CORPORATE:
அரிஸ்டாடில் அன்று சொன்னது: ‘வியாபாரத்தில் வெற்றி பெற, எவருக்கும் தெரியாத ஏதோ ஒன்றை, நீ அறிந்து வைத்திருக்க வேண்டும்.’தற்காலத்திற்கு பொருத்தமாக சொன்னால்: ‘வியாபாரத்தில் வெற்றி பெற, அடுத்தவனுக்கு என்ன தெரியும் என்பதை அறிந்து, அதற்கு மேல் கொஞ்சம் சொந்தமாய் தூவுவது!’
‘கார்பரேட்‘ படம் பார்க்க கிடைத்தது. நான் பேச நினைப்பதெல்லாம் நீ எழுத வேண்டும் என்பதாக ஆசாத் (படிக்க: எண்ணம்: கார்ப்பரேட் – திரைப்படம் எனது பார்வையில்) ஏற்கனவே, திரைக்கதை சுருக்கம், ரசித்த பகுதிகளை விலாவாரியாக பதிந்திருக்கிறார்.

சில நாள்களுக்கு முன் கலை வாழ்க்கையை பிரதிபலிக்கிறதா அல்லது மிகை நாடும் கலையா போன்ற உபரிக் கேள்விகளுடன் (கேட்க: கில்லி – Gilli :: Life Imitates Art – Vasanthi Podcast : Kamla Bhatt) கூடிய வாசந்தியின் சிந்தனை நினைவுக்கு வருகிறது.
படத்தில் பூச்சிக்கொல்லி கலந்த நீரை மென்பான நிறுவனம் பயன்படுத்துகிறது. போட்டியாளருக்கு விஷயம் தெரியவர, அதை ஆட்சியில் இருப்பவரிடம் சொல்லிவிடுகிறார். கடுமையான தணிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது.
சண்டை சச்சரவுக்குப் பிறகு, இரு முதலைகளும் (பொருள் விளக்கம்: duopoly: Answers.com) சமாதானம் ஆகிறார்கள். நடுவண் அரசில் மாற்றுக் கட்சி கோலோச்சினாலும், மாநிலத்தில் எதிர்க்கட்சி பதவி வகித்திருந்தாலும், கட்சி பேதம் பாராமல் அரசியல்வாதிகள் கைகோர்க்கிறார்கள். கவனிக்க வேண்டியதை கொடுத்ததுடன், மசாலாப் படம் போல் தவறே செய்யாத அப்பாவியை குற்றவாளி ஆக்காமல் கூட்டுக் களவாணி மட்டும் தனியாக சிக்குகிறார்.
நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி என்றால் இந்திய அளவில் உடனடியாக நினைவுக்கு வருவது ஹிந்துஸ்தான் லீவர் (HLL) & ப்ராக்டர் & காம்பிள் (P&G). பல்லாண்டுகளாகத் தொடரும் அவர்களின் குழிபறித்தல் கதைகளை ‘கதையல்ல நிஜம்’ என்று நண்பர்கள் விவரிக்க வாய்பிளந்து வலைப்பதிவுலகை மிஞ்சும் அலுவலக அரசியல் மர்மங்களைக் கண்டு வியந்திருக்கிறேன்.
அந்த சம்பவங்களையும், மூன்றாண்டுக்கு முன் மீண்டும் முதன்முறையாக வெடித்த கோக்-பெப்ஸி நச்சுத்தன்மை விவகாரத்தையும் தன்னுடைய பாணியில் அமர்க்களமாக நம்பகத்தன்மையுடன் கொடுத்திருக்கிறார். படத்திற்கு விளம்பரம் சேர்ப்பது போல் அமைச்சர் அன்புமணியும் சான்றிதழ் (படிக்க: தமிழகத் தேர்தல் 2006: “No pesticides in Coke & Pepsi” – Anbumani) வழங்கி, இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் 180 டிகிரி வளைந்து (படிக்க: தமிழகத் தேர்தல் 2006: Anbumani does a Volte-face on Coke Pesticide Issue) மறுப்பறிக்கை விட்டு, இன்றைய செய்திகளில் என்ன சொல்லி தலைப்புப் பக்கங்களில் இடம்பிடிக்க போகிறார் என்னும் ஆர்வத்தை வளர்த்து வருகிறார்.
மிகை நாடும் கலை என்பதற்கேற்ப மடிக்கணினியில் இருந்து தொழில் ரகசியங்களைத் திருடுவது அதீத புனைவாக இருப்பதாக பல விமர்சனங்கள் வசை பாடுகிறது. இது காற்றில் காரியங்களைக் கறக்கும் காலம் (படிக்க: While you surf the Web, who’s surfing you? – Technology – International Herald Tribune). பழங்கால உத்தியை பயன்படுத்தி, சூட்சுமத்தைத் தெரிந்து கொள்வதற்கு பதிலாக, கொந்தர்களின் உதவியோடு நவீன நுட்பத்தைக் கொண்டு சந்தைப்படுத்தல் விஷயங்களை அறிவதாக காட்டியிருந்தால் சமூகப் படம் என்பதில் இருந்து விலகி அறிபுனைவாக இருக்கும் அபாயத்தை தவிர்த்திருக்கிறார்.
படத்தில் அவ்வப்போது பெரிய விஷயங்களை பேசிக்கொள்ளும் கடை நிலை ஊழியர்கள்:
‘நமக்கும் கோட் சூட்டு போட்டு இருக்கிறவங்களுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? நாம நாலு மணி வரைக்கும் நாயா, பேயா உழைச்சுத் தள்ளுவோம். நம்ம பாஸுங்க நாலு மணிக்கு அப்புறம்தான் வேலையை ஆரம்பிப்பாங்க!’
நல்ல வேளை ஐஷ்வர்யா நடித்து கெடுக்கவில்லை.
BBC – Movies – review – Corporate










