எழுத்திலிருந்து முழு நேர அரசியலுக்கு – பொன். தனசேகரன்
மக்கள் சிவில் உரிமைக் கழகம் மூலமும் தலித் இயக்கம் மூலமும் பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தமிழ் கருத்துலகில் குறிப்பிடத்தக்க எழுத்தாளராகக் கருதப்பட்ட ரவிக்குமார் (45) விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடுகிறார்.
“திருமாவளவன்தான் என்னை வற்புறுத்தி போட்டியிடச் செய்துள்ளார். அவர் போட்டியிட இருந்த தொகுதியை எனக்கு அளித்துப் போட்டியிடச் செய்ததை எனக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன்” என்கிறார் ரவிக்குமார்.
கொள்ளிடம் அருகே மாங்கணம்பட்டு என்ற ஊரில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர் தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார். சட்டத்துறையில் பட்டம் பெற்ற அக்குடும்பத்தின் முதல் பட்டதாரி.
என்று இவரது நூல்களின் பட்டியல் தொடரும். கதை, கவிதை, மொழிபெயர்ப்பு, இலக்கியம், பத்திரிகைகள் என இவரது எழுத்துலகம் விரிந்தது. தமிழ்நாட்டில் 10-வது நிதிக் குழுவின் துணைக் குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்தே அவர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டவர் அவர். “முழுநேர அரசியலில் இறங்க முடிவெடுத்தது சரியான முடிவு. தேர்தலில் போட்டியிடுவதற்காக எனது சிண்டிகேட் வங்கிப் பணியை விடவில்லை” என்கிறார் ரவிக்குமார்.
“எழுத்தாளராக இருந்து சுதந்திரமாகச் செயல்பட முடிந்த அளவுக்கு கட்சி அமைப்பில் உங்களால் செயல்பட முடியுமா” என்று கேட்டதற்கு,”எந்த ஒரு சுதந்திரமும் ஒரு வரையறைக்கு உட்பட்டே இருக்கிறது. எழுத்தாளரின் படைப்பாக்கமும் கற்பனையும் அரசியலில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்த முடியும், எழுத்துச் சுதந்திரத்துக்கும் அரசியல் இயக்கத்தில் செயல்படுவதற்கும் முரண்பாடு இருப்பதாகக் கருதவில்லை” என்கிறார் அவர்.
“தேர்தல் அரசியலின் வரையறைகளை உணர்ந்தே இருக்கிறோம். ஜாதி ஒழிப்பு என்பது எங்களது இறுதி இலக்கு. தனித் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறும் கட்சி வேட்பாளர்கள், சட்டமன்றத்தில் தலித் மக்களின் உரிமைக் குரலை பிரதிபலிப்பதில்லை. தலித் இயக்கங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், அம்மக்களுக்கான உயிர்நாடிப் பிரச்சினைகள் குறித்து சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்ப முடியும். எனவேதான் சமூக இயக்க தளத்திலிருந்து அரசியல் தளத்தை நோக்கி நகர்ந்துள்ளோம்” என்பது ரவிக்குமாரின் கருத்து.
காட்டுமன்னார் கோவில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அத்தொகுதியை மாதிரி தொகுதியாக்கிக்காட்டுவேன் என்று கூறுவதுடன் அதற்காக வைத்திருக்கும் பல்வேறு திட்டங்களையும் விளக்குகிறார் ரவிக்குமார். எழுத்துக் களத்தில் தனது தனி முத்திரையைப் பதித்த ரவிக்குமார், தேர்தல் அரசியலில் எப்படி இயங்கப் போகிறார் என்பதை இனிமேல் பார்க்க வேண்டும்.











நண்பர் ரவிக்குமார் அவர்கள் வெற்றி பெற்றதில் மிகுந்த மகிழ்வு கொண்டோம்.