பணம்… பற்று… இடர்…


பத்ரி எழுதிய பணவீக்கம் தொடர்பான சில சிந்தனைகள்:

பணத்தை அதிக அளவில் அச்சடித்து வெளியிட்டும் பணவீக்கத்தை அடக்கி ஆளலாம்; புதிய நோட்டுகளை புழக்கத்தில் விடுவதை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். இது அரசின் கட்டுப்பாடின் இருந்தாலும் சில விவகாரங்கள் இருக்கிறது. ஏற்கனவே அடித்து வெளியிட்ட பணத்தை, மீண்டும் முடக்கி வைப்பது இயலாத செயல். வட்டி விகிதத்தைப் போல் எளிதில் ஏற்றி/இறக்கி, நிலைமைக்கேற்ப அட்ஜஸ்ட் செய்ய முடியாது.

சி.ஆர்.ஆரை விட வட்டி விகிதத்தைக் கொண்டே பொருளாதாரத்தைக் கையாள்வதை மேற்கத்திய வல்லுநர்கள் விரும்புகிறார்கள். வங்கிகளின் வைப்பு நிதியை, ஏற்றி, இறக்கி, கட்டுப்படுத்துவது கூட கடினமாகத் தோன்றுகிறது. ஆனால், வட்டி விகிதத்தின் மூலம், பொதுமக்களே பணவீழ்ச்சியை நேரடியாக தீர்மானிக்கிறார்கள்.

ஏற்கனவே வட்டி விகிதம் ஏழாக இருந்து, தற்போது ஆறாகக் குறைக்கப்படுவதால் என்ன ஆகும்:

* அரசு வைப்பு நிதியில் பணம் சேமிப்பதை மக்கள் விரும்ப மாட்டார்கள். முன்பு ஏழு சதவீதத்தில் குட்டி போட்டது, நாளையில் இருந்து, ஆறாகக் குறைந்து விட்டது.

* அதற்குப் பதிலாக பங்குச்சந்தையில் இதே பணத்தை முதலீடு செய்தால், பத்து வட்டி கிடைக்கும். எனவே, பங்குச்சந்தை முதலீடு பெருகும். முன்பிருந்ததைவிட இன்னும் நிறைய மக்கள் கம்பெனி ஷேர்களை வாங்க விரும்புவதால், பங்குகளின் விலையும் அதிகரிக்கும்.

* பங்குகளின் விலை உயர்வதால், நிறுவனங்களின் மதிப்பீடு மேம்படும்.

ஏற்கனவே வட்டி விகிதம் ஆறாக இருந்து, தற்போது ஏழாக அதிகரிக்கப்படுவதால் என்ன நடக்கலாம்:

* முன்பு ஆர்வமாக கார், ஸ்கூட்டர் வாங்கியவர்கள், புதிய வட்டி ஏற்றத்தினால், ஏமாற்றமடைவார்கள். முன்பு 1499/- என்று ஆசை காட்டிய நிறுவனங்கள், 1999/- என்று விளம்பரம் கொடுக்க வேண்டும்.

* சேமிப்பதில் ஆர்வம் பெருகும். சாதாரணமாகவே, எனக்கு வங்கியில் காசைப் போட்டு வைப்பதில் விருப்பம் அதிகம். எடுக்கும் ரிஸ்க்கான பங்கு முதலீட்டுக்குப் பதில் என்.ஆர்.ஈ. கணக்கில் 3.5 வட்டி வந்தால் கூட சந்தோஷமாக சிரிக்கும் மனப்பான்மை. இப்பொழுது, அதே கணக்கில் 5% வட்டி வந்தால்… செலவழிப்பதை விட சேமிக்கும் குணம் வலிமை பெறும்.

* வீடு, கார் போன்ற பெரிய பொருட்களின் விற்பனை மந்தமாகும். அதனால், அவற்றை விற்கும் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பும் வீழும்.

* அதனால், பணவீக்கம் (inflation) கட்டுப்படும்.

ஆனால், இந்த வட்டிவிகதங்கள் — பணவைப்பு நிதிகள் — நோட்டு அச்சடிப்பு, ஆகியவை சரியாக நிர்வகிக்காவிட்டால் disinflation நடப்பதற்கு பதிலாக recession உருவாகி deflation-ல் கொண்டு போய் விடும்.

