சுட்டாமல் சுட்டு சுட்டித் தொடர் எழுதும் சுலப ஃபார்முலா:
- பொருத்தமான புத்தகத்தை எடுத்துக் கொள்ளவும்.
- சம்பந்தப்பட்ட சாப்டரைத் திறக்கவும்.
- கணினியில் டைப் செய்யவும் (அல்லது எழுத்துணரி செய்தால், வேலை மிச்சம்).
- முதல் பாராவை மூணாவதுக்குப் போடவும்.
- மூணாவது பாராவை ஏழாவதுக்குப் போடவும்.
- ஏழாவது பாராவை முதலாவதாகப் போட்டுவிடவும்.
- If in current chapter sachin’s age is
- ஆங்காங்கே சச்சினின் சமீபத்திய சாதனைகளைப்பற்றி ஒன்றிரண்டு வரிகள் நுழைக்கவும்.
- உருக்கமான வசனங்களோ, வர்ணனைகளோ சேர்க்கலாம், தப்பில்லை.
- கடைசியாக, சச்சினைப்பற்றி யாராவது பெரிய மனிதர் சொன்ன ஒரு வரியைப் போடவும், அல்லது சச்சினே தன்னைப்பற்றிச் சொல்லிக்கொண்ட வரியையும் போடலாம்.
- ஓவியர் பாண்டியனை அழைத்து, சச்சினின் இளவயது பொம்மை ஒன்றைக் கொடுத்து, ஓவியம் வரைய சொல்லவும்.
- இஷ்யூவுக்கான சாப்டர் ரெடி!
சிகரம் தொட்ட சச்சின் :: வள்ளி (நன்றி – சுட்டி விகடன்)
லக்ஷ்மிபாய் என்ற பாட்டி சச்சினையும் அந்த வீட்டுச் சுட்டிகளையும் பராமரித்து வந்தார். அம்மா, அப்பா இருவரும் வேலைக்குப் போய் விடுவார்கள். பாட்டிதான் சச்சினுக்கு வளர்ப்புத்தாய், விளையாட்டுத்தோழி எல்லாமே! இரண்டரை வயதிலேயே சச்சினுக்கு கிரிக்கெட் ஆர்வம் பற்றிக் கொண்டது. வீட்டுவேலை செய்துகொண்டிருக்கும் லக்ஷ்மிபாயைப் பந்துவீச அழைப்பார் குட்டி சச்சின். துணி துவைக்கப் பயன்படும் மரக்கட்டைதான் சச்சினின் முதல் பேட்! பாட்டி பிளாஸ்டிக் பந்தை வீச, அதை அழகாக அடித்து விட்டுச் சிரிப்பார் சச்சின்.
“லக்ஷ்மிபாய் தாதிதான் என் முதல் கிரிக்கெட் கோச். கிரிக்கெட் பற்றித் தெரியாமலேயே எனக்கு அருமையாகப் பயிற்சி அளித்தவர் அவர். மறக்க முடியாத நபர்களில் முக்கியமானவர்.” இங்கிலாந்து உலகக் கோப்பை போட்டிகளின்போது சச்சின் சொன்னது இது.
லக்ஷ்மிபாய் தாதியும் சச்சினின் மழலைக் குறும்புகளை நினைவு வைத்திருந்து அடிக்கடி சொல்வார். “அவன் எல்லோருக்குமே செல்லம். சரியாக நடக்கக்கூடத் தெரியாது அவனுக்கு. அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டே இருப்பான். ஒரு நிமிஷம் சும்மா இருக்க மாட்டான். வேகமான, துடிப்பான பிள்ளை. அவனுடைய சுருள்முடியையும், கொழுகொழு கன்னங்களையும் பார்க்கிறவர்கள் சச்சினைக் கொஞ்சாமல் போக மாட்டார்கள். அந்தக் குட்டிப்பையன் இன்று உலகம் மதிக்கும் விளையாட்டுக்காரனாக உருவாகி இருக்கிறான். அதைப் பார்ப்பதே எனக்குப் பெரிய பரிசு!” – இப்படி சச்சின் பற்றிப் பேசி மகிழ்வார் லக்ஷ்மிபாய்.
