என்று மடியும் எங்கள் குடிமையின் சோகம்?
அ.கி. வேங்கட சுப்ரமணியன்
மறுபடியும் சென்னை மாநகராட்சிக்குத் தேர்தல் நடக்கப் போகிறது. 2001 சென்னை மாநகராட்சித் தேர்தலில் சராசரி வாக்குப் பதிவு சுமார் 35 சதவீதம்தான். சில கோட்டங்களில் 20 – 25 சதவீதம்தான். இந்தக் கோட்டங்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு கோட்டத்தில் உள்ள மொத்த வாக்குகளில் 10 சதவீத வாக்குகள் கூட கிடைக்கவில்லை. மாநகராட்சி முழுவதிலும் சேர்ந்து முக்கிய இரு கட்சிகளுக்கும் மொத்த வாக்குகளில் சுமார் 10 சதவிகிதமே கிடைத்தது.
வாக்குப் பதிவின் போது சில கோட்டங்களில் வன்முறையால் வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டன. குறைவான வாக்குப்பதிவுக்கு இந்த வன்முறையும் ஒரு காரணம். பிற்பகலில் வாக்களிக்கலாம் என்று இருந்த வாக்காளர்கள் முற்பகலில் நடந்த வன்முறையைத் தொலைக்காட்சியில் பார்த்த பின்பு வாக்களிக்க வேண்டாம் என்று வீட்டிலேயே இருந்து விட்டார்கள்.
மேற்கண்டவை எல்லாம் 17-10-2001 தினமணி நாளிதழில் வெளியான செய்தித் தலைப்புகள்.
வாக்களிக்கும்போது மட்டுமல்ல, 22.10.2001 அன்று வாக்குகள் எண்ணப்படுகின்ற மையங்களிலும் வன்முறை நடந்தது. 23.10.2001 தினமணியில் இதுபற்றி வெளியான செய்தித் தலைப்புகள்:
இந்தச் செய்தியில் “ஜனநாயகப் படுகொலை செய்யப்படுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தற்போது RAPE செய்யப்பட்டிருக்கிறது என்றார் கருணாநிதி” என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் கட்சி ஆட்சி தேவையில்லை. அந்தந்தப் பகுதி மக்களே தங்களுக்குள் ஒரு நல்ல நபரை வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றியடையச் செய்ய வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 152வது கிழக்கு அடையாறு கோட்டத்தில் ஒரு வேட்பாளர் “கிழக்கு அடையாறு குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின்” சார்பில் நிறுத்தப்பட்டார். இந்தத் தொகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி. வேட்பாளருக்காக எளிய முறையில் பிரசாரம் நடந்தது; அவருக்கும் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் குடிமக்களின் இந்த முன் முயற்சி (initiative) இறுதியில் ஒரு சோக நாடகமாகவே முடிந்தது.
இந்தக் கோட்டத்தின் வாக்கு எண்ணிக்கை இரவு 9.45க்குத் தொடங்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தங்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறி வாக்கு எண்ண மறுத்து தர்ணா செய்தார்கள். அவர்களைச் சமாதானப்படுத்திய பிறகு இரவு சுமார் 1 மணிக்குத்தான் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.
பிறகு நடந்தது இந்தக் கோட்டத்தில் உள்ள 16 வாக்காளர்கள் சேர்ந்து அளித்த தேர்தல் மேல்முறையீட்டு மனுவில் விவரமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்வதென்றால், முறையாக வாக்குச்சீட்டுகள் எண்ணப்படுவது நடைபெற இயலாத சூழ்நிலை வன்முறையால் உருவாக்கப்பட்டது. கூட்டமைப்பின் வேட்பாளர் வாக்கு எண்ணிக்கை மையத் தலைமை அலுவலரிடமும், காவல் துறையினரிடம் எவ்வளவோ முறையிட்டும் ஒரு பயனும் கிடைக்கவில்லை. வாக்கு எண்ணிக்கையை விடியோ படம் எடுக்க வேண்டும் என்று நீதிமன்ற ஆணை இருந்தும் அது நடைபெறவில்லை.
நான் அறிந்த வரை இந்தியாவிலேயே வாக்காளர்கள் தேர்தல் மனு தாக்கல் செய்தது இதுவே முதல் தடவை.
