Daily Archives: ஓகஸ்ட் 16, 2006

Indian Security Update: President’s Asst. Secy. Car gets Stolen

Dinamani.com – Headlines Page

குடியரசுத் தலைவரின் துணைச் செயலர் கார் திருட்டு!

புது தில்லி, ஆக. 17: குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பத்திரிகைத் தொடர்பு துணைச் செயலர் நிதின் வகாங்கர் என்பவருடைய கார் தில்லியில் திங்கள்கிழமை திருடுபோனது.

இந்திய பத்திரிகைகள் சங்க அலுவலகத்துக்கு வெளியே காலை 11 மணிக்கு காரை விட்டுவிட்டு உள்ளே சென்றார். கார் திருடுபோனதைத் தெரிந்து கொண்ட 5 நிமிஷத்துக்கெல்லாம் போலீஸில் புகார் செய்தார். அதில் அவர் வங்கிக்கான சில ஆவணங்களை வைத்திருந்தார்.

சுதந்திர தினம், ஜன்மாஷ்டமி ஆகியவற்றின்போது நகரில் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்று தில்லி மாநகரின் எல்லா பகுதிகளிலும் சாலையில் தடுப்புகளை அமைத்திருக்கிறார்கள். வாகனங்களைத் தணிக்கை செய்த பிறகே அனுமதிக்கின்றனர். குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும் வாகனங்களின் எண்களைப் பதிவு செய்துகொள்கின்றனர். இந் நிலையில் இந்தக் கார் களவு போனதும், அதை இன்னமும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதும் வியப்பாக இருக்கிறது.

2.4 Lacs Pump Set to get Free Power @ 1530 Crores

Dinamani.com – Headlines Page

2.40 லட்சம் பம்ப் செட்டுகளுக்கு இலவச மின்சாரம் – ஆர்க்காடு வீராசாமி

சென்னை, ஆக.17: சுயநிதி திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற்ற 2.40 லட்சம் விவசாயிகளுக்கு இனி இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மின்துறை மற்றும் ஊரகத் தொழில் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி வெளியிட்ட அறிக்கை:

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, முதல்வராக மு.கருணாநிதி பொறுப்பேற்றவுடன் வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில், சுயநிதி திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற்ற 2.40 லட்சம் விவசாயிகள் பம்ப் செட்டுகளுக்கு இனி மின் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் 11-8-2006-ல் எரிசக்தி துறை ஆணை வெளியிட்டுள்ளது. எனவே, சுயநிதி திட்டத்தின் மூலம் பம்ப் செட்டுகளுக்கு மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் யாரும் இனி மின் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, மின்துறை அதிகாரிகளும் மேற்படி பம்ப் செட்டுகளுக்கு விவசாயிகளிடம் மின் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ஆர்க்காடு வீராசாமி.

ரூ.10,000 செலுத்தினால் விவசாய பம்ப் செட்டுகளுக்கு விரைவில் மின் இணைப்பு தரும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இத் திட்டத்தின் கீழ் 2.40 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கவில்லை. அதனால் மின் கட்டணம் செலுத்தி வந்தனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அத்தகைய பம்ப் செட்டுகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தேர்தலில் திமுக வெற்றிபெற்ற பிறகு, நிதி அமைச்சர் க.அன்பழகன் ஜூலை 22-ம் தேதி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிப்படி சுயநிதி திட்டத்தின் கீழ் சிறப்புத் தொகை செலுத்தி மின் இணைப்பு பெற்ற 2.40 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கும் இனி இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதையொட்டி கடந்த 11-ம் தேதி இதற்கான உத்தரவை எரிசக்தி துறை வெளியிட்டுள்ளது.

மானியம் ரூ.1530 கோடி
விவசாய மின் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கும், வீட்டு மின் இணைப்புகளுக்குக் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குவதற்கும், கிராமங்களில் உள்ள குடிசைகளுக்கு இலவச மின் வசதி வழங்குவதற்கும் தமிழக அரசு, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு மானியம் வழங்கி வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு மானியமாக ரூ.1530 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் வரவு செலவுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

Thenkoodu – Tamiloviam : Contest Entries – Quick Thoughts

தேன்கூடு + தமிழோவியம் வலைப்பதிவர்களுக்கான மாதாந்திரப் போட்டி இன்னும் ஒரு நாலைந்து நாளில், சுபயோகம் கூடிய வாரயிறுதியில் முடிவதில் உள்ள ஆதாயம்: ‘சனி, ஞாயிறு… கொலம்பஸ்… கொலம்பஸ்… விட்டாச்சு லீவு! என்னால் எல்லா ஆக்கங்களையும் படிக்க இயலவில்லை’ என்று சொல்லி, டீக்கட பெஞ்சில் உட்கார்ந்து ‘ஆத்தி இது வாத்துக் கூட்டம்‘ என்று ‘நாடோடித் தென்றல்‘ கார்த்திக் மாதிரி மதிப்பெண் போடுவதை நிப்பாட்டலாம்.

சிறுகதை என்றால் கட்டுரை அல்ல; கவிதை என்றால் சொற்கோர்வை அல்ல; கட்டுரை என்றால் நினைவலைகள் அல்ல

என்னும் முன்தீர்மானங்களுடன் படைப்புகளை அணுகும் விமர்சனங்களுக்கு இந்த விடுபடல் நலம் பயக்கும்.

