சென்ற வருட சவட்டுதல்கள்
கடந்த வருடம் வெளிவந்த தமிழ்ப்படங்களின் தலைபத்து பட்டியல்கள் நிறைய பார்க்க கிடைத்தது. ‘ஜெயா டிவி’யில் திரைக்கு வந்து சில மாதங்கள் ஓடிய ‘அழகிய தீயே‘ தீபாவளிக்கே காட்டப்பட்டதால் சன் டாப் 10-இல் இடம் கிடைக்கவில்லை. சிஃபியில் வசூலில் சாதனை படைத்த படங்களை சொல்லியிருந்தார்கள். ‘கிரி‘ இடம் பெற்றிருப்பது ரீமா சென்னின் ‘கைய வச்சிக்கிட்டு சும்மா இருடா’வுக்கு கிடைத்திருக்கும் மதிப்பையும் சிம்ரனின் வெற்றிடத்தை நிரப்பப் போவதையும் பால் வார்த்தது.
ஆஸ்கர் ஓட்டத்தில் இருக்கும் படங்கள் வருடத்தின் இறுதியில் வெளிவரும். மக்களும் மறக்கமாட்டார்கள். வாக்களிக்கும் சந்தாதாரர்களும் எளிதில் படத்தைப் பார்க்கலாம் என்பது தாத்பர்யம். அதுபோல், வருடத்தின் இறுதியில் வெளிவந்த ‘மகாநடிகன்‘ படம்தான் எனக்கு மிகவும் பிடித்த 2004-இன் தமிழ்ப்படம். அன்று வந்த ம.கோ.ரா.வில் ஆரம்பித்து இன்று ‘ஏய்‘ போடும் ‘சுள்ளான்‘ வரை நைச்சியமாக நக்கல் அடித்துப் போட்டிருக்கிறார்கள்.
உள்ளத்தை தொட்ட படங்களில் என்னை மிகவும் கவர்ந்தது ‘காமராஜ்‘. சரித்திரங்களை திரையில் எடுப்பது அரிது. அதுவும் அந்தக் காலங்களை கண் முன்னே நிறுத்தி டிஷும் டிஷும் படுத்தல் இல்லாமல் சொன்னவிதம். காலங்கடந்து பார்ப்பதால் நல்ல விஷயங்கள் மட்டுமே சொல்லப்பட்டதா, பாரபட்சமில்லாததா என்று தெரியாது. அப்படியே இருந்தாலும் கூட அற்புதமான 2004-இன் படைப்பு.
சூப்பட் ஹிட்டான படங்களில் மிகவும் ரசித்தது ‘கில்லி‘. பெண்மையை மதிக்க வேண்டும்… ஹிட்டும் ஆகியிருக்கணும். பாட்டும் தாளம் போடணும். நகைச்சுவையும் புன்முறுவலிக்க வேண்டும். இப்படியெல்லாம் பார்த்தால் ‘கில்லி’.
இன்னும் நான் பார்க்காத ஆனால் பலராலும் பெரிதும் மகிழப்பட்ட படங்கள் லிஸ்ட் கொஞ்சம் பெரிது
அடுத்த லிஸ்ட் இந்த மூன்று பிரிவுகளிலும் வெள்ளிப் பதக்க படங்கள்.
இயல்பாக இருப்பதால் பிடித்துப் போனதில் ரன்னர்-அப் ‘அழகிய தீயே‘. ரொம்ப அலட்டிக் கொள்ளாமல் கதை சொன்னவிதம். பாடல்கள் ஹிட்டாவதை நம்பாமல் காதலை மட்டும் நம்பும் திரைக்கதை. வில்லன் எல்லாம் வைத்துக்கொள்ளும் கொடுமை இல்லை. டாப் கிளாஸாக டைடானிக் கதையளக்கும் காட்சி.
நெஞ்சில் நின்ற பதிவில் இரண்டாம் இடம் — ‘7ஜி ரெயின்போ காலனி‘. ஏற்கனவே நிறைய அலட்டிக் கொண்டாடி விட்டாச்சு.
பொதுஜனம் ரசித்த படங்களில் — ‘நியு‘. வக்கிரமான காட்சிகள் இருக்கிறது என்று அண்டர்கிரவுண்ட் மார்க்கெடிங். அளவுக்கு மீறிய தேவயானி செண்டிமெண்ட் என்று சன் டிவி மார்க்கெடிங். காலையில் சிறுவன்; மாலையில் பொறுப்புள்ள கணவன். நல்ல கருத்து.
