இப்போது தேவை இரும்புக்கரம்!
இந்திய சமூகத்தின் ஒற்றுமையையும் ஐக்கிய உணர்வையும் தகர்க்க, மீண்டும் ஒரு குண்டுவெடிப்பை மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் நிகழ்த்தியுள்ளனர் பயங்கரவாதிகள். கடந்த முறை மும்பையில் பொது மக்கள் நிரம்பி வழியும் புறநகர் ரயில்களில் குண்டுகளை வெடித்துப் பலரைக் கொன்றனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததுபோல சமூக மோதல்கள் ஏதும் நிகழவில்லை. அன்று நமது மக்கள் காட்டிய உறுதியும் நிதானமும், பொறுமையும் விவேகமும் பயங்கரவாதிகளின் தந்திரங்களைத் தூள் தூளாக்கின. மீண்டும் அதே தந்திரத்தை இப்போது அவர்கள் நிகழ்த்திக் காட்டியுள்ளனர். இந்த முறை மணிப்பூரில் கிருஷ்ணன் கோயில் வளாகத்தில் குண்டு வெடிப்பை நடத்தியதன் மூலம், மக்களிடையே மோதலைத் தோற்றுவிக்கும் தங்கள் நோக்கத்தை அவர்கள் ஒளிவு மறைவு ஏதுமின்றி வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டனர். நமது மக்களது விவேகத்தின் முன் இந்த முறையும் அவர்கள் தோற்றார்கள்.
இந்த குண்டு வெடிப்பில் பத்து வயது சிறுவன் உள்பட ஐந்து பேர் இறந்துள்ளனர். கோயிலின் அர்ச்சகர் மற்றும் சில வெளிநாட்டவர்கள் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலர் படுகாயமடைந்துள்ளதால் சாவுத் தொகை மேலும் உயரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச கிருஷ்ண பக்தி இயக்கத்தினரின் அந்தக் கோயிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாட்டுக்கு வந்திருந்தபோது கையெறி குண்டை பயங்கரவாதிகள் வீசியதாகத் தெரிகிறது. இத்தனைக்கும் கோயிலைச் சுற்றி பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. இதை மீறி இப்படி ஒரு தாக்குதல் நடந்தது எப்படி என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இன்றைய சூழலில், கடந்த காலத்தைப்போல பயங்கரவாதத்தை ஏனோதானோ என்றபோக்கில் அணுகும் நிலை இனியும் நீடிக்கக் கூடாது. பயங்கரவாதத்துக்கு எதிரான அமைப்புகளையும் நவீனத் தொழில்நுட்பத்தையும் அமெரிக்காவுக்கு இணையாக உருவாக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. பிறரது உயிரையும் உணர்வுகளையும் மதிக்காதவர்கள் எந்தவிதப் பரிவுணர்வுக்கும் அருகதையற்றவர்கள்.
பயங்கரவாதம் தொடர்பான சட்டங்களை அரசு கடுமையாக்கும்போது எதிர்க்குரல் எழுப்புவோர் இப்படிப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழக்கையில் நாசூக்காகப் பட்டும் படாமலும் பேசுவதையும் எழுதுவதையும் எந்த உரிமையில் சேர்ப்பது?
தருமத்தின் நாயகனான கண்ணன் பிறந்த தினத்திலிருந்தே அவன் உயிரைப் பறிக்க அசுர சக்திகள் முயன்றதையும் அவை தொடர்ந்து தோற்றதையும் கடைசியில் கண்ணனின் கரங்களில் அதருமமே வடிவான கம்சன் இறந்ததையும் இந்த தேசத்தில் காலம் காலமாக மக்கள் கதையாகச் சொல்லிவருகின்றனர். அறம்தான் நம் அனைவரையும் காக்கின்றது என்ற நம்பிக்கை நமது நாட்டின் அடித்தளமாக இயங்குகிறது. அறம் தன்னைக் காக்கிறவர்களைக் காப்பாற்றும். அழிப்பவர்களை அழிக்கும் என்பதே நமது நம்பிக்கை.
தற்போது நடந்துள்ள குண்டு வெடிப்புக்கு எந்தப் பயங்கரவாதக் கோஷ்டி காரணம் என்று இதுவரை தெரியவில்லை. அவர்கள் எந்தப் பிரிவினராக இருந்தால் என்ன? அடிப்படையான தேசிய ஒருமைப்பாட்டுக்கும் மக்களிடையே நிலவும் நல்லிணக்கத்துக்கும் வெடிவைப்பவர்கள் என்ற அளவில் அனைத்துப் பிரிவு பயங்கரவாதிகளும் ஒன்றே. தீமையின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக நமது மக்கள் இன, மத, மொழி வேறுபாடின்றிக் கைகோர்த்து நிற்கவேண்டிய காலம் இது. நிற்போம் உறுதியாக!