சென்ற மாதம் (ஜூலை வலைப்பதிவுப் போட்டி) வரப்பெற்ற இடுகைகளை விட இந்த முறை அதிகம் வர வாய்ப்பிருக்கிறது. நேரம் கிடைக்கும்போதே, தற்போதைய நிலவரப்படி சில புள்ளிவிவரங்களை இடுகிறேன்:

மொத்தம்: 70 இடுகைகள்

  1. என் சுரேஷ், சென்னை – 8
  2. ஏழிசை – 4
  3. அபுல் கலாம் ஆசாத் – 4
  4. அனிதா பவன்குமார் – 3
  5. ராசுக்குட்டி – 3
  6. சிறில் அலெக்ஸ் – 2
  7. குந்தவை வந்தியத்தேவன் – 2
  8. நிர்மல் – 2
  9. லக்கிலுக் – 2
  10. சிவமுருகன் – 2
  11. எஸ்.கே. – 2
  12. தமிழி – 2
  13. சிமுலேஷன் – 2
  14. தொட்டராயசுவாமி.A – 2

14 பேர்களிடம் இருந்து 40 தாக்கல்கள். அது தவிர 30 ‘பெயர்‘கள் கலந்து கொள்ள மொத்தம் இது வரை 44 பதிவர்கள் களத்தில் இருக்கிறார்கள். இதில் 44 (TK-TO Contest: #32 – #44 : Snap Reviews) பதிவுகளை என்னுடைய பார்வையில் சொன்னதைப் போலவே மேலும் பலரும் தங்களின் விருப்பங்களை ‘பொதுத் தேர்தல்’ போல் வெளிப்படையாய் பட்டியலிட்டால், முதலிடம் பெற்றவர் ‘ஏன் வெற்றியடைந்தார்’ என்பது புரிய வரும்.

ஜூரி முறை, நீதிபதிக் குழு, என்று அமைத்து தேர்ந்தெடுப்பதில் உள்ள நெளிவு சுளிவுகள் கூட இந்த மாதிரி விமர்சனங்களினால் தெரியவரும். (சுஜாதா-வா… அவருடைய வாசனையுடன், ஆனால் அவரை மாதிரியும் தெரியாம எழுதலாம்பா; ஜெயமோகனா… சுஜாதா நடையை ஒதுக்கி வச்சிரலாம்).

வலைப்பதிவர்கள் எந்த விதமான ஆக்கங்களை விரும்புகிறார்கள், அது எவ்வாறு வெளிப்படுவதை (கதை / கவிதை / கட்டுரை / நனவோடை / மரபு / நாடகம் / ஒலி / ஒளி / ஃப்ளாஷ் /…) ‘பெரிதும்’ ரசிக்கிறார்கள், வரிசைப்படுத்துவதை கட்டாயமாக்கினால் எவ்வாறு தேர்வு செய்வார்கள் என்பதை மேலும் சிலரும் பகிர்ந்து கொண்டால் என்னுடைய ரசனையின் shortcomings தெளிவாகும்.

அவ்வாறு நான் கண்ட சில தொகுப்புகள்:

  • ஒன்னுமில்லை: எனக்கு பிடித்த எழுத்துக்கள் தேன்கூடு போட்டி- (1)
  • ஒன்னுமில்லை: தேன்கூடு போட்டி – விமரிசனங்கள் – II
  • ராசுக்குட்டி!: கோகோ – அறிமுகம்
  • தேன்: தேன்கூடு போட்டி டாப் 10 – சீரியசா

    நான் எழுத நினைத்தது என்று பலவற்றையும் பட்டியலிட்டாவது திருப்திப்பட்டுக் கொள்ள ஆசையாக இருக்கிறது. ‘உறவுகள்’ என்ற தலைப்பில்

  • போலந்து சகோதரர்களில் ஆரம்பித்து மாறன் அண்ணா-தம்பிகளைத் தொட்டு காஸ்ட்ரோ ப்ரதர்ஸ் வரை முழுமையாக அலசி அரசியல் கட்டுரை எழுதலாம் என்று நினைத்தேன்.
  • பாசமலராய் உருகித் தள்ளி, வெறுப்பேற்றிய – உறவுக்கு கை கொடுத்த படங்களை வைத்து சிதறு தேங்காய் உடைக்கலாம்;
  • ஊர்களுடன் ஆன தொடர்புகளை செதுக்கி, அந்தந்த நகரத்துடன் பின்னிப் பிணைந்திருக்கும் உறவுகள்;
  • வலைப்பதிவருடன் பின்னூட்டத்தில் தொடங்கி, பாராட்டலில் வளர்ந்து, நக்கீரத்தனத்தில் முகம் சுண்டி, குற்றங்களை மட்டுமே மறுமொழியாக்கும்போது கோபம் தளிர்த்து, அவரின் மாற்றுக்கண்ணோட்டத்துக்கு கொடி பிடிப்பவரிடம் ஆதரவு பதிலாக இரண்டு வரி எழுதி – ‘முதல் எதிரி’ உறவு தோன்றுவது;
  • கோவிலுக்கு சென்றாலும் மீனாட்சி விக்கிரகத்திலும் வக்கிரப்பார்வை பார்த்து, சாலையிலும் திரையிலும் காண்போரைக் காமுறும் துகிலுரிப்பானையும், அமெரிக்க தர்காக்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவில் திடீர் தடுப்புச்சுவர்கள் (NFB – Me and the Mosque) முளைப்பதை அனுபவிப்பவனையும், க்வார்ட்டருக்கு க்வார்ட்டர் வெளியாகும் அறிக்கையை ஓப்பேற்றி காசு கொள்ளையடிக்கும் லாபம் ஈட்டத் தெரியாத நிறுவனத்தில் வேலை பார்க்கும் அமெரிக்க கணக்கரையும், ‘அவுத்துப் போட்டு ஆடுபவர்கள்’ (படிக்க: சந்தோஷ்பக்கங்கள்: 108. பொண்ணு strip கிளப்பில் வேலை பாக்குறா) மூலம் நட்பு என்னும் உறவாக்குவது;
  • என்று ஏதாவது கதை எழுதிவிட்டு, ‘உறவுகள்’ என்னும் வார்த்தை வந்தால், போட்டிக்கு அனுப்பலாம் என்றும் யோசித்தேன்.

