இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ப.சிதம்பரம் செயல்படுகிறார்: ராமதாஸ் புகார்
விழுப்புரம், ஆக. 23: பிற்படுத்தப்பட்டோரின் ஆதரவோடு வெற்றி பெற்ற மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு தரவில்லை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
உயர்கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆனால் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆதரவோடு தேர்வு செய்யப்பட்ட ப.சிதம்பரம் மட்டும் ஆதரவு தெரிவிக்காதது வருந்தத்தக்கது.
என்.எல்.சி.யின் பங்குகளை தனியாரிடம் விற்பதை தடுத்து நிறுத்த தமிழக முதல்வர் மு.கருணாநிதி கையாண்ட விதத்தை, இட ஒதுக்கீட்டு பிரச்சினையிலும் மேற்கொண்டால் அவருக்கு ஆதரவாக பா.ம.க. நிற்கும்.
பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த இயலாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதை படிப்படியாக 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவதை கைவிட்டு, ஒரே தவணையில் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக நடப்பு கல்வியாண்டில் இதை நிறைவேற்ற வேண்டும்.
இதற்காக அவசர சட்டத்தை பிறப்பித்து மத்திய அரசு தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.
சமூகநீதி மற்றும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக செயல்படும் ஊடகங்களின் போக்கை கண்டித்து சென்னையில் இம்மாதம் 25ம் தேதி பா.ம.க. நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன்.
தேவைப்பட்டால் தில்லிக்கு சென்று அங்கு போராட்டம் நடத்துவோம் என்றார் ராமதாஸ்.