சச்சினின் அண்ணன் அஜித் டெண்டுல்கர். சச்சினை விட 11 வயது பெரியவர். பள்ளி, கல்லூரி மற்றும் கிளப்களுக்காக கிரிக்கெட் ஆடியவர். (இவர் சச்சினைப்பற்றி ஆங்கிலத்தில் ஒரு நூலே எழுதியிருக்கிறார். 1996-ல் அது வெளிவந்தது.) சச்சினுக்கு அறிமுகமான முதல் கிரிக்கெட் பேட் அஜித்துடையதுதான். ஒரு குட்டிப் பையனால் தூக்கமுடியாத அளவு கனமாக இருந்தது அந்த பேட். அதைத் தூக்குவதற்கே சச்சின் சிறப்புப் பயிற்சி எடுத்துக்கொண்டார்! விரைவிலேயே அதைப் பயன்படுத்தி விளையாடவும் தொடங்கிவிட்டார். அதனால்தானோ என்னவோ, இப்போதும் எடை அதிகமான பேட்டையே பயன்படுத்தி வருகிறார் சச்சின். கனமான பேட்டைக் கொண்டுதான், பந்துகளை பவுண்டரிக்கு விரட்டுகிறார்.
அஜித், இன்னொரு அண்ணன் நிதின், அக்கா சவீதா ஆகிய மூவரும்தான் சச்சினின் கிரிக்கெட் ஆர்வம் மென்மேலும் வளரக் காரணம். வீட்டில் இருக்கும் போதெல்லாம் கிரிக்கெட் பற்றியே பேசிக்கொண்டு இருப்பார்கள். அதிலும் அஜித் போட்டிகளுக்கு ஆடத் தொடங்கிய பிறகு வீட்டில் கிரிக்கெட் மழையே பொழிவார். தன் அணி சந்தித்த ஒவ்வொரு பந்தையும் வர்ணிப்பார். அண்ணன்களும், அக்காவும் பேசுவதைக் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருப்பார் சச்சின். இதனால் நாளுக்குநாள் சச்சினுக்குள் கிரிக்கெட் தீபம், பற்றி எரிந்தது. இதற்கிடையே சிறிதுகாலம் சச்சினின் ஆர்வம் டென்னிஸ் பக்கம் திரும்பியது.
சச்சின் மொழி
“உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கவேண்டும் என்றெல்லாம் எனக்கு ஆசை எதுவும் கிடையாது. இந்திய அணிக்குப் பயன்படும் வகையில் நன்றாக ஆடவேண்டும் என்பதே என் விருப்பம்…”
சச்சின் – ஒர் புயலின் பூர்வ கதை : சொக்கன் ::
சச்சின் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது இரண்டரை வயதில். லக்ஷ்மிபாய் வீட்டு வேலைகளில் தீவீரமாய் மூழ்கியிருக்கும்போது, துணி துவைக்கிற கட்டையைக் கையிலெடுத்துக்கொண்டு அவரைப் பந்துவீசுமாறு தொந்தரவு செய்வானாம். நீளமான சுருள்முடியும், புசுபுசுக் கன்னங்களுமாய்ச் சிரிக்கிற மழலையை மறுக்க யாருக்கு மனம் வரும் ? சிறு பிளாஸ்டிக் பந்தை அவர் வீச, அதை அவரிடமே திருப்பியடிப்பதில் சச்சினுக்கு அளவில்லாத சந்தோஷம். இப்படி வீட்டுக்குள், மாடியில் துணி உலர்த்தும்போது என்று அவர்கள் இருவரும் பல களங்களில் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்கள்.