    பெர்ஃபக்சனிஸ்ட் கம் இண்டெர்நெட் அடிக்சன் டிஸ்ஆர்டர் இருப்பதால் ‘ஆடத் தெரியாதவன் தெருக்கோணல்’ சொலவடை போல் ஒன்றும் எழுதவில்லை என்பதுதான் நிதர்சனம். பங்குபெற்ற அனைவருக்கும் வெற்றிக்கனியை அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் & பதிவிட்டு பகிர்ந்து கொண்டமைக்காக நெஞ்சார்ந்த நன்றிகள்.

    கடந்த முறை விமர்சனப்பதிவு போட்டதற்கும் இன்றைக்கும் நடுவில் 26 வந்துவிட, இனி தேர்ந்தெடுக்கப்பட்ட (அல்லது என்னால் படிக்க முடிந்தவைகளுக்கு மட்டுமே) விமர்சனங்கள்:

    • தம்பி: களத்து வீடு – தேன்கூடு சிறுகதை போட்டிக்காக… : உமா கதிர்

      (சிறுகதை) மதிப்பெண் – 2.5 / 4

      ரொம்ப நல்லா வந்திருக்குங்க…. எழுத்துப் பிழைகளையும் மேற்கோள் குறிகளையும் இன்னும் கொஞ்சம் கவனமா கொடுத்திருந்தால் படிக்கிறவங்களுக்கு வசதியா இருக்கும். கடைசி வரிகள் சில குறைத்து (அல்லது) மாற்றியமைத்தால் கூர்மையா முடிஞ்சிருக்கும். இப்போ வாசகனே புரிஞ்சுக்க வேண்டியது வெளிப்படையா வந்திருக்கறது மட்டும்தான் (நான் நுணுக்கி நுணுக்கி பார்த்ததில் கண்ட) குறை.

      வெற்றியடையக் கூடிய படைப்பை பகிர்ந்ததற்கு மனமார்ந்த நன்றி!

    • செப்புப்பட்டயம் :: கல்லூரி உறவுகளைப் பற்றிய சிறுகுறிப்புகள்மோகன்தாஸ் (குந்தவை வந்தியத்தேவன்)

      (சிறுகதை) மதிப்பெண் – 1.5 / 4

      Saloni Ramachandiran: ஏன் இப்படி குரங்குக் குட்டி மாதிரி காட்சிக்கு காட்சி இடம் தாவுகிறீர்கள்? இந்தப் பதிவு உன்னைப்பற்றி என்பதை விட… உடன் வேலை பார்ப்பவரைப் பற்றி என்பதை விட… உன்னுடைய கல்லூரி நண்பர்களைப் பற்றி என்பதை விட… கடலை பற்றிய உன்னுடைய எண்ணங்கள் என்பதை விட… “ஒரு அழகான காதலின் சோகமான முடிவு” என்கிற தலைப்பிற்கு ஏற்ற கதை என்பதை விட… முற்றிலுமான ஒரு மனிதனின் எண்ண அலைகள்/ஓட்டங்கள் எவ்வாறு இருக்குமோ அவ்வாறே… ஒரு பிணைப்பில்லாமல் உங்களுடைய எண்ணங்கள் இங்கே கொட்டப்படுள்ளதாக நினைக்கிறேன். ஆனால், எண்ணங்கள் அத்தனையும் சுவாரசியமாக இருக்கின்றன. எனவே அலுப்புத் தட்டவில்லை. நல்ல முயற்சி. நீங்கள் இதை விட நன்றாக செய்யலாம்.

    • சிதறல்கள்: உறவுகள் சுகம்அனிதா பவன்குமார்

      (புதுக்கவிதை) மதிப்பெண் – 2 / 4

      எழுத்துப் பிழைகள் கண்ணில் உறுத்தினாலும் எளிமையாகப் பயணிக்கும் கவிதை

    • MAANIDAL – மானிடள்: உறவுச் சங்கிலிDr.M. பழனியப்பன்

      (பதிவு) மதிப்பெண் – 1.5 / 4

      வலைப்பதிவில் எழுதுவதை எவ்வளவு பேர் போட்டிக்கு அனுப்புகிறார்கள்? பெரும்பான்மையான இடுகைகள் புனைவாகவே அமைந்திருக்கிறது. அவற்றுக்கு நடுவே அத்தி பூத்தது போல் என்று சொல்வார்களே… அதற்காகவே +1. போட்டிக்கான நுழைவு என்று அலசினால் சாதாரணமான பதிவு.

    • “அவள்”வினையூக்கி

      (சிறுகதை) மதிப்பெண் – 1 / 4

      தடதடவென்று விரைவுப் பேருந்தாக நிற்காமல் ஓடிக் கொண்டே, எண்ணியபடி முடியும் அவசரக்கோலம்.

    • இனிதமிழ்: உறவுகள்தமிழி

      (சிறுகதை) மதிப்பெண் – 1.5 / 4

      எண்ணம் எனது: நல்லா இருக்கு. ஆனா சஸ்பென்ஸ் அக்கா அழுதுட்டு வரையிலியே முடிஞ்சுடுச்சு….

