வைத்தீஸ்வரன் கவிதைகள்

  1. பிங்குபாக்: வைத்தீஸ்வரன் கவிதைகள் | Rammalar's Weblog

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.