இரண்டு வேளை சமைத்து போடலாமே? – ஆர். சோமசுந்தரம்
சில ஆண்டுகளுக்கு முன் “ரீடர்ஸ் டைஜஸ்ட்” பத்திரிகையில் “லைப் ஈஸ் லைக் தட்” என்ற பகுதியில் இடம் பெற்ற துணுக்கு இது:
ஒரு உர வியாபாரி ஒரு கிராமத்தில் தனது கம்பெனியின் உரத்தை விவசாயிகளிடம் விற்பதற்காக ஒரு கூட்டம் நடத்துகிறார். தனது பொருளை வாங்குவதால் விவசாயிக்கு கிடைக்கும் லாபம் குறித்து விளக்குகிறார்.
-எங்கள் உரத்தை நீங்கள் 10 மூட்டை வாங்கினால் 2 மூட்டை இலவசம்.
விவசாயிகளிடம் சலசலப்பு. ஆர்வம். ஆனால் வியாபாரம் நடக்கவில்லை.
-நீங்கள் 20 மூட்டை வாங்கினால் 6 மூட்டை இலவசம்
மீண்டும் சலசலப்பு. ஆனால் விவசாயிகள் மெüனம் சாதித்தனர்.
-நீங்கள் 100 மூட்டை வாங்கினால் 50 மூட்டை இலவசம் இப்போதும் யாரும் வாங்க முன்வரவில்லை.
இதற்கு மேல் ஒன்றுமே செய்ய முடியாது என்ற நிலையில் வியாபாரி வருத்ததுடன் நின்றுகொண்டிருந்தபோது, ஒரு வயோதிகர் எழுந்து நின்றார். இவர் 100 மூட்டை வாங்கப் போகிறார் என்று நம்பிக்கை பிறந்தது.
அவர் கேட்டார்.
“”எவ்வளவு மூட்டைகள் வாங்கினா மொத்தமும் இலவசமா கொடுப்பீங்க”
இந்த அப்பாவி விவசாயியைப் போல, இன்று அரசியல் தலைவர்களைக் கேள்வி கேட்க அப்பாவி வாக்காளர்கள் இல்லை. அல்லது அப்படி இருந்தாலும் அவர்கள் குரல்கள் ஒலிக்க ஊடகங்களில் இடமில்லை என்பதுதான் இன்றைய “இலவச’ துன்பத்துக்குக் காரணம்.
இலவச டிவி சாத்தியமில்லை என்ற அவநம்பிக்கை பொதுவாக பரவியதும் அதைத் தொடர்ந்து “இலவச டிவி கிடைக்கலன்னாலும், ரூ.2-க்கு அரிசி கிடைத்தால் அது போதும்‘.
இப்படியாக எல்லா ஊர்களிலும் எல்லா டீக்கடை, ஓட்டல் வாசல்களிலும் சொல்லி வைத்தாற்போல ஒரே மாதிரியான வசனம் பரவிக் கொண்டிருப்பதை உளவுத் துறை முதல்வர் ஜெயலலிதாவிடம் சொல்ல, இத்தனை நாட்களாய் அதை விமர்சனம் செய்தவர் வேறு வழியின்றி 10 கிலோ இலவசம் என்று அறிவிப்பு செய்தார்.
உடனே திமுக தலைவர் கருணாநிதியும், அரிசி விஷயத்தில் மேலும் சலுகைகள் அறிவிக்கப்படும் என்று “அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்’ என்று ஆழ்வார்கள் பாணியில் இறங்கிவிட்டார். மானியம் என்பதற்கும் இலவசம் என்பதற்கும் வேறுபாடு உள்ளது.
மானியம் ஒருவருடைய சுமைக்கு கொஞ்சம் தோள் கொடுப்பது. இலவசம் என்பது இன்னொருவர் பாரத்தை நாமே சுமப்பது.
தரமான அரிசி வெளிச்சந்தையில் கிலோ ரூ.20 க்கு விற்கப்படுகிறது. இதை வாங்குவதற்கு வசதி இல்லாத ஏழைகளுக்காகத்தான் ரேஷன் அரசி மலிவு விலையில் கொடுக்கப்படுகிறது. மத்திய அரசு நிர்ணயிக்கும் விலையைக்கூட கொடுக்க முடியாத ஏழைகள் இருக்கிறார்கள் என்பதால் தமிழக அரசு தன் சொந்தப் பொறுப்பில் குறிப்பிட்ட தொகையை மானியமாக ஈடுசெய்து கிலோ ரூ.3.50 க்கு விற்பனை செய்கிறது.
இப்போதைய அறிவிப்புகளின்படி 20 கிலோ அரிசியை ரூ.40க்கு திமுக கொடுப்பதாக வாக்குறுதி சொல்கிறது.
அதிமுகவோ ரூ.35-க்கு 20 கிலோ அரிசி கொடுப்பதாகச் சொல்கிறது. (அதாவது 10 கிலோ இலவசம்).
அடுத்து திமுக தலைவர் இன்னும் சலுகை அறிவிக்கப்படும் என்று பொடி வைத்துள்ளார்.
நண்பர் கேலியாக சொன்னார்:
“அரிசியை மட்டும் குறைந்த விலையில் தருவதோ அல்லது 10 கிலோ இலவசமாகத் தருவதோ பயன்தராது. இதை வாங்கி சமைக்க விறகு அல்லது மண்ணெண்ணெய் தேவை. ஏழை அதற்கு எங்கு போவான். தமிழ்நாட்டு வரலாற்றில் அன்னதானம், அன்னதான சத்திரம் புதிய விஷயமல்ல. காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை, எம்ஜிஆர் மேலும் விரிவாக சத்துணவுத் திட்டமாக மாற்றினார். அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் இதை குடும்ப உணவுத் திட்டமாக மாற்றி, ஒரு குடும்பத்துக்கு இரண்டு வேளை சோறு அரசாங்கமே சமைத்து போடலாம்…”
வெளியே இதையெல்லாம் பேசாதீங்க என்று அவர் வாயைப் பொத்தி இழுத்து வரவேண்டியதாயிற்று.