    • ஜெண்டில்மேன்சோம்பேறி பையன்

      (சிறுகதை) மதிப்பெண் – 2.75 / 4

      வணக்கம் தமிழகத்தில் போன வாரம் தற்கொலைக்கு முயன்ற நடிகை தமிழ்நாட்டு முன்னேற்றத்தைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டிருந்தாள். சங்கர், கற்பனையில் அவளுடன் டூயட் பாட ஆரம்பித்த மைக்ரோ நொடியில், பையன் போர்வையை விலக்கி, முகத்தின் அருகில் வந்து ‘அப்பா, இந்த கணக்கு எப்படி போடறதுன்னு சொல்லி கொடுங்கப்பா…’ என்று இழுத்தான்.

      துள்ளல் நடை +1; வேலையுடன் ஆன ‘உறவுகள்’ +1; நச் +1; ஆஸ்கார்களில் நகைச்சுவைக்கு மதிப்பு லேது என்பதற்கேற்ப -0.25

    • தேன்: கெடா – சிறுகதைசிறில் அலெக்ஸ்

      (நாடகம்) மதிப்பெண் – 2.75 / 4

      நுனி பிசகினாலும் குழம்பக்கூடிய அமைப்பில், தெளிவான உரையாடல்களின் பளிச். கிராமத்து வழக்கைப் பேசுவது கடினம். அதனினும் கடினம் அதை எழுத்தில் கொண்டு வருவது. அதனினும் கடினம் அதில் மொத்த கதையையும் காரெக்டரைசேஷனையும் சொல்வது. செய்து காட்டியிருக்கிறார்.

    • கவிதைகள் !: இது கதையல்லமகேந்திரன்.பெ

      (சொந்தக்க்கதை) மதிப்பெண் – 1 / 4

      இது கதையல்ல என்னும் தலைப்பு உண்மைதான் என்பது போல் நிறைய ஃபேண்டஸி; கூடவே பேச்சுத்தமிழ் சுதந்திரத்தில் பிழைகள் மலிந்து காணப்படுகிறது.

    • நாம் – இந்திய மக்கள்: உறவுகள் பகைகளே!!!ஜெயசங்கர் நா

      (சிறுகதை) மதிப்பெண் – 0.5 / 4

      பழங்கதை. தந்த விதத்திலும் புதுமை லேது. இணையம் வந்த பிறகு படித்த ஸ்டெல்லா ப்ரூஸின் ‘அறைத் தோழரும்’ மேலும் பல கதைகளும் நினைவிலாடி நல்ல புனைவுகளை மீளச் செய்வதற்காக +1. அவரவர் நியாயங்களின் உட்கூறுகளை அலசாமல், நொடி நேர தீர்ப்புகளை விதிப்பதால் -0.5

    • தேடித்..தேடி..: மருந்துSenthil Kumar

      (சிறுகதை) மதிப்பெண் – 2.75 / 4

      சுண்டியிழுக்கும் லாவக ஆரம்பம். கொஞ்சம் எண்பதுகளின் நெடி கொண்ட நடை. அசத்தலாக உள்ளுணர்வுகளை எழுத்தில் வெளிப்படுத்தும் உள்ளடக்கம். முடிவில் அவசரம் + பாரதிராஜா ஸ்டைல் தடுமாற்றம். தலை பத்தில் இடம்பெற எல்லா லட்சணங்களும் கொண்ட கதை.

    • குரல்வலை : வலைகுரல் : தொலைவுMSV Muthu

      (சிறுகதை) மதிப்பெண் – 3.5 / 4

      இந்த மாதிரி (தேதிவாரியாக) தந்திருப்பது ருசிக்கிறது. வெளிநாட்டில் உட்கார்ந்திருக்கும் குற்றவுணர்வு ஒன்ற வைக்கிறது. நெகிழ வைக்கும் தாய்ப்பாசத்தை அதீதமில்லாமல் கிராமிய ஒலியில் கேட்கவிடுகிறார். மருந்து கதையைப் போலவே அசலூர் பிரச்சினையை வேறொரு கோணத்தில் முன்வைக்கிறது. தேதிகளை சிரத்தையாகக் கோர்ப்பது, உவமைகள், டக்கென்று கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து மனத்திலும் இருத்துதல் என்று பலவிதங்களில் முக்கியமான கதை. கதையை முடித்தபின் ஆசுவாசப்படுத்த ஜன்னல் பக்கம் வேடிக்கை பார்த்தாலும், களம் அகலாமல், கதை என்னை உற்றுப் பார்க்கிறது.

      முடிவு +1; நடை +1; சொலவடை +1; அமைப்பு +1; ஆங்காங்கே (குறிப்பாக செல்லையாவின் தொடக்க பகுதிகள்) அவசரம் -0.5.

    • எண்ணம்: திரைச்சீலைஅபுல் கலாம் ஆசாத்

      (சிறுகதை) மதிப்பெண் – 2.75 / 4

      உப்பில்லாத பண்டத்தைப் பார்த்து சுட்டியில்லாத இணையமா என்கிறார்கள். வலைப்பதிவுக்கே உரிய சாத்தியக்கூறுகளை பயன்படுத்தும் கதை. கவிதையைப் போன்ற அமைப்புடன் நிற்காமல், வித்தியாசமான கற்பனை & விவரிப்பு. இயந்திரகதியாகாத அந்தக் காலத்தில் எல்லாப் பொருட்களையும் அதற்கான கலைநயத்துடன், நேரம் ஒதுக்கி ரசித்து மகிழ்ந்தோம். இன்றைய இணைய அவசர உலகில் பாசம் இற்றுப்போய் நூலுமில்லாமல் அருகிப் போனதை விவரிக்கும் அருமையான கதை.

