காத்திருந்த வேளையில் – மனுஷ்யபுத்திரன்


தமிழ்ப் படைப்பாளிகளின் சமூக இருப்பு

துரதிஷ்டவசமாக எல்லாப் பிரச்சினைகளிலும் ஆளும் தரப்பாகவும் எதிர்தரப்பாகவும் அரசியல்வாதிகளே இருக்கிறார்கள். இவர்களுடைய நீதி மற்றும் அநீதி சார்ந்த முடிவுகள் அவர்களது அரசியல் நீதியான இலாப-நஷ்டங்களுக்கு அப்பால் ஒரு சமூகத்தின் ஆதாரமான நெறிகளையோ மதிப்பீடுகளையோ தழுவி விரிவடைவதேயில்லை. இதனால்தான் எல்லா அரசியல்ரீதியிலான முடிவுகளும் அவை எடுக்கப்பட்ட தருணத்திலேயே உள்முரண்பாடுகள் கொண்டவை யாகவும், நம்பகத்தனமையற்றவையாகவும் மாறிவிடுகின்றன.

….

ஒரு படைப்பாளி எல்லாப் பிரச்சினைகளிலும் தனது கருத்தைப் பதிவுசெய்யவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. ஒருவருக்குக் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் நிலைப்பாடு எதுவும் இல்லாமல் இருப்பதற்கோ அல்லது அப்படியே இருந்தாலும் அதை வெளியே சொல்லாமல் இருப்பதற்கோ உரிமையுண்டு. தன்னுடைய நிலைகளையும் கோழைத்தனத்தையும் பாதுகாத்துக் கொள்வதும் கூட ஒருவரது அடிப்படை உரிமையே. ஆனால் ஒரு சமூகம் நீடித்திருப்பதற்கான அடிப்படை நியாயங்கள் மீறப்படும்போதுகூட ஒருவர் எந்த எதிர்வினையும் ஆற்றுவதில்லை என்ற நிலை அந்த நியாயங்களை அழிப்பவர்களை ரகசியமாக ஆதரிப்பதாகிவிடும்.

மிக நெருக்கடியான சந்தர்ப்பங்களில் கூடத் தமிழ் எழுத்தாளர்களிடையே அவர்களது தனிப்பட்ட உறவுநிலைகள்தான் முக்கியத்துவம் பெறுகின்றன.

(14.07.2001)



அரட்டையும் அரட்டலும்

சமூகம் திருத்தப்படுகிறது, தான் பாதுகாக்கப்படுவிடுவோம் என்ற உவகையை, நிம்மதியை பார்வையாளர் அடைகிறார். இந்த சுயஏமாற்று மிகவும் அவசியமாக இருக்கிறது. ஏனெனில் வாழ்வதற்குப் பொருள்களும் கேளிக்கைகளும் மட்டுமல்ல கருத்துகளும் தேவையாக இருக்கின்றன.

…..

தமிழ்ச்சமூகம் கல்வி, அரசியல், வெகுசன் ஊடகங்கள் அனைத்திலும் சிந்தனை சார்ந்த மரபிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டுவிட்டது. சிந்தனை என்பது ஒரு பொதுக்கருத்தைச் சொல்வதாகவும் கேட்பதாகவும் மாறிவிட்டது. பொதுகருத்து சார்ந்த அறங்களைத் திரும்ப திரும்ப வலியுறுத்துவதன் மூலம் பிரச்சினைகள் பேசப்படுவதான, தீர்க்கப்படுவதான ஒரு தோற்றம் ஏற்படுகிறது. ஆனால் எல்லாப் பிரச்சினைகளும் மறைக்கப்படுகின்றன அல்லது திரிக்கப்படுகின்றன.

…..

