சாகவில்லை மனிதநேயம் – கேடிஸ்ரீ


Aaraamthinai:

முதல் இரண்டு நாட்கள் அரசின் நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் தற்போது அரசும் மூழுவீச்சில் நிவாரணப் பணிகளை தன்னார்வ நிறுவனங்களுடன் கைகோர்த்துக் கொண்டு செய்து வருகிறது.

இன்ன சாதி, மொழி, மாநிலம், நாடு என்றில்லாமல் தன் சகமனிதர்களுக்கு ஏற்பட்ட இழப்பை, கொடுமையை தங்கள் கொடுமையாக பாவித்து, இக்கட்டான சூழலில் அவர்களுக்கு கைகொடுத்து உதவுவதற்கு நான், நீ என்று போட்டி போடும் மனிதர்களை பார்க்கும் போது மனிதநேயம் இன்னும் மடிந்து போகவில்லை என்பது பெருமையாக இருக்கிறது.

வேளாகன்னி மாதா கோயில் மண்டபம், நாகூர் தர்கா மற்றும் கோயில்களில் சாதிமதம் பாராது பல பேர் தங்கவைக்கப்பட்டிருப்பதும் மனிதநேயத்திற்கான சாட்சி.

வெள்ளித்திரைகளில் அரிதாரம் பூசி ஒரே ஆளாக பத்து, பதினைந்து பேரை அடித்து நொறுக்குவதும், பணக்கார வீட்டு பெண்ணை துரத்தி துரத்தி காதலிக்கும் நம் தமிழ்த்திரைப்பட கதாநாயகர்கள் போல் 10 லட்சமோ, 20 லட்சமோ நிவாரண நிதி அளித்து விட்டு இத்துடன் நம் கடமை முடிந்தது என்றில்லாமல், பேரழிவு என்று கேள்விப்பட்டவுடன் தனக்கு நேர்ந்தது போல் பதறி துடித்து ஓடிவந்து வாழ்விழ்ந்தவர்களுக்கு ஆறுதலும், அவர்களிடம் உங்களுக்கு கரம் கொடுக்க நான் இருக்கிறேன் என்று கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து கொண்டிருக்கும் ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய்யின் மனிதநேயத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

அரசு மேற்கொண்டிருக்கும் நிவாரணப்பணிகளில் போதிய வேகம் இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் கூறிக்கொண்டிருக்கையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ”கடலூர் மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் ககன்தீப்சிங் பேடியை மக்கள் பாராட்டுகிறார்கள். நாங்களும் பாராட்டுகிறோம்..” என்று பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் தமிழகத்திற்கு சுற்றுலா பயணியாக வந்த பல வெளிநாட்டவர்கள் குறிப்பாக ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் முல்லர் என்பவர் மதுரை செஞ்சிலுவை சங்கத்துக்கு சென்று சுனாமி பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் பண உதவி செய்ய முடியாவிட்டாலும் உடல் உழைப்பை தரத் தயாராக உள்ளதாக தெரிவித்ததும், பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரீஸில் இருந்து பிளெஸ்ஸில்கினேர் என்ற பெண்மணி மீட்புப் பணியில் தன்னை இணைத்துக் கொண்டதும் இன்றைய பத்திரிகை செய்திகள். அதுமட்டுமல்லாமல் நார்வே நாட்டைச் சேர்ந்த தாமஸ் இலியாஸின் மற்றும் அவரது மனைவி ஆஸின்மேரி ஆகியோர் தங்களுக்கு படிப்புக்காக கொடுக்கப்பட்ட மூன்று லட்சம் ரூபாயிலிருந்து முப்பதாயிரம் ரூபாயை நிவாரண நிதியாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இது இப்படியிருக்க பணம் உதவி மட்டும் செய்தால் போதும்.. அத்துடன் நம் கடமை முடிந்தது என்று நினைக்கும் நம்மில் சிலரை நினைத்து மனது நெருடாமல் இல்லை!”

நன்றி: ஆறாம்திணை.காம்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.