    • நிழல்கள்: சொக்கலிங்கத்தின் மரணம்ஹரன்பிரசன்னா

      (சிறுகதை) மதிப்பெண் – 3.5 / 4

      Introspective ஈ, வாசகப் பேரன், இயல்பான கிராமத்து மனிதர்கள், சுருக் விவரணைகள். சிறுகதைக்குத் தேவையான ஆற அமர நகரும் கதை, போகிற போக்கில் உறுத்தாமல், கதையுடன் ஒட்டிகொண்டு நிற்கும் அவதானிப்புகள். இன்னும் நிறைய சொல்லலாம். ஒரு கதை எப்படி மனதில் நெய்யவேண்டும் என்பதற்கு அருமையான எடுத்துக்காட்டு.

    • செப்புப்பட்டயம் :: தெய்வநாயகி என்றொரு ஆட்டக்காரிமோகன்தாஸ் (குந்தவை வந்தியத்தேவன்)

      (சிறுகதை) மதிப்பெண் – 2.75 / 4

      ஏற்கனவே வெற்றிபெற்றவர் என்னும் கண்ணாடி அணிந்து சீர்தூக்கி பார்க்க ஆரம்பிக்கிறேன். சுடுசொல் இருப்பதுதான் இலக்கியத்தரத்துக்கு அடையாளமோ என்னும் மதிப்பீட்டுக்கு அடிமையான சம்பந்தமேயில்லாத ஆரம்பம். பேச்சு நடையில் சொல்வதா, மூன்றாம் மனிதப் பார்வையில் கொண்டு செல்வதா என்னும் குழப்பம் அரிதாகவே தெரிந்தாலும், ‘அணுகுண்டு’ போன்ற உவமைகள், ஒவ்வாமல், தெய்வநாயகியும் அம்மாவும் போல் வாசகனை தூரத்தே தள்ளி அனுப்பிவிடுகிறார். அதே போல் ‘வைச்சு‘ என்று கொச்சைத் தமிழும், ‘இடது பக்கம்‘ என்று எழுத்து தமிழும் ஒரே வாக்கியத்தில் சிற்சில இடங்களில் வருவது மற்றொரு நெருடல்.

      நெடுங்கதையை சுருக்கி நிறைய சொல்ல நினைத்து கொஞ்சமே கொஞ்சம் லயிக்க விட்டு, நடையில் பிசிறு தட்டி, கட்டுரையின் கூறுகளைக் கொண்ட புனைவு.

      + க்கள்:
      கதை; களம்; கருத்து

      – க்கள்:
      நடை; விவரிப்பு குழப்பங்கள்; சம்பவக் கோர்வை/வாசக உள்ளிழுப்பு இல்லாமை.


    | |

  • Art Appreciation Series – PA Krishnan : Part III

    பகுதி ஒன்று | இரண்டு தொடரைப் பகிர்ந்து கொண்ட பிஏ கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி

    பேரழிவினால் பிழைத்த ஓவியங்கள்

    1

    ஓவியத்திற்கும் சொல்லிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்று என்னை ஒருவர் சமீபத்தில் கேட்டார். இரண்டுக்கும் இடையே மிக முக்கியான ஒரு வேறுபாடு எனக்கு இதுதான் என்று தோன்றுகிறது. சொல்லின் எல்லைகள் பரந்தவை. நமது எண்ணங்கள் போல. எழுதிக் கொண்டே போகலாம் – மகாபாரதம் போல. ஆனால் ஓவியத்திற்கு எல்லைகள் அவ்வளவு பரந்தவை அல்ல. பார்வைக்கு உள்ள எல்லைகள் அனைத்தும் அதற்கு உண்டு. ஒரு சட்டத்திற்குள், அல்லது ஒரு சுவருக்குள், கட்டுப்பட வேண்டிய கட்டாயம் அதற்கு உண்டு. ஆனால் எழுத்தும் ஓவியமும் வெளிப்படுத்துபவை எல்லைகளைக் கடந்தவை. ஒரு சிறிய, சிறந்த கவிதை இந்த உலகையே அடைத்து வைத்துக் கொண்டு நம்மிடம் அதை காட்ட முற்படுவது போல ஒரு சிறந்த ஓவியமும் தான் காட்டுவது தனது எல்லைகளை மீறியது என்பதை வெளிப்படுத்த முயல்கிறது.

    ஓவியம் எல்லைகளைக் கடந்தது என்பதை அறிந்து கொள்ள மனிதன் பல நூற்றாண்டுகளை கடந்து வர வேண்டியதாக இருந்தது. இடைப்பட்ட நூற்றாண்டுகளில் அவன் இரண்டு அடிகள் முன் வைத்தால் ஒரு அடி பின் வைக்க வேண்டிய கட்டாயத்தை பல முறைகள் எதிர் நோக்கினான். இலத்தீன் மொழியில் ஒரு பழமொழி உண்டு: quod legendibus scriptura,..hoc idiotis ..pictura – ஓவியம் கடவுளின் சொற்களை முட்டாள்களுக்கு (படிக்காதவர்களுக்கு) விளக்க முற்படுகிறது. இந்தப் பழமொழியில் கடவுள் என்ற சொல்லை எடுத்து விட்டு அரசு, அரசன், ஆண்மகன், ஆண்டை, ஆசிரியன், போன்ற பல சொற்களைப் போட்டுக் கொள்ளலாம். அவை ஓவியம் எவ்வாறு பல்வேறு கால கட்டங்களில் நோக்கப் பட்டது என்பதை ஒருவாறு விளக்கும். ஓர் ஓவியத்தைப் பார்த்து அதை விளக்க முயல்பவனுக்கு ‘கலை விமரிசகன்’ என்ற பதவி கிடைத்தது சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான்.


