சமுதாய நல(?) பட்ஜெட்!
தமிழக பட்ஜெட்டில் பற்றாக்குறை 2.93 சதவிகிதம் என்பது பாராட்டுக்குரிய விஷயம். இதே முன்னேற்றம் தொடர்ந்து, இன்னும் இரண்டாண்டுகளில் பற்றாக்குறையே இல்லாத நிலை உருவாக வேண்டும் என்று விரும்புகிறோம்.
ஆனால், இந்த நற்செய்திக்கு இன்றைய தி.மு.க. அரசு முற்றிலும் பொறுப்பாகி பாராட்டுபெற முடியாது.
முந்தைய ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஜெயலலிதா, தாம் முதல்வரானதுமே ஏகப்பட்ட வரிகளை விதித்து, அரசு வருவாயைக் கூட்டும் முயற்சியில் இறங்கினார். இதனால் மக்கள் திணறிப் போனாலும் அரசின் நிதி நிலைமை சீரடைந்தது. அந்தப் பயனைத்தான் இன்றைய தி.மு.க. அரசு அனுபவிக்கிறது.
நடப்பு ஆண்டின் வருவாய் இலக்குகளை எட்டி, பட்ஜெட்டை தி.மு.க. எப்படி நிறைவேற்றப் போகிறது என்பதுதான் கேள்வி. இவ்வாண்டு நிதி நிலைமை சீராக இருப்பதால் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. பருப்பு வகைகள் மீதான விற்பனை வரி மற்றும் வேறு சில வரிகள் நீக்கப்பட்டும் உள்ளன.
சமுதாய நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மொத்த செலவில் 35 சதவிகிதம் என்கிற அளவுக்கு அதிகரித்துள்ளது! கடந்த ஆண்டு ரூபாய் 11,942.49 கோடி நலத்திட்டங்களுக்கென செலவிடப்பட்டிருக்க, இவ்வாண்டு அது வரலாறு காணாத வகையில் ரூ.13,983 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரே ஆண்டில் இரண்டாயிரம் கோடிக்கும் மேலாக கூடுதல் ஒதுக்கீடு!
நலத்திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்பதில் சந்தேகமேயில்லை. அதிலும் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிப்பது மிக நியாயமே. ஆனால் பிற ஒதுக்கீடுகள் ஒரு வரையறைக்குட்பட்டு இருப்பதுதான் நல்லது என்பதுடன், தனி நபர் வருமானமும் மாநில பொருளாதாரமும் பெருகப் பெருக, இந்த ஒதுக்கீடுகள் குறைந்துவர வேண்டும். ஆனால், அவ்வாறு நடப்பதேயில்லை.
இரண்டாயிரம் கோடி ரூபாயை சமுதாய நலத் திட்டங்களில் கூடுதலாகச் செலவிடும்போது, அது தொழிற்பெருக்கத்துக்கோ, வேலைவாய்ப்புப் பெருக்கத்துக்கோ, உற்பத்திப் பெருக்கத்துக்கோ, வருவாய்ப் பெருக்கத்துக்கோ வகை செய்யாது! அவ்வளவு பெரிய தொகை பலவாறாகப் பங்கு பிரிக்கப்பட்டு, பல்வேறு திட்டங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். ஆனால், இறுதிப் பயனீட்டாளரைச் சென்றடையும் தொகை, பட்ஜெட் ஒதுக்கீடைக் காட்டிலும் மிகக் குறைவாகவே இருக்கும். போதாக்குறைக்கு, தேர்தல் வாக்குறுதியாக அள்ளித் தந்த சலுகைகளும் இலவசங்களும் ஏராளமான செலவுக்கு வழிவகுக்கும்.
நலத்திட்டங்களுக்கான நிர்வாகச் செலவும் கணிசமாக இருக்கும் என்பதோடு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் நிலவும் லஞ்ச – ஊழல் கலாசாரம் ஏராளமான தொகையைக் காவு கொள்ளும்!
இவ்வாறு நிகழாமல் தடுப்பதிலும் மேற்பார்வை செய்வதிலும் இன்றைய அரசு வெற்றி காணுமென்றால், அது உலகமகா அதிசயமாகவே இருக்கும்.
பயனற்ற செலவுகளைக் குறைத்து, வேலைவாய்ப்புகளைப் பெருக்கி, மக்களுடைய வருமானத்துக்கு வழிசெய்யும் முகமாக இந்த பட்ஜெட்டில் என்ன செய்யப்பட்டிருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால், பிரமாதமாக ஏதுமில்லை. இதைச் செய்யாதவரையில் தமிழகத்தில் உற்பத்தி பெருகாது; விலைவாசி குறையாது. விலைவாசி அதிகமாயிருக்கிறது என்பதற்காக அரசு மீண்டும் ஏழை – எளியவர்களுக்கான சமுதாய நலத்திட்ட ஒதுக்கீடுகளைத்தான் அதிகரிக்க வேண்டிவரும். இந்த விஷ வட்டத்திலிருந்து விடுபட துணிவும் தீர்க்கதரிசனமும் தேவை. அடுத்த பட்ஜெட் தயாரிக்கும்போதாவது தி.மு.க. அரசும் நிதி அமைச்சரும் அவற்றைக் கைகொள்ளட்டும். சமுதாய நலன் என்பது ஏழைகளை ஏழைகளாகவே நீடிக்கச் செய்வதல்ல; அவர்களை உழைப்பாளிகளாகவும் அதன்மூலம் தன்னிறைவு பெற்றவர்களாகவும் மாற்றுவதுதான் உண்மையான சமுதாய நலன்.










