பாடப் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் கட்சிக் கொடிகள்: தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் சிறார்கள்!
மதுரை, அக். 9: குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதே லட்சியம் என்பது அனைத்து அரசியல் கட்சிகளின் கோஷம். ஆனால், உள்ளாட்சி தேர்தலில் குழந்தைகள் தினக் கூலி அடிப்படையில் பணிபுரிவதை எக்கட்சியும் கண்டுகொள்ளவில்லை.
ஆர்ப்பாட்டம், போராட்டத்துக்கு பணம் கொடுத்து ஆள்களை ஏற்றிவரும் அரசியல் கட்சிகள், தற்போது உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்கு தினக்கூலி அடிப்படையில் குழந்தைகளை அழைத்து வருகின்றனர்.
காலையில் பள்ளி செல்வதற்கு முன்பும், மாலையில் பள்ளி முடிந்த பின்னர் இரவு 9 மணிவரையும் வேட்பாளர்களுக்கு வாக்குக் கேட்டுச் செல்லும் குழந்தைகளுக்கு தினமும் ரூ.30 முதல் 70 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இதுதவிர, இடையிடையே டீ, பிஸ்கட், சாக்லேட் போன்றவையும் வழங்கப்படுகின்றன.
சிறார்களைப் பயன்படுத்தும்போது அவர்களுக்கு குறைந்த அளவே சம்பளம் கொடுத்தால் போதுமானது என்பதால் பெரும்பாலான வேட்பாளர்கள் சிறார்களுக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.
மன ரீதியான பாதிப்பு: தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளைப் பொருத்தவரை உழைப்புச் சுரண்டல் என்ற கருத்து இல்லாவிட்டாலும், வேறு விதமான பாதிப்பு அவர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன என சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
“குறிப்பாக, தேர்தல் பணியில் வீடுவீடாகச் செல்லும் கட்சித் தொண்டர்கள் அதிக அளவில் பீடி, சிகரெட், மதுபானத்தைப் பயன்படுத்துகின்றனர். அதை வாங்கி வருவதற்கும் சிறுவர்களைப் பயன்படுத்துகின்றனர்.
இது சிறுவர்கள் மனதில் புகைப்பிடிக்கும் பழக்கம் குறித்து ஒருவகையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், எதிர் அணியினர் பற்றி தகாத வார்த்தைகளால் திட்டுதல், வன்முறையில் ஈடுபடுதல் ஆகியவற்றை காணும் சிறுவர்களிடம் உடல், மன ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தும். இது குழந்தைகளை மொட்டிலேயே கருகச் செய்யும் செயல்” என்கின்றனர்.
இந்நிலையில், வீடு, ஹோட்டல் மற்றும் டீ கடைகளில் குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் 6 மாத சிறை தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டத் திருத்தம் வரும் செவ்வாய்க்கிழமை (அக்.10) முதல் அமலுக்கு வருகிறது. ஆனால் தேர்தல் பணியில் குழந்தைகள் ஈடுபடுவதைத் தடுப்பது எப்போது?.