    2

    ஜாடி ஓவியங்களைப் பற்றி நான் சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தேன். இந்த ஓவியங்களில் இரு வண்ணங்கள்தான் பெரும்பாலும் பயன் படுத்தப் படுகின்றன. ஒன்று கறுப்பு. மற்றது சிவப்பு. முதலில் சிவப்பு ஜாடிகள் மீது கறுப்பு வண்ணத்தின் ஓவியங்கள் வரையப் பட்டன. பின்னால் பின்புலம் கறுப்பில் தீட்டப் பட்டு ஜாடியின் வண்ணமே ஓவியத்தின் வண்ணமானது. கிரேக்க ஓவியங்களில் எவ்வாறு பல ஜாடி ஓவியங்களோ அதே போன்று ரோமாபுரி ஓவியங்களில் பல fresco என்ற சுவரோவியங்கள். Fresco என்ற சொல் buon fresco என்ற இத்தாலிய சொல்லிலிருந்து வந்தது. “உண்மையாகவே புதிது” என்ற பொருள் கொண்டது. இந்த முறையில் காயாத சுவரில் வண்ணங்களைக் கொண்டு ஓவியங்கள் தீட்டப் படுகின்றன. இதனால் சுவர் காயக் காய வண்ணங்களும் சுவரின் மேற்பூச்சின் ஒரு பகுதியாக மாறிவிடுகின்றன. பல வருடங்கள் அழியாமல் இந்த ஓவியங்கள் இருப்பதற்கு fresco முறை ஒரு முக்கியமான காரணம்.

    Fresco ஓவியங்களில் மிகப் புகழ் பெற்ற ஓவியங்கள் பாம்பெய் (Pompeii) நகரத்தைச் சேர்ந்தவை. கி.பி. முதல் நூற்றாண்டில் ரோமப் பேரரசின் ஒரு முக்கியமான நகரமாக பாம்பெய் இருந்தது. இந்த நகரில் பணம் படைத்தவர் பலர் வீடுகளின் சுவர்களில் ஓவியங்கள் தீட்டப் பட்டிருந்தன. ரோமப் பேரரசின் மற்றைய நகரங்களின் வீடுகளிலும் இத்தகைய ஓவியங்கள் தீட்டப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இவற்றில் பிழைத்தவை அநேகமாக இல்லை என்றே சொல்லலாம். பாம்பெய் நகர ஓவியங்கள் பிழைத்த ஓவியங்கள். பேரழிவினால் பிழைத்த ஓவியங்கள்.


    3

    பாம்பெய் வெஸுவியஸ் மலையின் அடிவாரத்தில் இருந்த ஒரு நகரம். வெஸுவியஸ் மிக உயரமான மலை இல்லை என்று பாம்பெய் நகரத்தில் வசித்துக் கொண்டிருப்பவர்களுக்குத் தெரியும். அமைதியான மலை என்றும் அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் கி. பி. 79 ம் ஆண்டு அந்த மலையில் உள்ளிருந்து தீக்குழம்புகள் பீரிட்டுக் கிளம்பின. பாம்பெய் நகர மக்கள் அவர்கள் தினமும் பார்த்துக் கொண்டிருந்த மலை எரிமலை என்பதை அறியும் முன்பே எரிமலைக் குழம்பும் அதிலிருந்து வெடித்துக் கிளம்பிய கற்களும் அவர்களைப் புதைத்து விட்டன. ஒரு முழு நகரமே எரிமலைச் சாம்பலில் புதையுண்டு அழிந்து விட்டது.

    புதைந்த நகரம் மக்கள் மனங்களில் பல நூற்றாண்டுகள் இருந்து, தேய்ந்து, மறையத் தொடங்கியது. முழுவதுமாக மறைந்தும் இருக்கும். மறையாததின் காரணம்1748 ம் வருடம் இந்த இடத்தைத் தோண்டிப் பார்க்கலாம் என்று ஒரு தொல் பொருள் ஆராய்ச்சியாளர் நினைத்தது. ஆனால் அவரே ஒரு முழு நகரமே சாம்பலுக்குக் கீழ் இருக்கும் என்று எதிர்பார்த்திருக்க முடியாது. முதலில் தோண்டியவர்கள் சாம்பலுக்கு கீழே இருக்கும் கலைப் பொருள்களுக்காகத்தான் தோண்டினார்கள். அவர்கள் தோண்டிய முறை அவ்வளவு அறிவியற்பூர்வமாக இல்லாததால் பல கட்டிடங்களும் அவற்றின் சுவர்களில் இருந்த ஓவியங்களும் அழிக்கப் பட்டன. சில சுவர்கள் அழிந்தன. ஆனால் அவற்றின் மீது தீட்டப் பட்ட ஓவியங்கள் மீட்டெடுக்கப் பட்ட்டு அருகில் இருந்த நேப்பிள்ஸ் அருங்காட்சியகத்தை அடைந்தன.