அதாவது, பொதுமக்களுக்கு சாமான்கள் வாங்குவதிலும் ஆர்வம் இருக்காது. அதே சமயம், பணப்புழக்கமும் அதிகரித்திருக்கும். குறைந்த வட்டி இருப்பதால் சேமிக்கவும் மாட்டார்கள்.

disinflation – பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல்

deflation

– பொருட்கள் நிறைய தயாரித்து விற்கமுடியாத நிலையில் ஏற்படும். கார்களும் ·ப்ரிட்ஜுகளும் அபரிமிதமாக கொட்டிக் கிடக்கும்; லாபம் ஈட்டாவிட்டாலும், பெரும் நஷ்டத்தைத் தவிர்ப்பதற்காக, அவற்றை அடிமாட்டு விலைக்குத் தருவதற்கு போட்டா போட்டி நிலவும். ஆனால், நுகர்வோரிடமோ கையில் துட்டு இருக்காது. மிகவும் சல்லிசாகக் கிடைக்கிறது என்று தெரிந்தாலும், காசு போட்டு வாங்கிச் செல்ல முடியாத நிலை.

recession

– இந்தியாவில் அனேகமாக இது நிகழும் ஆபத்துதான் அதிகம்! கால் செண்டர், அவுட்சோர்ஸிங், சுய வேலைவாய்ப்புகள் என்று நாம் செழிக்கும் காலம் இது. எல்லோர் கையிலும் ‘டோல்… டோல்.. பாப்பே’ என்று ஜாலியான காந்தித் தாத்தா. ஆனால், திடீர் என்று சடன் ப்ரேக் போட்டால், முன்பு வீடு வாங்கினவன், விற்க எண்ணுவான்; வாங்குவதற்கோ ஆளே இருக்க மாட்டார்கள்.

வேலையில்லாமை அதிகரிக்கும்; நிறுவனங்கள் முதளீட்டை கம்மி ஆக்கி, ஆட்குறைப்பு நடத்துவார்கள்; வேலையில் இருப்போரும், ‘யாரைத்தான் நம்புவதோ’ என்று பயப்பட்டுக் கொண்டு பணத்தைக் கரியாக்காமல், வங்கியில் தூங்க விடுவார்கள். வங்கிகளுக்கோ, இந்தத் தூங்கும் பணத்தை, யாருக்கு கடன் கொடுப்பது என்று முடிவெடுக்க முயலாமல் கையைப் பிசையும்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் பெட்ரோல் விலையேற்றம் தவிர சம்பளம், அரசு செலவு போன்றவையும் மிக முக்கியம். இவற்றை குறித்தும் எளிதாக, விரிவாக பத்ரி போன்றோர் எழுதினால் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

-பாஸ்டன் பாலாஜி

One response to “பணம்… பற்று… இடர்…

  1. பணத்தை அதிக அளவில் அச்சிட்டு வெளியிட்டால் பணவீக்கம் அதிகமாகும். அப்படி அச்சிடும் பணம் முழுவதும் நீண்டகால கேபிடல் முதலீடாக இருக்கும் பட்சத்திலும், அந்த “பொய்ப்” பணம் உண்மைப் பணமாக மாற்றக்கூடியதான (அதாவது அந்த முதலீட்டின் மூலம் உண்மையான மதிப்பு எப்படியாவது உயரும்) வகையிலும் தான் அதிகமாக அச்சடிக்கும் பணம் உபயோகமானது. அதுவும் கூட வளர்ச்சி தேங்கும்போது (recession) மட்டுமே பயன்படுத்த வேண்டிய முறை.

    நான் இப்பொழுது வட்டி விகிதத்தைக் குறைத்தது பற்றி சொல்லியதில் 6%->3.5% என்பது வங்கிகள் CRR பணத்தை ரிசர்வ் வங்கியில் வைப்பதற்கு. Prime Lending Rate (PLR) மாற்றப்படவில்லை.

    ஆலன் கிரீன்ஸ்பான் அவ்வப்போது மாற்றுவார் மாற்றுவார் என்று உங்களூரில் காத்துக்கொண்டிருப்பது இந்த PLRதான்.

    இந்தியாவில் வட்டி விகிதத்தைக் குறைத்தால் மக்கள் உடனே பங்குச்சந்தைக்குப் போய்விட மாட்டார்கள். பங்குச்சந்தை பற்றிய பாலபாடம் பலருக்குத் தெரியாது. சிலர் சாகும் வரை பங்குச்சந்தை பக்கம் போகப்போவதுமில்லை.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.