Dinamani.com – TamilNadu Page
விசைப்படகு- நாட்டுப்படகு மீனவர்கள் மோதலில் 26 மீனவர்கள் கைது
கன்னியாகுமரி, ஆக. 11: கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு- நாட்டுப்படகு மீனவர்கள் மோதல் தொடர்பாக, 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளை சிறைப் பிடித்ததாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் சொர்ணபாண்டியன் கொடுத்த புகாரின் பேரில், ரெஜிஸ், கிரேசியான், சந்தியாதி ராயா, சந்திரகுமார், பிரதபாத் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மோதல் தொடர்பாக சேரியா முட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த 26 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 74 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Dinamani.com – TamilNadu Page
சின்னமுட்டம் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
கன்னியாகுமரி, ஆக. 11: கன்னியாகுமரி அருகேயுள்ள சின்னமுட்டம், (சேரியா) முட்டம் மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுக மீனவர்கள் தொடர்ந்து 2-வது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி அருகேயுள்ள சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சென்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி, கோவளம் பகுதிகளைச் சேர்ந்த 2 விசைப் படகுகளை சேரியாமுட்டம் மீனவர்கள் செவ்வாய்கிழமை கடலில் மூழ்கடித்தனராம்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி, புதன்கிழமை சின்னமுட்டம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனால், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாததால், சின்னமுட்டம் மீனவர்கள் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளை புதன்கிழமை தொடர்ந்து 3 மணி நேரம் சிறைப்பிடித்தனர்.
இதனால், அங்கு ஏற்பட்ட பதற்றத்தையடுத்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
மேலும், அங்கு பிரச்சினை ஏற்படாமலிருக்க நெல்லை சரக டி.ஐ.ஜி மாகாளி கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ளார். குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி டி.எஸ்.பி ஜெயராமன் தலைமையில் 250-திற்கும் மேற்பட்ட போலீஸôர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், வியாழக்கிழமையும் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுக மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தம் செய்தனர். இதனால் துறைமுத்தில் 350 விசைப் படகுகளும் படகுத் துறை தங்குதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை கேட்ட போது, இருதரப்பு மீனவர்களையும் அழைத்து, விரைவில் பேச்சு வார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கு சுமுகமான முறையில் தீர்வு காணப்படும் என்றார் அவர்.
விசைப்படகு சங்க அவசரக் கூட்டம்: கன்னியாகுமரி விசைப் படகுகள் சங்கத்தின் அவசரக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சேரியா முட்டம் கடல் பகுதியில் மூழ்கடிக்கப்பட்ட விசைப் படகுகளில் ஒன்று முற்றிலும் சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மற்றொரு படகு காணாமல் போயுள்ளது. இந்த இரு விசைப் படகுகளுக்கும் அரசு உடனடியாக முழு நிவாரணம் வழங்கிட வேண்டும்.
நிரந்தரமாக சுமுகமான முறையில் மீன்பிடித் தொழில் செய்யும் வகையில், ரோந்துப் படகுகள் முழு நேர கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
செயல்பாடற்ற நிலையில் உள்ள சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுக உதவி இயக்குநர் அலுவலகத்தை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி, 3 “நாட்டிக்கல் மைல்’ (கடல்மைல்) தொலைவில் மீன்பிடிக்க, போயா போட்டு எல்லை வரையறுக்கப்பட்டு செயல் வடிவம் பெறவேண்டும்.
இரு விசைப் படகுகளுக்குமான நஷ்ட ஈட்டை பெற்றுத் தருவதோடு, இயல்பு நிலையில் மீனவர்கள் மீன்பிடிக்க அரசு ஆவன செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீர்மானங்களின் நகலை உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா ஆலய வளாகத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பங்குத் தந்தை லியோன் கென்சன் தலைமை வகித்தார்.