Daily Archives: ஒக்ரோபர் 20, 2005

ஜாக் டேனியல்ஸை திற… குறள் வரும்

ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸ் சென்ற வாரம் விழியங்களை ஒளிபரப்பும் ஐ-பாட்-ஐ வெளியிட்டார். பங்குச்சந்தையின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். வெளியாவதற்கு பல நாள் முன்பே வலைப்பதிவுகளில் இந்த பரம ரகசியம் கசிய ஆரம்பித்தது. ஊடக அழைப்பிதழின் பின்னட்டையில் வெள்ளித் திரையை போட்டு சூசகமாக வீடியோ காண்பிக்கப் போவதை உணர்த்தியிருந்தார்கள்.

ஆப்பிள் குறித்த தொழில் ரகசியங்களை வெளியிடுவதற்காக, பல வலையகங்கள் மேல் ஸ்டீவ் ஜாப்ஸ் வழக்கு தொடுத்திருந்தார். அவையே, இன்று அவரின் முதலீட்டை பெருக்கி, பங்கின் வர்த்தகத்தை அதிகரிக்க அரும்பாடுபட்டுள்ளது. இப்பொழுதாவது ஆப்பிள் குறித்த தகவல்களை சுடச்சுட தருபவர்களை கருணையோடு பார்த்து, மிரட்டலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஸன் மைக்ரோசிஸ்டம்ஸின் ஜோனதன் ஷ்வார்ட்ஸ் தன்னுடைய வழக்கமாக, கேள்வியொன்றை எப்போதும் தொடுப்பார். திரளாக வந்திருக்கும் தொழில் நுட்ப மாநாட்டில் பங்குபெறுபவர்களை நோக்கி கேட்பார்:

‘உங்களில் எத்தனை பேர் இணையத்தைத் தேடுவதற்கு கூகிளை உப்யோகிக்கறீர்கள்?’

எல்லாருடைய கைகளும் தூக்கப்படும்.

‘நிரலி எழுதினால் NUnitஇல் சோதனை செய்யவேண்டும்; கோப்பு வரைந்தால் மைக்ரோசாஃப்ட் வோர்ட்-இல் இருக்கவேண்டும் என்று விதிமுறைகள் இருக்குமே… அது போல் எத்தனை நிறுவனங்களில் தேடலுக்கு கூகிள்தான் பயன்படுத்த வேண்டும் என்று நெறிமுறை வகுத்திருக்கிறார்கள்?’

தூக்கிய கைகள் அனைத்தும் கவிழ்ந்து விடும். சிறப்பான முறையில் பயனரைச் சென்றடைந்தால், புதிய நுட்பங்கள் மக்களை அவசியம் சென்றடைந்தே தீரும்.

எளிதாக செயல்படும் நுட்பங்கள் என்றால் கூகிள் தேடுபொறி தோன்றுகிறது. ஆர்தர் கோஸ்லரின் ஆங்கில பலுக்கம் விளங்காமல் arthar koslar என்று தேடினால் arthur koesler-தானே உனக்கு வேண்டும் என்று பணிவன்புடன் கூகிள் பரிந்துரைக்கும். வலையில் மேயும் பல பில்லியன் தேடல்களை வேலைக்காரர்களை கொண்டு திருத்துவது, மிகவும் பணவிரயமாகும் பணி.

அதற்கு பதிலாக, தேடித் தெளிபவர்களைக் கொண்டே தன்னை புத்திசாலியாக்கிக் கொள்கிறது. கூகிலின் ஆடம் பாஸ்வர்த் (IT Conversations: Adam Bosworth – MySQL Users Conference) சொல்வது போல் பல கடினமான காரியங்களுக்கு சுளுவான விடைகள் இருக்கிறது.

தவறான பதங்களுக்கு அகரமுதலியின் உதவியை நாடலாம். அறிவு பெட்டகங்களைத் துழாவலாம். விடை கொண்டு வருவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும் சரியான பாதையில் பதிலைக் கொண்டு வரும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. ஆனால், இதற்கு முன் arthar koslar என்று தேடியவர்களில் பலர் அதைத் தொடர்ந்து arthur koesler என்று தேடினார்கள் என்பதை அறிந்து வைத்துக் கொண்டால், இணையத்திற்கு தேவையான தொடுப்பை ஏற்படுத்தலாம்.

தகவல் பரிமாற்றத்தை திரட்டுவதன் மூலமும், வலைப்பதிவுகளுக்கு ஊடாக பாய்வதையும் சேமித்து வைத்தால் பல பயனுள்ள விஷயங்கள் மாட்டும். எந்த பதிவுகள் எவ்வளவு முறை தட்டப்படுகிறது, அங்கிருந்து செல்லும் அடுத்த பதிவுகள் என்ன என்று ஜமாபந்தியாக அலசுவதன் மூலம் கருத்தொற்றுமைமிக்க பதிவுகளை வகை செய்யலாம். ஒத்த சொற்கள் அடிக்கடி வரும் பதிவுகள், அதிக பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக காணும் பதிவுகள் என்றெல்லாம் சேகரிக்கவும் திரட்டிகளில், தகவல் பொதிந்திருக்கும்.

கால் தேயாமல் நிரலியிறக்கம் (Zero-footprint deployment), கை நோகாமல் வளர் மேம்படுத்தல்கள் (seamless incremental upgrades) போன்றவை நிரலியின் விஸ்தாரமான தகவல் சேமிப்பின் (intelligence amplification) கையில் இருக்கிறது.

தலைப்பில் சொன்னபடி குறள்:
வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.

| |