    நெப்போலியனும் பிரெஞ்சுக்காரர்களும் நேப்பிள்ஸ் நகரத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலத்தில்தான் (1805-1815) தோண்டும் முறை சீரடைந்தது. இதற்கு பின்பு Fiorelli, Spinazzola போன்ற அகழ்வாளர்களில் முயற்சியால் இன்று பாம்பெய் நகர கட்டிடங்களில் பல அன்றிருந்தபடி இன்றும் இருக்கின்றன. அவற்றின் சுவரோவியங்களும் பிழைத்து விட்டன. பிழைத்த ஓவியங்கள் எல்லாம் பிழைக்க வேண்டிய ஓவியங்கள் என்று சொல்ல முடியாது என்று கலை வல்லுனர்கள் கருதுகின்றனர். ஆனால் ஒரு நகரம் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் எவ்வாறு இயங்கியது என்பது பாம்பெய் நகரத்திற்குச் சென்றால் தெரியும். நமது தமிழ் நகரத்தில் சுவரொட்டிகள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அந்த நகரத்தில் சுவரோவியங்கள்.

    இன்று ரோம் நகரத்திலிருந்து காலையில் புறப்பட்டால் பாம்பெய் நகரத்தைப் பார்த்து விட்டு இரவில் திரும்பி விடலாம். ஒரு நாளில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நகரத்திற்கு சென்று வருவதற்கு ஈடானது இந்தப் பயணம். ஆனால் செல்பவர்களில் பெரும்பாலானவர் இதை உணர்ந்து செயல்படுவதில்லை என்பது வருத்தப் பட வைக்கும் உண்மை.


    4

    ரோமப் பேரரசின் கலை கிரேக்கக் கலையை முழுவதும் சார்ந்தது என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. ரோம எழுத்தாளரான பிளினி தனது நூலில் கிரேக்க ஓவியங்கள் பலவற்றை அவர் காலத்து ஓவியர்கள் மறு பதிவு செய்திருப்பதைக் குறிப்பிடுகிறார். இவற்றில் ஒரு ஓவியத்தை நான் நியூ யார்க் அருங்காட்சியகத்தில் பார்த்தேன். பாம்பெய் சுவரோவியம் அப்படியே பேர்த்தெடுக்கப் பட்டு நியூ யார்க்கில் வைக்கப் பட்டிருக்கிறது. சிறுவயதில் நான் பார்த்த நாடக அரங்குகளின் திரைகளை நினைவு படுத்திய இந்த ஓவியம் ஒரு முக்கியமான ஒன்று என்பது எனக்கு இந்தக் கட்டுரையை எழுதுவதற்காக Janson எழுதிய ‘கலையின் வரலாறு’ புத்தகத்தைப் படிக்கும்போது தெரிய வந்தது. இந்த ஓவியத்தை வரைந்தவன் ஒரு பரப்பின் கட்டமைதியைப் (texture) பற்றி நன்கு அறிந்தவன் என்று அவர் குறிப்பிடுகிறார். மூன்றாவது பரிமாணத்தைப் பற்றிய ஒரு புரிதலும் அவனுக்கு இருந்திருக்கிறது. ஆனால் ஓவியத்தில் கதவுகளும் தூண்களும் சாளரங்களும், சுவர்களும் ஒன்றை ஒன்று முட்டி மோதிக் கொள்கின்றன. கலைஞன் இன்னும் வெளியின் ஆழத்தை (spatial depth) சித்தரிப்பதில் வெற்றி பெறவில்லை என்பதை இந்த ஓவியம் உணர்த்துகிறது.

    ரோமக் கலைஞர்களுக்கு கை வராத மற்றொரு ஒத்தி ஒளியால் ஏற்படும் நிழல் விளைவுகளை வரைவது. இதற்குச் சான்று நேப்பிள்ஸ் அருங்காட்சியகத்தில் இருக்கும் ஒரு சுவரோவியம். இந்த ஒவியத்தில் பீச் பழங்களும் தண்ணீர் நிறைந்த ஒரு கண்ணாடி ஜாடியும் தீட்டப் பட்டிருக்கின்றன. பழங்களின் வழுவழுப்பு அற்புதமாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறது. ஜாடியில் இருக்கும் தண்ணீர் அதற்கு ஒளி ஊடுருவும் தன்மை இருக்கிறது என்பதைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒளி எந்தப் பக்கத்திலிருந்து வருகிறது, அது பொருட்களின் மீது பதிக்கும் மாற்றம் என்பவற்றையெல்லாம் இந்த ஓவியத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியாது. பார்க்கும் உலகத்தை ஒரு நிலைப்பாங்கோடு (consistence) பார்ப்பதற்கு ஓவியன் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடக்க வேண்டியிருந்தது.


    5

    ரோமச் சுவரோவியங்களில் என்னைக் கவர்ந்த ஓவியங்களில் சில பாம்பெய் நகரத்தில் வரையப் படாதவை. கன்னி ஒருத்தி மலர் கொய்வது என்ற ஓவியம். நேப்பிள்ஸ் அருங்காட்சியகத்தில் இருப்பது. காலத்தை கன்னி உருவகப் படுத்துகிறாள். நமக்குத் தெரிவது அவளது பின்புறமும் முகத்தின் ஒரு பகுதியும்தான். புருவத்தின் மேடு தெரிகிறது. அழகிய கழுத்தின் சரிவு தெரிகிறதுஅவள் தன்னைச் சுற்றியிருக்கும் எளிய உடை அவள் நடப்பதால் சலனமுறுவது தெரிகிறது. நடந்து கொண்டே செடியிலிருந்து பூக்கொய்யும் நளினம் தெரிகிறது. முகம் சரியாகத் தெரியாக விட்டாலும் இவள் பேரழகியாக இருக்க வேண்டும் என்பதும் நமக்குத் தெரிகிறது. ஒரு கலைஞன் உத்திகளை ஒரே பாய்ச்சலில் தாண்டி அழியா நிலையை அடைய முடியும் என்பதை இந்த ஓவியம் உணர்த்துகிறது.

