கள்ளமோ கரைந்தழும்
இரண்டு நண்பர்கள். ஒருவரின் பெயர் ஜெ.கருணாகர். சுருக்கமாக ஜெ.கெ. முன்னாள் கம்யூனிஸ்ட். ‘மன்றத்தில் அவரது நீண்ட தன்னுரையாடல்களையும் ஊடாகக் பொழியும் வசைகளையும் நக்கல்களையும் கேட்பதற்கென்றே வரும் ரசிகர்கள்‘ இருக்கிறார்கள். முறுக்கு மீசை. பெரிய எழுத்தாளர்.
இன்னொருவர் யுவராஜ். ஞானி போல் தோற்றம். பாவனை. ‘ஆச்சாரிய ஸ்வாமிகள் மாதிரி. பழங்கள்தான் குடுக்கணும். அதில ஒண்ணை எடுத்து ஆசீர்வாதம் பண்ணி நமக்கு பிரசாதமா எறிஞ்சு குடுப்பான்.‘ என்று கிண்டலுக்கு உள்ளாவார். திருவண்ணாமலை ரமண ஆசிரமம் செல்பவர். ”ஜனனீ ஜனனீ” பாடுபவர். சுருக்கமாக ராஜா சார்.

‘ஸ்ரீசக்ரராஜசிம்மனேஸ்வரி‘ என்னும் பாடல் கேள்விப்பட்டதில்லை. ‘ஸ்ரீசக்ரராஜ சிம்மாஸனேஸ்வரி‘ பாடல் மிகப்புகழ் பெற்றது.
ஜெயமோகன் எழுதினார்் என்பதால் படித்தேன். யாரை குறிப்பால் உணர்த்துகிறார் என்று அறிந்தவுடன் கொஞ்சம் கிளுகிளுப்பும் பரபரப்பும் சேர்ந்தது. அவருடைய நடையில் இல்லாமல், வேறு ஓட்டத்தில் ஓடிய கதை.
நெருங்கியவரின் மரணத்தில் கூட அழ முடியாத நிலை எனக்கு உண்டு. அழுகை வந்திருக்காது. அதற்காக ‘பரிவிலோ நேசத்திலோ குறை வைத்தவர்… அதனால்தான் பீறிடவில்லை’ என்று விட்டு விடவும் முடியாது. சுந்தர ராமசாமியின் மரணத்தில் ஜெயமோகன் அழுத காட்சி நினைவுக்கு வந்தது. சமீபத்தில் படித்த பிரேமலதாவின் (Kombai: Periyaachchi – IV) பதிவு மனதில் ஓடியது.
ஒவ்வொருவர் ஒரு மாதிரி என்று சொல்ல வருகிறாரா? அழாதவனைப் பார்த்து ‘ஏன் அழவில்லை’ என்று கேட்காதே. அரற்றுகிறவனைப் பார்த்து ‘அதீத நடிப்பு எதற்கு? எல்லாருக்கும் அதே துக்கம்தானே!’ என்று கட்டுப்படுத்தாதே என்கிறாரா? அல்லது ஜெயகாந்தனுடனும் இளையராஜாவுடனும் திருவண்ணாமலை சென்ற அனுபவத்தில் தன் புனைவைக் கலந்து கொடுக்கிறாரா?
வாசகனுக்கே வெளிச்சம்.
இந்த வாரத் திண்ணையில் தாஜ்:
‘இருகலைஞர்கள்’ மிகவும் தட்டையாக இருந்தது. குமுதம் ஒரு பக்கக் கதைக்கு போட்டியோ என்றுகூட நினைக்கத் தோன்றிற்று. சுமார் இருபது வருட காலமாக நான் வாசித்த அவரது சிறுகதைகளில், இப்படியொரு சாதாரண கதை மையத்தை நான் கண் டதில்லை. ‘கைபோகும் போக்கிற்கு தடையற எழுத வரும்’ எழுத்து என்பது இதுதானோ என்னமோ!
ஜெயமோகன் கூட தாளாமையால் கரைந்தழுகிறவர்தான்.
ஜெயமோகன் நிழற்படம் – நெஞ்சின் அலைகள்: ஒரு நதியின் கரையில் – எழுத்தாளர் ஜெயமோகனுடன்!