லக்ஷ்மிபாய்க்கு இப்போது வயது எழுபதுக்கும் மேல், குழந்தை சச்சினைப்பற்றி பேசும்போதெல்லாம் அவரது கண்களில் ஆசை தெறிக்கிறது, ‘கடைக்குட்டி என்பதால் சச்சின் எல்லோருக்கும் செல்லம், அவன் எது செய்தாலும் யாரும் எதிர்த்துப் பேசுவதில்லை’, சிரிப்போடு சொல்கிற அவர், சச்சினை ‘நடக்கத் தெரியாத பிள்ளை’ என்று குறும்பாய் வர்ணிக்கிறார், ‘எப்போதும், எங்கேயும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் அவனுக்கு, ஒரு இடத்தில் சும்மா நிற்பதுகூட பிடிக்காது, எல்லாவற்றிலும் வேகம், துள்ளல், கலகலப்பு, பெரிதாய்ச் சத்தம் போடுவது, சின்னச்சின்ன கலாட்டாக்கள் செய்வது என்று எல்லோராலும் கவனிக்கப்பட்ட பிள்ளை அவன்’
சச்சினின் குடும்பத்துக்கும், கிரிக்கெட்டுக்கும் அப்போதிருந்த ஒரே தொடர்பு அஜீத் டெண்டுல்கர்தான். சச்சினைவிட பதினோரு வயது பெரியவரான அவர், நல்ல கிரிக்கெட் வீரர் – தனது கல்லூரி அணிக்காக விளையாடிக்கொண்டிருந்தார். ஆகவே அவரது பேட் வீட்டில் இருந்தது, அதுதான் சச்சின் தொட்டுணர்ந்த முதல் கிரிக்கெட் மட்டை! அப்போது அந்த பேட் கிட்டத்தட்ட சச்சினின் உயரத்துக்கு இருந்தது. ஒரு சிறுவனால் சாதாரணமாய்த் தூக்கமுடியாதபடி கனம், ஆனாலும் சச்சின் விடவில்லை. தான் ஏந்திக்கொண்டிருப்பது நிஜமான கிரிக்கெட் பேட் என்கிற எண்ணம் தருகிற சிலிர்ப்பே அவனுக்குப் பெரிய உந்துசக்தியாயிருந்தது. ஆகவே மெல்லமெல்ல அந்த கனமான மட்டைக்குப் பழகிக்கொண்டு, அவனால் அதைச் சுலபமாய் கையாளமுடிந்தது. இந்த தொட்டில் பழக்கமே இன்றுவரை சச்சினுடைய பேட் மற்றவர்களைவிட அதிக கனமாயிருப்பதற்குக் காரணம்!
அந்த வயதில் சச்சினைக் கவர்ந்த இன்னொரு விளையாட்டு, டென்னிஸ். குறிப்பாய் ஜான் மெக்கன்ரோவின் பெரிய ரசிகனாயிருந்தான் சச்சின். மெக்கன்ரோ விளையாடுகிற போட்டிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போதெல்லாம் தனது ஹீரோ ஜெயிக்கவேண்டும் என்று அவன் போடுகிற சப்தத்தில் வீடே அதிரும். அவனோடு உட்கார்ந்து மேட்ச் பார்க்கிறவர்கள் மெக்கென்ரோவை ஆதரிக்காவிட்டால் போச், மேலும் கலாட்டாக்கள் தொடரும்.
மெக்கென்ரோவைப் பார்த்துப்பார்த்து ஆசைகொண்ட சச்சின் அவரைப்போலவே விளையாடுகிற ஆசையோடு டென்னிஸ் ராக்கெட்டைக் கையிலெடுத்துக்கொண்டான், அதோடு நிற்கவில்லை. மெக்கென்ரோவின் குறிப்பிடத்தக்க அடையாளம், தலையிலும், இரண்டு கைகளின் மணிக்கட்டிலும் அவர் அணிந்திருக்கிற வியர்வைப் பட்டைகள் – வீட்டில் அடம்பிடித்து அதையெல்லாமும் வாங்கி அணிந்துகொண்டு, தன் லட்சிய நாயகனைப்போலவே கர்வத்தோடு நடைபயின்ற சச்சினை, அவனது நண்பர்கள் ‘மேக்’ என்று செல்லமாய் அழைக்க ஆரம்பித்தார்கள்.
டென்னிஸில் ஆர்வமிருந்தாலும், ஏனோ சச்சினை அந்த ஆட்டம் ரொம்பவும் வசீகரிக்கவில்லை. சீக்கிரமே சாஹித்ய சஹ்வாஸ் கிரிக்கெட் அணியில் சேர்ந்துகொண்டான் அவன்.