இதைப்போலவே இதர மையங்களிலும், வாக்குச் சாவடிகளிலும் நடந்த அராஜகச் செயலால் பாதிக்கப்பட்ட வேட்பாளர்களும், தேர்தல் மனு தாக்கல் செய்தனர். சுமார் 60 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
ஏறக்குறைய ஐந்தாண்டுகள் கழிந்த நிலையில், அடுத்த நகராட்சித் தேர்தலும் அறிவிக்கப்பட்ட பிறகும், வாக்காளரது தேர்தல் மனு இன்னும் நிலுவையில் உள்ளது. அதில் எதிர் மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டிருந்த மாநிலத் தேர்தல் ஆணையம், சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த தேர்தல் அலுவலர், உதவித் தேர்தல் அலுவலர் ஆகியோர் தங்களது எதிர்மனுவை (Counter) இதுவரை தாக்கல் செய்யவில்லை. தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டவர் மட்டும் எதிர்மனு தாக்கல் செய்ததாகக் கூறி வாய்தா வாங்கிக் கொண்டே இருக்கிறார்.
முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க வேட்பாளர்கள் தாக்கல் செய்த தேர்தல் மனுக்கள், மனுதாரர் வருகை தராததால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன (Dismissed). இதை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்ததாகத் தெரியவில்லை.
இந்தச் சூழலில் பல கேள்விகள் எழுகின்றன.
* தேர்தல் முறையீடுகளை விசாரித்து தீர்ப்பளிப்பதற்கு காலவரையறை கிடையாதா?
* வாக்காளர்கள் கொடுத்த தேர்தல் மனுவின் மீது மாநிலத்தேர்தல் ஆணையமும் மாநகராட்சியும் எதிர்மனு தாக்கல் செய்யாததற்கு மனுவில் கூறிய சம்பவங்கள் நடைபெறவில்லை என்று அவர்களால் வாதாட இயலாத நிலைதான் காரணமா?
* வன்முறை நடந்த பொழுது அதைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சியினர் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகவில்லை என்ற காரணத்தினால் அவர்களது தேர்தல் மனு தள்ளுபடி செய்யப்பட்டபொழுது ஏன் மேல் முறையீடு செய்யவில்லை?
* சென்ற முறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தால் வாக்குப்பதிவு எண்ணிக்கை மையத்தில் வாக்குச்சீட்டுகள் முறைகேடாக கையாளப்பட்டதைத் தவிர்த்திருக்க முடியும். இதை ஒரு பாடமாகக் கருதி இந்தத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இயந்திரங்கள் ஏன் பயன்படுத்தப்படவில்லை?
* வாக்கு எண்ணிக்கை மையத்தில் அராஜகம் நடத்தியவர்கள் சொன்னது, “அன்று அவர்கள் இதையேதான் செய்தார்கள். இப்பொழுது நாங்கள் அதைச் செய்கிறோம்”. இப்பொழுது இவர்களும், “அன்று அவர்கள் இதையேதான் செய்தார்கள். இப்பொழுது எங்கள் முறை” என்று சொல்லப்போகிறார்களா?
* அரசியல் என்பது கட்சிகளுக்கிடையே உள்ள ஒரு போர் விளையாட்டு (War Game). அதில் குடிமக்களின் பங்கு தேர்தலில் ஓட்டுப் போடுவது அல்லது போடாமல் இருப்பது என்பது மட்டும்தானா?
* முக்கியக் கட்சிகள் முறை போட்டு முறைகேடு செய்தால் யாரிடம் முறையிடுவது?
* நீதிமன்றத்திலே முறையிட்டால் நீண்ட காலம் ஆகிறது. நீண்டகாலத்திற்குப் பிறகு தீர்ப்பு வந்தாலும் அராஜகச் செயலைச் செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகச் சான்று இல்லை. ஜனநாயகப் படுகொலை அல்லது rape செய்பவர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடையாதா?
* கட்சிகளுக்குப் பெருத்த பண பலம், (Money Power), படை பலம், (Muscle Power), பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி பலம் (Media Power) இருக்கிறது. இதற்கு மேலும் கூட்டணி பலம் இருக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்தால் அதிகார பலமும் இருக்கிறது. இவ்வளவு பலம் இருந்தும் நேர்வழியில் தேர்தலை நேர்கொள்ளாது வன்முறையிலும், குறுக்கு வழியிலும் அவர்கள் வெற்றி பெறத் துடிப்பது ஏன்? அந்த அளவிற்குப் பதவி மோகமா? அதிகார தாகமா?
* அப்படியானால்~
“என்று தணியும் இந்த அதிகார தாகம்?
என்று மடியும் எங்கள் குடிமையின் சோகம்?”
இந்தக் கேள்விகளுக்கு விடைகளை சம்பந்தப்பட்டவர்களிடமும் தங்களுக்குள்ளேயும் மக்கள் கேட்க வேண்டும்.