    மற்றொரு ஓவியம் Faun என்ற கொம்பும் வாலும் உள்ள கிராம தேவதை. இந்தத் தேவதை ஒரு குழந்தைத் தேவதை. கண்களைச் சாய்த்துக் கொண்டு கள்ளமற்று சிரிக்கும் தேவதை. இந்த ஓவியத்தில் அதன் தலை மட்டும் தெரிவதால் வால் தெரிய வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் அதன் கொம்புகளும் தெரியவில்லை. அது தனது தலையில் அணிந்திருக்கும் பசிய ஆலிவ் இலைகள் தெரிகின்றன. முன்பற்கள் தெரிகின்றன. கலைந்திருக்கும் தலை மயிர். சிறிது வளைந்திருக்கும் காது. பார்ப்பவருக்கு இது குறும்பு மிக்க குழந்தை என்பது உடனே தெரியும். மனிதக் குழந்தையா என்ற ஐயத்தையும் உடனே வரவழைக்கும்.


    6

    பாம்பெய் பற்றிக் குறிப்பிடும்போது அதன் மொசைக் சித்திரங்களைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. The house of Faunல் இருக்கும் அலெக்ஸாண்டருக்கும் பாரசீக மன்னன் டரயஸிற்கும் நடந்த போரைப் பற்றிய மொசைக் சித்திரம் சுமார் பத்து லட்சம் வண்ணக்கற்களைக் கொண்டு படைக்கப் பட்டது. சுமார்19 அடி நீளம் 10 அடி அகலம் கொண்ட இந்தச் சித்திரத்தில் அலெக்சாண்டர் பரட்டைத் தலையோடு இருக்கிறான். பிதுங்கி வெளி வந்து விடும் போன்ற கண்கள். கவசத்தில் மெடூஸா – பார்ப்பவர்களைக் கல்லாக்கி விடுபவள். குல்லாயைப் போன்ற தலைக் கவசம் அணிந்திருக்கும் டரயஸ் கண்களில் பயம் ஒளிர்கிறது. அவன் முன்னால் அண்ணனுக்காக தனது உயிரைக் கொடுக்க முற்படும் ஆக்ஸியத்ரெஸ். ஈட்டிகள் சித்திரத்தின் மேற்புறத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. ஓடும், இறக்கும், உறையும் குதிரைகளும் பின் வாங்குவோமா என்று எண்ணும் பாரசீக வீரர்களும் மற்ற பகுதிகளில் நிரம்பி வழிகிறார்கள்.

    மற்றொரு மறக்க முடியாத் மொசைக்கைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். ரோம் நகரத்தில் ஒரு அருங்காட்சியகத்தில் இருக்கும் (Terme Museum?) இந்த சித்திரத்தில் நடுவில் மெடூஸாவின் தலை தெரிகிறது. காற்றில் பறக்கும் தலை மயிர். கண்களில் பதற்றம். அவள் இருப்பது ஒரு வட்டத்தில். அந்த வட்டத்தைச் சுற்றி ஒரு பெரு வட்டம். அந்த வட்டத்தை நிரப்புவது வரைவியல் வடிவங்கள். முதலில் முக்கோணங்களோ என்று தோன்றுகிறது. கூர்ந்து பார்த்தால் கறுப்பு ஒரு பாதி வெள்ளை ஒரு பாதி கொண்ட சதுரங்கள். மெடுஸா பக்கம் குறுகி, பின் பெருகி விரியும் இந்தச் சதுரங்கள் ஒரு சுழலும் வட்டத்தைப் பார்த்தால் ஏற்படும் அனுவத்தைக் கொடுக்கின்றன. Duchamp போன்ற கலைஞர்கள் பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் படைக்கப் பட்ட மொசைக் இது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

    பி.ஏ.கிருஷ்ணன்


    | |

    ADMK Functionaries changed

    Dinamani.com – TamilNadu Page

    அதிமுக நிர்வாகிகள் மாற்றம்: தலைமை நிலைய செயலாளராக செங்கோட்டையன் நியமனம்

    சென்னை, ஆக. 16: அதிமுக தலைமை நிலையச் செயலாளராக கே.ஏ. செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்து வந்தார் அவர்.

    இதுவரை அதிமுக தலைமை நிலைய செயலாளராக இருந்த டி.ஜெயக்குமார், மீனவர் பிரிவு செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

    நிர்வாகிகள் மாற்றம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

    அதிமுக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி. ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.ஏ. செங்கோட்டையன், வரகூர் அருணாசலம், ஆர். சரோஜா, எஸ்.என். ராஜேந்திரன், விஜயலட்சுமி பழனிசாமி, அதிமுக மீனவர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் கலைமணி ஆகியோர் அந்தந்த பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    தலைமை நிலையச் செயலராக செங்கோட்டையன், மீனவர் பிரிவு செயலாளராக டி. ஜெயக்குமார், மீனவர் பிரிவு இணைச் செயலாளராக கலைமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    விருதுநகர் மாவட்ட செயலாளர் விநாயகமூர்த்தி நீக்கப்பட்டு, அருப்புக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.கே. சிவசாமி அந்த மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சிவகங்கை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் சுப. கருப்பையா நீக்கப்பட்டு, சோழன் சித். பழனிசாமி அப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் முருகேசன் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் எம். சுந்தரபாண்டியன் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.