இவை தவிர ‘தென்றல்‘ மற்றும் ‘கனவு மெய்ப்பட வேண்டும்‘ ஆகிய இரண்டுமே சென்ற ஆண்டின் கவனிக்கத்தக்க திரைப்படங்கள். பாதி வழியில் வழி தடுமாறியதால் முதல் படமும் பல வழிகளில் ஒரே சமயத்தில் அழைத்து சென்றதால் இரண்டாவது படமும் ஹிட்டாகவில்லை.
மிகை சொல்வது எங்கள் பிறப்புரிமை என்பதை ‘ஆட்டோகிராஃப்‘ சுவாரசியமாக சொன்னது. ‘நியு’வை விட கேவலாமாக பெண்களை இழிவுபடுத்தினாலும், கண்டனங்கள் எதுவும் இல்லாமல் ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்‘, மகளிர் எவ்வாறு அடங்கவேண்டும் என்று வழக்கமான தமிழ் சினிமா ஃபார்முலாவுக்குள் மொழிமாற்றிப் போனது. இரண்டுமே எனக்கு (மிகவும்) பிடித்திருந்தாலும் 1980-களில் வெளிவந்த மசாலாக்களுக்கும் 2004-இன் புதுசுகளுக்கும் ஆறு வித்தியாசம் கூட கிடையாது.
வித்தியாசம் செய்யப்போகிறேன் என்று கிளம்பியவற்றுள் ‘ஆய்த எழுத்து‘ மட்டுமே தாக்கங்கள் ஏற்படுத்தியது. அதையொத்திருக்கலாம் என்று சொல்லப்பட்டதால் ‘City of Gods’, ‘Amoros Perres’ என்று ஸ்பானிஷ் பார்த்து குவித்தாலும் ஃப்ரெஷ்ஷாக இருந்த ஆக்கம்.
போலிகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று அடைமொழி இல்லாமல் வந்ததால் ‘விருமாண்டி‘ வெறுப்பேற்றியது. இரண்டு பேரின் பார்வை என்று காண்பித்தாலும் ஹீரோயிஸ சாகஸங்கள் கொண்ட விருமாண்டிக்கு உயர்வு நவிற்சி. ஆங்காங்கே ‘தேவர் பேர’னின் இயல்பு எட்டிப்பார்ப்பதால் கமல் படம் என அறியலாம்.
ருத்ரனின் பொறிப்புரை, பார்த்திபனின் முன்னுரை, இன்னொரு பார்த்திபனின் விரிவுரை அடங்கிய ‘குடைக்குள் மழை‘ — ஒரு சிறந்த நடிகர் மிகச்சிறந்த கதாசிரியராகலாம். ஆனால், ஒரு மிகச்சிறந்த கதாசிரியர் தன் மேதாவித்தனத்தால் எவ்வாறு சறுக்கி விழுந்த இயக்குநராகலாம் என்றது. பாலச்சந்தர் சொன்ன கடிவாளம் இவருக்கும் பொருந்தும்.
பாரதிராஜா இயக்கியதால் ‘கண்களால் கைது செய்‘யும், ஸ்ரீகாந்த் ரொம்பவே நடித்ததால் ‘வர்ணஜால‘மும் சோபிக்கவில்லை. ‘As good as it gets’-ஐ எவ்விதம் கலாசார மாற்றம் செய்யலாம் என்பதை ‘எங்கள் அண்ணா‘வும்; ‘எங்கள் அண்ணா’ பார்த்ததால் ‘Chronic Bachelor’ பார்க்கும் ஆசையும் வந்தது.
கடந்த வருடத்தில் தொட்டதெல்லாம் பொன்னாக்கியவர்கள் இரண்டு பேர்: பரத் மற்றும் ரீமா சென். இருவரும் இணைந்து மகிழ்வித்த ‘செல்லமே‘ ஹிட் படம். பால்ய வயது சேக்காளிகளை தொட்டும் காட்டியது. தம்பதியர்களுக்கிடையேயான ஊடல்களையும் தாம்பத்யத்தையும் இயல்பாகவும் கொண்டு வந்ததால் என்னுடைய மூன்று பிரிவுகளிலும் ஆறுதல் வரிசையில் இடம்பிடிக்கிறது.
இந்தப் பதிவிற்கு தொடர்புள்ள சில பக்கங்கள்:
rediff.com: The Best Tamil Films, 2004 |
dhoolsotd – Song of the day Special |
lazygeek.net – Top Tamil Cinemas |
Sun TV Top 10