ஒவ்வொரு பிரச்சினையைப் பற்றியும் எவ்வளவு பிற்போக்கான கருத்துகளும் மனோபாவங்களும் சமூகத்தின் பொதுக்கருத்தியலில் நிலவுகின்றன என்பதற்கு இந்த (அரட்டை) அரங்குகளே சாட்சியங்கள். பேசுகிறவர்கள் மற்றும் நிகழ்ச்சியை நடத்துபவரைக் காட்டிலும் ஒவ்வொரு மேலோட்டமான அல்லது கொச்சையான கருத்திற்கும் வாய்பிளந்து ஆரவாரிக்கும் பார்வையாளர்களின் குதூகலம் இன்னும் அச்சுறுத்துகிறது.

….

(பட்டிமனற) ஒரு நோயைப் பரப்புவது எவ்வளவு சுலபம் என்பதற்கு இதை விடச் சான்று தேவையில்லை. இந்தப் பேச்சு அர்த்தமுள்ள ஒரு பேச்சை அழிக்கும் ஓர் ஏற்பாடு. ஏனெனில் பேச்சு இன்று உற்பத்தி செய்து பரப்பப்படும் ஒரு பொருளாக மாறிவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாகப் பேச்சை பேசுவதற்குப் பதில் அதை வேடிக்கை பார்ப்பது, ஒரு சமூகம் தன்னுடைய பேச்சை இழப்பதாகவே அர்த்தம் பெறுகிறது.

(21.07.2001)



புதிய கடவுள்கள் புதிய அடையாளங்கள்

பழைய மதங்கள் அனைத்தும் தனிமனிதனுடனான உறவைப் படிபடியாக இழந்துவிட்டன. அவனது மதம் சார்ந்த அடையாளம் என்பது ஒரு குழு சார்ந்த அடையாளமாக இல்லாமலாகி விடுகிறது. அப்போது ரகசியக் குழுக்கள் தீவிரச் செயல்பாட்டையும் திட்டவட்டமான குழு அடையாளத்தையும் அளிப்பவையாக இருக்கின்றன.

….

ஒஷோவோ பங்கரு அடிகளோ சாய்பாபாவோ அடிப்படையில் நவீனச் சமூகத்தின் ஒரே விதமான தேவைகளையே நிறைவேற்றுகின்றனர். அவர்கள் மதங்களற்ற உலகின் மதங்களாக மாறியுள்ளனர். தெய்வத்தின் சாயல்களை நேரடியாகவும் வெகு அருகாமையிலும் கொண்டு வருகின்றனர். தமக்குள் பிரத்யேக நம்பிக்கைகளையும் மொழியையும் கொண்ட குழுக்களை உருவாக்குகின்றனர். இதற்குள் உறவுகளும் பரிவர்த்தைனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. உடனடியான அந்த இடத்தில் ஒரு சமத்துவச் சூழல் உருவாக்கப்படுகிறது.

….

ரஸ்புதீனிலிருந்து தீரேந்திர பிரமச்சாரி வரை பெரிய தேசங்களின் முக்கிய வரலாற்றுக் காலங்களோடு சாமியார்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். சிறிய அளவில் செயல்படும் வட்டாரச் சாமியார் கூட அந்த இடத்தின் செல்வாக்கு மையங்களில் முக்கிய இடம் வகிக்கிறார்.

….

அக்ரஹாரங்களும் சேரிகளும் இல்லாத ஒரு வெளியில் சாதிய முகம் மறைந்து கொள்கிறது. உதிரியாகக் கலைந்துகிடக்கும் மனிதர்களுக்கு ஏதேனும் ஒரு பொது நம்பிக்கை, தமக்கான ஒரு பிரத்யேக அடையாளமும் குழுவும் அவசியமாகிவிடுகிறது. இவ்வாறு பலவிதங்களிலும் மரபான அமைப்புகள் சிதையும்போது, பயனற்றதாக மாறிவிடும்போது அந்த வெற்றிடத்தை நிரப்பும் பல அம்சங்களில் இந்த மனிதக் கடவுளர்களும் உள்ளனர்.



நன்றி: காத்திருந்த வேளையில் – மனுஷ்யபுத்திரன் – உயிர்மை

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.