பெண் எம்எல்ஏக்கள் புகார்: அதிமுக எம்எல்ஏ சஸ்பெண்ட்
சென்னை, ஆக. 13: சட்டப் பேரவையில் பெண் உறுப்பினர்கள் புகார் கூறியதை அடுத்து அதிமுக எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, நடப்பு கூட்டத் தொடர் முழுவதற்கும் தாற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.
இவர் கலசப்பாக்கம் தொகுதி உறுப்பினராக உள்ளார்.
பேரவையில் சனிக்கிழமை அமளி ஏற்பட்டு அதிமுகவினர் வெளியேறிய பிறகு நடந்த விவாதம்:
வை. சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்): பேரவைக் கூட்டம் சுமுகமாக நடக்க வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் கருணாநிதி விடுத்த அழைப்பையும் ஏற்காமல் அதிமுகவினர் வெளியேறியுள்ளனர். முதல்வர் பேசும் போது அதிமுகவினர் கேலி, கிண்டல் செய்ததால் ஆளும் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பொன்முடியை பார்த்து ஒருமையில் பேசுகிறார். சகிக்க முடியாத, தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். இந்நிலை தொடர்ந்தால் பேரவையின் மாண்பு, மரபு குழிதோண்டி புதைக்கப்படும்.
உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினால் அமைச்சர்கள் பதில் சொல்கின்றனர். எதிர்க்கட்சியினர் தங்கள் கருத்துகளைக் கூறுகின்றனர்.
ராணி வெங்கடேசன் (காங்கிரஸ்): ஆரம்ப நாளில் இருந்தே பொன்முடியை ஒருமையில் பேசி வருகிறார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. பெண்கள் காதில் கேட்க முடியாத வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். இதுபற்றி காங்கிரஸ் கொறடாவிடமும், பேரவை காங். தலைவரிடமும் கூறினேன். பொறுத்துக் கொள்ளுமாறு கூறினர்.
பேரவைத் தலைவரிடம் சொன்னேன். எழுதித் தருமாறு கூறினார். போனால் போகட்டும் என விட்டுவிட்டேன். இதே நிலை இன்னும் தொடர்கிறது. பெண் உறுப்பினர்கள் பேரவைக்கு வர வேண்டுமா? வேண்டாமா?
பத்மாவதி (இந்திய கம்யூனிஸ்ட்): காதில் வாங்க முடியாத வார்த்தைகளை அக்ரி கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி பேசுகிறார். அவரிடம் நாங்கள் 2 பெண் எம்எல்ஏக்களும் இப்படிப் பேச வேண்டாம் என அடிக்கடி எச்சரித்துள்ளோம்.
பேரவையில் பெண் உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் முன்பு பிரச்சினை எழுப்பினர். பெண்கள் இங்கு உட்காரவே வழி இல்லாத நிலையை அவர்கள் உருவாக்குகின்றனர் என்றார் அவர்.
இந்த 2 பெண் உறுப்பினர்களும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் இருக்கையின் அதே வரிசையில் இடதுபுறம் அமர்ந்திருப்பவர்கள்.
தொடர்ந்து நன்மாறன் (மார்க்சிஸ்ட்) பேசியது:
அதிமுக உறுப்பினர் சின்னசாமி கூறிய அதே புகார் முந்தைய காலத்தில் எழுப்பப்பட்டபோது, அப்போதைய முதல்வர் என்ன பதில் சொன்னார் என்பதை பாலபாரதி சுட்டிக்காட்டினார்.
ஜி.கே. மணி (பாமக): திட்டமிட்டு கலவரம் செய்ய வேண்டும் என்று அதிமுகவினர் செயல்படுகின்றனர். பொன்முடியை பார்த்து மோசமாகப் பேசினார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி.
முன்னாள் அமைச்சர்கள் உள்பட அதிமுகவினர் முன்வரிசை நோக்கி ஓடி வருகின்றனர். பேரவைத் தலைவரைப் பற்றி தரக் குறைவான வார்த்தைகளை உபயோகிக்கின்றனர்.
இதெல்லாம் வேதனையாக இருக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
“”பேரவையில் தினமும் ஆளும் கட்சி மற்றும் தோழமைக் கட்சியினர் பற்றி தவறான வார்த்தைகளை அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசி வருவதால், நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் அவரை தாற்காலிக நீக்கம் செய்ய வேண்டும்”
என்ற தீர்மானத்தை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி கொண்டு வந்தார்.
குரல் வாக்கெடுப்பில் தீர்மானம் நிறைவேறியது.
இதைத் தொடர்ந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி நடப்புக் கூட்டத்தொடரின் எஞ்சிய நாள்களுக்குத் தாற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் அறிவித்தார்.











